A.Muttulingam
முகப்பு | தொடர்புகளுக்கு
புதிய பதிவுகள்
. ஸ்டைல் சிவகா ...
. பொன்னுருக்கு ...
. ஒபாமாவுக்கு ...
. வேட்டைக்காரர ...
. அதுவாகவே வந் ...
. லூனாவை எழுப் ...
. குமர்ப்பிள்ள ...
. என்னைத் திரு ...
. இலக்கணப் பிழ ...
. எழுத்தாளரும் ...
. ஜேசியும் வேச ...
. சிம்மாசனம் ...
. சிவாஜியின் க ...
. வெள்ளிக்கிழம ...
. அடுத்த புதன் ...
. வெள்ளைக்காரன ...
. சின்ன ஏ, பெர ...
. என்னை மறந்து ...
. கிறிஸ்மஸ் தவ ...
. ஸ்டைல் சிவகா ...
பிணங்களை வெளியே கொண்டுவாருங்கள் (கட்டுரைகள்)
2009-05-29

17ம் நூற்றாண்டு இங்கிலாந்தில் இரண்டாவது சார்ல்ஸ் மன்னரின்
ஆட்சி நடந்தபோது பிளேக் எனும் கொடிய கொள்ளை நோய்
பரவியது. இது பயங்கரமான தொற்று வியாதி. மக்கள் நூற்றுக்
கணக்கில் தினமும் செத்து விழுந்தனர். செல்வந்தர்கள் ஊரை
விட்டு, நாட்டை விட்டு  தப்பி ஓடினர். அரசன்கூட ஒரு
தருணத்தில் வேறு ஊருக்கு தன் அரண்மனையை மாற்றினான்.
அவன் கட்டளைப்படி தினம் அரச சேவகர்கள் கைவண்டிகளை
தள்ளிக்கொண்டு தெருத் தெருவாகச் சென்று கூவுவார்கள், \'உங்கள்
பிணங்களை வெளியே கொண்டுவாருங்கள்\' \'உங்கள் பிணங்களை
வெளியே கொண்டுவாருங்கள்.\' சிறுவயதில் சரித்திர மாணவனாக
இதைப் படித்து நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.  மீண்டும் என்
வாழ்நாளில் இப்படி நிகழக்கூடும் என்பதை நான் நினைத்துக்கூட
பார்த்ததில்லை.
 
ஈழத்துப் போரிலே செத்துமடியும் நூற்றுக் கணக்கான அப்பாவி
மக்களைப் பற்றிய செய்திகளும், படத்துணுக்குகளும் தினம் தினம்
இணையத் தளங்களை நிரப்புகின்றன. அவற்றை பார்க்கும் எந்த
மனமும் பதறும். ஒரு குழந்தையின் தலை இரண்டாகப் பிளந்ததை
படம் பிடித்து போட்டிருக்கிறார்கள். இந்தப் பிஞ்சுக் குழந்தை
என்ன பாவம் செய்தது. அது தமிழ் குழந்தை என்று
சொல்கிறார்கள். எப்படி சொல்லமுடியும்? அது இன்னும் தமிழ் பேச
ஆரம்பிக்கவில்லையே? அதற்கு சிரிக்கவும் அழவும்தான் தெரியும்.
அதிலும் அந்தக் குழந்தை சிரிப்பை மறந்து வெகு
நாட்களாகிவிட்டது.
 
ஐ.நா சாட்டிலைட் எடுத்த படத்தில் பாதுகாப்பு வலயத்துக்குள்
குண்டுகள் விழுந்து வெடிப்பது பதிவாகியிருக்கிறது. குற்றம்
செய்தவர்களை அடைத்துவைக்கும் இடம் சிறை. குற்றம்
செய்யாதவர்களை அடைத்துவைப்பதற்கு பெயர் internment camp.
இலங்கை அரசு சமீபத்தில் உண்டாக்கிய இப்படியான முகாம்களில்
சிறை வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு போதிய உணவு இல்லை;
மருந்தும் இல்லை. பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு
ஆளாக்கப்படுகிறார்கள். சிறுவர்கள் பிணங்களுடன்
உறங்குகிறார்கள். அவை பிணங்கள் என்பது அவர்களுக்கு
தெரியாது. இவை எல்லாவற்றையும் இங்கிலாந்தின் சானல் நியூஸ் 4
காணொளிப் படங்களாக காட்டியிருக்கிறது.
 
இலங்கை அரசு போரை நடத்துகிறது என்று சொல்கிறார்கள்.
பொஸ்டன் குளோப் பத்திரிகை இந்த யுத்தத்தை \'நாலு
சகோதரர்களின் யுத்தம்\' என்று வர்ணிக்கிறது. உலகில்
எங்கேயாவது ஓர் அரசாங்கத்தில் நாலு சகோதரர்கள்
கூட்டுச்சேர்ந்து இன அழிப்பு போர் ஒன்றை நடத்தியதாக சரித்திரம்
இருக்கிறதா? யுத்தத்தில் அவலப்படும் இந்த மக்கள் என்ன
கேட்கிறார்கள்? எகிப்திய அரசன் பார்வோனிடம் மோசே
யாசித்ததுபோல \'எங்களை விட்டுவிடுங்கள்\' என்று  கேட்கிறார்கள். ஆனால் அது அவர்கள் காதுகளில் ஏறவில்லை. மாறாக அழிப்பு
வேலை நாளுக்கு நாள் உக்கிரமடைகிறது. இந்த
அக்கிரமக்காரர்கள் அவர்கள் பாவத்தை எங்கே போய்
கழுவுவார்கள்.
 
சேக்ஸ்பியர் எழுதிய மாக்பெத் நாடகத்தில் டங்கன் என்ற
அரசனை மாக்பெத் கொலைசெய்வான். கத்தியில் வழியும்
ரத்தத்தை கழுவமுடியாமல் திகைத்து நிற்கும் மாக்பெத்
\'நெப்டியூனின் கடல் தண்ணீர் முழுக்க என் ரத்தக் கறைகளைக்
கழுவப் போதாதே\' என்று  அரற்றுவான். இந்தச் சகோதரர்களின்
பாவத்தை கழுவ இந்து சமுத்திரத்தின் தண்ணீர்  போதுமானதாக
இருக்குமா என்பது தெரியவில்லை.
 
இப்பொழுது எங்களிடையில் ஒரு பாரதியார் இல்லையே என்ற
துக்கம் எனக்கு அடிக்கடி வருகிறது. எங்கோ பீஜித்தீவில் கரும்புத்
தோட்டத்தில் சிக்குண்டு மாடுகள் போல உழைத்த தமிழ்
உயிர்களுக்காக அவர் அன்று பாடி வைத்தது இன்றைய ஈழத்
தமிழர்களுக்கு பாடியது போல அல்லவா இருக்கிறது.
 
நாட்டை நினைப்பாரோ - எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்
கேட்டிருப்பாய் காற்றே! துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல்
மீட்டும் உரையாயோ - அவர்
விம்மி யழவும் திறங்கெட்டுப் போயினர்.
 
\'விம்மி யழவும் திறங்கெட்டுப் போயினர்\' என்ற வரிகள் எவ்வளவு
நிசமானவை. ஒரு தாய் மரத்தின் அடியில் செத்துப்போன
குழந்தையை மடியில் போட்டுக்கொண்டு வெறித்த பார்வையோடு
உட்கார்ந்திருக்கிறாள். அந்தப் படத்தில் அவள் கண்களில் கண்ணீர்
வற்றிவிட்டது தெரிகிறது.
 
பிரிட்டிஷ் ராச்சியத்தை சூரியன் மறையாத ராச்சியம் என்று
வர்ணித்தார்கள்.  இருபத்தி நாலு மணிநேரமும் அவர்கள் ஆண்ட
ஏதோ ஒரு நாட்டில் சூரியன் பிரகாசித்துக்கொண்டிருந்தான்.
அதனால்தான்  சூரியன் மறையாத ராச்சியம் என்று சொன்னார்கள்.
இன்று உலகத்தின் பல பாகங்களிலும் புலம் பெயர்ந்த தமிழர்கள்
வாழ்கிறார்கள். அவர்கள் புலத்தில்  சூரியன் என்றுமே
மறைவதில்லை.  புலம் பெயர்ந்த பத்து லட்சம் தமிழ் மக்கள்
எங்கெங்கே சிதறிக்கிடந்தாலும் அவர்கள் இருப்பையோ,
அடையாளத்தையோ எவரும் மறுக்கமுடியாது. சமுத்திரங்கள்
பிரித்தாலும் அவர்கள் ஒரு மக்கள். உலகத்தைச் சுற்றி அவர்கள் எழுப்பும் ஒருமித்த எதிர்ப்புக் குரல் 24 மணி நேரமும் ஒலிக்கிறது.
இதுவும் புதுச் சரித்திரம். ஆனால் தொடரும் இன ஒழிப்பை
உலகம் கண்டுகொள்ள  மறுக்கிறது.
 
நிறைய ஒளிப்படத் துண்டுகள் எனக்கு மின்னஞ்சலில்  வருகின்றன.
அவற்றில் பலவற்றை கல்நெஞ்சக்காரர்கூட பார்க்கமுடியாது.
சிலதை திறந்து பார்த்தால் அன்று முழுக்க ஒன்றுமே செய்யத்
தோன்றாது. சமீபத்தில் ஒன்றை  பார்தேன். \'பிணங்கள் எங்கே,
பிணங்கள் எங்கே\' என்ற குரல் மட்டும் கேட்கிறது. பிணத்தை
காட்டவில்லை. அவர்கள் பிணம் சேகரிப்பவர்கள் என்று பின்னர்
தெரிந்துகொண்டேன்.
 
ஈழத்துப் போரில் சேரும் பிணத்தின் தொகை நாளாந்தம் 
அதிகரிக்க அவற்றை அகற்றுவதற்கு வேறு பல உபாயங்களையும்
தந்திரங்களையும் புகுத்தவேண்டியுள்ளது. வீசிய நச்சுக் குண்டுகளில்
சில பிணங்கள்  ஏற்கனவே கருகி விட்டதால் எரிக்கும் வேலை
இல்லாமல் போய்விட்டது. சில பிணங்கள் கவனிப்பாரற்றுக்
கிடக்கின்றன. இன்னும் சில பிணங்களை விட்டுவிட்டு உற்றார்
உறவினர் ஓடிவிடுகிறார்கள். எதிர்வரும் காலங்களில் அரசு
அறிவித்தல் ஒன்று இப்படி வந்தாலும் நாங்கள்
ஆச்சரியப்படமுடியாது.

 

   \'உங்கள் பிணங்களை காலை எட்டு மணியிலிருந்து பத்து
மணிக்குள் சேகரத்துக்கு தயாராக வைத்திருங்கள். தவறுவோர்
கடுமையான தண்டனைக்குள்ளாக்கப் படுவார்கள்.\'
 
சமீபத்தில் வெளிவந்த புள்ளிவிபரக் கணக்கு கடந்த ஐந்து
மாதங்களில் போரில் இறந்தவர் தொகை 7000 என்று கூறுகிறது.
இதே  வேகத்துடனும், செயல் திறனுடனும் அரசு இன அழிப்பை
தொடர்ந்தால் இன்னும் சில மாதங்களில் பிணங்கள் எல்லாம்
முடிந்துவிடும். பீரங்கிகள் ஓய்ந்து போரும் நின்றுவிடும். முழுத்
தீர்வு என்பது இதுதான்.
 
அப்பொழுது இலங்கை அரசு ஆறுதலான ஒரு பெரிய
பெருமூச்சை விடலாம். என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக
வேடிக்கை பார்த்து  வந்த உலக நாடுகளும் பெருமூச்சு விடும்.
இந்தியாவின் பெருமூச்சு மிக நீண்டதாக இருக்கும்.

 


உங்கள் பெயர்: 
உங்கள் மின்னஞ்சல்: 
உங்கள் கருத்து: 
Copyright © 2011 A.Muthulingam. All rights reserved. Powered by Spark Vision Media