A.Muttulingam
முகப்பு | தொடர்புகளுக்கு
புதிய பதிவுகள்
. ஸ்டைல் சிவகா ...
. பொன்னுருக்கு ...
. ஒபாமாவுக்கு ...
. வேட்டைக்காரர ...
. அதுவாகவே வந் ...
. லூனாவை எழுப் ...
. குமர்ப்பிள்ள ...
. என்னைத் திரு ...
. இலக்கணப் பிழ ...
. எழுத்தாளரும் ...
. ஜேசியும் வேச ...
. சிம்மாசனம் ...
. சிவாஜியின் க ...
. வெள்ளிக்கிழம ...
. அடுத்த புதன் ...
. வெள்ளைக்காரன ...
. சின்ன ஏ, பெர ...
. என்னை மறந்து ...
. கிறிஸ்மஸ் தவ ...
. ஸ்டைல் சிவகா ...
பழைய படம் (நாட்குறிப்புகள்)
2012-12-13

பழைய திரைப்படம்.

அ.முத்துலிங்கம்

இன்று ஒரு பழைய திரைப்படம் பார்த்தேன். இதே திரைப்படத்தை ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன்னர் பார்த்திருக்கிறேன். அப்பொழுது நான் கொழும்பு பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தேன். இயற்பியல் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. பேராசிரியர் Distribution coefficient ratio என ஆரம்பித்தார். வார்த்தைகளை மனனம் செய்து எழுத்துக்கூட்ட பழகிக்கொண்டு அவற்றின் பொருளை அடுத்தநாள் அறிந்துகொள்ளலாம் எனத் தீர்மானித்தேன். இரண்டு பஸ் பிடித்து, மீதி தூரத்தை நடந்து கடந்து லிபர்ட்டி தியேட்டருக்கு  போய்ச் சேர்ந்தேன். லிபர்ட்டி தியேட்டரில் ஆங்கிலப் படங்கள் மட்டுமே போடுவார்கள். கரி கிராண்டும் சோஃபியா லோரனும் நடித்து எல்லா பத்திரிகைகளாலும் பாராட்டப்பட்ட திரைப்படம். பெயர் House Boat., படகு வீடு. ஒரு காட்சியில் சோஃபியா லோரன் குனிந்து காலணிகளை ஒவ்வொன்றாகக் கழற்றி கதாநாயகன் மேல் வீசுவார். அதைக்கூட ஒரு பத்திரிகை விஸ்தாரமாக எழுதியிருந்தது.

 

இப்பொழுது படத்தை பார்த்தபோது ஒரு புதுப் படத்தை பார்த்தது போலவே உணர்ந்தேன். முந்திப் பார்த்த ஒரு காட்சிகூட ஞாபகத்தில் இல்லை. சோஃபியா லோரனும் கரி கிராண்டும் ஓர் இடத்தில் நடனமாடுவார்கள். இரண்டு நிமிடம் அந்தக் காட்சி காட்டப்படும். திரையை இருவருடைய முகங்களும் நிறைத்திருக்கும். வசனம் இல்லை. கண்களால் ஒருவரை ஒருவர் கவர்ந்து இழுக்கும் இடம். அதைக்கூட பார்த்த ஞாபகம் இல்லை. வழக்கமாக படங்களில் வரும் வசனங்கள் எனக்கு முக்கியம், காட்சி இரண்டாம் பட்சம்தான். வசனங்கள் வரும் இடங்களை உன்னிப்பாகக் கவனித்து நல்ல வசனங்களை மனப்பாடம் செய்துவிடுவேன். துக்கம் என்னவென்றால் ஒரு வசனம் கூட என் நினைவில் இப்போது இல்லை.

 

திரைப்படக் கதை சாதாரணமானதுதான். மதிப்பான வழக்கறிஞர்  உத்தியோகத்தில் இருக்கும் கதாநாயகனுக்கு மனைவி இல்லை; மூன்று துடுக்கு பிள்ளைகள் மட்டுமே. சோஃபியா லாரன் அழகும் அறிவும் கூடிய இளம் பெண். விருந்துகளும் ஆடம்பரம் நிறைந்த வாழ்க்கையும் வாழ்ந்து அலுத்துப்போய் ஒரு சாதாரண வாழ்க்கைக்கு ஏங்குகிறாள். தன் பின்புலத்தை மறைத்து வேலை தேடிக்கொள்கிறாள். கதாநாயகன் வீட்டில் பிள்ளைகளைப் பார்க்கும் தாதிப் பணி.  கதாநாயகனுக்கும் தாதிக்கும் இடையில் காதல் மலர்ந்து, வளர்ந்து திருமணத்தில் முடிவதுதான் கதை.

 

மனதில் நிற்கும் வசனங்கள் இருக்கின்றன. தொலைந்துபோன சிறுவனை மீட்டுக்கொண்டு சோஃபியா வருகிறாள். கதாநாயகன் பணம் கொடுக்கிறான். அவள் வேண்டாம் என்கிறாள். மறுபடியும் பணத்தை கூட்டிக் கொடுக்கிறான். அப்போதும் வேண்டாம் என்கிறாள். அவன் சொல்வான். ‘இது என்ன? நன்றிக் கடன் தீர்க்கும் விலை அதிகமாகிக்கொண்டே போகிறது?’ இன்னொரு இடத்தில் சோஃபியாவின் தந்தை சொல்வார்.

 

‘உனக்கு ஒன்றுமே தெரியாது? நீ என்ன செய்வாய்?’

‘ஏன், நான் காங்கிரஸ் வேட்பாளராக நிற்கலாம்தானே!’

‘ஏன் உயிர்கள் சாகின்றன?’ குழந்தை கேட்கும்.

‘மற்ற உயிர்கள் வாழ்வதற்குத்தான்.’

 

‘ஒரு சாமானை விற்கும்போது உங்கள் முகம் பொருளை வாங்க வந்தவர் முகம்போல இருக்கவேண்டும். ஒரு சாமானை வாங்கும்போது முகம் விற்கவந்தவர் முகம் போல இருக்கவேண்டும்.’ இது என் அப்பாவின் அறிவுரை. இப்பொழுது நான் வாங்க வந்தேனா அல்லது விற்க வந்தேனா? முடிவு செய்யமுடியவில்லை. அதனால் முகத்தை எப்படி வைப்பது என்பதும் தீர்மானமாகவில்லை. ஆனால் என் உடலை சரியான விதமாகத்தான் தயார் செய்திருந்தேன். இடுப்பில் இறுக்கிக் கொண்டிருக்கும், அடியிலே பாவாடைபோல விரிந்த கால்சட்டை, முழங்கை மட்டும் மடித்துவிட்ட நீளக்கை சேர்ட், இடது கை மணிக்கட்டில் வெளிநாட்டு வைலர் கைக்கடிகாரம், காலில் ரூபா 19.99 பாட்டா சப்பாத்து. பல வருடங்களாக ஏங்கிய இந்த தருணத்தை அடைவதற்காக 19 வருடம், மூன்று மாதம் நிமிடம் நிமிடமாகக் காத்திருக்க வேண்டியிருந்தது. இதுவெல்லாம் இப்போது நினைவில் வருகிறது.

 

லிபர்ட்டி தியேட்டர் அந்தக் காலத்திலேயே குளிர்பதனம் செய்யப்பட்டது. திரைக்கு அருகாமையில் உள்ள ஆசனங்களின் விலை 50 சதம். அதற்குப் பின் ஒரு ரூபாய். அதற்கும் பின்னால் 1.50. அடுத்தது 2.50. ஆகக் கடைசிதான் முதல் வகுப்பு, 3.00 ரூபாய் டிக்கட். அந்த டிக்கட் பணத்தை ஒரு மாத காலமாக சேர்த்திருப்பேன் என்று நினைக்கிறேன். மூன்று ரூபாய்  ஆசனம் மெத்தென்று இருக்கும் என்று சொல்லியிருந்தார்கள். நான் காலால் தடவித் தடவி  உள்ளே நுழைந்தபோது என் ஆசனத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. மற்றவர்கள் எல்லாம் உட்கார்ந்திருந்தார்கள். பார்த்தால் என் இருக்கை நாற்காலி முதுகுடன் மடிந்துபோய்க் கிடந்தது. இரண்டு கையாலும் பிடித்து இழுத்தவுடன் ஆசனம் தயாரானது ஆனால் கைவிட்டதும் மறுபடியும் போய் ஒட்டிக்கொண்டது. ஒருவாறு கைகளால் இருக்கையை  இழுத்து பிடித்து அதன் நுனியில் உட்கார்ந்தேன். மெத்தென்றுதான் இருந்தது.

 

என்னுடன் வாழ எனக்கு நல்லாய்ப் பிடிக்கும். என் பெயரை உச்சரித்து என்னை நானே மெச்சிக்கொண்டேன். பின்னால் தள்ளி உட்கார்ந்து உடலை சாய்த்ததும் படம் ஆரம்பமானது. படகு வீடு என்பதன் அர்த்தம் என்ன? படகுபோல் உள்ள வீடா அல்லது வீடு போல தோற்றமளிக்கும் படகா? படம் ஓடத் தொடங்கும் முன்போ ஓடிய பின்னரோ இதன் அர்த்தத்தை அறிய நான் முயலவில்லை. படம் முடிந்து எழுந்தவுடன் இருக்கையும் எழுந்து நின்றது ஞாபகம் இருக்கிறது. ஆனால் வசனங்கள் ஒன்றுமே என் நினைவில் இல்லை.  காட்சியும் இல்லை. முழுப்படமும் மனதில் இருந்து மறைந்துவிட்டது.

 

என்னவென்று யோசித்துப் பார்க்கிறேன். அதுதான் நான் பலநாள் திட்டமிட்டு களவாக காதலியுடன் சேர்ந்து பார்த்த முதல் படம்.

END

 


உங்கள் பெயர்: 
உங்கள் மின்னஞ்சல்: 
உங்கள் கருத்து: 
Copyright © 2011 A.Muthulingam. All rights reserved. Powered by Spark Vision Media