A.Muttulingam
முகப்பு | தொடர்புகளுக்கு
புதிய பதிவுகள்
. ஸ்டைல் சிவகா ...
. பொன்னுருக்கு ...
. ஒபாமாவுக்கு ...
. வேட்டைக்காரர ...
. அதுவாகவே வந் ...
. லூனாவை எழுப் ...
. குமர்ப்பிள்ள ...
. என்னைத் திரு ...
. இலக்கணப் பிழ ...
. எழுத்தாளரும் ...
. ஜேசியும் வேச ...
. சிம்மாசனம் ...
. சிவாஜியின் க ...
. வெள்ளிக்கிழம ...
. அடுத்த புதன் ...
. வெள்ளைக்காரன ...
. சின்ன ஏ, பெர ...
. என்னை மறந்து ...
. கிறிஸ்மஸ் தவ ...
. ஸ்டைல் சிவகா ...
பெயர் மாறும் பெண் (அறிவிப்புகள்)
2010-09-05

ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்னர் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதை அனுப்பியவருடைய பெயர் உமா பார்வதி என்று இரண்டு பெண்களின் பெயரை தொடுத்திருந்தது எனக்கு புதுமையாக பட்டது. அவர் எழுதிய கடிதம்கூட புதுமையாகத்தான் இருந்தது. என்னுடைய 'மகாராஜாவின் ரயில்வண்டி' சிறுகதை தொகுப்பை படித்துவிட்டு அதிலிருந்த ஒவ்வொரு கதையையும் எடுத்து அதற்கு நீண்ட விமர்சனம் எழுதியிருந்தார். நான் அந்தக் கடிதத்திற்கு நன்றி சொல்லி பதில் போட்டேன். அவருடைய பள்ளிப்பெயர் என்ன என்று கேட்டபோது N. உமா பார்வதி என்று பதில் வந்தது. அதன் பின்னர் எங்கே என்னுடைய கதையோ கட்டுரையோ பிரசுரமானாலும் உமா பார்வதியிடமிருந்து ஒரு பாராட்டுக் கடிதம் வருவது வழக்கமானது.

சில வருடங்களுக்கு முன்னர் 'கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது' என்ற தொகுப்பை நான் வெளிக்கொணர்ந்தபோது மிகவும் சிரமப்பட்டேன். இருபது எழுத்தாளர்களிடம் கட்டுரைகள் பெற்று அவற்றை அச்சாக்கும் வேலை. என் சார்பில் ஒவ்வொரு எழுத்தாளாராக தொடர்புகொண்டு அவர்களிடம் கட்டுரைகளை சொன்னநேரத்துக்கு பெற்றதோடு புத்தகத்தை ஒழுங்கமைப்பதிலும் மெய்ப்பு பார்ப்பதிலும் எனக்கு உதவினார். இத்தனைக்கும் நான் அவரை நேரிலே சந்தித்ததில்லை, முகத்தை பார்த்ததில்லை, பேசியதில்லை. எல்லாம் கடிதத்தில்தான்.

திடீரென்று அவர் தன் பெயரை உமா சக்தி என்று மாற்றினார். 'அவர் பெயர், அவர் மாற்றுகிறார்' என்று பேசாமல் இருந்தேன். சில நாட்களில் மீண்டும் ஒரு கடிதம் வந்தது. அவர் தன் பெயரை உமா ஷக்தி என மாற்றிவிட்டார். இன்று உமா ஷக்தி ஒரு கவிஞர், எழுத்தாளர். நிறைய எழுதுகிறார். அவருடைய முதல் கவிதை தொகுப்பு 'வேட்கையின் நிறம்'  என்ற தலைப்பில் உயிர்மை வெளியீடாக வெளிவந்தபோது அதை மனம் திறந்து பாராட்டியவர்களில் நானும் ஒருவன். இத்தனை கவிதை மனம் அவருக்குள் இருந்தது எனக்கு தெரியவில்லை. அவருடைய ஒரு கவிதை இப்படிச் செல்கிறது.
  அவன் எழுதக் காத்திருக்கும் கனவுத்தாள்
   எவ்வளவு நிரப்பியும் நிறையாத காலிக் கோப்பை
  வால் நட்சத்திரத்தின் மாய வசீகரம்
  அவனால் புணரப்படாத ஆதி மனுஷி.
'எவ்வளவு நிரப்பியும் நிறையாத காலிக்கோப்பை' என்று ஒரு பெண்ணை வர்ணிப்பதற்கு ஒரு பெண்ணால்தான் முடியும். நினைக்க நினைக்க புது அர்த்தங்கள் தரும் இந்த வர்ணனையை என்னால் மறக்கமுடியாது. இன்னொரு இடத்தில் விநோதமான கற்பனை.
  மாயவெளியில் அலைந்து திரியும்
  மானொன்று கேட்டது 
  சீதை வேண்டும், பிடித்துத்தா 
இப்படி வித்தியாசமான கற்பனைகளையும், நுணுக்கமான வார்த்தை அமைப்புகளையும் கொண்டது வேட்கையின் நிறம் கவிதைத் தொகுப்பு.

இன்று இவர் நிறைய கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் என்று ஓய்வில்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறார். டிவி சீரியல்களுக்கு வசனம் எழுதுகிறார். நாவல் எழுதுகிறார். தற்போது மும்முரமாக சினிமாவுக்கு கதை, வசனம் எழுதிக்கொண்டிருக்கிறார். இவருடைய வளர்ச்சியின் வேகம் எனக்கு பிரமிப்பூட்டுகிறது. இவர் தன் பெயரை மாற்றும் வேகத்திலும் பார்க்க அது கூடியதாக இருக்கிறது.   


அமெரிக்கக்காரி  புத்தகம்
பற்றி உமாஷக்தி

மற்ற தேடல்களைவிட புத்தகங்களின் தேடல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. லாண்ட்மார்க், நியூ புக் லாண்ட்ஸ் அல்லது கன்னிமாரா லைப்ரரி உள்ளே சென்றுவிட்டால் பின் திரும்பி வரும் வழி மறந்துவிடும். புத்தகங்களின் அருகாமையில், அதன் வாசனையில், அதன் அதீத ருசியினால் நான் என்னைத் தொலைத்துவிடுவேன். கடையிலிருந்து கிளம்பும் கடைசி ஆளாக பல நாள்கள் நேர்ந்திருக்கிறது. முதலில் ஏசி நிறுத்தப்படும், அதன்பின் விளக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக அணைக்கப்படும், நாமே புரிந்து கொண்டு கிளம்ப வேண்டியதுதான்.

புத்தகத் தேர்வு என்பது சில சமயங்களில் சூதாட்டம் போலாகிவிடுகிறது. பிடித்த எழுத்தாளர் என நம்பி வாங்கிய புத்தகத்தினுள் நுழைய முடியாமல் போகிறது. (ப.வெங்கடேசன் எழுதியுள்ள ’தாண்டவராயன் கதை’யை கடந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன், இதுவரை நூறு பக்கங்களுக்கு மேல் வாசிக்கவில்லை, இத்தனைக்கும் வாசித்தவரை பிடித்தே இருந்தது. அந்தப் புத்தகத்தினுள் செல்ல ஒரு மனநிலை தேவைப்படுகிறது. அது எப்போதும் வாய்ப்பதில்லை). சில புத்தகங்களை எடுத்தால் கீழே வைக்கமுடியாமல் அல்லும் பகலும் உடன் வரும். தவிர்க்க ஏலாமல் வேறு வேலையில் ஈடுபட்டாலும் அது காதின் அருகே வந்து மென்மையாக முணுமுணுக்கும். வாசித்துத் தீரும் வரை அது ஒரு இனிமையான சுமையாகவே இருக்கும். கடினமான சில புத்தகங்கள் மறுவாசிப்பு வேண்டி நிற்கும். மீண்டும் வாசிக்கும் போது புதுத்தன்மையுடன் முன்பு வாசிக்கும் போது விடுபட்ட விஷயங்கள் கண்ணில் தென்படும். ஆனால் மிகுந்த ரசனையுடன் எழுதப்பட்டிருக்கும் சில புத்தகங்களை அடிக்கடி வாசிக்கலாம். என் புத்தக அலமாரியில் எப்போதும் முன்னிருக்கும் அத்தகைய புத்தகங்களில் நான் அடிக்கோடிக்க இடங்களை மீண்டும் மீண்டும் வாசித்து மகிழ்வேன்.

சமீபத்தில் மீள் வாசிப்பு செய்த புத்தகம் அ.முத்துலிங்கம் எழுதியுள்ள ’அமெரிக்கக்காரி’. நல்ல மழைக்காலத்தில் ஒரு கோப்பை தேனீருடன் அமிழ்ந்து போகும் சோபாவில் புதையப் புதைய அமர்ந்து கொண்டோ படுத்துக் கொண்டோ அமுவின் எந்தவொரு புத்தகத்தை வாசித்தாலும் அது நம்மை உயரப் பறக்கச் செய்யும். அவர் எழுத்தின் சிறப்பு என்னவென்றால் அது எக்காலத்திலும் ஏற்புடையதாக இருக்கும். அப்படி ஒரு மொழி, அப்படி ஒரு அங்கதம், சொல்ல வந்த விஷயங்களின் கனத்தை மீறிய எளிமை. தொகுப்பில் ஒவ்வொரு கதையும் வித்யாசமான களனில் பயணம் செய்கிறது. சில சமயம் கடலிலும், சில சமயம் தனிமையான கோட்டையிலும், சில சமயம் காட்டிலும், சில சமயம் விமானத்தில், மட்டுமல்லாமல் சந்திரனிலும் கூட நம்மை அழைத்துச் செல்கிறது. நாம் பார்த்தேயறியாத நாடுகளின் விமான நிலையங்களிலும், ஆப்பிரிக்க அடர்காடுகளுக்குள்ளும், பாகிஸ்தானில் இருக்கும் ஏதோ ஒரு கிராமத்திற்கும் நம்மை அறியாமல் நாம் ”வாயு வேகம் மனோ வேகத்தில்” சென்று திரும்புவோம்.

’அமெரிக்கக்காரி’யின் பின் அட்டைக் குறிப்பு இப்புத்தகத்தை வாசிக்க தூண்டும் விதமாய் உள்ளது. ”உலகெங்கும் பொதுவாகவுள்ள மனித உணர்வுகளைத் துல்லியமாகவும் நுணுக்கமாகவும் கலையம்சம் குலையாமல் அங்கத்தத்துடன் வெளிக்கொணரும் சிறுகதைகளை அடக்கியது இத்தொகுப்பு. நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும், வீச்சையும் சேர்க்கும் ஆசிரியரின் கதை நிகழ்புலங்கள் இலங்கை, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கனடா என மாறினாலும் கதை மாந்தர்களின் மனிதநேசமும் மகிழ்ச்சியும் துயரமும் தியாகமும் ஏமாற்றமும் இடர்ப்பாடுகளும் மாறுவதில்லை’

மொத்தம் பதினாறு சிறுகதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பின் அத்தனைக் கதைகளும் அருமையானவை. வேட்டை நாய், புகைக்கண்ணர்களின் தேசம், வெள்ளிக் கரண்டி, புவியீர்ப்புக் கட்டணம், அமெரிக்கக்காரி ஆகிய கதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. பன்முக வாசிப்பை அளிக்கும் விதமாய் இக்கதைகள் அமைந்துள்ளன. வேட்டை நாயை வாசிக்கையில் பிரெஞ்சுக் கதையை தமிழில் படித்ததைப்போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. வித்யாசமான தளத்தில் அற்புதமான விவரிப்புக்களுடன் கூடிய இக்கதை, நாயகன் வேட்டையாட ஆசைப்பட்டு அதற்கான பயிற்சியளிக்கப்பட்ட நாயை வாங்க முடிவு செய்கிறான். தன் காதல் மனைவியின் கஞ்சத்தனத்திற்கு இரங்கி மலிவாக ஒரு நாயை வாங்கிவிடுகிறான். அவன் அவளை முதலில் சந்தித்தது ஒரு உணவகத்தில். சுமாரான அழுகுடன் கூடிய ஏழைப் பெண்னாக இருந்தாலும் நடாஷாவின் வெளிப்படையான பேச்சும், பளீரென்ற சிரிப்பும் கவர அவள் மீது காதல் வயப்படுகிறான். அவள் உக்ரைனைச் சேர்ந்தவள் என அறிகிறான். ஆனால். நடாஷாவை திருமணம் செய்து கொள்ள அவளின் நாட்டு வழக்கப்படி இருவருக்கிடையேயும் பகிர்ந்து கொள்ளக் கூடியதாக ரகசியமொன்று இருந்திருக்க வேண்டும். காதலில் முதலில் சொன்ன அவனே ரகசியத்தையும் முதலில் சொல்ல வேண்டியிருந்ததால் தன் வாழ்நாளில் நிகழ்ந்த மறக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்ச்சியை நினைவுகூர்கிறான். அவளும் அவனிடம் முக்கியமான ரகசியம் ஒன்றை பகிர்ந்து கொள்கிறான்.

காதலும் ரகசியங்களும் பரிமாறிக் கொண்டுவிடடபடியால் இருவரும் ஒன்றாய் சேர்ந்து வாழத் தீர்மானித்தார்கள். நடாஷாவை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தாலும் அவளுடைய சிக்கன நடவடிக்கையில் பல சமயம் அவனுக்கு எரிச்சலூட்டின. தன் சொந்த நாட்டின் வறுமை நிலையில் அடுத்த வேளை உணவே கனவாக வாழ்ந்தவளுக்கு அமெரிக்க வாழ்க்கையும் கணவனின் அன்பும் சொர்க்கமாகவே தெரிந்தது. பணத்தின் அருமையை அறிந்தவளானாதால் அவனை அனாவசிய செலவுகள் செய்வதை தடுப்பாள். இப்படிதான் அவளுடைய சிக்கன நடவடிக்கையை வேட்டை நாய் விஷயத்தில் பிரயோகித்து அதனால் இவன் வாங்கிய நாய் வேட்டைக்கு மட்டுமன்றி வேறு எதற்கும் பயன்படாமல் போனது. அவரவர் சொன்ன ரகசியங்களை வைத்து ஒருவர்க்கொருவர் காயப்படுத்திக் கொள்கிறார்கள். இறுதியில் அவர்களுக்குள் முகிழ்ந்து செழித்திருந்த காதல் இனம், மொழி, நிறம், பணம், குணம் என யாவையும் கடந்து அவர்களை திருமண பந்தத்தினுள் நுழைய வைக்கின்றது.


வெள்ளிக்கரண்டி கதை பதின்ம வயதில் எனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சரின் கதைப் போல விறுவிறுப்பாக இருக்கின்றது. வரிக்கு வரி ரசித்து சிரிக்க வைக்கவும், சில இடங்களில் லேசான பயத்தையும் அளிக்கிறது. இறுதியில் மனதை கனக்கச் செய்த கதை இது.


எனக்கு மிகவும் பிடித்த தலைப்புக் கதையான அமெரிக்ககாரி இப்படித் துவங்குகிறது :

“ஒரு நாள் அவளுக்கொரு காதலன் இருந்தான்; அடுத்த நாள் இல்லை. அவன் வேறு ஒரு பெண்ணைத் தேடிப்போய்விட்டான். இது அவளுக்கு மூன்றாவது காதலன். இந்தக் காதலர்களை எப்படி இழுத்துத் தன்னிடம் வைத்திருப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவர்கள் தேடும் ஏதோ ஒன்று அவளிடம் இல்லை அல்லது இருந்தும் அவள் கொடுக்கத் தவறிவிட்டாள் என்பது தெரிந்தது.”

மேல்படிப்பிற்காக அமெரிக்கா வந்திருக்கும் இலங்கைப் பெண்ணின் வாழ்க்கையின் ஒரு பகுதியை சொல்லும் கதையாக இருக்கும் ‘அமெரிக்கக்காரி’ வடிவத்திலும் கதை சொல்லும் முறையிலும் வெகுவாக கவருகின்றது. வரிகளைக் காட்சிப்படுத்துவதில் அ.மு விற்பன்னர்.

”ஒரு நாள் அவள் படித்துக்கொண்டிருந்தபோது திடீரென்று தோன்றி அவள் முன்னால் நின்றான். அவனுடைய நிழல் அவள்மேல் பட்டு அவள் நிமிர்ந்து பார்த்தபோது அவள் உட்கார்ந்திருந்த சுழல் கதிரையைச் சுழலவிட்டான். அது மூன்றுதரம் சுற்றிவிட்டு அவன் முன்னால் வந்து நின்றது”

இலங்கைப் பெண்ணான மதி வியட்நாமிய இளைஞர் லான்ஹெங்கை காதலிக்க்கிறாள்.

”லான்ஹங் அடிக்கடி சொல்லும் வார்த்தை ‘என்னை ஆச்சரியப்படுத்து.’ இரவு நேரத்தில் இருவரும் உணவருந்தச் சேர்ந்து போவார்கள். இவள் என்ன ஓடர் கொடுக்கலாம் என்று கேட்பாள். அவன் ‘என்னை ஆச்சரியப்படுத்து’ என்பான். சினிமாவுக்கு போவார்கள். ‘என்ன படம் பார்க்கலாம்?’ என்பாள் இவள். அவன் ‘என்னை ஆச்சரியப்படுத்து’ என்பான்.
ஒருமுறை லான்ஹங் அவளைத் தேடி வந்தபோது அவள் பார்க்காததுபோல கணினியில் தட்டச்சு செய்துகொண்டிருந்தாள். அவன் அவள் தட்டச்சு செய்வதையே வெகுநேரம் உற்றுப் பார்த்தான். அவளுடைய விரல்கள் மெலிந்த சிறிய விரல்கள். அவை வேகவேகமாக விசைப்பலகையில் விளையாடுவதைப் பார்த்தான். அவளுடைய விரல் ஒரு விசையைத் தொடும்போது அந்த விசையில் மீதி இடம் நிறைய இருப்பதாகச் சொன்னான். அப்படிச் சொல்லியபடி ஒரு விரலை எடுத்துக் கையில் வைத்துத் தடவினான். இவளுக்கு என்ன தோன்றியதோ எழுந்து நின்று பற்கள் நிறைந்த அவன் வாயில் முத்தமிட்டாள்.”

அவன் படிப்பை முடித்து ஆசிரியர் பணிக்கும் அவள் மேல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் சமயத்தில் அவர்கள் ஒன்றாக வாழ முடிவு செய்து தனிவீட்டிற்கு குடியேறினார்கள். ஒரே வீட்டில் இருந்தாலும் மதிக்கு முழு மூச்சாக இருப்பது படிப்புதான். சதாசர்வகாலமும் படிப்பில் மூழ்கியிருக்கும் மேதாவி மனைவிக்கு சமைத்தும் துவைத்தும் அவள் கலைத்துப் போட்டிருக்கும் அறையை ஒழுங்குபடித்திக் கொடுத்தும் தன்னுடைய அன்பையும் புரிதலையும் அவளுக்கு உணர்த்தினான். தாயிடம் அடிக்கடி கடிதங்கள் மூலமும் தொலைபேசி மூலமும் தொடர்பில் இருப்பவளுக்கு அவள் ஏன் இன்னும் குழந்தைப் பெற்றுக் கொள்ளவில்லை எனும் கேள்வி நியாயமாகப் படவே கணவனை அழைத்துக் கொண்டு குழந்தைப் பேறு மருத்துவமனைக்குச் செல்கிறாள். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருக்கின்றது. கணவரிடம் இருந்த சிறு குறையை ஏற்று, அவன் மன விலாசத்தோடு ஒப்புதல் அளித்தப்பின் ஆப்பிரிக்கர் ஒருவரின் விந்தை தானமாகப் பெற்று பெண் குழந்தையொன்றைப் பெற்றெடுக்கிறாள் மதி.

அமெரிக்ககாரியாக விரும்பிய இலங்கைப்பெண் மணமுடித்த வியட்நாமிய கணவனுக்கு குழந்தைப் பெற்றுத் தரும் உயிரணுக்கள் குறைவாக இருந்த காரணத்தால் ஆப்பிரிக்க ஆணிடமிருந்துப் பெற்ற விந்தின் மூலம் குழந்தைப்பேற்றினை அடைகிறாள். இப்போது அவள் யார்? அக்குழந்தையின் நிலம் எது? வாசிக்கையில் எளிய கதையாக தோன்றினாலும் பல ஆழமான கேள்விகளை எழுப்புகிறது.

தொகுப்பில் என்னைக் கவர்ர்ந்த மற்ற கதைகளான ’புவியீர்ப்புக் கட்டணம்’, ’பொற்கொடியும் பார்ப்பாள்’,’49வது அகலக் கோடு’, ’புகைக்கண்ணர்களின் தேசம்’, ’சுவருடன் பேசும் மனிதர்’, ’பத்தாவது கட்டளை’, ’மன்மதன்’, ’மட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள்’, ’மயான பராமரிப்பாளர்’.

மற்ற கதைகளாகிய ’தாழ்ப்பாள்களின் அவசியம்’, ’பத்து நாட்கள், ’லூசியா’, ’உடனே திரும்ப வேண்டும்’, ஆகிவயையும் நன்றாக இருந்தன. தேர்ந்த எழுத்தாளரான அமுவின் கதைகளில் குறையைக் கண்டுபிடிக்க ஏலாது. கதைக்குள்ளேயும் வெளியேயும்
கதை இருக்கும். அனுபவங்களை ரசமாக புனைவாக்கம் செய்வதில் அமு தேர்ந்தவர். அவரைப் போன்ற எழுத்தாளர்களைக் கொண்டாடாமல் வெறும் வாசகராய் இருப்பது குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது.


இத்தொகுப்பை வாசித்த சில மணித்துளிகள் வேறு எதுவும் செய்ய ஏலாமல் திகைத்துக் கிடக்கிறேன். கதைகளைச் சுற்றியே மனம் அலைந்து திரிகிறது. ரசனை மிகுந்த வரிகள், எள்ளல் கலந்த நடை, வாழ்வின் அபத்தங்களையும் அற்புதங்களை அருமையாக சித்தரிக்கபட்டிருக்க ஆகச் சிறந்த வாசிப்பானுபவத்தை ஒவ்வொரு கதையும் அள்ளி அள்ளித் தருகின்றது. கதைகளைக் கொஞ்ச முடியுமா? முடிகிறது. அ.முவின் கதைகளை வாரி எடுத்து உள்ளங்கையில் பத்திரப்படுத்துகிறேன். இதைப் போன்ற ஒரு கதையேனும் எழுதிவிட்டால் போதும் நானும் எழுத்தாளர் ஆகிவிடுவேன்......ஆசைப்படுகிறேன்.

அமெரிக்கக்காரி
ஆசிரியர் :  அ.முத்துலிங்கம்
பதிப்பகம் - காலச்சுவடு
முகவரி - 669 கே.பி. சாலை, நாகர்கோவில் 629 001
தொலைபேசி - 04652 278525
இடுகையிட்டது உமாஷக்தி நேரம் 9:21 pm

நன்றி http://umashakthi.blogspot.com

  


உங்கள் பெயர்: 
உங்கள் மின்னஞ்சல்: 
உங்கள் கருத்து: 
Copyright © 2011 A.Muthulingam. All rights reserved. Powered by Spark Vision Media