A.Muttulingam
முகப்பு | தொடர்புகளுக்கு
புதிய பதிவுகள்
. ஸ்டைல் சிவகா ...
. பொன்னுருக்கு ...
. ஒபாமாவுக்கு ...
. வேட்டைக்காரர ...
. அதுவாகவே வந் ...
. லூனாவை எழுப் ...
. குமர்ப்பிள்ள ...
. என்னைத் திரு ...
. இலக்கணப் பிழ ...
. எழுத்தாளரும் ...
. ஜேசியும் வேச ...
. சிம்மாசனம் ...
. சிவாஜியின் க ...
. வெள்ளிக்கிழம ...
. அடுத்த புதன் ...
. வெள்ளைக்காரன ...
. சின்ன ஏ, பெர ...
. என்னை மறந்து ...
. கிறிஸ்மஸ் தவ ...
. ஸ்டைல் சிவகா ...
வேட்டைக்காரர்கள் (நேர்காணல்கள்)
2017-03-14

வேட்டைக்காரர்கள்

அ.முத்துலிங்கம்

’மதிய உணவுக்கு வாருங்கள்.’ இப்படித்தான் அழைப்பு வந்தது. அமெரிக்காவின் மொன்ரானா மாநிலத்திலிருந்து சிலர் கூட்டாக  அனுப்பிய அழைப்பு. பல வருடங்களுக்கு முன்னர் இவர்கள் எல்லோரும் மாணவர்களாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட்டிருக்கிறார்கள். மகப்பேறு மருத்துவர், விஞ்ஞானி, பேராசிரியர் மற்றும் மேலாண்மை ஆலோசகர். இவர்களிடமிருந்த ஒரே ஒற்றுமை எல்லோருமே வேட்டைக்காரர்கள். ’நிச்சயம் வாருங்கள்’ என்றார் அழைத்தவர் மறுபடியும்.  மனைவி  சொன்னார் ’நானும் ஏதாவது செய்து கொண்டுவருகிறேனே.’  அவர் ’வேண்டாம். எதற்கு சிரமம்?’ என்றார். அத்துடன் சம்பாசணை முடிந்தது.

மொன்ரானா மாநிலத்தில் வசிப்பவர்கள் பலர் வேட்டைக்காரர்கள். செப்டம்பர் மாதம் தொடங்கியவுடன் வேட்டையாடும் உரிமத்துக்கு விண்ணப்பித்து விடுவார்கள். எல்லோருமே தங்கள் தங்கள் தொழில்களில் மூழ்கியவர்கள். திருமண நாளை மறந்து விடுவார்கள். பிறந்த நாளை மறந்துவிடுவார்கள். விடுப்பில் உல்லாசப் பயணம் போவதை மறப்பார்கள். ஆனால் வேட்டைக்கான உரிமத்துக்கு  விண்ணப்பம் அனுப்ப மறக்கமாட்டார்கள். ஒவ்வொரு வருடமும் காட்டுக்குள் தனியாகவோ கூட்டாகவோ போய் மிருகத்தை வேட்டையாடுவார்கள். அந்த இறைச்சியை பல மாதகாலம் குளிர் பெட்டியில் சேமித்து உண்பார்கள். அவர்கள் கூடும் இடங்களில் பேச்சு வேட்டை பற்றியே இருக்கும். என்ன விலங்கு? என்ன எடை? எந்தக் காடு? ஆகிய விசயங்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.

விருந்து நாள் அன்று ஏதாவது சமைத்துக்கொண்டு  போக வேண்டும் என்ற எண்ணம் என் மனைவிக்கு மீண்டும் தோன்றியது. நேரத்தை மாற்ற மறந்த கடிகாரத்தில் அலாரம் வைத்ததால் காலை ஆறு மணிக்கு அடிக்க வேண்டியது அதிகாலை நாலு மணிக்கே அடித்தது. மனைவி அந்த நேரம் எழும்பி அவசரமாகச் சமைத்தார். ’எதற்காக இப்படி கஷ்டப்படவேண்டும்?’ என்று கேட்டபோது, ’எப்படி வெறும்கையோடு போவது.  கத்தரிக்காய் குழம்பு அவர்களுக்கு பிடிக்கும்’ என்றார். நான் ’மாணவராயிருக்கும்போது எல்லாமே பிடிக்கும், இப்பொழுது பிடிக்குமோ என்னவோ’ என்றேன்.  ஆனாலும் அவரை தடுக்க முடியவில்லை. குறித்த நேரத்தில் விருந்துக்கு அழைத்தவர் வீட்டுக்கு போய்ச் சேர்ந்தோம்.

அன்று முழுக்க வேட்டைக்காரர்களின் கதைகள்தான்.  ஒவ்வொருவரும் தங்கள் வேட்டை அனுபவத்தையும், பிரதாபத்தையும்  வர்ணித்தார்கள். ஒருவர் கதையை முடிக்கும்போது இன்னொருவர் தொடங்கினார். விருந்துக்கு வந்தவர்களிலும் பார்க்க வராத ஒருவர் கதையும் அங்கே அடிபட்டது. ஜோ என்பது அவர் பெயர். இவர் கோடீஸ்வரர். விருந்துகளுக்குப் போகும்போது தனக்குப் பிரியமான ஆறு பியர் போத்தல்களை எடுத்துச் சென்று அவற்றை அவரே குடிப்பார். விருந்து முடிந்ததும் மீதமான பியர் போத்தல்களை திரும்பவும் வீட்டுக்கு எடுத்துச் செல்வார். அந்த விசேடமான பியரை மற்றவருடன் பகிரமாட்டார். அணு ரகஸ்யத்தை பாதுகாப்பதுபோல பியர் ரகஸ்யத்தை காப்பாற்றுவார். கஞ்சன் என்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் சில விடயங்களில் தாராளமாகவும் இருப்பார்.

அமெரிக்காவில் ஒரு காலத்தில் 50 மில்லியன் பைசன்கள் ( ஒரு விதமான எருமைகள்) இருந்தன.  சிவப்பு இந்தியர்களுக்கு அவைதான் உணவு. அவை வலசை புறப்படும்போது அவர்கள் அவற்றின் பின்னாலேயே  அலைவார்கள். வெள்ளையர்கள் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தபோது சிவப்பு இந்தியர்கள் எதிரிகள் ஆனார்கள். அவர்களுடைய நிலம் வெள்ளையர்களுக்கு தேவை. சிவப்பு இந்தியரை அழிக்க வேண்டுமென்றால் அவர்களுடைய உணவை அழிக்கவேண்டும். பைசன்களை சுட்டுத் தள்ளினார்கள். 100 வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் பைசன்கள் கிட்டத்தட்ட அழிந்தே விட்டன. இப்பொழுது அவை கொஞ்சம் கொஞ்சமாக மீட்கப்படுகின்றன.

பியர் பிரியரான கோடீஸ்வரர் பல ஆயிரம் ஏக்கர்கள் நிலம் வாங்கி அங்கே பைசன்களை சுதந்திரமாக உலவவிட்டார்.  அவர் அவற்றை பராமரிப்பதில்லை. காட்டிலே இயற்கையாக  அவை வாழ்ந்தன. வருடத்தில் ஒருமுறை வேட்டைக்கு சென்று ஒரேயொரு பைசனை சுட்டுக் கொல்வார்.  இறைச்சியாக  அவருக்கு 700 றாத்தல் கிடைக்கும். அதை ஆழ்குளிரில் பாதுகாத்து வருடம் முழுக்க உண்பார். நண்பர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்

ஒருமுறை அவரிடமே கேட்டேன். ’நீங்கள் சுற்றுச்சூழல் பற்றாளர். இப்படி காட்டு விலங்கை சுட்டு சாப்பிடலாமா?’  ’நான் சுற்றுச் சூழலில் ஆர்வமாக இருப்பதால்தான் இப்படி செய்கிறேன். இயற்கையோடு ஒட்டி நான் வாழ்கிறேன். என் உணவுக்காக மட்டுமே கொல்கிறேன். இதைத்தான் ஆதி மனிதனும் செய்தான். ஒரு வித்தியாசம், அவனுக்கு வில், அம்பு தேவைப்பட்டது. நான் துப்பாக்கி பாவிக்கிறேன். அவ்வளவுதான். நாங்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுகிறோமே. இந்த மாடுகள் சுற்றுச்சூழலுக்கு எத்தனை கேடு விளைவிக்கின்றன தெரியுமா? 500 றாத்தல் மாட்டு இறைச்சி உற்பத்தியாக 5400 றாத்தல் தானியம் தேவை.  அவை உற்பத்தியாக்கும் மீதேன் வாயு சுற்றுச் சூழலை நாசம் செய்கிறது. பைசன் இறைச்சி சுற்றுச்சூழலுக்கு மிகவும் நட்பானது.’ அன்றைய விருந்துக்கு ஜோ தன் பங்களிப்பாக  பைசன் இறைச்சியை  அனுப்பியிருந்தார்.

மகப்பேறு மருத்துவர்  மனைவியுடன் வந்திருந்தார். மனைவிக்கு அவர் கணவனுடன் விருந்துகளுக்குப் போக விருப்பமே இல்லை.  ஏன் என்று கேட்டேன். ’விருந்துக்கு வரும் எல்லாப் பெண்களும்  அவருடன் கதைப்பார்கள். தங்களுக்குப் பிறந்த குழந்தைகள் பற்றியும், பிறக்கப்போகும் குழந்தைகள் பற்றியும் பேசுவார்கள். இவரும் சிரித்துச் சிரித்துக் கதைப்பார். எனக்கு எரிச்சலாக வரும். ஒருமுறை அத்தனை விருந்தினருக்கு முன்னால் ஒரு பெண் – அன்று அவள் குடித்திருந்தாள் – தன்னுடைய   பிரசவக் கோடுகளை காட்டினாள்.  இன்று பெண்கள் தொந்தரவு இராது. அதுதான் அவருடன் வந்திருக்கிறேன்.’

மலை ஆடு இறைச்சியை மருத்துவர்  கொண்டு வந்திருந்தார். மலை ஆடு வேட்டைதான் ஆகக் கடுமையானது. மலை ஏறத் தெரிந்து இருப்பதுடன் தொடர்ந்து பத்து நாட்கள் மலை முகடுகளில் அலையத் தயாராக இருப்பது அவசியம்.  ஆடு சுடுவதற்கு அனுமதி லொத்தர் முறையில் வழங்கப்படும்.  தனியாக  வேட்டையாட தேர்ந்த வேட்டைக்காரர்களால் மட்டுமே முடியும். மலையின் பேரே கிரேஸி மவுண்டன்.   வழிகாட்டியுடன்  ஒருவாரம் அலைந்து, டெலஸ்கோப் பொருத்திய .300 கலிபர் துப்பாக்கியால் 350 மீட்டர் தூரத்தில் குறிபார்த்து  ஆட்டைச் சுட்டதாக மருத்துவர் சொன்னார்.

அங்கே வந்திருந்த எல்லோருமே ஒவ்வொரு மிருகத்தின் இறைச்சியை கொண்டுவந்திருந்தனர். பேராசிரியர் கொண்டுவந்தது எல்க் இறைச்சி.  டிலன் நகரத்துக்குப் பக்கத்து காடுகளில் காணப்படும் எல்க்,  மரை அல்லது மிளா போல இருக்கும் . அதைச் சுடுவதில் உள்ள பிரச்சினை சுட்ட பின்னர் அதன் தோலை உரிப்பதுதான். வழக்கமாக இருவர் வேட்டைக்கு சேர்ந்துபோனால் சுலபமாக இருக்கும். பேராசிரியர் தனியாகவே போனார். பனி பெய்த அடுத்தநாள்தான் எல்க் வேட்டைக்கு    உகந்தது. எல்க் மலையிலிருந்து தரைக்கு இறங்கிவிடும். அதி காலையில் தொடங்கி   நாலு மணிநேரமாக ஓர் எல்க்கைத்  தொடர்ந்தார். 100 மீட்டர் தொலைவுக்குள் வந்தால்தான் தூரக்கண்ணாடி மூலம் குறிபார்த்து சுடமுடியும்.  குறுக்காக விழுந்தமரத்தின் பின்னால் பதுங்கி இருந்து குறி பார்த்தார். எல்க் குனிந்து எதையோ தின்றுவிட்டு தலையை நிமிர்த்தி காதுகளை விரித்து சுற்றிலும் ஒரு முறை பார்த்தது. அதற்கு சூழலில் ஒரு மாற்றம் தெரிந்திருக்கவேண்டும். இதயத்தை குறி பார்த்து விசையிலே விரலை வைத்து இழுக்க  முன்னரே படார் என்று துப்பாக்கி வெடித்தது. வெடித்தது அவருடைய துப்பாக்கி அல்ல. அவர் திகைத்துப்போய் நிற்க இன்னொரு வேட்டைக்காரன் விழுந்த எல்க்கை நோக்கி ஓடினான்.  பேராசிரியருக்கு தெரியாமல் இன்னொரு வேட்டைக்காரன் அதே மிருகத்தை தொடர்ந்திருக்கிறான். என்ன செய்ய முடியும்?

அடுத்த நாள் காலையும் அலைந்தார். எல்க் கண்ணுக்கு படவில்லை. மான்கள் அவ்வப்போது தோன்றி மறைந்தன. பின் மதியம் மூன்று மணி அளவில் எல்க் ஒன்றை கண்டார். மகா பெரியது. எச்சரிக்கையாக அதைத் தொடர்ந்தார். குறிவைத்தால் தவறாது என்று தோன்றியதும் சுட்டார். அவருடைய குண்டு எல்க்கின் வயிற்றிலே பட்டது. ரத்தம் சொட்டச் சொட்ட எல்க் நகர்ந்தது. கீழே விழுவதற்கு ஒரு மணி நேரம் ஆனது.  காட்டுக்குள்ளே சீக்கிரம் இருண்டுவிடும். இருட்டினால் எல்க்கை தோல் உரித்து, இறைச்சியை வெட்டிக்  கொண்டு போக முடியாது. வேறு ஆபத்தான விலங்குகள் நெருங்கிவிடும். அப்படியே விட்டுவிட்டு திரும்பினார். அடுத்த நாள் காலை  எலும்புக்கூடுதான் எஞ்சி இருந்தது. 

’ஒரு வாரம் கழித்து மீண்டும் வேட்டைக்கு புறப்பட்டேன். எல்க் வேண்டாம், அது சுடுவதற்கு இரண்டு பேராவது தேவை, மான் கிடைத்தால் போதும் என்று தீர்மானித்துப் போனேன். வழக்கம்போல மரத்தின் பின்னால் மறைந்திருந்தேன். தூரத்தில் மான்கள் போயின. மரத்துக்கு கிட்ட வரும்வரை காத்திருப்பது என்று தீர்மானித்தேன். நீண்ட நேரம் சென்றது. ஒரு நிமிடம் கண்ணயர்ந்து விட்டேன். திடீரென்று விழிப்பு வந்து பார்த்தால் 30 மீட்டர் தூரத்தில் ஓர் எல்க் என்னையே பார்த்தபடி நின்றது.  அவசரமில்லாமல் துப்பாக்கியை எடுத்து குறி பார்த்தபோதும் அப்படியே அசையாமல் நின்றது. தலையை குறிபார்த்து சுட்டேன்.  நின்ற இடத்தில் பொத்தென்று விழுந்தது. தோலை உரித்து 150 றாத்தல் இறைச்சியை வெட்டி எடுத்து வாகனத்துக்கு கொண்டு போனேன். அதைத்தான் இன்று சாப்பிடப் போகிறீர்கள்.’

மான் இறைச்சி கொண்டுவந்த விஞ்ஞானியிடம்  பெரிய கதை இல்லை. காட்டுக்கு ’போனேன், பார்த்தேன்,  சுட்டேன்’ என்று 2000 வருடங்களுக்கு முன் ஜூலியஸ் சீஸர் ’வந்தேன், பார்த்தேன், வென்றேன்’ என்று சொன்னதுபோல சுருக்கமாக பகர்ந்தார். ஆனால் அவரிடம் வேறு கதை இருந்தது. அவருடைய மாணவர்களின் அதிபுத்திசாலித்தனம் பற்றியது. அதைச் சொன்னார்.

’எட்டு  மாணவர்களுடன் மெக்சிக்கோவுக்கு ஆராய்ச்சிக்காகப் போனேன். முதலிலேயே அவர்களிடம் சொல்லிவிட்டேன் ’என்னவும் செய்யுங்கள் கடலிலே குளிக்கவேண்டாம்’ என்று. அது அடிக்கடி கொந்தளிக்கும் கடல். ஒரு நாள் எட்டுப் பேரும் எனக்குத் தெரியாமல் குளிக்கப் போனார்கள். கடல் அலை துரத்த ஓடித்தப்பிவிட்டார்கள். நான் அவர்களைத் தேடிப் போனபோது எல்லோரும் நிர்வாணமாக நின்றார்கள். அவர்கள் உடுப்புகளை அலைகொண்டு போய்விட்டது. ஒரு பேராசிரியர் தோரணையுடன் பதற்றப்படாமல், ’சரி, பரவாயில்லை, வாகனத்துக்குள் ஏறுங்கள். ஹொட்டலுக்குப் போகலாம்’ என்றேன். அவர்கள் அசையாமல் நின்றார்கள். அப்பொழுதுதான்  வாகனத்தின் சாவி அவர்கள் உடுப்புகளுடன் தண்ணீரில் போய்விட்டது தெரிந்தது.  

அந்தக் குக்கிராமத்தில் ஒருவருக்கும் ஆங்கிலம் புரியாது. எனக்கு ஸ்பானிய மொழி தெரியாது. நாலு மைல் தூரம் தனியாக நடந்து சென்று ஒரு மெக்கானிக் கடைக்காரரை கண்டுபிடித்தேன். ஒருவாறு கார் சாவி புதிதாக செய்ய வேண்டும் என்பதை புரிய வைத்துவிட்டேன். அந்த மீசைக்காரர் பெரிதாகச் சிரித்து  12 வயதுப் பையனை என்னுடன் அனுப்பினார். ’இவனா?’ என்று நான் மறுத்தேன். மெக்கானிக் ’ஹா ஹா’ என்று சிரிப்பைக் கூட்டியபடி புறங்கையால் என்னை துரத்தினார். வேறு வழியின்றி, மெக்கானிக்கின்  உடைந்த சைக்கிள்  பாரில் பையனை உட்காரவைத்து நான்  மிதித்துக்கொண்டு கடற்கரைக்கு வந்தேன்.  

பையனை பார்த்ததும் மாணவர்கள் ஏளனமாகச் சிரித்தார்கள். எனக்கு நம்பிக்கை போய்விட்டது. பையனுக்கு அடர்த்தியான தலைமுடி. மெலிந்த தோற்றம். அன்று காலை சாப்பிட்டிருப்பானோ தெரியாது. அவன்  வாகனத்தை அணுகி, ஒரு கம்பியை பக்கெட்டிலிருந்து எடுத்து கார் கண்ணாடியை நெம்பிக் கீழே இறக்கினான்.  உள்ளே கையை விட்டு கதவைத் திறந்தான்.  இரண்டு வயர்களை பிடுங்கி இழுத்து தொடுத்ததும் வாகனம் ஸ்டார்ட் ஆகியது. இரண்டே நிமிடம்தான். நான் பக்கட்டிலிருந்த அத்தனை டொலர்களையும் கொடுத்தேன். அவன் மறுத்துவிட்டான். சைக்கிளை ஓட்டிக்கொண்டு திரும்பிப் பாராமல் போனான்.’

’மெக்சிக்கோ ஆராய்ச்சியில் நானும் மாணவர்களும் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடம் இதுதான். மனிதனுக்கு விஞ்ஞானத்திலும் பார்க்க கற்பனை முக்கியமானது. ஒன்றை செய்து முடித்த பிறகு அது எளிதாகத் தோன்றும். அதை முதலில் செய்வதுதான் விஞ்ஞானம்.’  

வாத்து சுடுபவரை வேட்டைக்காரர்கள்  மதிப்பதில்லை.  அது இளம்பிள்ளைகள் சுட்டுப் பழகுவதற்கான ஏற்பாடு. வாத்துச் சுட்டவர்தான்  ஆலோசகர்; தன்னுடைய 12 வயது மகனுடன் வந்திருந்தார். முதல் வாரம் பிளாட்ஹெட் குளத்தில் சுட்ட வாத்தைப் பொரித்துக் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னார். அந்த  வாத்தின் விலை அங்கே உள்ள இறைச்சிகள் அனைத்திலும் பார்க்க அதிகம் என்றார். மகன் தகப்பனைப் பார்த்து சொல்லவேண்டாம் என சாடை காட்டினான்.  அவர் சொல்லத் தொடங்கினார்.

’குளத்துக்குப் பக்கத்தில் புதர்களில் பதுங்கியிருந்து வாத்து ஒலியை உண்டாக்கினோம். வாத்துக்கள் வந்து இறங்கியதும் சுட ஆரம்பித்தேன். ஒரு வாத்து குளத்தில் விழுந்தது. மற்றவை பறந்துவிட்டன. மகன் வழக்கம்போல படகில்  வாத்தை மீட்டு வரப் புறப்பட்டான்.  இம்முறை போகும்போது துப்பாக்கியை தரச் சொன்னான். ஏதாவது வாத்து தனியாக நீந்தினால் அதைச் சுடலாம் என்பது அவன் எண்ணம். நானும் யோசிக்காமல் துப்பாக்கியை கொடுத்தேன். அவன் துப்பாக்கியை படகில் நீளவாக்காக வைக்காமல் குறுக்கு வாக்காக வைத்துக்கொண்டு புறப்பட்டான். ஒரு வாத்து தனியாக நீந்துவதைப் பார்த்து வாத்திலிருந்து கண்களை     எடுக்காமல் பின்பக்கமாக கையை நீட்டி துப்பாக்கியை தொட்டான். விசையில் கைபட்டு துப்பாக்கி வெடித்து, அதன் எதிர்விசையில்  துப்பாக்கி குளத்துக்குள் விழுந்துவிட்டது. 1000 டொலர் துப்பாக்கியை மீட்கவே முடியவில்லை. இன்று நீங்கள் சாப்பிடப்போகும் வாத்தின் விலை 1000 டொலர்.’

என்னைப் பார்த்தார்கள். என்னிடம் என்ன கதை இருக்கிறது. தோசை சுட்ட கதையும், அப்பம் சுட்ட கதையும் தான். நான் கேட்டேன், ’நீங்கள் காட்டிலே போய் மிருகங்களை வேட்டையாடுகிறீர்கள். உங்களிடம்  எப்போதாவது காட்டு விலங்குகள் வேலை செய்திருக்கின்றனவா? அதுவும் சம்பளத்துக்கு?’ என்று கேட்டேன். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். நான் சொன்னேன், ’என்னிடம் ஒரு காலத்தில் இலங்கையில்  இரண்டு யானைகளும், 220 வேலையாட்களும் வேலை செய்தார்கள். நான் அவர்களுக்கு வாராவாரம் சம்பளம் கொடுத்து  ஒரு தொழிற்சாலையை  கட்டிமுடித்தேன். அது இன்றைக்கும் இருக்கிறது.’ அவர்கள் மத்தியில் என் மதிப்பு அன்று கொஞ்சம் உயர்ந்தது.

விஞ்ஞானியின் மனைவி உணவு தயார் என்றதும்  எழுந்து மேசைக்கு சென்றோம். எல்லாமே வேட்டையாடப்பட்ட உணவு வகைதான். நெருப்பில்  வாட்டிய எல்க் இறைச்சி. இனிப்பு கலந்து அப்பம் போல தயாரித்த மான் இறைச்சி, சதுரம் சதுரமாக   வெட்டி, கொஞ்சம் தண்ணீரில்  வேகவைத்து பின் வதக்கிய  பைசன் இறைச்சி. பொரித்த வாத்து, இப்படி எல்லாம் இருந்தது. மலை ஆட்டு இறைச்சி மாத்திரம் அரைத்து, நெய்யும், மதுவும் கலந்து உலர்ந்த நிலையில் சமைக்கப்பட்டிருந்தது. இன்னும் பலவிதமான உணவு வகைகள்  பரப்பி வைக்கப்பட்டிருந்தன. மூன்றுவிதமான சாலட்,  சுவிட்சர்லாந்தில் இருந்து  வருவிக்கப்பட்ட விதம்விதமான வெண்ணெய்க்கட்டிகள்.  முக்கோண வடிவில் வெட்டி  கூடையில் அடுக்கிய பீட்டாபிரெட்.  நீராவியில் பதமாக வேகி, வெண்ணெய் தடவப்பட்ட அஸ்பரகஸ். வேட்டையாடிக் கொல்லப்பட்ட பைசன், மான். எல்க்,  மலை ஆடு, வாத்து  இறைச்சிகளுக்கு  நடுவே, காலை நாலு மணிக்கே எழும்பி மனைவி சமைத்த கத்தரிக்காய் குழம்பு நாணத்துடன் உட்கார்ந்திருந்தது. 

END

 

 

 


உங்கள் பெயர்: 
உங்கள் மின்னஞ்சல்: 
உங்கள் கருத்து: 
Copyright © 2011 A.Muthulingam. All rights reserved. Powered by Spark Vision Media