இரண்டு டொலர்

இரண்டு டொலர்

அ.முத்துலிங்கம்

வரிசை தொடங்கிய இடமும் முடிந்த இடமும் ஒன்று. நம்பர் 498 பஸ்சுக்கு நான் மட்டுமே தனியாக  காத்து நின்றேன். சாம்பல் நிறப் பகல்.   தற்காலிகமாக நான் தங்கியிருந்த இடம்  மோசமானது. பஸ் வுட்வார்ட் அவென்யூ வழியாகப் போகும்போது  ஏமாற்றுக்காரப் பேர்வழிகள் எல்லாம் ஏறுவார்கள், இறங்குவார்கள்.  அதையெல்லாம் பார்த்தால் முடியுமா? கோப்பை கழுவும் வேலையிலும்  பார்க்க உயர்ந்த வேலை  எனக்கு கிடைத்ததில்லை. நாலாவது வேலையும் போய்விட்டது. என்னுடைய  நண்பருக்கு வேண்டிய  ஒருவருக்கு தெரிந்த இன்னொருவர் என்னை நேர்முகத் தேர்வுக்கு வரச் சொல்லியிருந்தார். நல்ல வேலை, இரண்டு மடங்கு சம்பளம் என்றார்கள். சொன்ன நேரத்துக்குள் நான் போய்ச் சேரவேண்டும். அதுதான் முக்கியம். எனக்காக அவர் காத்திருக்க மாட்டார்.

பஸ்சில்  இதே பாதையில்  பலமுறை போயிருக்கிறேன். குறித்த நேரத்தில் பஸ் இலக்கை அடைந்தால் அது அந்தந்த பயணிகளின் கூட்டுமொத்த அதிர்ஷ்டம். ஆகவே நேரம் பிந்துவதற்கு அதிகம் வாய்ப்பு இருந்தது.  போவதற்கு இரண்டு டொலர் கட்டணம், திரும்புவதற்கு இரண்டு டொலர் என்பது கணக்கு. என்னுடைய மதிய உணவுக்காக நான் சேமித்து வைத்த  காசு இது. வேலை முக்கியமா மதிய உணவு  முக்கியமா என மனதுக்குள் விவாதம் நடந்தது. தூரத்தில், திருப்பத்தில் சாம்பல் பச்சை வர்ண பஸ் வருவது தெரிந்தது. பிரார்த்தனையில் பாதி பலித்து விட்டது.  கைக்கடிகாரத்தைப் பார்த்தேன்.  பஸ்சில் அடிக்கடி சின்னச் சண்டைகள் உண்டாகி  அதனால் தாமதம் ஏற்படுவது வழக்கம். எல்லாம் பஸ் சாரதியின் சாமர்த்தியத்தில் தங்கியிருக்கிறது.

பஸ் முக்கால்வாசி நிரம்பியிருந்தது.  இரண்டு டொலரை பஸ் சாரதியிடம் தந்துவிட்டு வசதியான இடம் பிடித்து அமர்ந்தேன். எனக்குப் பக்கத்தில் இருந்தவர் கடுதாசிக் குவளை காப்பியை குடிக்காமல் கையிலே பிடித்து நல்ல சந்தர்ப்பத்துக்காக அதையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கைவிரல்களில் வரிசையாக வெள்ளி மோதிரங்கள். மற்றப் பக்க இளைஞன் இரண்டு பெருவிரல்களாலும் செல்பேசியில்  படுவேகமாக குறுஞ்செய்திகள் அனுப்பியவண்ணம் இருந்தான். அதே சமயம் புதுச் செய்திகள் டிங் டிங் என வந்து விழுந்தன.  என்னுடைய புகழ்பற்றி  நேர்முகத்தில் என்னவென்ன சொல்லலாம், என்னவென்ன சொல்லக்கூடாது என்பது பற்றி திட்டவட்டமாக யோசித்து வைத்திருந்தேன். மறுபடியும் மனதுக்குள் ஒத்திக்கை பார்த்தேன். இதிலே ஒரு தந்திரம் இருக்கிறது. பெரிய கேள்விகளுக்கு சின்னப் பதில் சொல்லவேண்டும்; சின்னக் கேள்விகளுக்கு பெரிய பதில் தேவை.  ஒவ்வொரு தடவையும் தவறாமல் கேட்கப்படும் கேள்வி ’எதற்காக கடைசி வேலையை விட்டீர்கள்?’ என்பதுதான். ’16 கோப்பைகளை உடைத்தேன்’ என்று சொல்லமுடியுமா? அமோகமான கற்பனை வளம்தான் என்னைக் காப்பாற்றும்.

பஸ்சிலே ‘கஞ்சா உருட்ட அனுமதியில்லை’ (No weed rolling) என்று எழுதி வைத்திருந்தது. யாராவது கடைசி ஆசனத்தில் இருந்து கஞ்சா உருட்டி புகைக்க ஆரம்பித்தால் ஓட்டுநருக்கும் உருட்டுநருக்கும் இடையில் சண்டை தொடங்கிவிடும். பயணி இறங்கிய பின்னர்தான் பஸ் மேலே போகும். ஐந்து நிமிடம் தாமதமாகிவிடும். அல்லது சில பேர் பஸ்சில் ஏறுவார்கள். பயணிகளிடம் காசு சேகரித்து ஒட்டுநரிடம் கொடுத்து பயணம் செய்வார்கள். இன்னும் சிலர் அப்படி சேகரித்த காசை சாரதியிடம் கொடுக்காமல் அடுத்த பஸ் நிறுத்தத்தில் பின் கதவு வழியாக இறங்கிப் போய்க்கொண்டே  இருப்பார்கள்.

அன்று நான் பலதடவை பிரார்த்தித்தபடியே இருந்தேன். இப்படியான சம்பவம் ஏதாவது நடந்து பஸ் பிந்தாமல் போகவேண்டும். அன்றைய சாரதி கறுப்பு இனத்து பெண். கறள் நிறம். பெண் என்றால் நல்லதுதான், மிகக் கண்டிப்பாக இருப்பார். பஸ்சிலே ஏறிய பயணிகள் அனைவரும் என்றுமில்லாதமாதிரி  அமைதியாக இருந்தனர். கடைசி சீட்டில் கஞ்சா உருட்டுபவர் ஒருவரும் இல்லை. ஒரு  பெண்ணை மட்டும் ஒருவன் உருட்டிக்கொண்டிருந்தான். அடுத்த நிறுத்தத்தில் கறுப்புக் கண்ணாடி அணிந்த உயரமான ஆள், ஒலிம்பிக் பதக்கத்தை அணிவதுபோல தன் பெயர் எழுதிய அட்டையை கழுத்திலே தொங்கவிட்டபடி ஏறி அமைதியாக அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து ஒரு பெண் கையில் குழந்தையையும், மறுகையில் பையையும்  காவியபடி செல்பேசியை வாயினால் கவ்விக்கொண்டு ஏறி ஓர் இருக்கையை தேடிப் பிடித்து அமர்ந்தார்.    சரி, நேரத்துக்கு போய்ச் சேர்ந்துவிடலாம் என்று நிம்மதி ஏற்பட்டது. ஒரு புதுவிதமான பிரச்சினை அன்று உருவாகப் போகிறது என்பது எனக்குத் தெரியாது.

அடுத்துவந்த பஸ் நிறுத்தத்தில் ஒருவர் சக்கர நாற்காலியில்  பேருந்துக்காக காத்தபடி நிற்பது தெரிந்தது. சக்கர நாற்காலியை பஸ்சில் ஏற்றுவதற்கு ஒரு முறை உண்டு. சாரதி பஸ்சை நிறுத்திவிட்டு கதவை திறந்தார். பின்னர் இறங்கு பலகையை இறக்கினார். அது ஆடி அசைந்து கீழே இறங்கி நிலத்துடன் ஒட்டிக்கொண்டு வளைந்து நின்றது. பயணி தன்னுடைய தானியங்கி நாற்காலியை பலகைக்கு நேராகக் கொண்டுவந்து பின்னர் மெல்ல மெல்ல ஏறத் தொடங்கினார். உள்ளே வந்ததும் சாரதி தன் ஆசனத்தை விட்டு எழுந்து ஊனமுற்றோருக்காக  ஒதுக்கப்பட்ட இடத்தில் நாற்காலியை  நிறுத்தி,  ஒரு சங்கிலியால் பிணைத்துக் கட்டினார். இதற்கு ஐந்து நிமிடம் எடுத்துக்கொண்டது. நான் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன்.

பஸ் புறப்படுவதற்காக நாங்கள் காத்திருந்தோம். ஓட்டுநர் கவர்ச்சியான  உயரமான பெண்.  சிகை சுருண்டு சுருண்டு அவர் தோள்மூட்டை தொட்டு நின்றது. திட்டமிட்டு நேராக்கிய பல்வரிசை.  ஒரு பெட்டிக்குள் நிற்பதுபோல தலையை குனிந்து பயணி கொடுக்கப்போகும் இரண்டு டொலருக்காக காத்து நின்றார்.  அப்போதுதான் பிரச்சினை ஆரம்பமானது. பயணியை பார்த்தேன். வட்டமான முகம்.  இடுங்கிய கண்கள். நாற்காலியை நிறைத்து உட்கார்ந்திருந்த அவர் தொப்பை கீழே இறங்கி தொடையில் கிடந்தது. தவளையின் கழுத்துப்போல   வீங்கிய தொண்டை..   ’ஆஸ், ஆஸ்’ என்று மூச்சு விட்டார்.

பயணி உட்கார்ந்திருந்தது  நாற்காலியல்ல, அவருடைய வீடு. கைப்பிடியில் இரண்டு மூன்று உடுப்புகள் தொங்கின. ஆசனத்துக்கு கீழே அத்தியாவசியமான  சாமான்கள் அடுக்கியிருந்தன.  அவர் அணிந்திருந்த உடுப்பில் எட்டு பக்கெட்டுகள். அவர் காசைத் தேடத் தொடங்கினார். ஒவ்வொரு பக்கெட்டாகத் தேடியும் காசு கிடைக்கவில்லை. பின்னர் நாற்காலி கைப்பிடியில் கொழுவிய உடுப்புகளின் பக்கெட்டுகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்தார். அங்கேயும் காசு இல்லை. சுருண்ட முடி சாரதி பெட்டியை மூடுவதுபோல இமைகளால் கண்களை மூடிக்கொண்டு  பொறுமையாக நின்றார். ஏனைய பயணிகள் தங்கள் தங்கள் ஆசனங்களில் நெளிந்தனர். மேலும் ஐந்து நிமிடங்கள் ஓடின.

என்னிடம் இருந்த மீதி இரண்டு டொலரை பயணியின் கட்டணமாக சாரதியிடம் கொடுக்கலாமா என்று  யோசித்தேன். திரும்பும்போது நடந்து போய்விடலாம். ஆனால் சில சமயங்களில் உதவி செய்ய இயலாது. ஊனமுற்றவர் எரிந்து விழுவார்; சத்தம் போடுவார். சாரதியும் என்ன செய்வார் என்று ஊகிக்க முடியாது. அங்கே நடக்கும் சம்பவங்களை எல்லாம் பஸ்சில் பொருத்திய வீடியோ காமிரா படம் பிடித்துக் கொண்டிருந்தது. ஆகவே அதையும் யோசிக்க வேண்டும். எவ்வளவு நேரம்தான் இவர் பக்கெட்டுகளை ஆராய்வார். இறுதியில் ஏதோ கொசு கடித்ததுபோல உடம்பின் கீழ்ப்பாகத்தை மெல்ல ஆட்டினார்.   உதடுகளைச் சுருக்கி பிரயத்தனமாக வாயை திறந்தார். ஆனால்  வார்த்தை வெளியே வரவில்லை.  அவர் தலையை குனிந்து நெஞ்சிலே ஒட்டுவதுபோல வைத்துக்கொண்டார்.

பஸ்சிலே கோடு கோடாக வெளிச்சம் இறங்கத் தொடங்கியிருந்தது. நான் என் முகத்தை பஸ் யன்னலில் பார்த்தேன். பதற்றமாகத்தான் தென்பட்டது. சாரதி சங்கிலி பூட்டை திறந்து பயணியின் நாற்காலியை  விடுவித்தார். பஸ் கதவை திறந்தார். இறங்கு பலகை மெதுவாக ஆடி அசைந்து இறங்கி நிலத்தை தொட்டு நின்றது. பயணி சாவகாசமாக  தன்னுடைய சக்கர நாற்காலியை இயக்கி  லாவகமாகத் திருப்பி நிலத்தை அடைந்து பஸ்சிலிருந்து நகர்ந்து இடம் விட்டார். சாரதி மறுபடியும் விசையை அமர்த்தி பலகையை உள்ளே இழுத்தார். கதவை பூட்டினார். மேலும் ஐந்து நிமிடங்கள் கடந்தன.

மறுபடியும் பஸ்  கிளம்பி சிறிது தூரம் நகர்ந்திருக்கும். நாற்காலி பயணி கைகளை மேலே தூக்கி ஆட்டி ‘இரண்டு டொலர், இரண்டு டொலர்’ என்று கூவினார். இத்தனை நேரமும்  அவர் கையில் இரண்டு டொலர் இருந்ததை  மறந்துவிட்டார். பஸ் சாரதி முடிவு எடுக்க வேண்டிய நேரம். பஸ்சை நிறுத்தி கொஞ்சம் பின்னுக்கு நகர்த்தினார். கதவை திறந்தார். இறங்கு பலகையை இறக்கினார். அது மெல்ல அசைந்து அசைந்து இறங்கி நிலத்தை தொட்டது. நான் கைக்கடிகாரத்தை பார்த்தேன்.

இதற்குத்தான் காத்திருந்ததுபோல பக்கத்து இருக்கைப் பயணி குவளை விளிம்பிலே சிந்திய காப்பியை நக்கிவிட்டு குடிக்க ஆரம்பித்தார். குதிரை கால்களைத் தூக்கி பாய்வதுபோல நான் செல்போன்காரரையும், குறுஞ்செய்திகளையும்  கடந்து பின் கதவு வழியாக இறங்கி   எதிர் திசையில் நடக்கத் தொடங்கினேன். வேலை கிடைக்காவிட்டால் என்ன? நாற்காலிப் பயணி, இரண்டு டொலரை கண்டுபிடித்தது கொண்டாடப்பட வேண்டிய தருணம் அல்லவா? என்பையில் எஞ்சியிருந்த இரண்டு டொலர் காசுக்கு  மதியம் என்ன சாப்பிடலாம் என்ற நினைப்பில்  மனம் லயித்தது.

END.

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta

amuttu

Get in touch

Quickly communicate covalent niche markets for maintainable sources. Collaboratively harness resource sucking experiences whereas cost effective meta-services.