பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்த எனக்கு ஒரு நல்ல காட்சி கிடைத்தது. இது வழக்கத்துக்கு மாறானது. ஒரு பெண் ‘ஆ ஆ’ என்று தொண்டை கிழியக் கத்தினாள். இன்னும் யாரோ அவளை அமுக்கிப் பிடித்தார்கள். உள்ளுக்குப் போகப் பயந்து சன்னல் வழியாக எட்டிப் பார்த்த நான் அப்படியே உறைந்துபோய் விட்டேன்.
கனகவல்லி என்ற பெண், என் அக்காவுடன் படிப்பவள், ஒரு தடுக்குப் பாயில் படுத்துக் கிடந்தாள். என் அக்காவும் இன்னும் இரண்டு பெண்களும் அவளை அமுக்கிப் பிடித்தார்கள். அம்மா இரண்டு காலையும் பரப்பி வைத்து குனிந்தபடி ஏதோ இம்சை செய்தாள். கனகவல்லி உயிர் எழுத்துக்களில் இரண்டாவது அட்சரத்தை உரத்துக்கூவி உதவிக்கு அழைத்துக்கொண்டிருந்தாள்.
அம்மாவின் கையிலே பெரிய நாரத்தை முள் இருந்தது. அதை கனகவல்லியின் மூக்கிலே துளைத்து ஓட்டைபோட முயற்சி செய்தாள். மற்றவர்கள் அதற்குத் துணைபோனார்கள். மூக்குத்தி இருந்தால் அதற்கு ஒரு மூக்கு இருக்கவேண்டும். மூக்கு இருந்தால் அதற்கு ஒரு ஓட்டை இருக்கவேண்டும்.
அந்த ஓட்டையைத்தான் அம்மா செய்துகொண்டிருந்தாள். பல்லியைக் கண்டால் பத்தடி தள்ளி நடப்பவள் கனகவல்லி. அண்ணாந்து தண்ணிர் குடிக்கும்போது வழியும் தண்ணீர் கழுத்துப் பள்ளத்தில் தங்கிவிடும், அவ்வளவு ஒல்லி. அவள்தான் மூக்குத்தி ஆசையில் ஓட்டை துளைப்பதால் ஏற்படும் வலியை இவ்வளவு பொறுமையாகத் தாங்கிக் கொண்டிருந்தாள்.
ஊறுகாய்க்கும் உதவாமல், கைச்சல் காய்களை நிறைய கொடுத்துக் கொண்டிருந்த எங்கள் வீட்டு நாரத்தை மரத்துக்கு இப்படியும் ஒரு உபயோகம் இருப்பது அன்றுதான் எனக்குத் தெரிந்தது.
கனகவல்லி படுத்திருந்த இடத்தில் இருந்து சரியாக பதினாறு அடி தூரத்தில் ஒரு மேசை. அதற்குமேல் தாத்தாவின் தமிழ் டைப்ரைட்டர் இருந்தது. டைப்ரைட்டரில் இருந்து நான் சரியாக எட்டடி தூரத்தில் இருந்தேன். அந்தக் கணத்தில் கனகவல்லிக்கும், எனக்கும், தட்டச்சு மெசினுக்கும் இடையில் ஒரு முடிச்சு விழுந்தது. அந்தக் கதையைத்தான் நான் இப்ப உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.
கனகவல்லி, அக்கா, நான் எல்லோரும் படித்தது ஒரே பள்ளிக்கூடத்தில். அவர்கள் இரண்டு வகுப்பு கூட, அவ்வளவுதான். கனகவல்லி என்றால் நினைவுக்கு வருவது ஒரு கொடிதான். அப்படித்தான் இருப்பாள். நடக்கும் போதும் அதைப்போலவே அசைவாள். இவளுக்காக தேரை விட்டுப் போவதற்கு பல பாரி மன்னர்கள் என் வகுப்பிலேயே படித்துக்கொண்டு இருந்தார்கள். இது பின்னால்தான் எனக்கு தெரியவரும்.
இவளில் அப்படி என்னத்தை கண்டார்கள் என்று எனக்கு வியப்பாக இருக்கும். காதுவரை நீண்ட அவள் கண் இமைகள் ஓயாது வேலை செய்தபடி இருக்கும். அதுவாக இருக்கலாம் அல்லது அவளுடைய முட்டை வடிவமான தலையைத் தாங்க முடியாமல் துவண்டு விழுவதுபோல காட்சியளிக்கும் கழுத்தாக இருக்கலாம். யார் கண்டது? எங்கள் ஊர் லெவலுக்கு அவள்தான் டி.ஆர்.ராஜகுமாரி.
இவளுடைய மாமா மெல்லிய பிங்க் தாளில் சுற்றிக் கொண்டுவந்து கொடுத்த மூக்குத்தியில் அவளுக்கு அளவில்லாத மோகம். அதை எப்படியும் தன் மூக்கில் ஏற்றிவிட வேண்டும் என்ற பிடிவாதத்தில்தான் இப்படி துளை போட்டுக்கொள்ளச் சம்மதித்தாள். மூன்று நாட்களில் கனகவல்லியின் இடது முகம் முழுக்க வீங்கிவிட்டது. மூக்கில் சீழ் பிடித்து ஒழுகியது. முதலில் கறிவேப்பிலைக் குச்சியை செருகிவிட்டார்கள். அதுவும் சரிவராமல் நூல் கயிறு கட்டினார்கள். பிறகு அதையும் கழற்ற வேண்டி வந்தது.
ஆறு மாதமாக இப்படி அவதிப்பட்டாள். சிறிது குணம் அடைந்ததும் இரண்டு விரல்களை உள்ளே விட்டு சுரை பூட்டும் அந்த மூக்குத்தியை மறுபடியும் அணிந்தாள். முகத்துக்கே ஒரு பிரகாசம் கிடைத்தது. மற்ற பெண்கள் எல்லோரையும் அது பொறாமைப்பட வைத்தது. ஆனால் அந்தப் பொறாமையை நீடிக்க முடியவில்லை. மூன்றாவது நாள் மூக்கில் சீழ் பிடித்துவிடும். இப்படி இரண்டு நாள் மூக்குத்தியும், மூன்று நாள் சீழும் அணிந்து காட்சி அளித்தாள்.
எனக்கொரு தாத்தா இருந்தார். மிகவும் நல்லவர். முகத்துக்கு எவ்வளவு சருமம் தேவையோ அதற்கு சற்று கூடியதாக அவரிடம் இருந்தது. அவருடைய உபயோகத்தன்மை தீர்ந்துவிட்டது என்று மற்றவாகள் தீர்மானிக்கும்வரை அவர்களுக்கு உதவி செய்வார். அவர் எங்களுடன் வசிக்கவில்லை, அவருடைய டைப்ரைட்டர்தான் வசித்தது.
தாத்தா வருவார். டைப்ரைட்டர் மூடிய துணியை உருவி மடித்து வைப்பார். உள்ளே பெயர் தெரியாத கறுத்த உலோகத்தினால் செய்யப்பட்ட அந்த தட்டச்சு மெசின் காட்சியளிக்கும். தேருக்கு முதல் நாள் தேர் மூடிய விரிப்பை, நீக்கியபோது கிடைக்கும் ஒரு புதுவிதமான சிலிர்ப்பு எனக்கு ஏற்படும். அதில் புதைந்திருக்கும் அற்புதங்கள் என் சிறு மூளைக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றி என்னை இம்சைப்படுத்தும்.
அகத்தியர் தமிழைக் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள். தமிழ் எழுத்துக்களைப் போல கற்பனை முடிந்துபோன எழுத்துக்களை இந்த உலகத்தில் வேறு எங்கும் காண முடியாது. ‘அ’னாவை கண்டுபிடித்தவர் ‘ஆ’வன்னாவை கண்டுபிடித்தார். பிறகு ‘இ’னா ‘ஈ’யன்னா ‘உ’னா என்று எழுதியவர் ஆறாது எழுத்துக்கு வந்தபோது குழம்பிவிட்டார். கற்பனை ஊற்று வற்றிவிட்டது. ‘ஊ’ என்று யானைச் சவாரிபோல ஒன்றின்மேல் இன்னொரு அட்சரம் ஏறி ஊர்வலம் போகும் எழுத்தை உற்பத்தி செய்தார். பிறகு எப்படியோ சமாளித்து 247 எழுத்துக்களை உண்டாக்கி தன் வேலையை முடித்தார்.
என் தாத்தாவின் டைப்ரைட்டரில் அகத்தியர் படைத்த அத்தனை எழுத்துக்களும் இருந்தன. ஆனால் அந்த ஆறாவது எழுத்தான ‘ஊ’னா அதன் அபூர்வத் தன்மையாலோ, அல்லது இரண்டு அட்சரம் கொடுத்த பாரத்தினாலோ உடைந்துவிட்டது. அதனால் தாத்தா அடிக்கடி எழுதும் கடிதங்களில் ‘ஊ’னா வராமல் பார்த்துக்கொள்வார்.
‘சர்க்’ என்ற சத்தத்தோடு பேப்பரை உருளையில் மாட்டி, மேலுக்கு கறுப்பும், கீழுக்கு சிவப்பும் கொண்ட ரிப்பனை இழுத்துவிடுவார். சிவமயம் என்று கறுப்பு எழுத்துக்களில் அடித்து பிறகு கீழே சிவப்புக் கொடு போடுவார். கறுப்பு எழுத்துக்களை அடித்த மெசின் ஒரு சின்ன விசையை அழுத்தியதும் சிவப்புக் கோடு போடும் அதிசயமாக மாறிவிடும்.
பின்பு தாத்தா கோ.எண் 204/அ/11 என்று வலது மூலையில் அடிப்பார். தாத்தாவிடம் ஒரு கோப்பும் இல்லை. ஒரு கம்பியில் பழைய கடிதங்களைக் குத்தி வைத்திருப்பார். ஆனாலும் பெரிய அலுவலகத்தில் இருந்து கடிதம் வருகிறது என்ற தோரணையை உண்டாக்க அப்படிச் செய்தார் என்று நினைக்கிறேன்.
எனக்கு இன்னொரு ஆச்சரியம் அப்போது உண்டாகும். கடலுக்கு அப்பால் எங்கோ இருக்கும் வெள்ளைக்காரர்கள் செய்த டைப்ரைட்டர் அது. அவர்களுக்கு எப்படியோ சிவமயம் எழுதி அதற்குக் கீழே சிவப்புக்கோடு போடவேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. அதற்கான வசதியையும் செய்திருக்கிறார்கள். இது எப்படி என்றெல்லாம் நான் யோசித்து யோசித்து குழம்பிப்போவேன்.
வசனத்தொடர் பேப்பரின் விளிம்பை எட்டியவுடன் டைப்ரைட்டர் டிங் என்று ஒலி செய்து தாத்தாவை உசார்ப்படுத்தும். தடிமனான விரல்களால் எழுத்துக்களைத் தேடிக் குத்தும்போது அந்த அட்சரங்கள் நடனம் செய்வதுபோல வளைந்து எழும்பி வந்து பேப்பரில் அடித்துத் திரும்பும். ஒரு முறையாவது ஒரு எழுத்து இன்னொரு எழுத்துக்கு மேல் விழும் என்று காத்திருப்பேன், விழாது. அற்புதமான வேகத்துடன் நடக்கும் நர்த்தனம் அது. ரிப்பன் எல்லாம் ஓடி மற்றப்பக்கம் சேர்ந்ததும் அவற்றைத் திரும்பவும் இடது பக்கம் சுற்றிவிடும் வேலையை தாத்தா எனக்கு கொடுப்பார். இப்படி ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக டைப்ரைட்டரின் சூட்சுமங்களை நான் கற்றுக்கொண்டேன்.
வெகு விரைவில் என்னுடைய தட்டச்சு புலமையைச் சோதிக்கும் சந்தர்ப்பம் ஒன்று என்னைத் தேடி வரும்.
முறுக்கிய தசைநார்களால் மட்டுமே ஆன உடம்பைக் கொண்டவன் ரத்னசிங்கம். இறுதி ஆண்டுக்காரன். தடை தாண்டும் போட்டியில் எப்பொழுதும் அவனே முதலாவதாக வருவான். வழக்கமாக என்னைப் பார்த்தால் மற்றப் பக்கம் பார்த்தபடி போவான். அன்று ஒருநாள் தானாகவே வந்து என்னிடம் பேசினான். எனக்கு உச்சி குளிர்ந்த அளவுக்கு சம்சயம் ஏற்படவில்லை. வானத்தின் நிறம் நீலத்தில் இருந்து சிவப்பாகி பின்பு சாம்பலாக மாறும்பரை பேசினான்.
அவன் காதல் வசப்பட்டிருந்தான். இவ்வளவு தசைநார்களையும் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று அவனுக்கு தெரியவில்லை. இன்னும் நிரப்படாத பல அங்கங்களைக் கொண்ட கனகவல்லியில் அவனுக்கு அளவு கடந்த மோகம். ஓடைகளிலும், மூலைகளிலும், முச்சந்தி முடுக்குகளிலும் அவளைக் கண்டபோதெல்லாம் சிரித்தான். அவளுக்கு ஒரு காதல் கடிதம் எழுத விரும்பினான். சாதாரண கடிதம் அல்ல, டைப் அடித்த கடிதம். அதைப் படிக்கும்போது எப்படி அவள் திகைத்துப்போவாள்.
வடுவூர் துரைசாமி அய்யங்காரின் எல்லா நாவல்களையும் அவன் படித்திருந்தான். எனக்கும் தருவதாகச் சொன்னான். அவன் இரவிரவாகத் தயாரித்திருந்த கடிதத்தில் அய்யங்காருக்கும் பெரிய பங்கிருந்தது.
என்னுடைய அக்கா தவளை கொஞ்சி ராசகுமாரன் வருவான் என்று நம்பினாள். டி.ஆர்.ராஜகுமாரி தினமும் ஏழு குடம் பசும்பாலில் குளிக்கிறாள் என்பதை நம்பினாள். உதிர்ந்த தலை முடியை சுருட்டி பந்தாக்கி அதை மூன்றுதரம் துப்பி கூரையில் எறியாவிட்டால் தலைமயிர் எல்லாம அடுத்த நாளே கொட்டிவிடும் என்பதை நம்பினாள். ஆனால் என்னால் டைப் அடிக்க முடியும் என்பதை நம்ப மறுத்தாள்.
வேறு வழி தோன்றாமல் அம்மாவும், அக்காவும் நெல்லுக் குத்தும் முக்கியமான வேலையிலோ, அல்லது இன்னொரு கன்னி மூக்கைத் தேடி முள்ளுக் குத்தும் வேலையிலோ ஈடுபட்டிருந்தபோது நான் ரத்னசிங்கத்தை பின் வாசல் வழியாக எங்கள் வீட்டுக்குள் நுழைத்தேன்.
சிவமயம் எழுதி சிவப்பு கோடு போடுவது எப்படி என்பதை சொல்லித் தந்தேன். ‘கனவிலும் மறவாத காதலி கனகவல்லிக்கு’ என்று கடிதம் தொடங்கியபோதே எனக்கு உடம்பு சிலிர்த்தது. ‘ஊன் உறக்கம் இல்லாமல்’ என்ற வசனத்தை ‘பசி தூக்கம் இல்லாமல்’ என்று மாற்றினோம். ‘ஊருக்கு வெளியே உள்ள வைரவ கோயில்’ என்பதை மாற்ற முடியவில்லை. ‘ஊ’ வரும் இடத்தை மையினால் எழுதி ஊதிக் காயவைத்தோம். கடிதத்தை அப்பொழுது பிரபலமான மந்திரி குமாரி படத்திலிருந்து திருடிய ‘வாராய், நீ வாராய். போகும் இடம் வெகு தூரம் இல்லை நீ வாராய்’ என்ற வரிகளுடன் முடித்திருந்தான். கனகவல்லி மயங்கி விழுவதில் ஒருவித ஐயப்பாடும் எனக்கு அப்போது இருக்கவில்லை.
ரத்னசிங்கம் தன் காரியத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு புதன்கிழமை பாண் மணி அடிக்கும் நேரத்தை தெரிவு செய்தான். மழை பெய்து பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்த நாள் அது. கனகவல்லி அரைத் தாவணி கட்டி வருகிறவள். அன்று, உயரமாக வளர்ந்துவிட்டபடியால் கரை அவிழ்த்துவிட்ட பாவாடையும், சுருக்கு கை பிளவுசும், மஞ்சள் தாவணியும் அணிந்திருந்தாள். மழைத்தண்ணீர் குட்டைக்கு முன் பாவாடையைத் தூக்கி இடுப்பில் செருகிவிட்டு, தன் அடுத்த நகர்வைப்பற்றி யோசித்துக்கொண்டு நின்றபோது அவன் தோன்றினான். மின்னல் வேகத்தில் கடிதத்தை கொடுத்தான். தடை தாண்டுவதில் மன்னன் சிறிய குட்டை தண்ணீரைத் தாண்டமுடியாமல் சகதியில் காலை வைத்து ஓடி மறைந்தான்.
இந்தக் கடிதம் தயாரித்த காலங்களில் நாங்கள் ஒன்றை மறந்து விட்டோம். கனகவல்லி சாவித்திரியின் சகோதரி, நளாயினிக்கு நாத்தனார் முறை. அவளுடைய மூளை வேகமாக வேலை செய்து பழக்கப்பட்டது அல்ல. அவன் கொடுத்த கடிதத்தை வாங்கியவள் திகைத்துப் போய் நின்றாள். சிறிது நேரம் நம்பாமல் தன் கையையே பார்த்தாள். கைகள் நடுங்க ஆரம்பித்தபோதுதான் அவளுக்கு தான் செய்த காரியம் புரிந்தது. அப்பொழுது அவளையும் அறியாமல் இடையில் செருகிய பாவாடை கீழே நழுவியது. தண்ணீர் பட்டு பாவாடைக் கரை மெள்ள மெள்ள கறுப்பு நிறமாக மாறத்தொடங்கியது.
தலைமை ஆசிரியரின் அறை, கண் பார்க்கக்கூடிய தூரத்தில்தான் இருந்தது. இறந்தபடி இரண்டு நாட்களைக் கழித்த ஒரு கரப்பான் பூச்சியை, அதன் மீசையைப் பிடித்து தூக்குவதுபோல அந்தக் கடிதத்தைத் தூக்கிக் கொண்டுபோய் தலைமை ஆசிரியரிடம் சேர்ப்பித்தாள். அவன் கடிதம் கொடுத்த காரியத்தை ஏழு பேர் பார்த்ததாக பின்னர் சாட்சி கூறினார்கள்.
எங்கள் ஊரில் ஒரேயொரு டைப்ரைட்டர்தான் இருந்தது. அதுவும் ‘ஊ’னா உடைந்தது. அது எங்கே வாசம் செய்தது என்பது எல்லோருக்கும் வெளிச்சம். அதிகம் மூளையைச் செலவழிக்கும் அவசியம் இல்லாத புதிர்.
பள்ளிக்கூடம் முழுக்க கூடியிருக்கும் பொதுக்கூட்ட மேடையில் எல்லோர் கண்ணும் பார்க்கக்கூடியதாக தண்டனை அடுத்து வரும் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்படும். பள்ளிக்கூடம் அன்று பதினைந்து நிமிடம் முன்பாக விடுவார்கள். அதைக் காணுவதற்காக வழக்கமாக மட்டம் போடுபவர்களும், நோய்வாய்ப்பட்டுக் கிடப்பவர்களும் அள்ளியடித்து வருவார்கள். முதல் குற்றவாளியான ரத்னசிங்கத்துக்கு பன்னிரண்டு அடி. உடந்தைக்காரனான எனக்கு ஆறு அடி என்பது தீர்ப்பு.
அந்த வயதுகளில் எனக்கு முக்கியமான மூன்று பெரிய கவலைகள் இருந்தன. ரிக்கனோமற்றி, பரமானந்தம் மாஸ்டர், முகப்பரு. இந்த மூன்றும் என்னை அந்தப் பிராயத்து வாழ்க்கையில் கிடைக்கும் அற்ப சந்தோசத்தை அனுபவிக்க முடியாமல் கெடுதி செய்தன.
முகப்பருவுக்கு களிம்பு பூசலாம். ரிக்கனோமற்றிக்கு ட்யூசன் எடுக்கலாம். ஆனால் பரமானந்தம் மாஸ்டரை சரிக்கட்டுவது எப்படி? அவர்தான் எங்கள் பி.இ மாஸ்டர். ஒரு காலத்தில் சாண்டோவாக பதவி வகித்தவர். போரிலே தொலைத்துவிட்ட கேடயம் போன்ற முகம். கணக்கிலெடுக்க முடியாத வடுக்கள். உயரம் என்று பார்த்தால் ஒரு தபால் பெட்டி அளவுக்குத்தான் இருப்பார். ஆனால் 50 கிலோ சிமென்ற் பையில் 60 கிலோவை அடைத்ததுபோல உடம்பு. எதிர்பாராத லாகவத்துடன் சுழலும் கால்களும், கைகளும்.
பி.இ மாஸ்டர் கொடுக்கும் தண்டனை என்றால் 50 தண்டால், 100 தண்டால் என்று இருக்கும். சும்மா அல்ல, உடைந்த போத்தல் பகுதியை நெஞ்சுக்கு கீழே வைத்துக்கொண்டு. நெஞ்சு இறங்கினால் ரத்தம்தான்.
இவர்தான் தண்டனை நிறைவேற்றுவதற்காக நியமிக்கப் பட்டிருந்தார். மேடையிலே இரண்டு தடியன்கள் மேசையை கொண்டுவந்து வைத்தார்கள். அது இருந்து புத்தகம் படிப்பதற்கு அல்ல. அதற்கு கீழே தலையைக் கொடுத்து, அடி போடுபவரின் வசதியை உத்தேசித்து, பின்புறத்தை நீட்டிக் கொடுப்பதற்காக.
நான் பிரார்த்தித்தேன். இனி ஒருவரும் தண்டனையை மாற்ற முடியாது. ஆனால் அடி விழும் ஒடரை மாற்றலாம். வழக்கமாக இரண்டாவது எதிரிக்குத்தான் முதல் அடி விழும். பிறகுதான் தண்டனைக் கைதியை கூட்டி வருவார்கள்.
ரத்னசிங்கத்துக்கு முதல் அடி விழுந்தால் என் முறை வரும்போது அடிகாரர் களைத்துவிடுவார், வலி குறையும் என்று கணக்குப் போட்டேன். அப்படியே ஆனாது. ஒரு தேவ கைங்கர்யத்துக்கு அழைக்கப்பட்டது போல பரமானந்தம் மாஸ்டர் ஆயுதபாணியாகத் தோன்றினார். பல்லைக் கடித்தபடி, கழுத்துப் பகுதி திறந்துவிடக்கூடிய ஒரு வெள்ளை பனியனை அணிந்துகொண்டு ரத்னசிங்கம் அடிகளை ஒன்றன்பின் ஒன்றாக வாங்கினான். எட்ட முடியாத பின்புறத்தை அடிப்பதற்கு மாஸ்டர் பன்னிரண்டு தடவைகள் துள்ளினார்.
என் முறை வந்தது. நான் முதுகைக் குனிந்தபோது எங்கிருந்தோ குதிரை நாற்றம் அடித்தது. மூச்சை நிறுத்தி எல்லா பாகங்களையும் அடைத்தேன். கடவுள் ஒரு மகத்தான சாதனை படைப்பதற்கு அன்று சித்தம் கொண்டிருந்தார் போலும். காற்சட்டை நளையாமல் நான் தப்பியது கடந்த பத்து வருடங்களில் நடந்த சிறந்த அற்புதம் என்று பேசிக் கொண்டார்கள்.
இது எல்லாம் நடந்து நாலு வருடங்கள் ஓடிவிட்டன. ஒருவர் வாழ்க்கையில் இது பெரிய கால இடைவெளி இல்லை. ஆனால் வாலிப வயதில் இது மகா பெரிய தூரம். என்னுடைய தாத்தா அரை நாள் முழுக்க செலவழித்து இரண்டு கடிதங்களை டைப் அடித்தார். அவற்றை உறையிலே இட்டு தபால் பெட்டியில் போடுவதற்குப் போகும் வழியில் ஒரு கறையான் புற்றுக்கு அடியில் விழுந்துவிட்டார். அவர் கடைசியாகப் பார்த்த காசி ஒரு கறையான் புற்றுதான். அவர் போன பிறகும் அவர் எழுதிய பல விண்ணப்பங்களுக்கும், முறைப்பாடுகளுக்கும் பதில் கடிதங்கள் வந்தபடியே இருந்தன. அவற்றை என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை.
ரத்னசிங்கம் தடைதாண்டுவதைக் கைவிட்டான். பள்ளிக்கூடத்தையும் துறந்தான். தகப்பனாரின் அரிசி மில்லைப் பார்த்துக்கொண்டு மணமுடிந்து வசதியாக செட்டில் ஆகிவிட்டான்.
கனகவல்லியை சொந்தத்தில் மணமுடித்துக் கொடுத்திருந்தார்கள். அவள் கணவன் சோம்பேறி, எப்படியோ முயற்சி செய்து வேலையைத் துலைத்தான். அதே முயற்சியோடு கனகவல்லியையும் திரும்ப ஊருக்கு அனுப்பிவிட்டான் என்று அம்மா சொன்னாள்.
நான் கல்லூரி லீவில் ஒருமுறை வீட்டுக்குப் போயிருந்தேன். கதவைச் சுரண்டும் சத்தம் கேட்டது. திறந்து பார்த்தால் கனகவல்லி. என் கண்களில் தோன்றிய அதிர்ச்சியை அவசரமாக மறைத்தேன்.
அவளிலும் வயது கூடிய ஒரு சேலையை அவள் அணிந்திருந்தாள். தையல் விட்டுப்போன ஒரு பிளவுஸ். இடுப்பில் இருந்த குழந்தை நழுவிப்போய் மரமேற முயற்சி செய்தது. மூன்றுபேர் அழுத்திப்பிடிக்க, ஒரு சிவப்பு மூக்குத்திக்காக நாரத்தை முள்ளால் குத்தி உண்டாக்கிய துளையில் இப்போது குச்சிகூட இல்லை. நூல் கயிறும் இல்லை, தூர்ந்துபோய் கிடந்தது. தன்னை மறைப்பதாக நினைத்துக்கொண்டு ஒரு மார்பை கதவில் உரசியபடி தரையைப் பார்த்து நின்றாள்.
அவசரமாக வந்த அம்மா அவள் உள்ளே வந்துவிடக்கூடும் என்று பயந்ததுபோல வாசலை அடைத்தபடி நின்றாள். தாத்தாவின் டைப் ரைட்டருக்கு அங்கே வியாபாரம் நடந்தது. நெஞ்சு கூசாமல் அம்மா ‘அறுபது ரூபாய்’ என்றாள். கனகவல்லி நீண்ட நேரம் நின்று யோசித்தாள். நான் இடையில் புகுந்து ‘ஆறு தவணையில்’ என்று சொன்னேன். அவள் உலகத்தில் உள்ள அத்தனை மொழி பேசுபவர்களுக்கும் விளங்கக்கூடிய ஒரு மொழியில் பதில் சொன்னாள். சிறிதாக்கப்பட்ட சிரிப்பு. தலை நிமிராமல் சிந்திய அந்தச் சிரிப்பு அம்மாவைத் தாண்டி உள்ளே வந்து அறையை நிரப்பியது.
பக்கத்து கிராமத்து கூட்டுறவுச் சங்கத்தில் அவளுக்கு ஒரு தட்டச்சாளர் வேலை கிடைத்திருந்தது. அவளே ஒரு தட்டச்சு மெசின் கொண்டு வர வேண்டும் என்பது நிபந்தனை. பன்னிரண்டு வயது நிரம்பாத ஒரு பையனையும அவள் அழைத்து வந்திருந்தாள். அவன் ‘தூக்குங்கே சேர்’ என்று உற்சாகப்படுத்தினான். எனக்கு நம்பிக்கை இல்லை. டைப்ரைட்டரை அவன் தலையில் ஏற்றியதும் அவன் கழுத்து ஓர் அங்குலம் உள்ளே இறங்கியது.
இன்னும் நிலத்தைப் பார்த்தபடி பொதுவாக “அப்ப வாறன்” என்றாள்.
“ஒரு விசயம் அதில் ‘ஊ’ இல்லை” என்றேன்.
அவள் தெரியும் என்பதுபோல தலையை இரண்டு பக்கமும் அசைத்தாள். அப்பவும் நிமிரவில்லை. பிறகு என்ன நினைத்தாளோ சடாரென்று நிமிர்ந்து என்னை ஒருமுறை பார்த்தாள். காதுவரை நீண்டு, ஓய்வில்லாமல் வேலை செய்யும் அந்தக் கண் இமைகள் ஒரு கணம் ஸ்தம்பித்துப்போய் நின்றன. ஆயிரம் மாணவர்களுக்கு முன்னால் மேடையில் வைத்து ரத்னசிங்கம் பன்னிரண்டு அடிகள் வாங்கிய காரணம் அன்றுதான் எனக்கு புரிந்தது.
தாத்தாவின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து ‘சிவமயம்’ அடித்து, சிவப்புக் கோடு போட்டு உழைத்த அந்த டைப்ரைட்டர் இன்றைக்கும் உற்சாகம் குறையாமல் வேலை செய்யலாம். பெயர் தெரியாத ஒரு மக்கள் கூட்டுறவுச் சங்கத்து மரக்கதிரையில் உட்கார்ந்தபடி கனகவல்லி அதை தன் மெல்லிய விரல்களால் தட்டிக்கொண்டிருப்பாள் – ஊர்க்காவல்துறை, ஊமை, ஊதாரி, ஊதியம், ஊன்றுகோல், ஊமத்தம்பூ போன்ற சொல் வரும் இடங்களை மையினால் ‘ஊ’ எழுதி நிரப்பியபடி.
END