யானை முந்திவிட்டது

 ஐந்தாம் வகுப்புக்குள் நுழைந்து மாணவர்களிடம் யார் கிரஹாம் பெல் என்று கேட்டால் உடனே பதில் சொல்வார்கள். அவர்தான் டெலிபோனை கண்டுபிடித்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். மார்டி கூப்பர் யார் என்று கேட்டால் ஒருவருக்குமே தெரியாது. அவர்தான் செல்பேசியை கண்டுபிடித்தார். 1973ல் மோட்டாரோலா கம்பனி செய்த முதல் செல்பேசி நாலரை றாத்தல் எடையிருந்தது. செலவு பத்து லட்சம் டொலர்.

 

1983ல் ஒரு செல்பேசியின் விலை 4000 டொலராக குறைந்துவிட்டது. அதன் எடை இரண்டரை றாத்தல். அதன் மின்கலன் 20 நிமிடத்துக்கு மேலே தாக்குப்பிடிக்காது. ஒருவர் கேட்டார். 'இது எப்படிக் காணும். இருபது நிமிடத்துக்குமேல் எப்படி பேசுவது?' அதற்கு விற்பனையாளர் பதில் சொன்னார். 'ஐயா, நீங்கள் இதை தோளிலே தூக்கிவைத்து பேசவேண்டும். இந்தப் பாரத்தை 20 நிமிடத்துக்குமேல் யார் தாங்குவார்கள். ஆகவே 20 நிமிடம் போதும்.'

நேற்று 19 வயதுப் பையனை சந்தித்தேன். அவன் தான் புதிதாக வாங்கியிருந்த ஒரு செல்பேசியை காட்டினான். அது பேப்பர்போல மெல்லிசாக இருந்தது. என்ன வடிவம், என்ன அழகு. என்ன வழுவழுப்பு. அதனோடு வந்த கையேட்டையும் காட்டினான். அது தொக்கையாக செல்பேசியிலும் பார்க்க பாரமாக இருந்தது. இந்த உலகத்திலே ஒரு பொருளிலும் பார்க்க அதனோடு வரும் கையேடு பாரமாக இருந்தால் அது இந்த செல்பேசியாகத்தான் இருக்கும்.

இன்று உலகத்தின் சனத்தொகையில் பாதிக்கு மேல் செல்பேசி சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். இன்னும் பத்து வருடத்தில் உலக சனத்தொகையில் 90 விழுக்காடு மக்கள் செல்பேசி வைத்திருந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ஆனால் இன்னும் கூடிய ஆச்சரியம் என்னவென்றால் பாவனையாளர்கள் அதை எதற்கெதற்கெல்லாம் பாவிக்கிறார்கள் என்பதுதான்.

என் வீட்டு வாசலில் மூன்று அடுக்கு படிகள் செங்கல்லால் அமைக்கப்பட்டிருக்கும். அது திருத்தவேண்டிய நிலையில் இருந்தது. ஓர் இளம் சீனாக்காரர் அந்த திருத்த வேலையை செய்துதர ஒப்புக்கொண்டார். வீதியில் சும்மா போனவரும், பக்கத்து வீட்டுக்காரரும் அவருக்கு அந்த வேலையை கொடுக்கவேண்டாம் என்று சொன்னார்கள். தொழில் நுட்பம் தெரிந்த அனுபவமுள்ள ஒருத்தர்தான் அதைச் சரியாக செய்ய முடியும் என்பது அவர்கள் கூட்டு அபிப்பிராயம்.  நான் சீனாக்காரரிடம் இந்த வேலையை அவர் முன்னர் செய்திருக்கிறாரா என்று கேட்டேன். அவர் 'இல்லை, முதல்தரம் செய்யும்போதுதான் எனக்கு அது சுவாரஸ்யமாக இருக்கும். இரண்டாவது தடவை அலுத்துவிடும். நான் மூளையை பாவித்து ஒரு தொழிலை செய்யும்போதுதான் அந்த வேலை சிறப்பாக அமையும்' என்றார்.

செங்கல்களுக்கு மேல் பென்சிலால் 1,2,3 4, என எண்களை எழுதினார்.  செல்போனை எடுத்து படம் பிடித்தார். பின்னர் செங்கல்களை கலைத்துவிட்டு திருத்தவேலைகளை ஆரம்பித்தார். முடிந்ததும் செல்போன் படத்தை முன்னே வைத்துக்கொண்டு அதே மாதிரி செங்கல்களை திருப்பி அடுக்கி வேலையை துரிதமாக முடித்தார். வேலை மிகத் திருப்திகரமாக அமைந்தது.

இரண்டு நண்பர்கள்  யெல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவுக்கு போனார்கள். அவர்கள் நடப்பதற்காக ஒதுக்கப்பட்ட பாதையில் நடந்தபடி காட்சிகளை கண்டு களித்தார்கள். மரங்கள் செடிகள் விலங்குகள் பறவைகள் என சகலதையும் பார்த்தனர். ஒருவர் கறுப்பு கண்ணாடி அணிந்திருந்தார்; மற்றவர் தன் கையிலிருந்த செல்பேசியால் அடிக்கடி புகைப்படம் எடுத்தார். 4, 5 மைல்தூரம் நடந்துவிட்டார்கள். கொதிக்கும் நீர் ஒவ்வொரு 65 நிமிடமும் சீறியடிக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். 150 அடி தூரம் அது எழும்பி சிறிது நேரத்தில் அடங்கிவிடும். நண்பர்கள் அதையும் படம் பிடித்துக்கொண்டு திரும்ப முடிவெடுத்தார்கள். அப்பொழுது கண்ணாடிக்காரர் அவ்வளவு நேரமும் போட்டிருந்த கண்ணாடியை காணவில்லை; எங்கேயோ பாதையில் விழுந்துவிட்டது. ஐந்து மைல் தூரத்தில் எங்கேயென்று தேடுவது. செல்பேசிக்காரர் தான் எடுத்த படங்களை வரிசையாகப் போட்டுப் பார்த்தார். அவருடைய நண்பர் ஒரு இடத்தில் கண்ணாடி அணிந்திருந்தார். அடுத்து வந்த இடத்தில் கண்ணாடி அணியவில்லை. நேராக இரண்டுக்கும் இடைப்பட்ட இடத்துக்கு போய் கண்ணாடியை மீட்டார்கள்.

இதைவிட விசித்திரமானது பத்திரிகையில் நான் படித்த சேதி. கென்யாவில் காட்டு யானைகள் அடிக்கடி கிராமத்துக்குள் புகுந்து விவசாயிகளின் பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதோடு சில சமயம் ஆட்களையும் கொன்றுவிடும். விஞ்ஞானிகள் காட்டு யானைகளைப் பிடித்து அவர்கள் கொலரில் செல்பேசியின் சிம்கார்டுகளை வைத்து தைத்து காட்டில் விட்டுவிடுவார்கள். சாட்டிலைட்டுகள் மூலம் ஒரு கற்பனைக்கோட்டை உண்டாக்கிக் கொண்டார்கள். யானைகள் இந்தக் கோட்டை தாண்டும்போது செல்போன் தானாக அடிக்கும். அதில் குறுஞ்செய்திகள் வரும். 'என் பெயர் மதுண்டே. நான் கியம்பு கிராமத்துக்குள் நுழைகிறேன்.' வனக்காவலர்கள் அந்த இடத்துக்கு விரைந்து சென்று யானைகளை காட்டுக்குள் விரட்டிவிடுவார்கள்.

இந்தச் செய்தியை வாசித்த எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. செல்பேசிகளை எத்தனையோ பேர் எத்தனையோ விதமாக பயன்படுத்துகிறார்கள். இப்பொழுது யானைகளும் செல்போன் பாவிக்கத் தொடங்கிவிட்டன. வரும் காலத்தில் சிங்கம், புலி, கரடி , குரங்கு எல்லாம் செல்பேசும். இனியும் தாமதிப்பது அவமானம். நாளைக்கே ஒரு செல்பேசி வாங்கிவிடவேண்டும்.

About the author

3 comments

  • பிரமாதம். ஒவ்வொரு வரியும் ரசித்து வாசித்தேன். மிக்க நன்றி.

  • இப்படியும் கதை எழுத முடியும்.

  • We can change our mistake’s while growing old; innovations become just supplement of bringing the revelation in a everyday life close to human a AI

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta