போரில் தோற்றுப்போன குதிரைவீரன்

போரில் தோற்றுப்போன குதிரை வீரன்

அ.முத்துலிங்கம்

அடுத்து வரும் ஞாயிறில் இருந்து அவ

னுடைய காதலியாக இருப்பதற்கு அவள்

சம்மதித்துவிட்டாள். ஞாயிறு வருவதற்கு இன்னும்

மூன்றே மூன்று நாட்கள் இருந்தன. அதுவரைக்கும்

பொறுத்திருப்பது சிரமமான காரியம்தான்.

உடனேயே காதலி கிடைப்பதில் அவனுக்கு

ஒரு தடை இருந்தது. தற்சமயம் அவளுக்கு ஒரு

காதலன் இருந்தான். அவனுக்கு வேலை

மாற்றலாகி 2000 மைல் தூரத்துக்குப் போகிறான்.

இனிமேல் திரும்பி வரமாட்டான். ஆகவே

அவர்கள் இருவரும் மனமொத்துத் தங்கள் காதலை

எதிர் வரும் ஞாயிறு காலையிலே முறித்துக்கொள்

கிறார்கள். அதன்பிறகு அவள் அவனுடைய

காதலியாகிவிடுவாள்.

அவள் ஒரு பெண் நாயுடன் உலாத்த வந்த

போதுதான் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. தினம்

தினம் அதே பாதையில், அதே நேரத்துக்கு அலை

அலையான சடை வைத்த அந்த ஸ்பானியல்

நாயை அழைத்து வருவாள்.

பழுப்பு நிறத்தில் கட்டைக் கால்களும், நீண்டு

தொங்கும் காதுகளுமாக அது ஆசையைத்

தூண்டும் விதத்தில் இருக்கும். நல்ல ஒழுக்கங்கள்

பழக்கப்படுத்திக் கொடுக்கப்பட்ட நாய். அவ

ளுடைய கையில் இருந்த சங்கிலிக்கு ஏற்றவாறு

அது அவளது இடது குதிக்காலடியில் குடுகுடு

வென்று ஓடி வந்துகொண்டிருக்கும். அவன் நடத்தி வந்தது

ஆண் நாய். ஜேர்மன் ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்தது.

மிகுந்த செலவில் பயிற்சி பெற்றது. ஒரு துரும்புக்கும் தீங்

கிழைக்காது. குலைக்காது. கண்மூடி இருந்தாலும் இரண்டு

பயங்கர கண்கள் போலத் தோற்றமளிக்கும் கறுப்பு

வட்டமான புருவங்கள். பார்த்தவுடன் யாருக்கும் சிறிது பயம் தோன்றும். அந்த

நாயினுடைய பெயர் ஜாக். அந்த நாய்கள்தான் முதலில்

சந்தித்தன. ஒன்றையன்று மணந்து பார்த்து பிறகு

உரசிக்கொண்டன. அவள் முதலில் ‘ஹாய்’ என்றாள். இவனும் சொன்னான்.

‘உங்கள் நாயின் முடி மிகவும் பளபளப்பாக இருக்கிறது’

என்றாள்.

‘நன்றி. பெயரென்ன வைத்திருக்கிறீர்கள்?’ என்றான்.

‘ஜெனிஃபர்.’

‘மன்னிக்கவும். நாயின் பெயரைக் கேட்டேன்.’

‘அதுதான் ஜெனிஃபர்’ என்றுவிட்டு சிரித்தாள்.

அழகான சிரிப்பு. பற்களை மிகவும் அநீதியாக அந்த

உதடுகளால் மூடி வைத்திருந்தாள்.

அவனுடைய முதல் பொய் ஒரேயொரு செங்கல்லாக

அப்படித்தான் ஆரம்பித்தது. அதற்குப் பிறகு ஒரு செங்கல்லைத்

தாங்குவதற்கு இன்னொன்று என்று பெரிய கட்டடமே

எழும்பிவிட்டது. அது தன்னுடைய சொந்த நாய் இல்லை

என்பதையோ, தான் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் ஒரு

‘நாய் நடத்தி’ என்பதையோ அவன் கூறவில்லை. ஐந்து வீடு

களில், வீட்டுக்கு ஒரு நாயாக ஐந்து நாய்களை தினமும்

நடத்துவதுதான் தன் வேலை என்பதையோ, அந்த

ஊதியத்தில்தான் தன் மாதச் செலவுகளைச் சமாளித்து

வருகிறான் என்பதையோ அவன் சொல்ல மறந்துவிட்டான்.

அவளோ வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். பட்டப்

படிப்பை முடித்தபிறகு கம்ப்யூட்டரில் வரைபடம் போடுகிறாள்.

ஒரு குழந்தையின் படத்தைக் கொடுத்தால் இருபது வருடங்

களுக்குப் பிறகு அது எப்படித் தோற்றமளிக்கும் என்பதை

ஊகமாக வரைந்துவிடுவாள். அதைப் போலவே மிருகங்களை

யும் செய்ய பயிற்சி எடுக்கிறாள். பூனை, நாய், குதிரை

போன்றவற்றை உருமாற்றம் செய்வது அவளுக்கு மிகவும்

விருப்பமானது. தன்னுடைய நாய்க்குட்டி பத்து வருட

காலத்தில் எப்படி காட்சியளிக்கும் என்பதை வரைந்து

சட்டம் போட்டு வீட்டிலே மாட்டி வைத்திருக்கிறாள்.

அவள் வரும் நேரங்களை அவன் அறிந்திருந்தான்.

மற்ற நாய்களை வெவ்வேறு வேளைகளில் நடத்திப் போவான்.

ஆனால் ஜாக்கை மாத்திரம் ஒரு சொந்தக்காரனின்

தோரணையில் குறித்த நேரத்தில் நடத்தி வந்து அவளைச்

சந்தித்தான். அவர்கள் சங்கிலிகளைக் கழற்றி அந்த நாய்களை

விளையாட விடுவார்கள். அவள் சங்கிலியை மாலை போல

போட்டுக்கொண்டு குனிந்து ஒரு முறை தன் உடலைப்

பார்ப்பாள். அந்தச் செய்கை அவனுடைய அடிஉணர்வுகளை

சில்லென்று தட்டி ஏதோ செய்யும். அவள் உடம்பின் ஈரமான

பகுதிகளில் எல்லாம் உடனேயே முகத்தை வைத்து அழுத்த

வேண்டும் என்று அவனுக்குத் தோன்றும்.

அவனுடைய அப்பா இரண்டு கல்யாணமும், ஒரு சிறைவாசமும் செய்தவர்.

வீட்டிலே நாய் வளர்ப்பதை தீவிரமாக எதிர்த்தார். அவன்

எவ்வளவோ கெஞ்சிக்கேட்டும் அது நடக்கவில்லை. டீவியில்

விளையாட்டு சானல் தவிர வேறு ஒரு சானலையும் அவர்

போடமாட்டார். எப்பவும் வாய் திறப்பதில்லை; பலமான

மௌனம் அனுட்டிப்பார். இரண்டு மடங்கு மௌனத்தில்

அவனும் இருப்பான்.

திடீரென்று அவர் வாயைத் திறந்தால் அது ஒரு

கட்டளை இடுவதற்காகத்தான் இருக்கும். அவன் வீட்டை

விட்டு ஓடியபோதுகூட ஒரு கட்டளை நிறைவேற்றப்படாத

நிலையிலேயே இருந்தது. இப்பொழுதுதான் அவன் வாழ்க்கை

யில் முதல்முறையாக ஒரு திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

திடீரென்று இரண்டு அதிர்ஷ்டங்கள்.

அடுத்த ஞாயிறில்

இருந்து அவனுக்கு அவள் காதலியாகிவிடுவாள். இரண்டாவது,

ஜாக்கின் சொந்தக்காரர் குடும்பத்தோடு விடுமுறையில்

போகிறார். இரண்டு வாரத்துக்கு அவருடைய வீட்டை

பார்க்கும் வேலை அவனுக்குக் கிடைத்திருக்கிறது. பெரும்

வசதிகள் கொண்ட வீட்டில் அவன் தங்குவான். அதுவும்

நல்ல சம்பளத்துக்கு.

அபூர்வமான தோட்டம் அமைந்த அந்த

வீட்டுக்கு அவளை முதல் முறையாக அழைத்து வந்தபோது

அவள் ஆச்சரியம் காட்டவில்லை.

மாறாக மிக இயல்பாக நடந்துகொண்டாள். நீண்ட

காலணிகளை வீட்டின் படிக்கட்டுகளில் பக்கவாட்டாக

வைத்து டக்டக் என்று ஏறினாள். மேல் கோட்டை கழற்றிய

பிறகு, முதுகுத்தண்டோடு ஒட்டிய வயிறு தெரிவதுபோல

ஒரு மெல்லிய நீண்ட ஆடையில் அது ‘இஸ்க் இஸ்க்’ என்று

சத்தமிட நடந்து வந்தாள். அவளில் இருந்து புறப்பட்ட ஒரு

பிரகாசம் வீட்டின் ஒளியை மேலும் கூட்டியது. பாம்புபோல

கைகளைச் சுற்றி அவன் கழுத்திலே போட்டு ‘“என் மூன்றாவது

காதலனே” என்று சிரித்தபடி சொல்லி ஒரு சிறு முத்தம்

கொடுத்தாள். பிறகு சாவதானமாக வீட்டைச் சுற்றிப் பார்க்க

ஆரம்பித்தாள்.

‘நீ தனியாகவா இருக்கிறாய்?’ அவள் கேட்டாள்.

‘நான் சொன்னேனே. என் பெற்றோர்கள் விடுமுறையில்

போயிருக்கிறார்கள். இரண்டு வாரத்திற்கு நானே அரசன்;

நீயே அரசி.’

‘மைக்கேல், நீ ஏன் போகவில்லை?’

‘என் பெயர் மைக்கேல் இல்லை.’ அவன் தன் பெயரைச்

சொன்னான்.

‘நீ சமைப்பாயா?’

‘இன்று காலை என்ன சாப்பிட்டேன் தெரியுமா?

உறையவைத்த முட்டை.’

‘உறையவைத்த முட்டையா?’

‘மிக அருமையான தயாரிப்பு.’ அவன் அந்த முட்டை

செய்யும் விதத்தை வர்ணிக்கத் தொடங்கினான். உற்சாகமாக

கண் இமைக்காமல் அதைக் கேட்டாள். நடுநடுவே அவள்

தனது இடது மார்பைத் தொட்டுத் தொட்டு நகர்த்தி வைத்த

படியே இருந்தாள்.

‘கொஞ்சம் இரு, நான் சிகரெட் வாங்கி

வருகிறேன்’ என்று சடுதியாக அவன் புறப்பட்டபோதுதான்

அந்தத் தவறு நடந்திருக்க வேண்டும். ஒரு பிறவியிலேயே

அடையமுடியாத சமயம் கூடி வந்திருந்தது. இந்த நேரத்தில்

சிகரெட் ஒரு கேடா என்பதை அவன் மனது யோசிக்க

வில்லை. வீட்டின் சொந்தக்காரர் வீட்டை ஒப்படைக்கும்போது

மோசஸின் பத்து கட்டளைகள் போல மூன்று கட்டளைகளை

அவனுக்கிட்டிருந்தார். அந்த பிரம்மாண்டமான வீட்டிலே

அவன் எங்கேயும் தங்கலாம், எங்கேயும் உலாத்தலாம். ஆனால்

பிரத்தியேகமான அவருடைய படுக்கை அறைக்குள் மட்டும்

அவனுக்கு அனுமதி இல்லை. இரண்டாவது, அவனுக்கு

இருந்த சிகரெட் மோகத்தை மனதிலே இருத்திச் சொன்னது.

ஸாமன் மீனுக்குப் புகைபோடுவது போல சுவாசப்பைகள்

கருகுமட்டும் அவன் புகை உற்பத்தி செய்யலாம். எவ்வளவு

சிகரெட் வேண்டுமானாலும் ஊதித் தள்ளலாம். ஆனால்

அதை வீட்டுக்கு வெளியே செய்யவேண்டும். மூன்றாவது

இன்னும் பிரதானமானது. என்னதான் தலை போகிற காரிய

மாக இருந்தாலும் மாலை சரியாக ஆறு மணிக்கு (5.55

அல்ல 6.05 அல்ல) ஜாக்கிற்கு அதனுடைய இரவு உணவைக்

கொடுத்துவிடவேண்டும்.

ஜாக்கிற்கு வேண்டிய உலர் உணவுப்பெட்டிகளையும்,

அளவு குவளையையும் சொந்தக்காரர் விட்டுப் போயிருந்தார்.

குளிர்ப் பெட்டியிலே அவனுக்குப் போதுமான சாப்பாட்டு

வகைகள் இருந்தன. பாரிலே பீர், வைன் வகைகள். உடல்

பயிற்சி அறை, நீச்சல் குளம், நூற்றுக்கணக்கான புத்தகங்கள்,

50 அங்குலம் டீவி கொண்ட கேளிக்கை அறை என்று எல்லாம்

அவனை சந்தோசப்படுத்தக் காத்திருந்தன. இப்பொழுது

அவளும் இருந்தாள்.

‘நல்ல பிள்ளையாக இரு’ என்றான். அந்த வாசகத்தை

ஜாக்குக்கு சொன்னானா, அவளுக்குச் சொன்னானா

தெரியவில்லை. முன் கதவைச்சாத்திக்கொண்டு புறப்பட்டான்.

முகப்பிலே பொருத்தியிருந்த மின்விளக்கு அவன் நிழல்

பட்டுத் திடீரென்று பற்றி எரிந்தது; அவன்அகன்றதும்

அணைந்தது.

அவளுக்குப் பிடிக்கும் என்று அவன் யப்பானிய உணவு

வகை அன்று தயாரித்திருந்தான். ஒரு பரிசாரகனின் திறமை

யான அலங்காரத்துடன் அவை மேசையிலே காட்சியளித்தன.

அதில் முக்கியமானது சூஸி. சிறு சோற்றுப் பருக்கைகளைத்

தட்டையாக்கி, கடல் பாசியில் சுற்றி, முள் இல்லாத மீன்

சதையை மேலே வைத்து செய்தது. ஓர் அழகான பீங்கானில்

நீள்வட்டமாக அவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதற்கு

வேண்டிய தொடு குழம்பு இன்னொரு சிறு கோப்பையில்

பக்கத்தில் இருந்தது.

இந்த வீடு அவளுக்கு மிகவும் பிடித்துக்கொண்டது. இதன்

அமைப்பு நூதனமானது. மனிதர்களின் வசதிக்காக இது

கட்டியதாகத் தெரியவில்லை. பறவைகளுக்கும், வளர்ப்பு

பிராணிகளுக்கும், தாவரங்களுக்குமாக கட்டிய வீடு போலக்

காட்சி தந்தது.

அவளுடைய கவனம் படுக்கை அறையிலேயோ, வரவேற்

பறையிலேயோ, கேளிக்கை அறையிலேயோ செல்லவில்லை.

படிக்கும் அறையிலேயே சென்றது. விதம்விதமான தாவரங்

களும், செடிகளும் அதை அலங்கரித்தன. வெளியே கொத்துக்

கொத்தாக டியூலிப்கள் அத்தனை வண்ணத்திலும் பூத்துக்

குலுங்கின. ஜன்னல் கண்ணாடியில் ஒட்டிய தேன் குவளை

களில் இருந்து தேன் குடித்த சிட்டுகள் ஒரே நேரத்தில்

முன்னுக்கும் பின்னுக்குமாக பறந்து ஆர்ப்பாட்டம் செய்தன.

உலோகத்தில் செய்த குதிரைவீரன் சிலை ஒன்று இருந்தது.

அந்தக் குதிரை இரண்டு கால்களையும் உயரே தூக்கி நின்றது.

அதன் சைகை அந்த குதிரைவீரன் இறந்துவிட்டான் என்பதே.

ஒரு காலை மாத்திரம் தூக்கி வைத்திருந்தால் அந்த வீரன்

போரிலே அடிபட்டிருப்பான். குதிரை நாலு காலையும்

ஊன்றி நின்றால் குதிரையும் சேமம்; அவனும் சேமம். அவள்

எங்கேயோ அது பற்றிப் படித்திருந்தாள். அந்தப் போர்வீரனின்

பெயரைக் கேட்கவேண்டும் என்று ஞாபகத்தில் குறித்து

வைத்துக்கொண்டாள்.

சட்டம் மாட்டப்பட்ட சில குடும்பப் படங்கள் தொங்கின.

எல்லா படங்களிலும் காலடியில் ஒரு நாய் இருந்தது. ஜாக்

வருவதற்கு முன்பு அந்த நாய்கள் இருந்திருக்கலாம். படங்

களில் இருந்ததெல்லாம் ஒரு கணவனும், மனைவியும் ஒரு

சிறுமியும் மட்டுமே. ஒவ்வொரு படமாக அந்தப் பெண்

குழந்தை வளர்ந்துகொண்டே வந்தாள். ஒரு படத்தில்கூட

அவன் இல்லாதது ஆச்சரியமே. படத்தில் இருக்கும் குட்டி

நாயைக் கம்ப்யூட்டரில் போட்டு வயதாக்கினால் எப்படி

இருக்கும் என்று யோசித்துப் பார்த்தாள். ஜாக்கின் முகச்

சாயல் கொண்டதாக அது இல்லை. சுத்த வெள்ளியினால்

செய்த இரண்டு உள்ளங்கை குடங்கள் மூடியுடன் அடுக்கி

யிருந்தன. கீழே Little Flower Company என்று சிறிய எழுத்துக்

களில் பொறித்து, தேதியும் காணப்பட்டது. ஆச்சரியங்களின்

எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்தது.

அவன் வருவதற்கிடையில் அங்கு குளிக்கலாம் என்று

நினைத்தாள். தயார் நிலையில் இருந்து அவனை திக்குமுக்

காட வைக்கலாம். நீண்ட காலணியை மற்ற குதிக்காலின்

உதவியோடு கழற்றி, அதன் மேற்பாகத்தை பெருவிரலில்

தொங்கவிட்டு, ஒரு நிமிடம் அது பெண்டுலம் போல

அசைவதை ரசித்துவிட்டு மெல்ல எற்றினாள். அது சுவர்

ஓரத்தில் போய் விழுந்தது. மற்ற காலணியையும் கழற்றி

எறிந்தாள். இன்னும் பிற ஆடைகளையும் நீக்கிவிட்டு

குளியலை நின்ற நிலையிலே முடித்தாள். பிறகு தொளதொள

மேலங்கி ஒன்றை அணிந்துகொண்டாள். இரண்டு பக்கமும்

நீண்டு தொங்கும் வார்களை அசட்டையாக முடிந்து,

உடம்பின் மறைக்கவேண்டிய குறைந்தபட்ச பாகங்களை

மூடியபடி குளியலறையிலிருந்து வெளியே வந்தபோது அவன்

பேயைக் கண்டதுபோல காட்சியளித்தான்.

இந்த படுக்கை அறையைத்தான் வீட்டின் சொந்தக்காரர்

எது காரணம்கொண்டும் பாவிக்க வேண்டாம் என்று சொல்லி

யிருந்தார். ஆனால் அந்த அற்பப் பிரச்சினையை அவன்

இப்போது கிளப்புவதற்குத் தயாராக இல்லை. கைகளை

அகலமாக விரித்து ‘வா’ என்று கூப்பிட அவள் ஓடி வந்து

அவன் கைகளுக்கிடையில் ஒரு பறவையைப்போல ஒட்டிக்

கொண்டாள்.

சாப்பாட்டு மேசையிலே இரண்டு பிளேட்களும், இரண்டு

சிவப்பு நாப்கினும் மடித்து வைக்கப்பட்டிருந்தன. நீல நிற

மெழுகுவர்த்திகள் இரண்டு கிறிஸ்டல் பீடங்களில் நின்று

மெல்லிய ஒளியை வீசின. வெள்ளியில் செய்த கத்தியும்,

கரண்டியும் உரிய இடத்தில் இருந்தன. மிக உயர்ந்த

சார்டொனே வைன் குளிராக்கப்பட்டு அதற்குரிய நீண்ட

கிண்ணங்களுடன் ரெடியாக இருந்தது. சந்தர்ப்பத்தை

எப்படியோ ஊகித்த ஜாக்கும், ஜெனிஃபரும் மிக ஒழுக்கத்

தோடும், கண்டிப்போடும் வளர்க்கப்பட்ட இரு குழந்தைகள்

போல அமைதியாக விளையாடிக்கொண்டிருந்தன.

படுக்கையிலே கால்களை நீட்டி அவன் அமர்ந்திருந்தான்.

அவனுடைய முழங்கால்களில் வசதியாக தன் பிருட்டத்தை

இருத்தினாள். பிறகு அவன் கன்னங்களை ஏந்தியபடி ‘முதலில்

அந்த குதிரை வீரனின் பெயர் என்ன? சொல்லு’ என்றாள்.

‘எந்தக் குதிரை வீரன்?’

‘ஸ்டடியில் இருக்கும் குதிரைவீரன்தான்.’

‘ஓ’

‘என்ன ஓ’

‘அதுவா, எனக்குப் பெயர் ஞாபகமில்லை.’

‘சரி, ஜாக்கிற்கு முன்பு எத்தனை நாய்கள் இருந்தன?’

‘யாருக்குத் தெரியும்?’

‘மைக்கேல்! நீ விளையாடுகிறாய்.’

‘என்னுடைய பெயர் மைக்கேல் இல்லை.’ அவன்

பெயரைச் சொன்னான்.

‘சரி விடு, ஜாக்கிற்கு முன்பு இருந்த நாய்களின் பெயர்கள்

என்ன?’

‘பெயர்களா?’

‘இரண்டு நாய்கள் இருந்திருக்கின்றனவே. படத்தில்

பார்த்தேன்.’

‘ஓ’

‘என்ன ஓ’

‘ஞாபகமில்லை.’

அவனுக்குப் பதற்றமாகியது. என்ன நேரத்தில் இவள்

என்ன கேள்வி கேட்கிறாள்.

‘உனக்கு அந்த ஞாபகங்கள் மிகுந்த துக்கத்தை

உண்டாக்குகின்றனவா?’

‘ஆமாம்.’ அவன் கண்களை அரைக்கம்பத்துக் கொடி

போல இறக்கி துக்கமாக வைத்துக்கொண்டான்.

‘மன்னித்துக்கொள். அவை எப்படி இறந்தன?’

‘எவை?’

‘உன்னுடைய நாய்கள்தான்.’

‘ஓ’

‘என்ன, எல்லாத்திற்கும் ஓ என்கிறாய்.’

‘அன்பே, இது என்ன குறுக்கு விசாரணை. அற்புதமான

எங்கள் நேரம் வீணாகிக்கொண்டு வருகிறது. கிட்டவா,

கிட்டவா’ என்று மிருதுவாகப் பேசி அவளை அணைத்தான்.

அவனுக்குப் பயம் பிடித்துவிட்டது.

அவளுடைய கேள்விகள் ஆபத்தான திசையில் போய்க்

கொண்டிருக்கின்றன. நூல் இழையில் தான் தப்பிக்கொண்

டிருப்பதும் தெரிந்தது.

‘நான் எங்கேயும் ஓடிவிட மாட்டேன். போன ஞாயிறில்

இருந்து நீயல்லவோ எனது காதலன். இந்த உடம்பு உன்

னுடையதுதான். இந்தக்கேள்விக்கு மட்டும் பதில் கூறிவிடு.

அது தெரியும்வரை என்னுடைய மூட் தூரத்திலேயே

இருக்கும்.’

‘சரி, என்ன கேள்வி?’

‘மூடனே, அந்த நாய்கள் எப்படி இறந்தன. ஒன்று 80இல்

இறந்திருக்கிறது; மற்றது 91ல் இறந்திருக்கிறது. தயவு செய்து

சொல். எனக்கு அழுகை வருகிறது.’

அவள் தேம்பித் தேம்பி அழுவதற்கு மிகவும் தயாராகிக்

கொண்டு வந்தாள்.

‘அழாதே, அழாதே, என் தேவடியாக்குட்டி. எப்படி

உன்னால் அவை இறந்துபோன வருடங்களைச் சொல்ல

முடிகிறது?’

‘எல்லாம் அந்த அஸ்தி கலசங்கள்தான். இரண்டு குட்டிக்

கலசங்களில் Little Flower Company என்று பெயர் எழுதி,

வருடங்களும் பொறித்து வைத்திருக்கிறதே. அது நாய் தகனம்

செய்யும் கம்பனி அல்லவா?’

பொய்கள் தங்களுக்கு விதித்த எல்லைகளை அடைந்து

விட்டன. இரண்டு சைஸ் பெரிதான குளியல் அங்கியில்

இருந்த அவளைக் கிட்ட இழுத்தான். அவனுடைய வயிறும்,

அவளுடைய வயிறும் இரண்டு வடக்கு தெற்கு காந்தங்கள்

போல ஒட்டிக்கொண்டன. வலது கையால் அவள் உடம்பின்

ஈரமான பகுதிகளைத் தடவித் தேடியபடி எல்லா உண்மை

களையும் சொல்லிவிட்டான்.

ஒரு பகல் காலத்து மின்னலைப்போல அவள் கட்டிலி

லிருந்து துள்ளிக்குதித்தாள். குளியல் மேல் அங்கியை நின்ற

இடத்திலேயே கழற்றி குவியலாகவிட்டாள். அவளுடைய

வழுவழுவென்ற நீண்ட கால்கள் அற்புதமான ஒரு கறுப்பு

முக்கோணத்தில் சந்தித்துக் கொண்டதை அவன் பார்த்தான்.

அப்போது வெளியே சீறிய தன் மூச்சுக் காற்றுகளை கட்டுப்

படுத்துவதற்கு அவனுக்கு இரண்டு சுவாசப்பைகளும் போத

வில்லை.

““பிளீஸ், பிளீஸ் . . . எல்லாவற்றுக்கும் ஒரு விளக்கம்

இருக்கிறது” என்று மன்றாடியபடியே அவளைப் பின்

தொடர்ந்தான். ஒவ்வொரு கணமும் அந்த அழகு அவனுக்குக்

கிட்டாததாகிக்கொண்டு வந்தது. சொந்தக்காரரால் அவனுக்கு

அனுமதி மறுக்கப்பட்ட அந்த அறை, ஒரு விநாடியில் கசங்கி

சுருண்ட படுக்கை விரிப்புகளாலும், நின்ற இடத்தில் தரையிலே

உரிந்துவிட்ட குளியல் அங்கியாலும், மேசையிலே அசட்டை

யாக பானம் வைத்த கிளாஸின் அழியாத வட்ட விளிம்பி

னாலும், எறிந்ததால் புரண்டு கிடந்த இரண்டு காலணிகளா

லும் அலங்கோலமாகிக் காட்சியளித்தது.

நீண்ட ஆடைகளின் கீழே அவளுடைய வெள்ளைப்

பாதங்கள் தத்தியபடி இருந்தன. அவள் குனிந்து காலணிகளை

மாட்டியபோது அவளுடைய பின் பாகத்தின் வெடிப்பு

அவள் சட்டையைக் கவ்விப்பிடித்தது. அவள் மூக்கு ஓட்டைகள்

கோபத்தில் அசிங்கமாக விரிந்தன.

‘நீ ஒரு லவராக இருப்பதைக்காட்டிலும் ஒரு பொய்ய

னாக இருப்பதில் உன் திறமையைக் காட்டிவிட்டாய்.’

போகிற போக்கில் எதிரே இருந்த அரைவட்ட மேசையை

அவளுடைய உருண்ட தொடை பக்கவாட்டில் இடித்தது.

விறுக்கென்று தன் நாயை ‘ஜெனிபஃர்’ என்று கூவி

அழைத்தாள்.

நீண்ட நேரம் இருப்பதற்குத் திட்டம் போட்டிருந்த

அந்த நாய் திடுக்கிட்டு எழுந்தது. ஏதோ அசம்பாவிதம்

நடந்துவிட்டதை எப்படியோ ஊகித்து அவள் கால்களுக்

கிடையில் புகுந்து என்ன செய்வது என்று தீர்மானிக்க

முடியாமல் சுழன்று சங்கிலியின் பிடியில் மாட்டி இழுபட்டது.

பிரம்பு போன்ற முதுகுடன், எரிச்சல் ஊட்டும் விதமாக

மார்புகளை முன்னே தள்ளியபடி, பிடரி மயிர் துள்ள எதிரே

ஒரு குட்டை தண்ணீர் தேங்கி நிற்பது போன்ற பாவனையில்

கால்களைத் தாண்டி வைத்து அவள் நடந்து போனாள்.

அவளுடைய நீண்ட ஆடை இப்போது ‘இஸ்க் இஸ்க்’ என்ற

ஒலியை ஏனோ எழுப்பவில்லை. நிழல் பட்டு வேலை செய்யும்

அந்த வாசல் மின் விளக்கு அவள் உருவத்தைக் கண்டு

பிரகாசமாக ஒரு கணம் எரிந்து மீண்டும் அணைந்து போனது.

அவன் கட்டிலில் மல்லாக்கப் படுத்திருந்தான். மடியில் ஒரு

சாம்பல் கிண்ணம் இருந்தது. ஒட்டகம் படம் போட்ட

சிகரெட் பெட்டியில் இருந்து ஒவ்வொரு சிகரெட்டாக எடுத்துப்

பற்றவைத்துப் பற்றவைத்து இழுத்து அந்தக் கிண்ணத்தை

நிறைத்துக் கொண்டிருந்தான்.

சிகரெட் குடிக்கும் செய்கையில் அவன் இருந்ததாகத்

தெரியவில்லை. அந்தக் கிண்ணத்தை எப்படியும் அன்று

இரவு பூர்த்தியாவதற்கிடையில் சாம்பலால் நிறைத்துவிட

வேண்டும் என்று முடிவெடுத்தவன் போலவே காணப்

பட்டான்.

ஜாக் மிக அமைதியாக இருந்தது. அங்கே நடந்து முடிந்து

போன அவனுடைய வாழ்க்கையின் மிகப் பெரிய சரிவைப்

பற்றி அது ஒருவித அக்கறையும் காட்டவில்லை. அதற்கு

அவனே தற்போதைய எசமான். அது நேற்றைய எசமானைப்

பற்றி யோசித்ததாகத் தெரியவில்லை. நாளைக்கு யார் எசமான்

என்ற விசனமும் இல்லை. காலை ஆகாரத்தைப் பற்றியோ,

இரவு உணவு எங்கிருந்து வரும் என்பது பற்றியோ அறிவு

இல்லை. உலகம் எப்படியும் அதன் விருப்பப்படி இயங்கியே

ஆகவேண்டும் என்ற தோரணையில் அது சாவதானமாகப்

படுத்திருந்தது.

இரண்டு கைகளாலும் அள்ளி அணைக்கும் தூரத்தில்

அவள் படுத்திருந்த மெதுவான படுக்கையின் பள்ளங்கள்

இன்னும் முற்றாக அழியவில்லை. அவள் முடி ஒன்று அவளறி

யாமல் உதிர்ந்து அவளின் ஒரு பகுதியாக அங்கே தங்கி

விட்டது. அவள் உடம்பில் இருந்து புறப்பட்ட மெல்லிய

வாசனை ஒன்று இன்னமும் அங்கேயே சுழன்று கொண்

டிருந்தது.

உலகில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவசியமான,

ஆனால் மிகக்குறைந்த பேர்களாலேயே அறியப்பட்ட சமையல்

கலையில் அவனுக்கு விருப்பம் உண்டு. மூன்று மணி நேரம்

நின்ற நிலையில் அவளுக்காக யப்பானிய உணவு சமைத்

திருந்தான். அவள் ஒன்றைக்கூட ருசி பார்க்கவில்லை. கடல்

பாசியில் சுற்றிய சூஸி முறுகிக்கொண்டு வந்தது. மெழுகு

வர்த்தி, அவிழ்த்துவிட்ட அவளுடைய கூந்தலைப் போல

உருகி வழிந்தது. மூப்பாக்கிய வைன் இன்னும் மூப்பாகி

விரைவில் அறையின் உஷ்ண நிலையை அடைந்து விடும்.

திடீரென்று அவனுக்கு நினைவு வந்தது. எசமானின் மூன்று

கட்டளைகளையும் உடைத்துவிட்டான். இனி உடைப்பதற்கு

ஒன்றும் மிச்சமில்லை. நாயின் உணவு நேரம் மாலை ஆறு

மணி. அது தாண்டி வெகு நேரம் ஆகிவிட்டது. திறமான

பயிற்சிகளால் மிக நல்ல பழக்கங்கள் பழகிக்கொண்ட

அந்த கறுப்பு நாய், இரு முன்னங்கால்களை நீட்டி தன்

காதுகளை மறைத்தபடி, பழுப்புக் கண்களால் இத்தனை

நேரமும் அவனையே பொறுமையாகப் பார்த்துக் கொண்டு

இருந்திருக்கிறது.

END

About the author

2 comments

  • people wont read short stories in website.
    place a button to print in paper both at starting and ending position of your essays . place that button in a bigger bright cooloured size. write the words print and read it in a paper before that button.

  • people wont read short stories in website.
    place a print button in a bigger size with bright colour. also write print and read this essay in a paper near that button. place that button both at starting and ending positions of ur essay. then people will take print out of ur short story or ur essay in a paper easily. then they will read it.

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta