மூன்றாம் சிலுவை

 

 உமா வரதராஜன் எழுதிய 'மூன்றாம் சிலுவை' நாவல் வெளியான சில நாட்களிலேயே அதை நான் வாங்கிப் படித்துவிட்டேன். ஏனென்றால் அவர் எனக்கு பிடித்தமான எழுத்தாளர். பல வருடங்களுக்கு முன்பிருந்தே அவருடைய எழுத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். ஆகவே  புத்தகத்துக்கு விமர்சனம் எழுதவேண்டும் என்று நினைத்து அதை படிக்கவில்லை. அந்த வேலையை விமர்சகர்களுக்கே விட்டுவிடுகிறேன். சொமர்செட் மோம் சொல்வார் விமர்சகர்கள் உழவு மாட்டு இலையான்கள்போல என்று. அவை மாட்டை சுற்றி தொந்திரவு செய்துகொண்டே இருக்கும், உழவு மாட்டை உழ விடவேண்டும். எழுத்தாளர்களை எழுத விடவேண்டும். புத்தகம் என்னிடத்தில் ஏற்படுத்திய உணர்வலைகள் பற்றி எழுதுவதுதான் என்னுடைய நோக்கம்.

 

இது ஒரு சின்ன நாவல். முன்னுரையை கழித்தால் 110 பக்கங்கள்தான். அது ஒன்றும் பிரச்சினை இல்லை. நாவல் என்றால் இத்தனை பக்கங்கள் இருக்கவேண்டும் என்ற விதியெல்லாம் கிடையாது. யசுனாரி கவபட்டா எழுதிய The house of sleeping beauties  130 பக்கம் வரும். அதற்கு நோபல் பரிசு கிடைத்தது. ஏர்னெஸ்ட் ஹெமிங்வேயுடைய The old man and the sea நாவலும் அப்படித்தான், 127 பக்கம். அதற்கும் நோபல் பரிசு கிடைத்தது. நாவல் என்றால் அதில் ஆழமும் அகலமும் நுண்ணுர்வும் வெளிப்படவேண்டும். அதுதான் முக்கியம். ஒற்றை மாட்டு வண்டியில் ஓர் ஒடுக்கமான ஒழுங்கையில் பயணம் செய்வதுபோலத்தான் இந்த நாவல். ஒரு திருப்பமோ திடுக்கிடலோ ஆச்சரியமோ இல்லாமல் நேராகச் சொல்லப்பட்ட கதை. அதன் முழுமூச்சு சுவாரஸ்யம்தான்.

கிராமம் ஒன்றில் ஒரு கம்பனி அதிகாரி. அவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிமார், அத்துடன் மூன்று மகள்கள். அந்தக் கம்பனியில் வேலை பார்ப்பதற்கு ஓர் இளம்பெண் வருகிறாள். அதிகாரியிலும் பார்க்க 22 வயது குறைவு. ஒல்லியாக, ஏழைக் குடும்பத்திலிருந்து வந்த பாவப்பட்ட பெண்ணாக இருக்கிறாள். அவள் வந்தபிறகு அலுவலகத்தில் மாற்றம் பிறக்கிறது. கெட்டித்தனமாகவும் அனுசரணையோடும் வேலைபார்க்கிறாள். அதிகாரி அவளிடம் ஒருவிதமான நெருக்கத்தை உணர்கிறார். மெல்ல மெல்ல அவர்கள் ரகஸ்யமாக கையை பிடிக்கிறார்கள், தழுவுகிறார்கள், முத்தமிடுகிறார்கள். ஒருநாள் அதிகாரி கேட்கிறார் 'எப்போது உம்மை முழுசாக எனக்கு தரப்போகிறீர்.' அவள் சொல்லுகிறாள் 'எப்பொழுதாவது மாட்டேன் என்று சொன்னேனா.' அப்படி ஆரம்பிக்கிறது அவர்களுடைய அந்தரங்கக் காதல்.

இந்த நாவலில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு தருணங்களில் ஐந்து தடவை அவர்கள் உடலுறவு கொள்வது வர்ணிக்கப்படுகிறது.  அவளுடைய அன்பு குறையும் சமயங்களில் எல்லாம் அவர் ஏதாவது பரிசுப்பொருள் வாங்கி கொடுப்பார். பிரிட்ஜ் வாங்கிக் கொடுக்கிறார். பணமாகக் கொடுக்கிறார். தங்க வளையல்கள், நெக்லஸ் என்று கொடுத்து காதல் கைநழுவிப் போகாமல் பாதுகாத்துக் கொள்கிறார். இந்த உறவு எட்டு வருடம் நீடித்து பின்னர் கசக்கத் தொடங்குகிறது. அவளுக்கு ஒரு வைப்பாட்டியின் நிலைதான். அவள் சொந்தமாகச் சிந்திக்க தொடங்கியபோது தன்னுடைய நிலைமையை எண்ணி தன்னையே வெறுக்கத் தொடங்குகிறாள். 'என்னை என்ன செய்யப்போகிறீர்கள்' என்று அவரிடம் அடிக்கடி கேட்பாள். அவரிடம் தீர்வு இல்லை. இறுதியாக அவள் அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் ரகஸ்யமாக லண்டனில் இருக்கும் ஒருவரை மணப்பதற்காக பிரிகிறாள். இதுதான் கதை.

'என்னை என்ன செய்யப்போகிறீர்கள்' என்று அவள் அடிக்கடி கேட்டதுபோல நாங்கள் இந்த நாவலை என்ன செய்யவேண்டும். இதன் மொழிக்காகவும் நடைக்காகவும் நுண்ணிய பார்வைக்காகவும் படிக்கலாம். புறநானூறில் 'கைவேலினால் நெற்றி வியர்வையை வழித்துக்கொண்டு நிற்கும் அரசனே' என்று ஒரு வரி வரும். உடனேயே ஒரு படிமம் எங்களுக்கு கிடைத்துவிடுகிறது. அதுபோல நுட்பமான பல காட்சிப் படிமங்கள் நாவலில் வருகின்றன. ஒருமுறை இவர்கள் உடலுறவு கொள்ளும்போது பக்கத்து மைதானத்தில் கைப்பந்தாட்டம் நடக்கிறது. பெரிய ஆரவாரமும் கைத்தட்டலும் மகிழ்ச்சி கூப்பாடும் கேட்கிறது. அது எல்லாம் தங்களுடைய உடலுறவு வெற்றிக்கே என்று காதலர்கள் நினைத்து மகிழ்ந்து கொள்கிறார்கள். அந்தப் பெண் ஒருநாள் தாயாரை ஆஸ்பத்திரியில் பார்த்துவிட்டு வருவாள். காதலன் அவளுக்காகக் காத்திருந்து அவளை தழுவிவிட்டு திரும்பும் போது அவனிடத்திலும் ஆஸ்பத்திரி மணம் எழும்புகிறது. இன்னொரு இடத்தில் 'இனிய கனியை புசிக்க  தோலை அகற்றுவதுபோல' அவர்கள் ஆடைகளை அகற்றினார்கள்' என்று வரும்.  இப்படி நிறைய இடங்களில் வெளிப்படும் நுண்ணிய அவதானிப்புகளால் வாசிப்பு இனிய அனுபவமாக மாறிவிடுகிறது.

பெண்விடுதலை பற்றி யோசிப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் அவ்வளவு சம்மதமாயிராது. ஒரு பெண்ணை விலைமகள்போல மதித்து பணமும் பொருளும் கொடுத்து அவள் உடலை அனுபவிப்பதுதான் திரும்ப திரும்ப கிடைக்கும் காட்சி. அவள் விடுதலை கேட்கும்போதும்கூட அதைக் கொடுக்காமல் இந்த தொடர்பை நீடிக்கவே அதிகாரி விரும்புகிறார். பெண்ணுடைய மேலாளர் என்ற வகையில் இதை அதிகார துஷ்பிரயோகம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். உண்மையான காதல் என்ற எண்ணம் நாவலை வாசிக்கும்போது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்படவே இல்லை.

காதலியின் தாயார் ஒருசில பக்கங்களில் வந்துபோனாலும் அவர் முக்கியமான, சுவாரஸ்யமான பாத்திரம். அவர்  நல்ல பெண்தான், அவர் வருவதும் போவதும் தெரியாது. துரதிர்ஷ்டம் என்னவென்றால் அவர் முகத்தில் ஒரு வாய் இருந்தது. சாப்பாட்டுக்குக்கூட அவர் வாய் திறக்காமல் இருக்கலாம் ஆனால் ஒரு பேச்சுக்கு பதில் பேச்சு பேசாமல் அவரால் இருக்கமுடியாது. வெடி மருந்து திரியை ஓர் இடத்தில் கொளுத்தினால் அது வேறு இடத்தில் வெடிப்பதுபோல அவர் இங்கே ஒன்று சொன்னால் அதன் விளைவு வேறு எங்கோ இருக்கும். காதலியில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு இவர் முக்கிய காரணியாக இருக்கிறார்.

இந்த நாவலை ஆசிரியர் ஆஸ்பத்திரியில் இருந்தபோது கையினால் எழுதியதாக அறிகிறேன். சமீபத்தில் அவருடன் தொலைபேசியில் பேசியபோது நான் அவரிடம்  'எதற்காக நாவல் ஒருபக்கம் சார்ந்து நிற்கிறது, அந்தப் பெண்ணின் தரப்பையும் கொஞ்சம் சொல்லியிருந்தால்  நாவல் பூரணமாக இருந்திருக்கும்' என்றேன். அவர் சொன்னார், 'செய்திருக்கலாம்தான், ஆனால் நான் இதை எழுதியது இதய அறுவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி கட்டிலில் படுத்துக் கிடந்தபோது. நாவல் முடிய முன்னர் நான் முடிந்துவிடுவேனோ என்ற பயம் எனக்குள் இருந்தபடியால் வேகவேகமாக எழுதவேண்டி நேர்ந்தது. கடிகாரத்துக்கு எதிராக எழுதியபோது எத்தனையோ விவரங்கள் விடுபட்டுவிட்டன.' இதைக் கேட்டபோது என் மனம் துணுக்குற்றது.  எழுத்தாளன் ஒரு படைப்பை தருவதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும், எவ்வளவெல்லாம் பாடுபடவேண்டியிருக்கிறது. 

மூன்றாம் சிலுவை என்பது தலைப்பு. முதலாவது மனைவி ஒரு சிலுவை. இரண்டாவது மனைவி ஒரு சிலுவை. மூன்றாவதாக காதலிக்க கிடைத்த பெண்தான் மூன்றாவது சிலுவை. ஆனால் அந்தப் பெண் ஒரு நாவல் எழுதினால் அவளும் மூன்றாம் சிலுவை என்றே தலைப்பு வைக்கலாம். அவளை விட்டுவிட்டு ஓடிய முதல் காதலன் முதலாம் சிலுவை. அதிகாரி இரண்டாவது சிலுவை. மணக்கப்போகும் கணவன் மூன்றாவது சிலுவை.

இந்த நாவலை படிக்கும்போது எங்கள் பழைய இலக்கியங்களில் சொல்லப்படும் பெருந்திணை அதாவது பொருந்தாக் காதல், நினைவுக்கு வருகிறது. வயது வித்தியாசத்தினால் இது பொருந்தாக் காதல் ஆகவில்லை.  பணத்தினால் பெற்ற உடலின்பத்தை காதல் என்று நினைத்த அதிகாரியின் அறியாமை வாசகர் மனதில் கொஞ்சம் ஈரத்தை உண்டாக்கும். கையிலே எடுத்த கணம் தொடங்கி கீழே வைக்காமல் படிக்க வைக்கும் நாவல்.  கதையை சொல்லிய முறையும் மொழியழகும் நாவலை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும். படிக்கும்போது இன்பம் தருவதுதானே ஒரு நாவலின் வேலை. அதைத் தராவிட்டால் அதை யார் படிக்கப் போகிறார்கள்.

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta