ராஜன் என்பவர் எடுத்த நேர்காணல்

 

நேர்காணல் – அ.முத்துலிங்கம்

 

 

  1. ன் எழுதுகிறீர்கள்?

 

உலகத்தை மேம்படுத்துவதற்காக என்றெல்லாம் சொல்லப்போவதில்லை. முதல் காரணம் எழுதும்போது கிடைக்கும் மகிழ்ச்சிதான். இதே கேள்வியை 500 புத்தகங்கள் எழுதிய அறிவியல் எழுத்தாளரான ஐஸக் அசிமோவிடம் கேட்டார்கள். அவர், ‘வேறு என்ன? என்னுடைய டைப்ரைட்டரில் அடுத்து என்ன வார்த்தை வந்து விழுகிறது என்பதை பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக எழுதுகிறேன்’ என்றார். அவர் என்ன சொல்கிறார் என்றால் புதிதாக ஒன்றைப் படைக்கும்போது கிடைக்கும் இன்பத்தைத்தான். உலகத்தில், முன் இல்லாத ஒன்றை சிருட்டிப்பதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதில் உண்டு?

 

ஒரு பெண், குழந்தை பெற்றால்  அது  சாதாரண விசயமா? புது உயிரை உண்டாக்கும் மகத்தான காரியமல்லவா? ஒரு சிற்பி  சிலையை வடிப்பதும், ஓவியர் புதிதாக ஒன்றை வரைவதும், இசையமைப்பாளர்  புதிய இசையை உருவாக்குவதும் இந்த வகைதான். படைக்கும்போது எழுத்தாளருக்கு கிடைக்கும் மகிழ்ச்சி அதை படிக்கும் வாசகருக்கும் கிடைக்கிறது. மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. இதுதவிர, உங்கள் படைப்பினால் உலகத்துக்கு ஏதாவது நன்மை கிட்டுமானால் அதைவிட பேரானந்தம் வேறு என்ன இருக்கமுடியும்.

 

ஒருமுறை பிரபல எழுத்தாளரும் விமர்சகருமான டி.எஸ். எலியட்டிடம் இதே கேள்வியை கேட்டிருக்கிறார்கள். அவர் இப்படிச் சொன்னார். ’நான் எழுதுவதால் என்னைப் பார்க்க சில பிரபலர்கள் வந்து போகிறார்கள். அதை படம் பிடித்து பத்திரிகைகள் வெளியிடுகின்றன. ஓர் அனுகூலம், என்னுடைய வீதி நுனியில் இருக்கும் மளிகைக் கடைக்காரன் தயங்காமல் கடன் தருகிறான்.’ இதிலும் பார்க்க சிறந்த காரணம் வேறு என்ன வேண்டும்?

 

 

  1. எந்த நேரத்தில் எழுதுகிறீர்கள்?

 

அதிகாலை நேரத்தில்தான் எழுதுகிறேன். காலை 5.30 மணியிலிருந்து 9 மணி மட்டும் எழுதுவேன். காலை உணவுக்கு பின்னர் இரண்டு மணி நேரம் எழுதலாம். ஆனால் ஊக்கம் குறைந்துவிடும். மதிய உணவுக்கு பின்னர் சோர்வு ஆரம்பித்துவிடும். அந்த நேரத்தில் வாசிப்பேன். வாசிப்பின் வெற்றி கையில் இருக்கும் புத்தகத்தை பொறுத்தது. மோசமான புத்தகம் முதல் இரண்டு நிமிடங்கள் முடிவதற்கு முன்னரே என்னை தூக்கத்துக்கு இட்டுப் போய்விடும்.  என்னுடைய எழுத்தாள நண்பரிடம் இதே கேள்வியை நான் கேட்டிருக்கிறேன். அவரும் காலைதான் எழுதுகிறார். ஆனால் ஒரு நாளில் அவருக்கு இரண்டு காலைகள். அதிகாலையிலிருந்து மதியம் வரை எழுதுவார். மதிய உணவுக்குப் பின்னர் ஒரு சிறு தூக்கம். எழுந்தவுடன் ஒரு நடைபோய்விட்டு வந்து மீண்டும் எழுதத் தொடங்குகிறார். ஒரு நாள், இரண்டு விடியல், இரண்டு எழுத்து. இதையும் முயற்சித்துப் பார்த்திருக்கிறேன்.  நான் வேகமான எழுத்தாளன் இல்லை. நாலு மணி நேரத்தில் சிலவேளைகளில் ஒரு பக்கம்தான் தேறுகிறது.

 

  1. நீங்கள் எழுதிய ஒரு கதை/கட்டுரை/கவிதை/நாவல் என் எழுத்து வாழ்க்கையைப் பூர்த்தியாக்கியது என எதைச் சொல்வீர்கள்ஏன்?

 

எழுத்தாளர் திருப்தியாவதே இல்லை. எந்த ஓர் எழுத்தாளரும் நான் எழுதி முடித்துவிட்டேன். என் எழுத்து வாழ்க்கை பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னது கிடையாது. சொல்லவும் மாட்டார்கள். ரஸ்ய எழுத்தாளர் டோல்ஸ்டோய் 1300 பக்கங்கள் கொண்ட ’போரும் சமாதானமும்’ நாவலை எழுதினார். எழுதி முடித்த பின்னர் பின்னுரை ஒன்று எழுதினார். அது திருப்தி தராமல் இன்னொரு பின்னுரை எழுதினார்.  மூன்றாவதாகவும் தன் நாவலை விளக்கி ஒன்று எழுதினார். இறுதிவரை அவருக்கு திருப்தி கிடைத்ததாகத் தெரியவில்லை.

 

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் விட்செல் என்ற பேராசிரியருக்கு 17 மொழிகள் தெரியும். அவர் சொல்வார் மனிதனுடைய சிந்தனையை முழுவதுமாக வெளியே கொண்டுவருவதற்கு மொழியினுடைய ஆற்றல் போதாது என்று. சிலவேளைகளில் அவர் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதுவார். பாதியிலே ஒரு வார்த்தை தேவைப்படும். ஆங்கிலத்தில் அந்த வார்த்தை கிடையாது ஆனால் கிரேக்க மொழியில்  ஒரு வார்த்தை உண்டு. இன்னொரு இடத்தில் வேறு சொல் தேவையாக இருக்கும். அதற்கு பொருத்தமான வார்த்தை ஆங்கிலத்தில் இல்லை ஆனால் ஹிப்ருவில் இருக்கும். மனிதனுடைய சிந்தனையை முழுவதுமாக தருவதற்கு 17 மொழிகள் கூட போதாது. அப்படியிருக்க  ஒரு மொழி எப்படி போதுமானதாக இருக்கும். சிந்தனைக்கு ஓர் அடி பின்னே தள்ளித்தான் எழுத்து இருக்கிறது. அது சமமாகவே முடியாது.

 

  1. எழுத்தில் நீங்கள் சோர்வாக உணர்வது எப்போது?

 

எப்பொழுதும்தான். நான் பல சிறந்த எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறேன்.  அவர்கள் ஒரு புத்தகம் கூட எழுதியது கிடையாது. ஆனால் சிந்தனையில் அவர்கள் பல நூல்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.  அதை எழுத்தில் மாற்றுவதற்கு சோம்பல் இடம் கொடுக்கவில்லை. எழுத்தாளருடைய உண்மையான வெற்றி சோம்பலை தோற்கடிப்பதுதான்.

நான் கம்புயூட்டரில் எழுதும்போது அடிக்கடி நினைப்பது கம்பரைத்தான். 10,200 பாடல்களை அவர் இயற்றியிருக்கிறார். அது ஒன்றும் பெரிய காரியமில்லை. ஓலையை  ஒரு கையிலே  பிடித்து மறுகையில் எழுத்தாணியை எடுத்து அத்தனை பாடல்களையும் எழுதினாரே அதற்கு எத்தனை உடல் உழைப்பு தேவைப்பட்டிருக்கும்.  காவியம் படைக்கும்போது பாதியில் சோர்வு ஏற்பட்டிருந்தால் அவருடைய படைப்பு என்னவாகியிருக்கும்.

அதிகமாக எனக்கு சோர்வு நேர்ந்தது நேர்காணல் செய்யும்போதுதான். ஒருவரை முன்னும் பின்னும் துரத்தி தொந்தரவு செய்து நேர்காணலுக்கு தேதி வாங்கியிருப்போம். பல மைல்கள் பயணம் செய்ய வேண்டி வரலாம். இறுதியில் நேர்காணல் முடிந்து எழுதி திருத்தி பத்திரிகைக்கு அனுப்பிவிட்டு காத்திருக்கவேண்டும். நேர்காணல் கொடுத்தவர் வேறு ஆவலாக இருப்பார். பிரசுரிப்பதில் தாமதம் ஏற்படும்போது மிகவும் மனச்சோர்வாக உணர்வேன். அதைக் கடந்து மீண்டும் எழுத வருவது சிரமம்தான்.

 

  1. ழுதுவது பற்றி உங்களுக்குக் கிடைத்த சிறந்த அறிவுரை எது?

 

வருடம் 1999 என்று நினைக்கிறேன். பல மைல்கள் பயணம் செய்து அமெரிக்காவில் சாந்தகுரூஸ் என்ற இடத்தில் திரு சுந்தர ராமசாமியை சந்திக்கப் போயிருந்தேன். முதல் சந்திப்பு. நான் எழுதிய சில சிறுகதைகளை அவர் படித்திருந்தார். பாராட்டுகள் வந்திருந்தன. ஒன்றிரண்டு எதிர்மறையாகவும் இருந்தன. அப்பொழுது அவர் சொன்ன அறிவுரை இன்றுவரை பயனுள்ளதாகவே இருக்கிறது. ’திறனாய்வாளரை முற்றிலும் ஒதுக்கக்கூடாது. காழ்ப்புணர்வு விமர்சனம் என்றால் முதல் இரண்டு வரிகளிலேயே அதைக் கண்டுபிடித்துவிடலாம். அவற்றை பொருட்படுத்த வேண்டியதில்லை. உங்கள் படைப்புத் திறனை அழிப்பதுதான் அவர்கள் நோக்கம். திறனாய்வாளர் வெளிப்படுத்திய கருத்தில் உண்மை இருந்தால் அதை மதிக்கப் பழகவேண்டும். நல்ல விமர்சனங்கள் எழுத்தை மேம்படுத்தும்.’

 

 

  1. இலக்கியம் தவிர்த்து – இசைபயணம்சினிமாஒவியம்இத்தியாதி… – வேறு எது இல்லாமல் உங்களால் வாழ முடியாதுஏன்?

    

கிடைக்கும் ஒவ்வொரு நிமிட அவகாசத்தில் ஏதாவது எழுதத் தோன்றும். அல்லது வாசிக்கவேண்டும். ஆகவே தொலைக்காட்சி பார்ப்பதோ, இசை கேட்பதோ அபூர்வமாகவே நடக்கிறது. வெங்கட் சாமிநாதன் கர்நாடக இசை குறுந்தகடு ஒன்று தந்தார். அதை அடிக்கடி கேட்பேன். துக்கமான சமயத்திலும் மகிழ்வான சமயத்திலும் அதே இசை மனதை சமநிலைப்படுத்துகிறது. சமீபத்தில் சினிமாவில் வந்த மெல்லிசைப் பாடல் ஒன்றை என் செல்பேசியில் ஏற்றி 100 தடவை  கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதை எழுதியவர் கவிஞர் யுகபாரதி. இசையமைத்தவர் டி.இமான். ’கண்ணம்மா கண்ணம்மா’ என்ற பாடல். யுகபாரதி அவருடைய குட்டி மகள் காவியாவை மனதில் வைத்து எழுதிய பாடல் என்று அறிந்தேன். ஆகவே அதில் எனக்கு ஈர்ப்பு அதிகம். இப்பொழுதும் அதைக் கேட்டபடியே எழுதுகிறேன்.

 

  1. இதை இன்னும் வாசிக்காமல் இருக்கிறேனே என நீங்கள் நினைக்கும் புத்தகம் எது?

   

இன்னும் வாசிக்கவேண்டும் என நினைப்பது சங்க இலக்கியம்தான். எட்டுத்தொகை,  பத்துப் பாட்டு ஆகியவற்றை நான் அவ்வப்போது படித்ததுண்டு ஆனால் முறையாகப் பாடம் கேட்டதில்லை. நேற்று ’மலைபடுகடாம்’ நூலை எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். எந்தப் பக்கத்தை திறந்தாலும் ஒரு புதிய தகவல் அங்கே கிடைக்கும். இது ஆற்றுப்படை நூல். உலக இலக்கியங்களில் தமிழில் மட்டுமே ஆற்றுப்படை இலக்கியம் உள்ளது என்று சொல்வார்கள். பரிசு பெற்றுத்  திரும்பும் ஒரு புலவன் இன்னொருவரிடம் இப்படி இந்த வழியால் போ உனக்கு அரசன் இன்ன இன்ன பரிசுகள் தருவான் எனச் சொல்வது. அப்படியான புலவரை அந்தக் காலத்து  GPS, அதாவது புவி நிலை காட்டி என்று சொல்லலாம். கோல்ஃப் மைதானங்களைக் கடக்கும்போது எச்சரிக்கை பலகை காணப்படும். அதில் இப்படி எழுதியிருக்கும். ‘கோல்ஃப் பந்துகள் வந்து விழும் அபாயம். எச்சரிக்கை.’ அது போலவே மலைபடுகடாமில் புலவர் எச்சரிக்கிறார். ’கவண் கற்கள் வந்து விழும் இடம் . இந்த இடத்தை எச்சரிக்கையாக கடக்கவேண்டும்.’

படிப்பேனோ என்னவோ ஆசைமட்டும் இருக்கிறது.

 

  1. இலக்கியம் ஒருவரைப் பண்படுத்துமா?

 

உயர்ந்த இலக்கியம் அதைச் செய்கிறது. தன் முதிய வயதில் டோல்ஸ்டோய் எழுதிய நீண்ட கதை The Death of Ivan Ilyich  அறம் பற்றி பேசுவது.  இவான் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். ஒருவருக்கும்  தீங்கிழைக்காத சாதாரண வாழ்க்கை அவருடையது. அவர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து காயம் பட்டு தீர்க்க முடியாத நோயாளியாக படுக்கையில் படுத்துவிட்டார். மருத்துவர் அவரிடம் உண்மை பேசுவதில்லை. மனைவி வேண்டா வெறுப்பாக நடந்துகொள்கிறார். ஒருவரும் அவருக்கு உண்மையாக  இல்லை, ஒரேயொரு வேலைக்காரனைத் தவிர. அவர் கடவுளைப்பற்றியும், வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றியும் அறத்தைப்பற்றியும் தன் இறுதி காலத்தில் சிந்திக்கிறார்.  வாசக மனங்களையும் உண்மையை நோக்கி நகர்த்துகிறார்.

 

அமெரிக்க பல்கலைக்கழகங்கள் சிலவற்றில்  மேலாண்மை பாடத்தின்போது  இந்தக் கதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது மனிதனை சிந்திக்க வைக்கிறது. வாழ்வின் அர்த்தம் பற்றிய தெளிவை உண்டாக்குகிறது. மேம்படுத்துகிறது.

 

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta

amuttu

Get in touch

Quickly communicate covalent niche markets for maintainable sources. Collaboratively harness resource sucking experiences whereas cost effective meta-services.