இன்று 15 ஏப்ரல் 2010, தொலைக்காட்சியில் NBC நடத்தும் Today Show வைப் பார்த்தேன். உலகத்திலே எட்டே எட்டு வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள் ( Northern White Rhinos) உள்ளன. மீதம் எல்லாம் இறந்துவிட்டன. இதிலே நாலு ஏற்கனவே மிருகக்காட்சிசாலைகளில் வாழ்கின்றன. மீதி நான்கு காண்டாமிருகங்களை செக் குடியரசு மிருகக்காட்சிசாலையிலிருந்து கென்யாவுக்கு கொண்டு சென்று அங்கே திறந்த வெளிப்பரப்பில் அவற்றை சுதந்திரமாக உலவ விட்டிருக்கின்றனர்.
காட்டிலிருந்து மிருகங்களை பிடித்து கூண்டில் அடைத்துவைப்பார்கள். மிருகங்கள் புதுவாழ்க்கைக்கு பழகிக்கொள்ளும். ஆனால் கூண்டில் வளர்ந்த மிருகங்களை காட்டில் விடுவது அபூர்வமாக நிகழும் ஒன்று. மிருகங்கள் மறுபடியும் காட்டு வாழ்க்கையை பழகவேண்டும். காண்டாமிருகங்களுக்கு எதிரிகள் இல்லை. மனிதன் மட்டுமே எதிரி. அவற்றின் கொம்புக்காக ஆயிரம் வருடங்களாக அழித்து வருபவன். உணவை இவைகளாகவே தேடிக்கொள்ளும். ஆனால் இயற்கை அந்நியமாகிவிட்டது. மழையும் மின்னலும் இடிமுழக்கமும் பழக்கமில்லை. மெல்ல மெல்ல இயற்கை வாழ்க்கைக்கு பரிச்சயமாகி திறந்து புல்வெளியில் வாழ பழகிவருகின்றன. விரைவில் இனப்பெருக்கம் செய்யும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள். இனப்பெருக்கம் நிகழாவிட்டால் அவை அழிந்துபோகும். இதுவே அவற்றின் உயிர்ச்சங்கிலியின் கடைசிக் கண்ணி.
காண்டாமிருகங்கள் புது இடப்பெயர்வில் பல்கிப்பெருகட்டும். எங்கள் வாழ்த்துக்கள். அவைகளை வீடியோ படம் பிடித்தவர் எனக்கு தெரிந்தவர். அதனால் இதை நான் இங்கே இடுகிறேன். இன்னொரு காரணமும் உண்டு. நீங்களே யூகிக்கலாம்.