ரொறொன்ரோவில் உள்ள பிரபலமான தமிழ் புத்தகக் கடையில் நுழைந்து புத்தகங்களை வாங்கிக்கொண்டு திரும்பும்போது கடைக்காரர் என்னைப் பார்த்து 'உங்களுக்கு ஒரு டிவிடி இருக்கிறது' என்றார். '1960 களில் கலைஞர் கதை வசனம் எழுதி, சமீபத்தில் வெளிவந்த 'உளியின் ஓசை' திரைப்படத்தின் டிவிடி. இந்தப் படத்தில் வரும் ஏழு பாடல்களுக்கும் இளையராஜா ஒரே நாளில் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.' அவர் இசைபற்றி சொன்னாரே ஒழிய படத்தைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை. சரியென்று காசைக் கொடுத்து டிவிடியை வாங்கிக் கொண்டு திரும்பினேன்.
கனடாவில் தமிழ் டிவிடிக்கள் பார்ப்பதில் ஓர் பத்து உண்டு. முதலில் போட்டுப் பார்க்கும்போது நன்றாக ஓடும். இரண்டாவது தடவை அங்கங்கே நின்று இளைப்பாறும். மூன்றாவது தடவை சதுரங்கள் தோன்றித் தோன்றி மறையும். படம் நகரும் ஒலி வராது; ஒலி வரும் படம் நகராது. கொடுத்த காசுக்கு பெறுமதியானதை வாடிக்கையாளர் பார்த்துவிட்டார் என்றதும் அது நின்றுவிடும். தொழில் நுட்பத்தின் உச்சத்தை இந்த டிவிடி வர்த்தகர்கள் தொட்டிருந்தார்கள்.
படத்தைப் பற்றி நான் இங்கே ஒன்றும் எழுதமுடியாது. ஆனால் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்து முத்தாக இருந்தன. பின்னணி வாத்தியங்கள் பாடல்களை மூழ்கடிக்காமல் பின்னுக்கே நின்றன. பாடல்களின் வார்த்தைகள் காதில் விழுந்து எத்தனை வருடங்களாகிவிட்டன. அந்தப் படத்தில் சிற்பி சிலை செதுக்கும்போது சிலை உயிர் பெறுவதுபோல ஒரு காட்சி வரும். 'கல்லாயிருந்தேன், சிலையாய் ஏன் வடித்தாய்' என்ற அந்தப் பாடல் வித்தியாசமாக இருந்தது. பழநிபாரதியின் வரிகளில் சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்தது. இசையும், பாடலும், பாடலை பாடிய நேர்த்தியும் ஓர் அபூர்வ கலவையாக வெளிப்பட்டிருந்தது. பாடலின் உச்சரிப்பு மிகச் சுத்தம். அந்தப் பாடகி ஆங்கிலத்திலோ, இந்தியிலோ அல்லது மலையாளத்திலோ எழுதி வைத்துப் பாடவில்லை. அதிசயமாக தமிழிலே எழுதி வைத்து பாடியிருக்கிறார்.
ஒரு நண்பன் அந்தச் சமயத்தில் சொன்னது அதிர்ச்சியை கொடுத்தது. 'பாடலைப் பாடிய பெண் கனடாவில் வசிக்கிறார். அவர்தான் முதன்முதலாக இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடிய ஒரே ஈழத்துப்பெண்' என்றார். நான் அந்தப் பெண்ணின் தொலைபேசி இலக்கத்தை எப்படியோ சம்பாதித்து அவரை தொடர்புகொண்டேன். என் பெயரைச் சொல்லிவிட்டு 'உளியின் ஓசை' படத்தில் பாடிய பெண்ணுடன் பேசமுடியுமா?' என்றேன். 'பேசுகிறேன்' என்றார். இளம் குரலாக இருந்தாலும் அந்தப் பாடலைப் பாடிய இனிமையான குரலுக்கும் இதற்கும் ஒருவித சம்பந்தமும் இல்லை. 'உங்களுடைய பாடலை மிகவும் ரசித்தேன். அந்தப் பாடலை திரும்பத் திரும்ப கேட்டபடியே இருக்கிறேன்.' அப்படியா என்று கேட்டுவிட்டு ஒரு சலங்கைச் சிரிப்பை உதிர்த்தார். அவர் சிரிக்கும்போது அது பாட்டுக் குரலில் இருந்தது. பேச்சுக் குரலுக்கும், பாட்டுக் குரலுக்கும் இடையில் இவ்வளவு வித்தியாசமா என்று நான் வியந்துகொண்டேன்.
தர்ஸினி இலங்கையில் திருகோணமலையை பிறப்பிடமாகக் கொண்டவர். மூன்று வயதில் இவர் ஒரு சினிமா பாட்டின் பல்லவி வரிகளை சுருதி சுத்தமாக பாடியதை கேட்ட அவருடைய தந்தை ஆச்சரியப்பட்டார். அந்த வயதிலேயே அவரை மேடையில் ஏற்றி பாடச் சொல்லுவார்கள். சிலநேரங்களில் பாடுவார்; பல சமயங்களில் அழுதுகொண்டு இறங்கி ஓடிவிடுவார். ஒரு பாட்டை ஒரு முறை கேட்டால் போதும், தர்ஸினி அந்த மெட்டை பிடித்துவிடுவார். அது ஒரு அபூர்வமான திறமை என்பது அவருக்கு தெரியவில்லை. எல்லோரிடமும் அப்படிப்பட்ட திறமை இருப்பதாகவே நினைத்தார். ஒரு நாள் இவருக்கு நாலு வயது நடந்தபோது கலவரத்தில் இவர் தகப்பனை சுட்டுக் கொன்றுவிட்டார்கள். அதன் பின்னர் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம், கொழும்பு என்று அலைந்து திரிந்ததில் அவரால் ஒழுங்காகப் பள்ளிக்கு செல்ல முடியவில்லை; முறையாகச் சங்கீதம் கற்கவேண்டும் என்ற ஆசையும் நிறைவேறவில்லை.
2001ம் ண்டு, இரட்டைக் கோபுரங்கள் வீழ்வதற்கு முன்னர், கனடாவுக்கு அகதியாக வந்தார். இசையை முறையாகக் கற்றுக்கொள்வது அங்கேயும் சாத்தியமாகவில்லை. அந்தக் காலகட்டத்தில்தான் இவருக்கு ஹிந்துஸ்தானி இசை மீது நாட்டம் விழுந்து அதைக் கற்கவேண்டும் என்ற கனவு வலுவானது. இந்தியாவுக்கு போய் இசை கற்பது என்று தீர்மானித்தார் தர்ஸினி. கணவருடன் இந்தியா போனவருக்கு அங்கே ஒருவரையும் தெரியாது. சென்னையில் இந்துஸ்தானி சங்கீதம் சொல்லிக்கொடுக்கும் ஒருவர் ஷெனாய் வாசிப்பில் பிரபலமானவர். அவரைப் பார்க்கச் சென்றபோது ஒரு பாட்டுப் பாடச் சொன்னார். தர்ஸினி அப்பொழுது மனதில் தோன்றிய ஒரு சினிமாப் பாடலை பாடினார். இரண்டு வரிதான். போதும் என்று சைகை காட்டிவிட்டு இந்துஸ்தானி சங்கீதம் கற்றுத்தருவதற்கு ஒப்புக்கொண்டார், ஆனால் பணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். தர்ஸினியால் நம்ப முடியவில்லை.
'என்னுடைய குரு நான் நினைத்ததுபோல ஆரம்பத்தில் இருந்து அடிப்படை விசயங்களை எனக்கு கற்றுத் தரவில்லை. ஒரு தேர்ந்த பாடகிக்குரிய ஸ்தானத்தை எனக்கு கொடுத்து சங்கீதத்தில் உள்ள பிரயோகங்களையும் பாவங்களையும் நுணுக்கங்களையும் சொல்லித்தரத் தொடங்கினார். 'நீங்கள் நல்லாய் பாடுறீங்கள். உங்களை இசைஞானி இளயராஜாவிடம் அறிமுகப் படுத்துகிறேன்' என்று சொல்வார். அந்த வார்த்தைகளை கேட்டு சந்தோசப்படுவேன். ஆனால் அப்படியான ஒரு வாய்ப்பு சீக்கிரம் கிடைக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.'
இவ்வளவு விசயத்தையும் தர்ஸினி எனக்கு டெலிபோனிலேயே சொன்னார். 'உங்களை நேரிலே சந்திக்க முடியுமா?' என்று கேட்டேன். அவர் சம்மதித்தார். நான் ஒரு பொது இடத்தைச் சொன்னேன். அவர் நேரத்தை சொன்னார். 'உங்களை எப்படி அடையாளம் காண்பது?' என்று தர்ஸினி கேட்டார். 'நீங்கள் கண்டுபிடிக்கவேண்டாம். நான் அதைச் செய்வேன். ஓர் இளம் பாடகி எப்படி இருப்பார் என்று எனக்கு ஒரு கற்பனை இருக்கிறது.' தர்ஸினி மறுபடியும் ஒரு சலங்கைச் சிரிப்பை சிரித்தார். 'உங்கள் பெயர் என்ன சொன்னீர்கள்?' நான் மறுபடியும் சொன்னேன்.
அடுத்த நாள் குறிப்பிட்ட இடத்துக்கு கணவனுடன் வந்தார். அவரை அடையாளம் காண்பதில் எனக்கு பிரச்சினையே இல்லை. மெலிந்த ஒடிசலான தோற்றம். கறுப்பு நிறக் கால்சட்டை, வெள்ளை நீளக்கை சேர்ட்டை முழங்கை மட்டும் உருட்டிவிட்டிருந்தார். தோள்களின் கீழே புரண்ட தலைமுடி. நெற்றியிலே சின்னதாக சிவப்பு பொட்டு. நாங்கள் வணக்கம் சொல்லிக்கொண்டோம்.
நான் 'இளையராஜா 4000 பாடல்களுக்கு மேலாக இசையமைத்தவர். இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர். உலக பிரபலமானவர். அண்ணாமலை பல்கலைக் கழகமும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகமும் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியிருக்கின்றன. How to Name it, Nothing but Wind, திருவாசகம் போன்ற இசைத்தொகுப்புகளை தந்தவர். பஞ்சமுகி என்ற புதிய ராகத்தை கண்டுபிடித்தவர். பத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். அந்த மேதையை சந்திக்கும் பகுதியை நான் நேரடியாகக் கேட்கவேண்டும், அதுதான் உங்களை சந்திக்கவேண்டும்' என்றேன்.
'ஒருநாள் என்னுடைய குரு முன்பின் அறிவிக்காமல் என்னை இசைஞானியிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்துவைத்தார். அவர் வெள்ளை ஆடையில் தரையிலே ஒரு மெத்தையில் சாய்ந்துபோய் உட்கார்ந்திருந்தார். நான் வணங்கினேன். அவர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார். என் உடம்பு உள்ளுக்குள் நடுங்கியது ஆனால் குரல் நடுங்காமல் பதில் சொன்னேன். ஆர்மோனியத்தில் ஒரு சுருதியை வைத்து என்னைப் பார்த்து 'ஏதாவது பாடம்மா' என்றார். நான் அவர் இசையமைத்த பாடலில் எனக்கு மிகவும் பிடித்த, தளபதி படத்தில் வரும் 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி, சொல்லடி இந்நாள் நல்ல தேதி' என்ற பாடலைப் பாடினேன். பாட்டு முடிய அழகான ஒரு சிரிப்பை சிரித்தார். புதிதாக மெட்டுப்போட்ட வேறு ஒரு பாடலை உடனுக்குடனே பாடிக் காட்டி அதையும் பாடச் சொன்னார். நான் பல்லவியை பாடினேன். அவரோ தொடர்ந்து சரணத்தை பாட நான் பாடுவதை நிறுத்திவிட்டு அவரைக் கேட்டுக்கொண்டிருந்தேன். பாட்டை முடித்துவிட்டு மறுபடியும் என்னைப் பார்த்து அழகாகச் சிரித்தார். நானும் சிரித்தேன்.
'சில நாட்கள் தள்ளி என்னுடைய கணவர் கனடாவுக்கு திரும்பினார். பரீட்சை மறுமொழியை பார்த்திருப்பதுபோல நான் காத்திருந்தேன். இசைஞானி கேட்டபோது நான் 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி, சொல்லடி இந்நாள் நல்ல தேதி' என்ற பாடலை பாடினேன். எனக்கும் அப்படி ஒரு நல்ல சேதி வரும் என்று நினைத்தேன், ஆனால் நான் கனடாவுக்கு திரும்பவேண்டிய தேதிதான் வந்தது. ஒருநாள் எனக்கு நல்ல காய்ச்சல். அன்றிரவு திடீரென்று ஒரு தொலைபேசி அழைப்பு. அடுத்தநாள் காலை நான் பிரசாத் ஸ்டூடியோவில் நிற்கவேண்டும், இசைஞானி இளையராஜாவின் ஒரு பாடல் ரிக்கார்டிங்குக்காக. என்னால் நம்பவே முடியவில்லை. இரவு முழுக்க நித்திரை கிடையாது, சாப்பிடவும் பிடிக்கவில்லை. உணவை கண்டால் வயிற்றை பிரட்டியது. என்னுடைய இடத்திலிருந்து பிரசாத் ஸ்டூடியோவுக்கு ஓட்டோவில் போக ஒரு மணி நேரம் எடுக்கும். காலையானதும் நான் அவசரமாய் வெளிக்கிட்டுக்கொண்டு ஒரு ஓட்டோவைப் பிடித்து புறப்பட்டேன். அவ்வளவு தூரம் தனியாகப் பயணம் செய்தது அதுவே எனக்கு முதல் தடவை. வழிநெடுக பதற்றத்துடன் போய்ச்சேர்ந்தேன்.
'நான் குருவுடன் ஏற்கனவே அங்கே போயிருந்தாலும் இம்முறை ஸ்டூடியோவின் பிரம்மாண்டத்தை பார்த்தபோது அச்சமாகவிருந்தது. வாசலிலே உள்ள பதிவேட்டில் என் பெயரை எழுதிவிட்டு உள்ளே நுழைந்தேன். இரண்டு பெரிய இளையராஜாவின் படங்கள் மாட்டியிருந்தன. அதிலே ஒன்று நடிகர் பார்த்திபன் வரைந்தது என்று சொன்னார்கள். பசியினாலும், நித்திரையில்லாததாலும் எனக்கு மயக்கமாக வந்தது. நான் வந்திருப்பதை அறிந்த ஒருவர் ஸ்டூடியோவுக்குள் போகச் சொன்னார். ஒரு நிமிடம்கூட அங்கே வீணாக்க முடியாது. வீணாக்கும் ஒவ்வொரு நிமிடமும் இளையராஜாவுக்கு சொந்தமானது. அவர் ஏதாவது கேள்விகள் கேட்பார் என்று நினைத்து பதில்களை தயாரித்து வந்திருந்தேன். அவர் ஒன்றுமே பேசாமல் நேராக பல்லவியை சொல்லித்தந்தார். பாடினேன். என் உடல் நடுக்கம் எப்படியோ குரலில் நுழைந்துவிட்டது. இளையராஜா 'என்னம்மா' என்று கையை தூக்கி விரித்துக் காட்டினார். நான் 'இரவு தூங்கவில்லை. காலையிலும் சாப்பிடவில்லை. ஒரே பதட்டமாயிருக்கு' என்று ஒளிக்காமல் சொன்னேன். 'சரி, ஓடு ஓடு சாப்பிட்டுவிட்டு வா' என்று துரத்தினார். எனக்கு இடம் வலம் தெரியவில்லை. இந்த நேரம் பார்த்து எனக்குப் பக்கத்தில் ஒருவரும் இல்லையே என்று வருத்தமாகவும் இருந்தது. பிரெட் வாங்கி ஒரு துண்டைப் பிய்த்து வாய்குள்ளே திணித்து விழுங்கினேன். தண்ணீரை அவசரமாகக் குடித்து கொஞ்சம் தெம்பு வந்ததும் திரும்பினேன்.
'நான் பாடவேண்டிய பாட்டுக்கு மெட்டுப் போட்டு வாத்திய இசை ஏற்கனவே ரிக்கார்ட் ஆகிவிட்டது. நான் பாடவேண்டிய இடம் மட்டும் வெறுமையாக இருந்தது. பாடல் வரிகளை என்னிடம் தந்தார்கள். அந்த வரிகளை சரியாக அந்த இடத்தில் நான் பாடவேண்டும். என்னோடு பாடவேண்டிய பார்த்தசாரதியும் பக்கத்திலேயே நின்றார். 'கல்லாயிருந்தேன் சிலையாய் ஏன் வடித்தாய்.' இதுதான் பல்லவியின் முதல் வரி. அந்த வரியை எப்படி பாடுவதென்று இளையராஜா சொல்லித் தந்தார். அவர் சொல்லித் தந்ததை அப்படியே காதால் கேட்டு திருப்பி பாடினேன். அதுதான் ஒத்திக்கை. அடுத்து 'ரேக்' என்றார் இளையராஜா.
'பார்த்தசாரதி அனுபவம் வாய்ந்தவர். இளையராஜாவின் இசையில் பல பாடல்கள் பாடியவர். அவர் தன்னுடைய பாடலின் கீழ் இசைக்குறிப்புகளை எழுதிவைத்து பாடினார். பாடலின் மெட்டை உடனுக்குடன் மாற்றினால்கூட அதற்கான ஸ்வரங்களை கீழே எழுதிவைத்து பாடக்கூடியவர் அவர். என் விசயம் அப்படி இல்லை. யாராவது பாடிக்காட்டவேண்டும். பாடுவதை உள்வாங்கி நினைவில் வைத்து அப்படியே பாடவேண்டும். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக ரிக்கார்டிங் நடந்தது. ஒவ்வொரு வரியையும் இசைஞானி பாடிக்காட்ட, headphone ஐ மாட்டிக்கொண்டு அதில் ஒலிக்கும் வாத்தியக்குழுவின் பின்னணி இசைக்கு நான் பாடினேன். எங்கள் மூன்று பேரையும் தவிர அங்கே ரிக்கார்டிங் இஞ்சினியர் மாத்திரமே இருந்தார். மதிய இடைவேளைக்கு பிறகு தயக்கத்துடன் ஸ்டூடியோவுக்குள் நுழைந்து 'நான் திரும்பலாமா? ஏதாவது திருத்தங்கள் உண்டா?' என்று கேட்டேன். இசைஞானி சற்றுமுன் பதிவுசெய்த பாடலை ஒருமுறை போட்டுக் கேட்டுவிட்டு என்னைப் பார்த்து போகலாம் என்றார். .
'அடுத்த சில நாட்களில் விமானம் ஏறி கனடா வந்து சேர்ந்தேன். இது நடந்தது 2007ம் ஆண்டு ஒக்டோபர் மாதம். 2008ம் ஆண்டு மே மாதம்தான் நான் உளியின் ஓசையில் பாடிய பாடல் இசைத்தட்டாக வெளிவந்தது. ஆனால் நான் பாடலை முதன்முதலாக இணையதளத்தில்தான் கேட்டேன்.'
'படம் எப்பொழுது பார்த்தீர்கள்?' என்றேன். 'உங்களைப் போலத்தான் நானும் சமீபத்தில் டிவிடியில் பார்த்தேன்.'
'பாடலைக் கேட்டபோது உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தன?
'ரிக்கார்டிங் நடந்து முடிந்த பிறகு என் மனம் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இப்போது அப்பாவை நினைத்துப் பார்க்கிறேன். 'நீ நல்ல பாட்டுக்காரியாய் வருவாய் குஞ்சு' என்று சொல்லி அவர் தலையை தடவினார். அதை மறக்க முடியாது. என்னுடைய பழைய சிநேகிதிகள் யாராவது பாட்டை கேட்பார்களா, என் குரலை அடையாளம் காண்பார்களா என்றெல்லாம் நினைப்பேன்.'
'இங்கே கனடாவில் யாராவது உங்களைப் பாராட்டினார்களா?'
'ஒருவருக்குமே தெரியாது. நான் முன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இப்பவும் இருக்கிறேன்.'
'உங்கள் பெயர் தர்ஸினி என்று சொன்னீர்கள். ஆனால் திரைப்படத்திலும் சரி, இசைத்தட்டிலும் சரி உங்கள் பெயரை தான்யா என்று மாற்றியிருக்கிறார்களே?'
'ஓம், மாற்றப்பட்டுள்ளது' என்றார் சிரித்துக்கொண்டே.
'அதற்கென்ன? பெயரில் என்ன முக்கியம்? பாடல் அழகாக அமைந்திருக்கிறதே! அதுவும் இளையராஜாவின் இசையில் பாடும் வாய்ப்பு எல்லோருக்கும் எளிதில் கிடைத்துவிடுமா?' என்று நான் சொன்னேன்.
'அப்ப நான் புறப்படலாமா?' என்றார் தர்ஸினி. நானும் சரி என்றேன்.
திடீரென்று ஏதோ நினைத்துக்கொண்டு 'இதையெல்லாம் ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?' என்றார்.
'சும்மாதான், ஒரு ஆர்வத்தில் கேட்டேன்.'
'நீங்கள் எழுத்தாளரா?' என்றார். 'ஏதோ அவ்வப்போது எழுதுவேன்.'
'யார் வேண்டுமானாலும், எந்தப் பத்திரிகைக்கும் எழுதி அனுப்பலாமா?'என்று கேட்டார், ஒரு குழந்தைப் பிள்ளையைப்போல.
'அனுப்பலாமே.'
'உங்கள் பெயர் என்ன சொன்னீர்கள்?' என்றார்.
'மீண்டும் என் பெயரைச் சொன்னேன். மறுபடியும் சலங்கை கிலுங்கியது. நீளமான கருவிழிகளைச் சுழற்றி விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார்.
இப்படித்தான் முழுநேர எழுத்து வேலையாக எழுதிவரும் எனக்கும், தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி கதை வசனத்தில் உருவான 'உளியின் ஓசை' திரைப்படத்தில், மூன்று தேசிய விருதுகள் பெற்றவரும், உலகப் புகழ் கிட்டியவரும், Royal Philharmonic Orchestra வுக்கு இசையமைத்தவரும், மேஸ்ட்ரோ என்று அழைக்கப்படுபவருமான இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடிய தான்யா என்று பெயர் சூட்டப்பட்ட தர்ஸினிக்குமான சந்திப்பு ஒரு முடிவுக்கு வந்தது.