A.Muttulingam
முகப்பு | தொடர்புகளுக்கு
புதிய பதிவுகள்
. ஸ்டைல் சிவகா ...
. பொன்னுருக்கு ...
. ஒபாமாவுக்கு ...
. வேட்டைக்காரர ...
. அதுவாகவே வந் ...
. லூனாவை எழுப் ...
. குமர்ப்பிள்ள ...
. என்னைத் திரு ...
. இலக்கணப் பிழ ...
. எழுத்தாளரும் ...
. ஜேசியும் வேச ...
. சிம்மாசனம் ...
. சிவாஜியின் க ...
. வெள்ளிக்கிழம ...
. அடுத்த புதன் ...
. வெள்ளைக்காரன ...
. சின்ன ஏ, பெர ...
. என்னை மறந்து ...
. கிறிஸ்மஸ் தவ ...
. ஸ்டைல் சிவகா ...
சிவாஜியின் குரல் (நேர்காணல்கள்)
2016-07-27

சிவாஜியின் குரல்

 

அ.முத்துலிங்கம்

 

ஒரு வருடமாக நாங்கள் டெலிபோனில் தொடர்ந்து பேசினோம். சில சமயங்களில் நான் ஒரு கேள்வி எழுதி மின்னஞ்சலில் அனுப்புவேன். அவர் பதில் எழுதுவார். இது ஒரு நேர்காணல்போல நடக்கவே இல்லை. அவரும் நினைக்கவில்லை. நானும் அப்படி எண்ணவில்லை. திட்டமிட்டதெல்லாம் கிடையாது. செல்பேசியில் கோடு மெள்ள மெள்ள நிரம்புவதுபோல தகவல்கள் நிரம்பின. ஒருநாள் பேசும்போது அவர் போகிறபோக்கில் ‘சிவாஜியின் குரல் ரேடியோவுக்கு ஏற்றதில்லை’ என்றார். நான் ‘என்ன?’ என்று அலறினேன். ‘இல்லை, நான் சொல்லவில்லை. அதற்கு ஒரு கதை இருக்கிறது’ என்றார். நான் சொல்லுங்கள் என்றதும் அவர் சொல்லத் தொடங்கினார்.

 

இது பல வருடங்களுக்கு முன்னர் நடந்தது. நான் அப்போது அகில இந்திய வானொலி சென்னை நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். என் மேலதிகாரிகள் ஒரு முடிவெடுத்திருந்தார்கள். முன்னணி நடிகர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், கல்விமான்கள், சமூகசேவையாளர்கள் இப்படி பிரபலமானவர்களை நேர்காணல் செய்து அவர்கள் குரலிலேயே அதைப் பதிவு செய்து பாதுகாக்கவேண்டும். அதுதான் அந்த ஆளுமையுடைய உத்தியோகபூர்வமான வாழ்க்கை வரலாற்றுப் பதிவாக இருக்கும். அந்த முடிவின்படி அவர்கள் இந்த வேலையை என்னிடம் ஒப்படைத்தார்கள்.

 

எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதிகாரிகள் என் மேல் வைத்த நம்பிக்கை பிழைக்காமல் நான் செயல் படவேண்டும். சிவாஜியின் குரலை பதிவுசெய்ய முடிவெடுத்தோம். வழக்கம்போல அனுமதி பெற நான் டெல்லிக்கு எழுதினேன். அவர்கள் அனுமதி தரவில்லை. நூறு கேள்விகள் கேட்டார்கள். ’யார் இந்த சிவாஜி? இவர் பிராந்தியப் பிரபலமா? இந்தியப் பிரபலமா? அல்லது உலகப் பிரபலமா?’ நான் பதில் எழுதினேன். அவர்களுக்கு திருப்தி இல்லை. நிராகரிப்பதிலேயே குறியாய் இருந்தார்கள். அவர்களை நேரிலே சந்திக்க டெல்லி போனேன். எனக்கு வயது அப்போது 33 தான். என்னை உருட்டி எடுத்துவிட்டார்கள். நானும் விடவில்லை. அவர்களுடன் சரிக்கு சமனாக சண்டையிட்டேன். ’சிவாஜி இந்தியப் பிரபலம் கிடையாது. அவரை உலகக் கலைஞர்களுடன் ஒப்பிடலாம்’ என்று வாதாடினேன். ஒருவாறு அனுமதி கிடைத்து சென்னை திரும்பினேன். அப்பொழுதுதான் சிவாஜிக்கு ஒரு முன்கதை இருப்பது எனக்கு தெரியவந்தது.

 

சிவாஜி பராசக்தியில் நடித்து, இன்னும் வேறு சில படங்களிலும் நடித்து அப்போது பிரபலமாகியிருந்தார். வானொலி நாடகங்களுக்கு அப்போதெல்லாம் நல்ல வரவேற்பு. அதில் நடிக்க விரும்பிய சிவாஜி அதற்காக விண்ணப்பித்தார். ஒரு நாடகத்தில் நடிப்பதற்கு அவருக்கு குரல் தேர்வு நடந்தபோது  அதில் அவர் சித்தியடையவில்லை, அவரை நிராகரித்துவிட்டார்கள். சிவாஜியால் அந்த அவமானத்தை தாங்க முடியவில்லை. கோபத்துடன் அன்று ஒரு சபதம் எடுத்தார். ’இனிமேல் என் வாழ்க்கையில் அகில இந்திய வானொலிக்கும் எனக்கும் ஒருவித சம்பந்தமும் கிடையாது. அகில இந்திய  வானொலி சென்னை நிலையத்தின் வாசல்படியை என்றென்றும் மிதிக்க மாட்டேன்.’

 

இந்த விசயம் எனக்கு ஆரம்பத்திலேயே தெரியாது. சிவாஜியிடம் போய் அவருடைய சம்மதத்தைப் பெற என்னைத்தான் அனுப்பினார்கள்.  தோற்கப் போகும் ஒரு முயற்சியில் என் மேலதிகாரிகள் நேரடியாக  இறங்கத் தயாராக இல்லை. சிவாஜியை நினைத்தவுடன்  தொடர்பு கொள்ள முடியாது. அவர் புகழின் உச்சியில் இருந்த சமயம் அது. அவரைப் பிடித்து, இவரைப் பிடித்து ஒருநாள் சிவாஜியை சந்திப்பதற்கு நேரம் வாங்கிவிட்டேன். சொன்ன நேரத்துக்கு அங்கே போனேன். அன்பாக வரவேற்றார். நான் வந்த விசயத்தை சொன்னேன். பொறுமையாகக் கேட்டார். முடிவில் ’அப்படியா, பார்க்கலாம்’ என்றார். அடுத்த தடவை போனேன். நான் ஏற்கனவே வந்து அவரைச் சந்தித்த விசயத்தை நினைவூட்டினேன். ’அப்படியா, பார்க்கலாம்’ என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ’அப்படியா, பார்க்கலாம்’ என்றால் என்ன பொருள்? இப்படி ஒரு வருடம் ஓடிவிட்டது. நானும் விடுவதாக இல்லை. ‘ஐயா  நீங்கள் மாபெரும் கலைஞர். உலகத் தரத்தில் மக்களால் உயர்த்தி வைக்கப்பட்டிருக்கிறீர்கள். எப்பவோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நடந்துபோன ஒரு விசயத்துக்காக இந்த அருமையான வாய்ப்பை நீங்கள் இழக்கலாமா? உங்கள் அதிகாரபூர்வமான சுயசரிதை உங்கள் சொந்தக் குரலிலேயே பதிவுசெய்யப்பட்டு என்றென்றும் பாதுகாக்கப்படும் என்பது எத்தனை பெருமையானது. அதை மறுக்கலாமா? தமிழ் மக்களுக்குச் இழைக்கும் துரோகம் என்றல்லவா நினைப்பார்கள்.’

 

சிவாஜி கொஞ்சம் மனம் இளகினார். அத்துடன் அவருக்கும் என்னைப் பிடித்துக்கொண்டது. அன்பாகப் பழகினார். ஆரம்பத்தில் இருந்த நிலை மாறிவிட்டது. நான் சொல்வதைக் கேட்க ஆரம்பித்திருந்தார். ‘சரி. ஆனால் ஒரு கண்டிசன், வானொலி நிலையத்துக்கு எல்லாம் வரமுடியாது. இங்கேயே பதிவு செய்ய வேண்டும். அத்துடன் நான்தான் என்ன தேதி எத்தனை மணி நேரம் என்பதை தீர்மானிப்பேன்’ என்றார். நான் சரி என்றேன். என் மேலதிகாரி குமார் அவர்களிடம் பயந்துகொண்டே சிவாஜி சம்மதித்ததையும் அவருடைய நிபந்தனையையும் சொன்னேன். அவர் அருமையான அதிகாரி. ’சரி, அப்படியே செய்யலாம்’ என்றார்.

 

ஆனால் பின்னர்தான் பல பிரச்சினைகள் இருப்பது தெரிய வந்தது. மிக உயர்ந்த ஒலிப்பதிவு மெசின்கள் நிலையத்தில்தான் இருந்தன. இவற்றையெல்லாம் அவர் வீட்டுக்கு எடுத்துப்போக முடியாது. ஆண்டாண்டு காலமாக பாதுகாக்கப்படவேண்டிய ஒலிப்பதிவை இப்படி அரையும் குறையுமாக செய்யவேண்டுமா என்று பட்டது.  மறுபடியும் அவரிடமே போனேன். உயர் தரத்தில் ஒலிப்பதிவு செய்து பாதுக்காக்கப்படவேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறார்கள் என்று சொல்லி சென்னை நிலையத்தில் பதிவு செய்ய அவருடைய ஒப்புதலையும் ஒருவாறு பெற்றுவிட்டேன்.

 

ஒருநாள் காலை அவர் வீட்டுக்கு போய் அழைத்தேன். முதன்முதல் அவருடைய பளிச்சிடும் வெள்ளை நிற பென்ஸ் காரில் அவருடன் அமர்ந்து நிலையத்துக்கு புறப்பட்டேன். ஒரு பென்ஸ் காரில் பயணம் செய்வது எனக்கு அதுவே முதல்தடவை. ஸ்டூடியோ வந்தபோது எப்படியோ கதை பரவிவிட்டது. 150 – 200 பேர் குழுமிவிட்டார்கள். என்னுடைய மேலதிகாரி தடபுடலான வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். பெரிய மாலை அணிவித்து வரவேற்றார்கள். மங்கலமான மேளதாளத்துடன் நாதஸ்வரம் ஒலிக்க, அவரை உள்ளே அழைத்துப் போனோம். பல வருடமாக சிவாஜியின் மனதிலிருந்த காயம் அந்த ஒரு நாள் வரவேற்பில் ஒரேயடியாக மறைந்துபோனது.

 

ஒலிப்பதிவு செய்தீர்களா?.

 

ஆமாம், ஒன்பது மணிநேரம் ஒலிப்பதிவு செய்தோம். ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று பல நாட்களில் பதிவு முடிந்தது. ஒலிப்பதிவின் ஆரம்பித்திலேயே சிவாஜி இப்படிச் சொல்வார். ’இதுதான் என்னுடைய உத்தியோகபூர்வமான சுயசரிதை. இந்த ஒலிப்பதிவை நான் இந்த தம்பியின் தொடர்ந்த வற்புறுத்தலால்தான் செய்யச் சம்மதித்தேன்.’ அந்தப் பெரிய மனிதர் ஆரம்பத்திலேயே பின்னொரு காலத்தில் ஒருவருக்கும் சந்தேகம் எழாத விதமாக என்னுடைய பணியின் முக்கியத்துவத்தை பதிவு செய்துவிட்டார். இன்றும் அந்த ஒன்பது மணி நேர ஒலிப்பதிவு சென்னை வானொலி நிலையத்தில் பாதுகாக்கப்படுகிறது.

 

இந்தச் சம்பாசணை எனக்கும் சிவராமகிருஷ்ணனுக்கும் இடையில் நடந்தது. சிவராமகிருஷ்ணன் லண்டன் பிபிசி தமிழோசையில் பல வருடங்கள் ஒலிபரப்பாளராக பணியாற்றுகிறார். பணி நிமித்தமாக பலரைச் சந்தித்து பேட்டிகள் எடுத்திருக்கிறார். சுவாரஸ்யமான பல அனுபவங்களைக் கண்டவர். அவரைப் பற்றி இன்னும் முழுமையாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் எழுந்தது.. தொடர்ந்து கேட்டேன்.

 

உங்கள் ஆரம்பகால வாழ்க்கை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்? சிறுவயதிலேயே ரேடியோ மீதான ஈர்ப்பு வந்துவிட்டதா?

 

என்னுடைய ஐயாவுக்கு  ரயில்வேயில் நடுத்தர வேலை. அம்மா வீட்டைப் பார்த்தார். அவருக்கு இசையில் அதீத ஈடுபாடு இருந்தது. முறைப்படி இசைக்கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். எங்கள் வீட்டு ரேடியோப் பெட்டியில் அவ்வப்போது யாராவது பிரபல கலைஞர்கள் பாடுவதை கேட்போம். அடிக்கடி பெட்டி நிற்கும். ஒரு தட்டுத் தட்டுவோம். சிலோன் ரேடியோ அப்போது மிகப் பிரபலம். சினிமாப் பாட்டு போடுவார்கள். அதுதான் நினைவு. ரேடியோவின் மேல் பெரிய காதல் ஒன்றும் கிடையாது. நான் வானொலி நிலையத்தில் பணி புரிய நேர்ந்தது ஒரு தற்செயல்தான்.

 

சின்ன வயது ஞாபகம் ஏதாவது இருக்கிறதா?

 

இருக்கிறது. மற்றவர்கள் சொல்லக் கேட்டதுதான். அம்மாவுக்கும் ஐயாவுக்கும் கல்யாணம் நிச்சயமான பிறகு அம்மாவின் இருதயத்தில் ஓட்டை இருக்கிற விசயம் ஐயாவுக்குத் தெரிய வருகிறது ஆனாலும் அவர் முடிவில் மாற்றம் கிடையாது. அம்மாவையே மணந்து கொள்கிறார். 1962ல் அம்மாவுக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்ய நேர்ந்தது. அந்தக் காலத்தில் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத ஆபத்தான அறுவை சிகிச்சை அது. அறிஞர் அண்ணாவின் மருத்துவரான சதாசிவம் என்பவரின் தலைமையின் கீழ் அது நடந்தது. ஒரு கருவியை அம்மாவின் இருதயத்தில் பொருத்தி அதை சீராக்கி விடுகிறார்கள். 1963ல் நான் பிறந்தேன். சமீபத்தில் அம்மா இறந்து அவரை தகனம் செய்தபோது 46 வருடங்களாக அவருக்கு உயிர் கொடுத்த அந்தக் கருவி சாம்பலிலே கிடைத்தது. இன்றும் அதை பூஜை அறையில் வைத்து வணங்குகிறோம்.

 

எப்படி ரேடியோ தொழிலுக்கு வந்தீர்கள்?

 

நான் ரயில்வேயில் ஒரு கிளார்க்காகத்தான் ஆரம்பித்தேன். அப்போது எனக்கு வயது 19 தான். பின்னர் படித்து முன்னேறி வெவ்வேறு வேலைகள் செய்தேன்; பரீட்சைகளும் எழுதினேன். மத்திய அரசு தேர்வாணையம் நடத்தும்  நேர்காணலுக்கு வரும்படி ஒருமுறை அழைப்பு வந்தது. தேர்வுக் குழுவில் மூன்று பேர் இருந்தார்கள். ஒருவர் என்னிடம் பழைய காலத்தில் வழக்கிலிருந்த குடவோலை முறை பற்றிக் கேட்டார். நான் பரீட்சைக்கு இரவு பகலாகப் படித்து தயாராகவே வந்திருந்தேன். ஆனால் குடவோலைக் கேள்விக்கு விடை தெரியவில்லை. நான் சொன்னேன், ’உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. இந்த தேர்வுக்கும், குடவோலைக்கும் என்ன சம்பந்தம்? இந்த வேலைக்கு என் தகுதியை தீர்மானிக்கும் ஏதாவது ஒரு கேள்வியைக் கேட்கலாமே?’ என்றேன். கேள்வி கேட்டவரின் முகம் வெளிறிவிட்டது. ஆளே மாறிப் போனார். அடுத்தவர் இன்னொரு கேள்வி கேட்டார். நல்ல கேள்வி. ஆனால் நான் சொன்ன பதில்தான் அவருக்கு பிடிக்கவில்லை. ’நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஆதர்சமாகக் கருதும் உலக ஆளுமை யார்? நான் ’என் ஐயா’ என்று சொன்னேன். ’உங்கள் ஐயாவா?’ என்றார் அவர் ஏளனமாக. நான் சொன்னேன், ’என்னால் மகாத்மா காந்தி, பாரதியார், ஆப்பிரஹாம் லிங்கன், கட்டபொம்மன் இப்படி ஒரு பெயரைச் சொல்லியிருக்கமுடியும். இவர்களைப் பற்றியெல்லாம் நான் படித்திருக்கிறேன். ஆனால் இவர்களை நான் கண்டதில்லை. இவர்களுடன் பேசியதில்லை; பழகியதில்லை. என் ஐயாவை தினம் காண்கிறேன். பேசுகிறேன். அவருடைய அறிவுரையை கேட்கிறேன். அவர் வழிகாட்டலில் வாழ்கிறேன். அவர்தான் என் ஆதர்சம்’ என்றேன். நான் எதிர்பார்க்கவில்லை. அந்தக் குழுவின் தலைவராக இருந்த அம்மையார் போலித்தன்மை இல்லாத என் பதிலை மெச்சினார்.  அப்படித்தான் வானொலியில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. என் புதிய வாழ்க்கை 1991 வருடம், டிசம்பர் மாதம்  ஆரம்பித்தது.

 

உங்கள் வாழ்க்கையில் விபத்துப் போல பல சம்பவங்கள் நடந்தன என்று சொல்லியிருக்கிறீகள். அதில் ஒன்றைச் சொல்லமுடியுமா?

 

இது நடந்தது 1995ம் வருடம், நவம்பர் மாதம்.  ஒருநாள் மாலை நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவரிடம் விடை பெறும்போது அவர் மேசையிலே கிடந்த அழைப்பிதழ் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. நோர்வே நாட்டிலிருந்து Gunnar Johan Stalsett என்பவர் சென்னையிலுள்ள கிறிஸ்தவ நிறுவனம் ஒன்றின் கூட்டத்திற்கு வருகை தரவிருந்தார்.  ஓர் இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் காலை திரும்புவார். நண்பர் அந்த விழாவுக்கு தான் போகப்போவதில்லை என்று சொன்னார். என் மனம் துருதுருத்தது. வந்திருப்பவர் நோபல் சமாதானக் கமிட்டியின் தலைவர். இந்தச் சந்தர்ப்பத்தை எப்படியும் பயன்படுத்தி ஒரு பேட்டி எடுத்துவிட வேண்டும் என்று தீர்மானித்தேன்.

 

அவர் எங்கே தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை. எப்படி தொடர்புகொள்வது? ஒவ்வொரு ஐந்து நட்சத்திர ஹொட்டலாக அழைத்து அவர் இருக்குமிடத்தை கண்டுபிடித்தேன். ஹொட்டல் வரவேற்பாளரிடம் அவருக்கு ஒரு தகவல் விட்டேன். ’மிக முக்கியமான விசயம். இரவு எந்த நேரம் என்றாலும் பரவாயில்லை. என்னை அழையுங்கள்.’

 

இரவு பன்னிரெண்டு மணிக்கு டெலிபோன் வந்தது. அவர்தான் அழைத்து பேட்டிக்கு சம்மதம் என்றார். அவர் விமானம் காலை எட்டு மணிக்கு புறப்படுவதால் அதற்கு முன்னர் நேர்காணலை அமைக்கச் சொன்னார். உடனேயே வானொலி நிலையத்தை தொடர்புகொண்டு இரவிரவாக நேர்காணலுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தேன். அதிகாலையே அவர் ஸ்டூடியோவுக்கு சொன்னமாதிரி வந்தார். நான் பல கேள்விகள் கேட்டேன். நோபல் கமிட்டியில் எத்தனை பேர்? அவர்கள் எப்படி இயங்குகிறார்கள்? தேர்வுசெய்வதில் எப்படியான பிரச்சினைகள் வருவதுண்டு? இப்படியான கேள்விகள். இறுதியில் எல்லோர் மனதிலும் இருந்த கேள்வியை கேட்டேன்.

 

‘மகாத்மா காந்தியின் பெயர் பலதடவை நோபல் கமிட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவருக்கு சமாதானத்துக்கான பரிசு கிடைக்கவில்லையே. என்ன காரணம்?

 

மகாத்மாகாந்தியின் பெயரை கமிட்டி  1937, 1`938, 1939, 1947, 1948 வருடங்களில் பரிசீலித்தது. 1948ம் ஆண்டு சமாதானக் கமிட்டியின் தலைவராக என் தகப்பனார்தான் இருந்தார். அவர் சொன்னதை நான் சொல்கிறேன். 1948ம் ஆண்டுக்கான சமாதானப் பரிசை காந்திக்கு அளிக்க முடிவெடுக்கப் பட்டிருந்தது. ஆனால் 30 ஜனவரி அன்று காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். இறந்தவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்கும் வழக்கம் இல்லை. ஆகவே பரிசு கொடுக்க முடியாமல் போனது. இத்தனை நாளும் காந்திக்கு கொடுக்காத தவறுக்கு பிராயச்சித்தமாக அந்த வருடம் சமாதானப் பரிசு ஒருவருக்குமே வழங்கப்படவில்லை.  .

 

நேர்காணல் முடிந்தது. இது உலகச் செய்தியானது. முதன்முதலாக உண்மை அந்தப் பேட்டி மூலம் வெளிவந்தது. அன்று அந்த நண்பனின் அறைக்குள் நான் தற்செயலாக நுழைந்திராவிட்டால் இந்த உண்மை வெளியே வராமலே போயிருக்கக்கூடும்.

 

பிபிசி வாழ்கையில் உலகத் தலைவர்களுடன் உங்களுடைய ஏதாவது அனுபவம் பற்றி?

 

இதுகூட ஒருவிதத்தில் விபத்துத்தான். இலங்கைப் போர் 2009ம் ஆண்டு மே 18 அன்று முடிவுக்கு வந்தது. அதே ஆண்டு நவம்பரில் டெஸ்மண்ட்  டுட்டு பற்றி ஒரு செய்தி படிக்க நேர்ந்தது. உலகத் தலைவர்கள் அப்போதைய ஜனாதிபதி ராஜபக்ஸாவுக்கு கடிதம் எழுதி அனுப்பியிருந்தனர். குடிபெயர்ந்த மக்களின் அவதி நிலையை சொல்லி, நேரம் கடத்தாது  மீண்டும் அவர்களை  குடியமர்த்தவேண்டும் என்பதுதான் கடிதம். அந்தக் கடிதத்தில் டுட்டுவும் கையெழுத்திட்டிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் எப்படியும் டெஸ்மண்ட் டுட்டுவை தொடர்புகொண்டு பேட்டி எடுக்கவேண்டும் என்று நினைத்தேன். டெஸ்மண்ட் டுட்டு பேராயார். 1984ல் சாமாதானத்துக்காக நோபல் பரிசு பெற்றவர். அவரை இலகுவில் தொடர்புகொள்ள முடியாது. ஆப்பிரிக்க பிரிவு ஆட்கள்கூட அவரைத் தொடர்பு கொள்ளவே முடியாது என்று சொல்லிவிட்டனர். நான் அவர் தேவாலயத்தின் நம்பரைக் கண்டுபிடித்து அழைத்தேன். அவர்கள் சின்ன தகவல் தந்தார்கள். அவர் இன்ன நேரம் மதிய உணவுக்கு வீட்டுக்கு போய், உணவு முடிந்த பின்னர் சிறுதூக்கம் போடுவார். அந்த இடைவெளியில் அவரை பிடியுங்கள் என்றார்கள். அப்படியே செய்தேன். உதவியாளர் இரண்டு நிமிடம் என்று சொன்னார். பேராயர் 10 நிமிடம் பேட்டி கொடுத்தார்.

 

பேட்டியில் என்ன சொன்னார்?

 

போரிலே குடிபெயர்ந்த மக்களின் பிரச்சினை பற்றித்தான் சொன்னார். அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள். துரத்தப்பட்டவர்கள் மீண்டும் குடியேற உடனேயே வழிசெய்ய வேண்டும். அவர்களுடைய உரிமைகளை மதிக்கவும், சுதந்திரமாக நடமாடவும், தொண்டு நிறுவனங்கள் தங்கள் பணிகளைத் தடையின்றி செய்யவும் அனுமதிக்கவேண்டும். போரில்தான் வெற்றி கிடைத்துவிட்டதே. இனிமேல்தான் பெருந்தன்மையுடன் நடக்கவேண்டும். தோற்றவர்களின் மூக்கை மண்ணில் தேய்ப்பதால் என்ன பிரயோசனம்?

 

சிவாஜியை தொடர்ந்து வேறு யாரையாவது ஆவண காப்பகத்துக்காக நேர்காணல் செய்தீர்களா?

 

அது இன்னொரு கதை . இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன்.  அவர் ஓய்வுபெற்றபின் சென்னையில் வசித்தார். அவரை நேர்காணல் செய்யச் சென்றபோது பல சிக்கல்கள் எழுந்தன. முன்னாள் ஜனாதிபதியை இலகுவில் அணுக முடியாது. அதற்கான முறைகள் உள்ளன. டெல்லி  அனுமதி தரவில்லை. இத்தனை பெரிய ஆளுமையை சென்னையில் உள்ளவர்கள் நேர்காணல் செய்வதா? டெல்லி அல்லவா செய்யவேண்டும். ஆனால் வெங்கட்ராமன் நான்தான் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நான் செய்யவில்லை என்றால் வேண்டாம் என்றும் சொல்லிவிட்டார். மூன்று மணிநேரம் அவர் குரலில் அவருடைய சுயசரிதையை பதிவு செய்தேன். அதன் பின்னர் அவர் டெல்லி போனதால் ஒலிப்பதிவு பாதியிலேயே நின்று போனது.  

 

சிவாஜியை நிரகரித்ததுபோல வேறு யாரவது பிரபலமும் நிராகரிக்கப்பட்டிருக்கிறாரா?

 

அமிதாப் பாச்சன் கூட நிராகரிக்கப்பட்டாராம். இது நான் சேர முன்னர் நடந்தது. அங்கே வேலை செய்தவர்கள் சொன்னதுதான்.

 

பிரபல நடிகர், நடிகைகளை நேர்காணல் செய்த அனுபவம்?

 

சொக்கலிங்க பாகவதர் ஏற்கனவே நாடங்களில் நல்ல அனுபவம் உள்ளவர். தியாகராஜ பாகவதரிடம் நல்ல நெருக்கம், சில படங்களில் அவருடன் நடித்துள்ளதாகவும் கூறினார். சுமார் 70 வயதுக்கு மேல் கதாநாயகன் பாத்திரம் ஏற்றிருந்தது குறித்து கேட்டபோது, கதை தான் கதாநாயகன், நடிகர் அல்ல. அத்துடன் வயது ஒரு பொருட்டல்ல என்றும் அவர் கூறினார். சொக்கலிங்க பாகவதரின் பேட்டியை ஒலிப்பதிவு செய்த நாடா எப்படியோ மர்மமாக அழிந்துவிட்டது. மறுபடியும் அவசர அவசரமாக அவர் குரலை பதிவுசெய்து ஒலிபரப்பினோம்.

 

திரைப்பட நடிகைகளில் கே ஆர் விஜயா  அவர்களை நேர்காணல் கண்டது மிகவும் ருசிகரமானது. அவர் ஊடகங்களுக்கு பேசுவது மிகவும் அரிது. அவரை நிலையத்துக்கே வரச்செய்து அகில இந்திய வானொலிக்காக ஒரு பேட்டி கண்டேன். அதில் தான் கற்ற அறிவை விட பெற்ற அறிவே அதிகம் எனக் கூறியிருந்தார்.   மிகப்பெரிய ஏமாற்றம் என்பது எம் எஸ் அம்மா அவர்கள் அவருடைய  வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்து ஒலிக்களஞ்சியத்தில் வைக்க மறுத்துவிட்டது.

 

உங்கள் பிபிசி வாழ்க்கையில் முக்கியம் என நீங்கள் நினைக்கும் சம்பவங்கள்?

 

நான் பிபிசி தமிழோசைக்காக தயாரித்த மூன்று முக்கியத் தொடர்களை சொல்லலாம். ஒன்று இலங்கையின் மலையகப் பகுதியில் உள்ள மக்களின் சமூகப் பொருளாதார நிலை குறித்த 15 வாரத் தொடர். அது நேயர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக  75 வருடங்களாக மின்சாரமே இல்லாத ஒரு தோட்டத்தில் வசித்து வருபவர்களை குறித்து அரசு என்ன செய்யப் போகிறது என்று எழுப்பிய வினா. அந்தத் தொடர் முடிவடையும் முன்னரே  அவர்களுக்கு மின் இணைப்பு கிடைத்தது வெற்றி எனச் சொல்லலாம்.

 

இரண்டாவது, இலங்கையின் பல பகுதிகளில் சிதறிவாழும் ஆப்பிரிக்க வம்சாவளி மக்களைப் (கஃபீர் மக்கள்-ஆப்பிரிக்காவிலிருந்து இலங்கைக்கு அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்கள்)  பற்றியத் தொடர். இலங்கைக்குள்ளேயே அப்படி ஓர் இனம் இருப்பது பலருக்கு தெரியாது.

 

மூன்றாவது, நாகஸ்வரம் பற்றிய தொடர்.  தமிழ் மக்களின் முக்கிய

அடையாளங்களில் ஒன்றான மங்கல இசையின் நிலை (நாகஸ்வரம்-தவில் ) இன்று

தமிழ்நாட்டில் எப்படியுள்ளது என்பது குறித்த 15 வாரத் தொடர்.  மூத்தக் கலைஞர்கள், வாத்தியத் தயாரிப்பாளர்கள், இசை ஆய்வாளர்கள் என பலரையும் சந்தித்து

ஒலிப்பதிவு செய்யப்பட்டது.  தமிழகத்தில் இந்தக் கலைக்கு எதிர்காலம் இல்லை என்கிற கசப்பான உண்மை அப்போது தெரியவந்தது.

 

இது தவிர, நான் பெருமைப்படும் ஒரு செய்தியும் உண்டு. இதை முதன்முதலாக உலகத்துக்கு அறிவித்தது பிபிசி தமிழோசைதான். ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ஒப்புதல் கிடைத்த செய்தியை 9 ஜூலை 2015 அன்று நான் ஒலிபரப்பினேன்.

 

பிபிசி தமிழோசை 16, மே 2016ல் டெல்லிக்கு மாறப்போவதாகச் செய்தி வந்திருக்கிறது. உங்களுக்கு ஏதாவது சொல்ல இருக்கிறதா?

 

ஒரேயொரு ஆசை உண்டு. மிகமுக்கியமான சிவாஜியின் நேர்காணல் இன்றும் சென்னை வானொலி நிலையத்தில் பாதுகாக்கப்படுகிறது.  இன்னும் ஒலிபரப்பாகவில்லை. அது ஒலிபரப்பாகும் நாளுக்கு காத்திருக்கிறேன்.  சிவாஜியின் குரலுக்குப் பக்கத்தில் என் குரலும் இருக்கும். அந்தப் பெருமை என்னை வாழவைக்கும். என்னைத் தாண்டி அது வாழும்.

 

END

 

 

 

 


உங்கள் பெயர்: 
உங்கள் மின்னஞ்சல்: 
உங்கள் கருத்து: 
Copyright © 2011 A.Muthulingam. All rights reserved. Powered by Spark Vision Media