A.Muttulingam
முகப்பு | தொடர்புகளுக்கு
புதிய பதிவுகள்
. ஸ்டைல் சிவகா ...
. பொன்னுருக்கு ...
. ஒபாமாவுக்கு ...
. வேட்டைக்காரர ...
. அதுவாகவே வந் ...
. லூனாவை எழுப் ...
. குமர்ப்பிள்ள ...
. என்னைத் திரு ...
. இலக்கணப் பிழ ...
. எழுத்தாளரும் ...
. ஜேசியும் வேச ...
. சிம்மாசனம் ...
. சிவாஜியின் க ...
. வெள்ளிக்கிழம ...
. அடுத்த புதன் ...
. வெள்ளைக்காரன ...
. சின்ன ஏ, பெர ...
. என்னை மறந்து ...
. கிறிஸ்மஸ் தவ ...
. ஸ்டைல் சிவகா ...
இனிமையான யாழிசை (அறிவிப்புகள்)
2010-11-19

அ.முத்துலிங்கத்தின் "வியத்தலும் இலமே"

"வியப்பு தான் மனிதனை வாழ வைக்கிறது.எப்பொழுது ஒருத்தர் வியப்பதை நிறுத்திவிடுகிறாரோ அப்பொழுதே அவர் வாழ்வதை நிறுத்தி விட்டார் என்று தான் நினைக்கின்றேன்"

- அ.முத்துலிங்கம்

இத்தொகுப்பை வாசிக்க தொடங்கிய சில நிமிடங்களில், தமிழின் அபூர்வ நூல் ஒன்றை வாசித்து கொண்டிருக்கின்றேன் என்ற எண்ணம் தோன்றியது.உலகின் தலை சிறந்த எழுத்தாளர்கள் உடனான நேர்காணல்களின் தொகுப்பிது.சமகால உலக இலக்கியத்தை அறிமுகம் செய்து கொண்டே செல்கின்றன ஒவ்வொரு கட்டுரையும்.மொழிபெயர்ப்பல்லாமல் உரையாடல்களின் நேரடி தமிழ் பதிவு. வாசகனாய் மட்டுமே தன்னை முன்னிறுத்தி எழுத்தாளர்களோடு கொண்ட உரையாடல்களை தொகுத்திருக்கும் அ.முவின் இம்முயற்சி ஆச்சர்யம் அளிப்பது.வாசிப்பின் மீதான தீராக்காதல் மட்டுமே காரணமாய் இருக்கவேண்டும்....நிச்சயமாய் அது மட்டுமே!

சிறுகதை - நாவல் வடிவம்,வாசிக்க விரும்பும் நூல்கள்,எழுதும் முறை,பதிப்பாளர்களுடனான உறவு குறித்தான கேள்விகள் பொதுவாக எல்லா நேர்காணலிலும் கேட்கபடுபவையாக இருக்கின்றன.பதில்களில் தான் நமக்கு ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.

"The Devil that danced on the water" நாவலின் அசிரியர் அமினாட்டா போர்னோ தமக்கு பிடித்த நூல் என அகராதியை கூறுகின்றார்."கொலம்பஸ் ஒரு நாட்டை கண்டுபிடித்தது போல ஒவ்வொரு புது வார்த்தையும் எனக்கு பெரிய கண்டுபிடிப்பு தான்" என்கிறார்.இத்தொகுப்பில் பல எழுத்தாளர்களால் பரிந்துரைக்கப்படும் புத்தகம் "An Obedient Father",இதன் ஆசிரியர் புலம் பெயர்ந்த இந்தியர் அகில் ஷர்மா.இந்திய அரசியல் பின்னணியில் நிகழும் இந்நாவல் கொண்டாடப்படுவதற்கு, அதிர்ச்சி மதிப்பீட்டிற்கு மீறிய காரணங்கள் உள்ளன என உணர நாவல் குறித்த சிறு அறிமுகம் உதவுகின்றது. பல்லாயிரம் டாலர் சம்பள வேலையை விடுத்து முழு நேர எழுத்தாளராய் இருப்பவர் இவர்.


இத்தொகுப்பில் எழுத்தாளர்கள் அல்லாத வேறு சில சுவாரஸ்ய மனிதர்களும் உண்டு.பறவையியல் விஞ்ஞானி கிரிஸ் பிலார்டி உடனான சந்திப்பை சொல்லலாம்,அபூர்வ பறவைகள் குறித்தும்,முற்றிலும் அழிந்து போன பறவை இனங்கள் குறித்தும் தொடரும் உரையாடல்கள் ஒரு நிமிடம் நாமும் அவர்களோடு அந்த பறவை கூடத்தில் நின்று கொண்டிருப்பதான பிரம்மிப்பை தருகின்றது.

"ஒரு விஞ்ஞானக் கதை உங்கள் அறிவை தூண்ட முடியும் அல்லது எதிர்பாராத ஒரு மூளை அதிர்ச்சியை தர முடியும்.ஆனால் இலக்கியம் என்று நீங்கள் அழைக்க வேண்டுமானால் அது உணர்வுபூர்வமாக உங்களை தொட வேண்டும்"

-- டேவிட் பெஸ்மொஸ்கிஸ்

திருக்குறளோடு ஆரம்பமாகும் அத்தியாயங்கள் கொண்ட ஆங்கில நூல் இருக்குமென நாம் நினைத்திருக்க சாத்தியங்கள் இல்லை."Cinnamon Gardens" என்னும் அந்நூலை எழுதி இருக்கும் ஷியாம் சுந்தர் சிங்கள எழுத்தாளர். தமிழ் பேசவோ, எழுதவோ தெரியாத இவர் திருக்குறளை தேர்ந்தெடுத்ததற்கு சொல்லும் காரணங்கள் சுவாரஸ்யமானவை.அனிதா தேசாயின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு எழுத தொடங்கியதாய் கூறுகின்றார்.அனிதா தேசாயின் "கடற்புரத்து கிராமம்"மட்டுமே வாசித்திருக்கிறேன்,வருடங்கள் பல கடந்தும் இன்னும் அந்நாவலின் மனிதர்கள் ஹரியும்,பேலாவும்,கமலாவும் மனதில் இருக்கிறார்கள்.

கடிகாரம் அமைதியாய் எண்ணி கொண்டிருக்கின்றது தொகுப்பில் படித்ததில் பிடித்தது என அ.மு பகிர்ந்திருக்கும் நூல் "Teacher Man". ஆசிரியராய் இருந்து ஓய்வு பெற்ற ப்ரான்க் மக்கொர்டின் சுயசரிதை நூல் இது.நகைச்சுவையும்,ஒளிமறைவு அற்ற இவரின் எழுத்து குறித்தும் அந்த கட்டுரையில் வாசித்திருந்தது நினைவில் இருந்தது.வாசித்தே தீரவேண்டிய பட்டியலில் "Teacher man " நூலை சேர்க்க கூடுதலான தகவல்கள் இக்கட்டுரையில் உள்ளது.எழுத்தில் இருக்கும் வசீகரமும்,நகைச்சுவையும் எழுத்தாளனிடம் எதிர்பார்ப்பது தவறு என்பதை சொல்லும் விதமாய் இக்கட்டுரை இவ்வாறாக முடிகின்றது.

"ஒரு எழுத்தை படைத்தவரை சந்திக்காமல் இருப்பதே உத்தமம் என பல சமயங்களில் தோன்றும்.இனிமேல் மக்கோர்டை எங்கு சந்தித்தாலும் அவர் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் செல்வேன்.அவர் புத்தகங்கள் எங்கு கண்டாலும் வாங்குவேன்"

காம இலக்கியம் படைக்கும் மேரி ஆன் ஜான் புலம் பெயர்ந்த சிங்களத்தவர்.தனது டைரி குறிப்புகளை இணையத்தில் தொடர்ந்து பகிர்ந்து வரும் இவரின் நாவல் "Bodies in Motion ", மிக நுணுக்கமான விஷயங்களை தயக்கமின்றி பகிர்ந்து கொள்கின்றார். குழந்தையின் உற்சாகத்தோடு இவர் பேசி இருப்பதாய் தோன்றியது.யாழ்ப்பான அப்பம் குறித்து இருவரும் பேசி கொள்ளும் இடம் அதை உறுதி செய்தது.

கிரேக்க புராணம் ஒன்றை (ஓடிசி) மீள் ஆராய்ச்சி செய்யும் மார்கரெட் அட்வூட்டின் "Penelopiad " நாவல் குறித்த விஸ்தாரமான அறிமுகம் பெனிலோப்பே என்னும் கிரேக்க இலக்கிய பாத்திரத்தின் மீதான மதிப்பை கூட்டுவது.புராணம் ஓடிசியசை பிரதானப்படுத்தி இருந்தாலும்,அவன் மனைவி பெனிலோப்பேவை முன்னிறுத்தி எழுதபட்டிருக்கும் இப்பெண்ணிய நாவலில் வருவதான இவ்வரிகள் என்னை கவர்ந்தன.


"நீ ஒரு தண்ணீர் பெண்.தண்ணீர் எதிர்ப்பதில்லை ,உன்னுடைய கைகளை அதற்குள் விட்டால் தழுவிக்கொள்ளும்.அது சுவர் அல்ல,உன்னை தடுக்காது.தடங்கல் ஏற்பட்டால் தாண்டி போகும். தண்ணீர் பொறுமையானது.ஒரு கல்லை கூட துளைத்துவிடும்"

வெகு சில எழுத்தாளர்கள் குறித்து மட்டுமே பகிர்ந்துள்ளேன்.தமிழ்ப் பேராசிரியர் ஜோர்ஜ் எல் ஹார்ட் உடனான நேர்காணல் குறித்து தனி கட்டுரையே எழுதலாம்.முதல் ஆச்சர்யம் தமிழ் மீதான இவருக்கு உண்டான ஆர்வம்..சங்க இலக்கியம் தொடங்கி சமகால தமிழ் இலக்கிய சூழல் வரை தோய்வின்றி பேசுகின்றார்.செம்மொழி மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்தியது இவர் தான்.

உலக இலக்கியங்கள் குறித்த பேச்சின் ஊடே புதுமைப்பித்தனும், எஸ்.ராவும்,ஜெமோவும் அதை ஒத்த படைப்புகளுக்காய் கோடிட்டு காட்டப்படுவது நிறைவு.ஒவ்வொரு எழுத்தாளரையும் சந்திக்க எடுத்து கொண்ட முயற்சிகள்,எதிர் கொண்ட இடர்பாடுகள்,குறித்து வாசிக்க வாசிக்க வியப்பு மட்டுமே மிஞ்சுகிறது!!அவரவர் படைப்பு சார்ந்த கருத்தாளமிக்க உரையாடல்கள்,எத்தனை தீவிர வாசிப்பு தேவைப்பட்டிருக்கும் இது சாத்தியமாக. குறைந்த பட்சம் ஐந்து வருடங்கள் வாசிப்பதற்கு போதுமான நூல்கள் இத்தொகுப்பில் பரிந்துரைக்கபடுகின்றன.தமிழில் ஆக சிறந்த முயற்சி.தவிர்க்க கூடா வாசிப்பும் கூட.

வெளியீடு - காலச்சுவடு
விலை - 125 ரூபாய்

http://yalisai.blogspot.com/2010/11/blog-post.html
  


உங்கள் பெயர்: 
உங்கள் மின்னஞ்சல்: 
உங்கள் கருத்து: 
Copyright © 2011 A.Muthulingam. All rights reserved. Powered by Spark Vision Media