தமிழ் இருக்கை

தமிழ் இருக்கை

அ.முத்துலிங்கம்

தமிழ் இருக்கைக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில்  எப்படியான வரவேற்பு கிடைத்தது என்பதை நேரில் பார்க்கும் வாய்ப்பு இரண்டு வருடங்களுக்கு முன்னர் எனக்கு கிடைத்தது. அமெரிக்காவின் பிரபல மருத்துவர் ஒருவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு தமிழ் இருக்கை ஆரம்பிப்பதற்காக கணிசமான தொகையை முன் பணமாக  வழங்கியிருந்தார். ஆறுமாதம் கழித்து  மீதிப் பணத்தை செலுத்துவதற்காக  இரண்டு மருத்துவர்கள் சென்றபோது அவர்களுடன் நானும் கூட இருந்தேன்.  எங்களைக் கண்டதும் அதிகாரி இழுப்பறையை திறந்து ஆறுமாதம் முன்னர் முன்பணமாகக் கொடுத்த காசோலையை வெளியே எடுத்தார். அந்தப் பணத்தை அவர் வங்கியில் சேர்க்கவே இல்லை.

தமிழ் ஓர் ஆதி மொழி, 2000 வருட இலக்கியங்கள் கொண்ட செம்மொழி என்பது பலருக்கு தெரியாது.  அதிகாரியும் அறியவில்லை என்றே நினைக்கிறேன். முதன்முறையாக ஓர் இன மக்கள் சேர்ந்து உருவாக்கப் போகும் இருக்கையில் அவருக்கு பெரிய நம்பிக்கை இருந்திருக்க முடியாது. ’இது எங்கே நிறைவேறப் போகிறது?’ என அவர் நினைத்திருக்கலாம். ஆகவே அசட்டையாக பணத்தை வங்கியில் கட்டவில்லை. ஆனால் அந்த அதிகாரி தமிழர்களின்  வைராக்கியத்தையும், விடாப்பிடிக் குணத்தையும்  கணக்கில் எடுக்கவில்லை.  விதித்த காலக்கெடு முடிவதற்கிடையில் ஆறு மில்லியன் டொலர்கள் திரட்டியதை கண்ணுற்ற ஹார்வர்ட் அதிகாரிகளின்  ஆச்சரியத்துக்கு அளவேயில்லை. தமிழின் தொன்மையும் அதன் வீச்சும், உலகம்முழுக்க வியாபித்திருந்த தமிழர்களின் பற்றும் நிதி இலக்கை இலகுவாக அடைய உதவியது.

ஆனால் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்துடனான அனுபவம் வேறுமாதிரி அமைந்தது.  ஹார்வர்டின் வெற்றியை  கண்ணுற்ற ரொறொன்ரோ பல்கலைக்கழக இயக்குநர்கள் அவர்களாகவே  தமிழ் மக்களை அணுகி தமிழ் இருக்கை ஆரம்பிப்பதற்கான சம்மதத்தை வழங்கினார்கள். எதைத் தேடிப் போகவேண்டுமோ அது எங்களை தேடி வந்தது. மூன்று மில்லியன் டொலர்களை (ரூ 15.6 கோடி) இருப்பு நிதியாக வைத்து உருவாக்கப்படும் இந்தத் தமிழ் இருக்கை தமிழ் மக்களுக்குச் சொந்தமாக இருக்கும். தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைக் கற்றுத் தருவதுடன் பல்வேறு முக்கியமான ஆய்வுகளை முன்னெடுக்கும் மையப்புள்ளியாகவும்  அமையும். ஏனைய செம்மொழிகள் அனைத்துலக கல்வி நிறுவனங்களில் நிறுவப்பட்டு ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் மூலம் பல நன்மைகள் பெற்றுள்ளன. கனடாவில் நிறுவப்படும்  தமிழ் இருக்கை  தமிழுக்கான அங்கீகாரத்தை அளிப்பதோடு, தொடர் பயன்பாட்டிற்கும் முன்னேற்றத்துக்கும் வலுச்சேர்த்து பல கல்வி நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும்.  

ரொறொன்ரோ நகரில்  தமிழ் இருக்கை ஒன்று அமையவேண்டும் என்பது தமிழ் மக்களின் நீண்டநாள் விருப்பம்.  அதற்கான ஒப்பந்தம்  2018ம்  வருடம் யூன் மாதம் கையொப்பமாகியது. அதன்  தொடக்க விழாவில், ரொறொன்ரோ  பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தின் முன்னாள் தலைவர், ’தமிழ் இருக்கையானது உயர் கல்வி நிறுவனத்தில் தமிழ் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்காக மக்களின் ஆதரவுடன் நிறுவப்பட்டு என்றென்றும் நிலைத்திருக்கப்போகும் ஒரு கல்வி அலகாகும். ஒரு மொழி பேசும் குழுவினரால் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் முதல் இருக்கை என்பது பெருமைப்பட வேண்டிய ஒன்று.  இது  வேறு இருக்கைகளுக்கு முன்மாதிரியாக அமையும்.  தமிழ் மொழியின் பாரம்பரியத்துக்கும், தொன்மைக்கும் அதன் மேன்மைக்கும் சாட்சியாக  என்றென்றும் நிலைத்து நிற்கும்’ எனக்கூறி வாழ்த்தினார்.

ரொறன்ரோ பல்கலைக்கழகம் 190 ஆண்டுகள் பழமை வாய்ந்த, கனடாவின் முதற்தரமான கல்வி நிறுவனமாகும். கனடாவின் மூன்று ஆளுநர், நான்கு பிரதமர், 14 உச்சநீதி மன்ற நீதிபதி, பத்து நோபல் பரிசு, மூன்று ரூறிங் பரிசு, மற்றும் 94 ரோட் பரிசு வென்றோரை ரொறன்ரோ பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கிறது. இங்கே நிறுவப்படும் தமிழ் இருக்கை, இந்தியத் துணைக்கண்டத்தைத் தாண்டிய தமிழ்க் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு முதன்மையான இடமாக  அமையும்.  அருகிவரும் தமிழ் இலக்கிய நூல்கள் மற்றும் ஆவணங்கள் எண்மியமாக்கப்பட்டு  பாதுகாக்கப்படும். கனடிய அரசு வழங்கும் நல்கைகளை தமிழ் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சிக்கும், தமிழ் கருத்தரங்குகளை  ஒழுங்குசெய்வதற்கும், வருகைப் பேராசிரியர்களை ஏற்பாடுசெய்வதற்கும் பயன்படுத்தலாம். சிறந்த ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி ஊக்குவிக்கலாம். தமிழ் இருக்கை என்பது நுழைவாயில்தான். தக்க பேராசிரியர் அமைந்தால் முதல்தரமான பல்கலைக்கழகத்தில் ஒரு மொழிக்கு கிடைக்கக்கூடிய அத்தனை வாய்ப்புகளையும், பயன்களையும் முழுமையாக அடையலாம்.

கனடா, தமிழர்களை அரவணைக்கும் நாடு. 2017ம் ஆண்டு தொடங்கி கனடாவில் ஒவ்வொரு சனவரி மாதமும் தமிழ் மரபுத் தினம் கொண்டாடப்படுகிறது. கனடாவில்  மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள். ரொறொன்ரோ பல்கலையில் பயின்ற  பழைய மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது.  நிதி திரட்டுவதில் இவர்கள் மனதை ஒருமுகமாகச்  செலுத்தினால்  தமிழ் இருக்கை கனவு இலகுவாக நிறைவேறிவிடும்.   கனடாவின் பல்வேறு மாகாணங்களிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் நன்கொடைகள் கிடைக்கின்றன.   வெளிநாட்டுக்கு  பணம் அனுப்புவதில் இருக்கும்  எண்ணற்ற  தடைகளைத் தாண்டி இந்தியாவிலிருந்து பலர் நிதி வழங்கினர். 

கனடாவில் அகதியாக வந்து இன்று அதிசெல்வந்தராக வாழும் தமிழர் ஒருவர் கேட்டார், ’இதில எனக்கு என்ன பிரயோசனம்?’ ’உங்களுக்கு ஒன்றும் இல்லை, ஐயா. நாங்கள் விதைதான் விதைக்கிறோம். பயன் உங்கள் சந்ததியினருக்குத்தான்’ என்று சொல்லவேண்டி நேர்ந்தது. தமிழ் மொழி உலக மொழியாகிவிட்டது. நியூசீலாந்தில் இருந்து அலாஸ்கா வரை தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்.  உலகத்து மொழிகள் எல்லாம் ஏதாவதொரு  மதத்தை சார்ந்தே இருக்கும். ஆனால் தமிழ் மொழி அப்படியில்லைல. அது மதங்களைக் கடந்தது. ’யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று 2000 வருடங்களுக்கு முன்னரே ஒரு புலவர் பாடிவைத்த  மகத்தான மொழிக்கு இருக்கை அமைக்கும் வாய்ப்பு எமக்கு கிடைத்திருப்பது பெரும் அதிர்ஷ்டமே.   

ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில்  முதன்முறையாக 21 சனவரி 2019 மாலை தமிழ் மரபுத் தினம் கொண்டாடப்பட்டது. உலகிலேயே ஒரு பல்கலைக்கழகம் தமிழ் மரபுத் தினத்துக்கு விழா எடுத்தது  இதுவே முதல் என்று சொல்லலாம். இந்தக் கொண்டாட்டத்தில் பிரபல இசையமைப்பாளர் இமான் பிரதம  விருந்தினராக  கலந்துகொண்டு  அவர் இசையமைத்த ரொறொன்ரோ  தமிழ் இருக்கை வாழ்த்துப் பாடலை  வெளியிட்டார். இமானை வரவேற்று பேசிய ரொறொன்ரோ பல்கலைக்கழகத் தலைவர் விஸ்டம் டெட்டி  ’கனடாவில் உருவாகும் தமிழ் இருக்கை புதிய ஆராய்ச்சிகளுக்கு வழிவகுப்பதுடன்  தமிழின் மேன்மையை அனைத்துலக மக்களுக்கும் கொண்டு செல்லும்’ என்று கூறி இமானைப் பாராட்டினார்.  இசையமைத்த செலவு, பயணச் செலவு அனைத்தையும் இமானே ஏற்றுக்கொண்டார். அவருடைய அர்ப்பணிப்பும், தமிழ் பற்றும், தமிழ் இருக்கை அமையவேண்டும் என்ற ஆர்வமும் தமிழ் மக்களால் என்றும் மறக்கமுடியாத ஒன்று.

கனடாவில் சிறு குழந்தைகளும் மாணவ மாணவியரும் தங்களுக்கு கிடைத்த பிறந்தாள் பணத்தை தமிழ் இருக்கைக்கு கொடுத்தார்கள். 2700 கி.மீட்டர் தொலைவில் அல்பெர்ட்டா மாகாணத்திலிருந்து ஒரு சிறுமி அவருடைய  பிறந்த நாளுக்கு கிடைத்த பணத்தை அப்படியே தமிழ் இருக்கைக்கு அனுப்பியிருந்தார்.  சிறுமிக்கு  நன்றிகூறிவிட்டு அவருடைய அப்பாவிடம் பேசியபோது  அவர் சொன்னார், ’ஒரு சினிமா 2 வாரம் ஓடியதற்காக பெரிய விழா எடுக்கிறார்கள். தமிழ் 2500 வருடங்களாக ஓடுகிறது. அதையல்லவா நாங்கள் கொண்டாடவேண்டும்.’ எழுத்தாளர் இமையம் அந்தச் சமயம்  தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது பெற கனடா வந்திருந்தார். அவர் தனது விருதுப் பணத்தில் ஒரு பகுதியை மேடையிலே தமிழ் இருக்கைக்கு வழங்கிவிட்டு  ஏற்புரையில் இப்படி சொன்னார். ‘ குழந்தைகளும், மாணவமாணவியரும் தமிழ் இருக்கைக்கு பணம் கொடுப்பதை பார்ப்பது நெகிழ்ச்சியாகவிருக்கிறது. என் பங்குக்கு ஒரு சிறுபகுதியை வழங்குகிறேன். எத்தனை டொலர்கள் சேர்க்கப்பட்டன என்பது அல்ல முக்கியம். எத்தனை பேர் பங்குபற்றினார்கள் என்பதே முக்கியம்.’    

தமிழர் ஒருவர் கனடா நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதும், இரு தமிழர்கள் மாகாண அரசு உறுப்பினர்களாக இருப்பதும் எங்களுக்கு  பெருமை தருவது. நாங்கள் நடத்தும் தமிழ் மரபு கொண்டாட்டங்களை வேற்று மொழிக்காரர்கள் பிரம்மிப்புடன் பார்க்கிறார்கள். கனடாவின் தேசிய கீதம் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் மட்டுமல்லாமல் தமிழிலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே எந்த தமிழ் விழா என்றாலும் தமிழில் கனடா தேசிய கீதத்தை பாடியே தொடங்குகிறோம். எங்கள் மொழிக்கு நாடு இல்லாதபடியால்  தேசிய கீதம் கிடையாது, ஆனால் தமிழ் மொழி வாழ்த்து பாடித்தான் விழாக்களை ஆரம்பிக்கிறோம்.  உலகத்திலேயே, ஒரு மொழிக்கான வணக்கப் பாடலைப்  பாடி நிகழ்ச்சியை தொடங்குவது தமிழர்கள் மட்டும்தான். 

கடந்த வாரம் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில்  தமிழ் இருக்கை முதலாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. ஒரு மில்லியன் டொலர்கள் திரட்டியாகிவிட்டதை பல்கலைக்கழகம் உத்தியோக பூர்வமாக அறிவித்தது. மீதி இரண்டு மில்லியன் டொலர்களை ஒருவருட காலக் கெடுவுக்குள் திரட்டவேண்டும். நன்கொடை விவரங்கள் அனைத்தும்   பல்கலைக்கழகத்தில் நிரந்தரமாக பொறிக்கப்படும்.  torontotamilchair.ca என்ற இணையத்தளத்தில் DONATE என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் நன்கொடைகளை வழங்கலாம். தானாக வரும் நன்கொடைகள் ஒருபக்கம் இருந்தாலும், நன்கொடையாளர்களைத் தேடி பல்கலைக்கழகம் போவதும் உண்டு.   ஒருநாள் தமிழ் இருக்கைக்கான telemarketing நடந்தது. 25 பல்கலைக்கழக மாணவ மாணவிகள்  தொலைபேசி முன் அமர்ந்து பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே படித்தவர்களை  அழைத்து தமிழ் இருக்கைக்கு நன்கொடை கேட்டனர். எல்லோருமே வேறு வேறு மொழி பேசும் தன்னார்வத் தொண்டர்கள். கூகிளில் தமிழ் பற்றி படித்ததுதான் அவர்கள் அறிவு.  தமிழ் இருக்கை பற்றி அவர்களுக்கு அறிமுகம் செய்வதற்கு நான் அங்கு சென்றிருந்தேன். ‘ஒரு மாணவியிடம் ஏன் இந்த வேலையை செய்கிறார்?’ என்று கேட்டேன். அவர் சொன்னார், ‘2500 வருடங்களாக வாழும் ஒரு மொழிக்கு இருக்கை அமைந்தால் அது பல்கலைக்கழகத்துக்கு பெருமையல்லவா?’  அந்த நொடியில் என் கண்களை அவர்  திறந்துவிட்டார். அதுவரைக்கும் நான் தமிழ் இருக்கை அமைவதால் தமிழுக்குத்தான் பெருமை என நினைத்திருந்தேன்.

’எதற்காக  தமிழ் இருக்கை மிகவும் முக்கியம் என்று கருதுகிறீர்கள்?’ என்று பலர் என்னிடம் கேட்டிருக்கின்றனர். முதல் காரணம் தமிழ் மொழியின் தொன்மை, அத்துடன் அது இன்னும் வாழ்கிறது என்ற பெருமை. ’ஏற்றுக உலையே, ஆக்குக சோறே, கள்ளும் குறைபட ஓம்புக.’ இந்த வரிகள் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டவை. இன்றும், ஆறாம் வகுப்பு சிறுமியால் இதைப் படித்து புரிந்துகொள்ள முடியும். அதுதான் தமிழின் பெருமை. ஏனைய செம்மொழிகளுக்கு பல்கலைக்கழகங்களில் இடம் உண்டு, ஆனால் தமிழ் மொழியை ஒருவரும் கவனிப்பதில்லை. இது பெரிய அநீதியாகப் படுகிறது. இதைச் சரிசெய்வதும் ஒரு  நோக்கம்.  மற்றைய மொழிகளுக்கு நாடு இருக்கிறது. தமிழுக்கு சொந்தமாக ஒரு நாடும் இல்லை. ஆகவே எங்கள் மொழிக்காக ஒரு நாடும் போராடப் போவதில்லை. நாங்கள்தான் போராடவேண்டும்.

மறைமுகமான பலன்கள் பலவற்றை நாம் எதிர்பார்க்கலாம். ஆராய்ச்சிக்காக ஒரு மாணவருக்கு கனடிய அரசு நல்கை வழங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த நல்கையில் கிடைக்கும் நிதியை மாணவர் தன் ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளில் பயன்படுத்தலாம். உதாரணமாக கீழடியில் பணப்பற்றாக் குறையினால் சில ஆராய்ச்சிகள் தள்ளிப்போடப் படலாம். மாணவருக்கு அந்த தடையே கிடையாது. அதுபோல இலங்கையில் கிடைக்கும் அரிய பழைய தமிழ் நூல்களையும், சுவடிகளையும் எண்மியமாக மாற்றுவதற்கும் இப்படியான நிதி பெரியளவில் உதவும்.   

ரொறொன்ரோவில்  தமிழ் இருக்கை ஒன்றை உண்டாக்குவதன் மூலம் தமிழை உலகமயமாக்கும் வாய்ப்பு எங்களைத் தேடி வந்திருக்கிறது. கனடாவில், புலம்பெயர்ந்து வாழும்  தமிழர்களின் இரண்டாவது தலைமுறை இப்போது  தலையெடுத்திருக்கிறது. முற்றிலும் கனடியச் சூழலில் வாழும் மூன்றாவது தலைமுறை தமிழை மறந்துவிடும். மிக  முக்கியமான ஒரு சந்தியில் நாம் நிற்கிறோம். இந்தத் தலைமுறை  தாண்டினால் தமிழ் இருக்கை என்பது கனவாகிவிடும். இதுதான் தருணம். இப்பொழுதே செய்தாகவேண்டும்.

உலகத் தரவரிசையில் தமிழின் பலம் என்ன என்பதை பலர் உணரவில்லை. நிரந்தரமான, வலுவான ஓர் இடம் இந்த இருக்கையால் எமக்கு அமையும். சமீபத்தில் வாசிங்டன் நகரில் நடந்த விழா ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கே ஆன் ஃபிரீட்மன் என்ற பெண்மணியை சந்தித்தேன்.  பெரிய செல்வந்தர். மூன்று புலிட்சர் பரிசுகளை வென்ற பிரபலமான எழுத்தாளர் தோமஸ் ஃபிரீட்மனுடைய  மனைவி.  இவர்  Planet Word  (சொல் கோளம்) என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார். இதற்கான பட்ஜெட் 25 மில்லியன் டொலர்கள். உலகத்தின் முக்கியமான 20 மொழிகள் இங்கே அருங்காட்சியகமாகப் பாதுகாக்கப்படும்.  ஆவலுடன் ’பட்டியலில்  தமிழ் இருக்கிறதா?’ என்று கேட்டேன். ஏனேனில் உலகில் அதிகமாகப் பேசப்படும் மொழிகளின் பட்டியலில் தமிழ் 19வது இடத்தில் வருகிறது.  அவர் சற்று யோசித்துவிட்டு ’தமிழ் மொழிக்கு சொந்தமான நாடு எது?’ என்றார். என்னிடம் பதில் இல்லை. நான் ’தமிழ் மொழிக்கு உலகமே சொந்தம்’ என்றேன். மீண்டும் ’ஐஸ்லாண்டிக் மொழிக்கு இடம் உள்ளதா?’ என்று கேட்டேன். அவர் ஆம் என்றார். நான் ’ஒரு மில்லியனுக்கும் குறைவான, மூன்று லட்சம் மக்கள் மட்டுமே பேசும், ஐஸ்லாண்டிக் மொழி பட்டியலில் உள்ளது. ஆனால் 80 மில்லியன் மக்கள் பேசும் ஆதி மொழியும், செம்மொழியுமான  தமிழ் மொழிக்கு இடமில்லையா?’ என்றேன்.  ஐஸ்லாண்ட் நாடு கணிசமான நிதி தருவதாக அவர் சொன்னார். அதற்கு என்ன பதில் சொல்வது?

தமிழ் மொழி உலகத்தில்  மற்றவர்களால் எப்படி பார்க்கப்படுகிறது என்பதற்கான  உதாரணம்தான் இது. தமிழ் மொழிக்கு அங்கீகாரம் கிடைத்தால் எங்கள் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்பதல்ல. தமிழ் இருக்கை மூலம் எங்களுக்கு மேசையிலே ஓர் இடம் கிடைத்திருக்கிறது. சரிசமமான இடம். உலக அரங்கில் எங்கள் குரலை எழுப்ப எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆயுதம். இதை நாங்கள் பயன்படுத்தவில்லை என்றால் அது மிகப் பிரம்மாண்டமான தவறாக  இருக்கும்.   

ரொறொன்ரோவில்  அரியாசனம்

தமிழுக்கு  சரியாசனம்.                          

END

About the author

1 comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta

amuttu

Get in touch

Quickly communicate covalent niche markets for maintainable sources. Collaboratively harness resource sucking experiences whereas cost effective meta-services.