ஆகச் சிறந்த வாசகி

 

நேற்று, சனிக்கிழமை, யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் நடத்தும் இரவு விருந்துக்கு அழைப்பு வந்தது. நானும் பழைய மாணவன்தான் ஆகவே கட்டாயம் போகவேண்டும். இந்தப் பழைய மாணவர்களில் ஒன்றிரண்டு பேர் என் வாசகர்கள். இப்படியான சந்திப்பின்போது அவர்கள் என்னுடைய எழுத்தை பற்றி ஏதாவது சொல்வார்கள். சிறுவயதில் என்னோடு படித்த ஒருவர் தொடர்ந்து படிப்பதும், அபிப்பிராயம் சொல்வதும் மனதுக்கு உவகை தரும் அனுபவம். எனவே தவறவிடக்கூடாது.

 

ஆனால் துக்கமும் இருக்கும். வருடா வருடம் நடக்கும் இந்தச் சந்திப்பில் என் நண்பர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. இம்முறை யாராவது வருவார்களா அல்லது ஒருவருமே வரமாட்டார்களா என்ற மெல்லிய பதற்றம் தொற்றியது. நான் வெளியே காட்டவில்லை.

விருந்து சிறப்பாக தொடங்கியது. அதில் பேச்சாளர் ஒருவர் சொன்னது பழைய ஞாபகங்களை கிளப்பியது. அவர் 100 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணக் கல்லூரியில் கடமையாற்றிய வெள்ளைக்கார அதிபர் அருள்திரு ஜோன் பிக்னெல் பற்றி சொன்னார். இவருடைய ஆட்சியில்தான் ரவீந்திரநாத் தாகூர்  எங்கள் கல்லூரிக்கு வருகை தந்திருந்தார். எங்கள் கல்லூரி அதிபரை கொழும்பு அரசி மாளிகைக்கு அப்போதைய கவர்னர் ஜெனரல் இரவு விருந்துக்கு அழைத்ததும் அந்தக் காலகட்டத்தில்தான். அங்கே அவர் ஆற்றிய இரவுப் போசன விருந்து உரை (after dinner speech) புகழ் பெற்றது. பலமுறை மற்றவர்களால் திருப்பி சொல்லப்பட்டது. விருந்தில் அவர் சொன்ன கதை இதுதான்.

ரோமாபுரியை ஆண்ட ஒரு மன்னனுக்கு இறக்கும்வரை போராடும் அடிமை மல்லர்களின் (gladiators) வீரசாகசங்களை பார்ப்பதில் விருப்பம் அதிகம். அடிக்கடி காட்சியரங்கில் பொதுசன பார்வைக்கு சிங்கங்களையும் மல்லர்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பான். அடிமைகள் கடைசித் துளி உயிர் இருக்கும்வரை சண்டையிடுவதும், சிங்கங்கள் இறுதியில் வெல்வதும் ஒவ்வொரு முறையும் தவறாமல் நடக்கும். அரசன் காட்சியை களித்துப் பார்ப்பான்.

ஒருமுறை உடம்பு ஒட்டி மெலிந்த  அடிமையை சிங்கத்துடன் மோத சேவகர்கள் இழுத்து வந்தார்கள். எதிர்ப்பே இல்லாமல் சிங்கம் அடிமையை ஒரே அடியில் கொன்றுவிடும் என்று சபை எதிர்பார்த்தது. ஆனால் நிலைமை வேறுவிதமாக மாறியது. சிங்கம் பாய்ந்து வர அடிமை அதனிடம் ஓடிச்சென்று  அதன் காதுக்குள் ஏதோ சொன்னான். அவ்வளவுதான், சிங்கம் பயந்து ஒடுங்கிப்போய் கூண்டுக்குள் புகுந்துகொண்டது. எவ்வளவு முயன்றும் திரும்ப வெளியே வரவில்லை.

மன்னனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சிங்கத்திடம் அடிமை என்ன சொன்னான் என்று கேட்டால் அவன் பதில் கூற மறுத்துவிட்டான். அடிமையை கொல்லலாம் ஆனால் ரகஸ்யமும் அவனுடன் மறைந்துவிடும். அரசனுக்கு திண்டாட்டம். அரசன் அடிமையை விடுதலை செய்ததும் அவன் அந்த ரகஸ்யத்தை சொன்னான். 'சிங்கமே, நீ என்னை விருந்தாக உண்பதில் எனக்கு ஆட்சேபமே இல்லை. ஆனால் விருந்துக்கு பிறகு அரச சபை வழக்கப்படி நீ இரவுப் போசன உரை ஒன்று ஆற்றவேண்டும்.' சிங்கம் அடித்துபிடித்து ஓடியதன் காரணம் அப்போது அரசனுக்கு புரிந்தது என்பதுதான் கதை.

இரவுப் போசனம் நடக்கும்போதே என் கண்கள் நண்பர்களை தேடிக்கொண்டிருந்தது. ஒருவரும் கண்ணில் படவில்லை. மனம் துணுக்கென்றது. தூரத்து மேசையில் ஒருவர் என் நண்பரின் சாடையில் தெரிந்தார். ஆனால் அது அவரில்லை. அவர் நான் எழுதுவதை தொடர்ந்து படிப்பவர். படிக்கும் காலத்தில் நிறைய வாக்குவாதங்கள் செய்திருக்கிறோம். அவர் செய்யும் தர்க்கம் சுழல்படிக்கட்டில் இறங்குவதுபோல, நேராக ஒன்றையும் சொல்லாமல் சுழன்று சுழன்று முடிவு நிலையை வந்தடைவார். 'உங்கள் எழுத்து இன்னும் அதே நிலைதான்; முழுமையடையவில்லை' என்பார். 'புத்தருக்குகூட ஞானம் அடைய 40 நாள் தேவைப்பட்டிருக்கிறது. முதல் 39 நாளும் வேஸ்ட் என்று சொல்லமுடியுமா?' என்பேன். ஒவ்வொரு வருடமும் இந்த சம்பாசணை இடம்பெறும். அந்த நண்பருக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை.

எதிர்பாராதவிதமாக முன்பின் தெரியாத ஒருவர் என்னை நோக்கி வந்தார். கைகளை பின்னால் கட்டிக்கொண்டு அவர் நடந்துவந்த தோரணையில் ஆசிரியர் போல தென்பட்டார். நான் படித்த அதே கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியவர் என்று சொன்னார். எனக்கு அவரை தெரியவில்லை; அவருக்கும் என்னை தெரியவில்லை. 'நீங்கள் அ.முத்துலிங்கமா?' என்று கேட்டார். ஒருவரும் முதல் எழுத்தையும் சேர்த்து என் பெயரை சொல்வதில்லை. நான் ஒரு அடி பின்னால் நகர்ந்து 'ஓம்' என்றேன். 'நீங்கள் உங்கள் ஆசிரியர்களைப் பற்றி எழுதியிருந்தீர்கள். அவ்வளவு மோசமானவர்களா? நான் உங்கள் கட்டுரையை படித்தேன்' என்றார்.  'என்னை மாணவனாக அடையும் சங்கடத்திலிருந்து நீங்கள் தப்பிவிட்டீர்கள்' என்றேன்.

'உங்கள் வாசகி ஒருவர் உங்களை சந்திப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார். அவரை கட்டாயம் நீங்கள் பார்க்கவேண்டும்' என்றார். ஒரு பதினாறு வயதுப் பெண்ணை கற்பனை செய்துகொண்டேன். 17 வயதாகக்கூட இருக்கலாம். என்னை அழைத்துச் சென்று அந்தப் பெண்ணுக்கு அறிமுகப் படுத்தினார். என்னிலும் பார்க்க பத்து வயதுகூடிய பெண் அவர். வெள்ளைவெளேரென்று இருந்தார். அவர் தலைமுடியும் அதே நிறம். ஒரு காலத்தில் ஆட்களை மயக்கும் அழகான யுவதியாக இருந்திருப்பார். நீல பிளவுசும், நீலக்கரை வைத்த சேலையும் அணிந்திருந்தார். சிரத்தையெடுத்து செய்த உடையலங்காரம். அவர் பிளேட்டை சுற்றி உணவு சிந்தியிருந்தது. உணவை இன்னும் முடிக்கவில்லை. அவருடைய கை நேராக உணவுக்கு போகவில்லை. கையினால் பிளேட்டின் விளிம்பை கண்டுபிடித்து பின்னர் உணவை எடுத்து வாயில் வைத்தார். சாப்பிட்டு முடிந்த பின்னும் அவர் தாடை அசைந்துகொண்டிருந்தது.

அந்தப் பெண் நான் படித்த அதே கல்லூரியில் படித்தவராம். 'நீங்கள் படித்த நாட்களில் என்னைக் கண்டிருக்கிறீர்களா?' என்று கேட்டார். 'சின்ன வயதிலும் அதற்கு பின்னர் வந்த நாட்களிலும் இன்றுவரை நான் பெண்களை ஏறெடுத்தும் பார்த்ததில்லை' என்றேன். அவர் சிரித்தார். நான் சிரித்தேன். மறுபடியும் சிரித்தார். மறுபடியும் சிரித்தேன். 'உங்களுடைய எல்லா புத்தகங்களும் என்னட்டை இருக்கு. உங்கள் அபிமான வாசகி நான். நீங்கள் என்ன எழுதினாலும் படிப்பேன்.' அடுத்த வசனத்துக்காக நான் காத்திருந்தேன். 'எல்லாம் மறந்து போச்சுது.'

கனடா போன்ற ஒரு நாட்டில், ஒரு விருந்தில், ஓர் இரவில் இரண்டு வாசகர்களை சந்திப்பது என்பது இறைவனின் நற்கருணை. இந்தப் பேறு சாதாரணமானது அல்ல. இருவரும் என்னிலும் வயது கூடியவர்கள் என்றால் என்ன? ஒரு பிரச்சினையும் இல்லை. நேற்று நான் கடைசியாக சந்தித்த பெண்தான் என்னுடைய ஆகச் சிறந்த வாசகி என்று நினைக்கிறேன்.

 

  

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta