இம்முறை நான் அமெரிக்காவுக்கு சென்றபோது ஒரு பிரம்மாண்டமான நூலகத்துக்கு போனேன். அங்கே அபூர்வமான நூல்கள் எல்லாம் இருந்தன. எனக்குப் பிடித்த அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெய்ன். அவர் எழுதிய அத்தனை புத்தகங்களும் இந்த நூலகத்தில் பூர்வ அட்டைகளுடன் கிடைத்தன. அமெரிக்க இலக்கியத்தின் ஆரம்பமே மார்க் ட்வெய்ன் என்று சொல்வார்கள். இவருக்கு பின்னால் வந்த அமெரிக்க எழுத்தாளர்களில் எவரும் இவரைத் தாண்டவில்லை என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட விசயம். இவர் எழுதிய ஹக்கிள்பெரிஃபின் நாவலில் ஓர் இடத்தில் இப்படி வரும். Don't forget to remember that you don't know anything about it. உனக்கு ஒன்றும் தெரியாது என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க மறக்காதே. இதைப் படித்தபோது எனக்கு சிரிப்பு வந்தது. வேறு யாரால் இப்படி எழுதமுடியும்?
சிறுவயதில் நான் போன பள்ளிக்கூடத்தில் மறதி என்ற வார்த்தைக்கே இடமில்லை. அங்கே பாடங்களை நாங்கள் மனனம் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டோம். கணிதத்தில் சூத்திரங்களைப் பாடமாக்க வேண்டும். தமிழிலும் ஆங்கிலத்திலும் பாடல்களைப் பாடமாக்க வேண்டும். சரித்திரத்தில் அரசர்களின் பெயர்களையும் அவர்கள் வெட்டிய குளங்களின் பெயர்களையும் கணக்கில் வைக்க முடியாத தேதிகளையும் பாடமாக்க வேண்டும். வேதியியல் பாடத்தில் நிறைய சமாந்திரங்கள் இருக்கும். அவற்றையெல்லாம் பாடமாக்க வேண்டும். ஆனால் மிகக் கொடுமையானது பூமிசாஸ்திரத்தில் நாடுகளையும் சமுத்திரங்களையும் மலைகளையும் ஆறுகளையும் பாடமாக்குவது. அதாவது வரைபடத்தில் அவை எங்கேயெங்கே இருக்கும் என்பதை மனனம் செய்வது. பூமிசாஸ்திரம் படிப்பித்த வாத்தியார் மறதியை பள்ளத்துக்கு ஒப்பிடுவார். 'வீதியில் நடக்கும்போது எப்படி பள்ளத்தில் விழாமல் எச்சரிக்கையாக நடப்பீர்களோ அப்படியே உங்கள் வாழ்க்கையிலும் மறதியில் விழாமல் நீங்கள் தப்பவேண்டும்' என்று அறிவுரை கூறுவார். கூறிமுடித்த உடனேயே தன் மூக்குக்கண்ணாடியை தேடுவார்.
மறதி என்ற வார்த்தை என்னை படிப்பித்த தமிழாசிரியருக்கு பிடிக்கும். நான் ஒருமுறை கட்டுரை ஒன்றில் 'ஞாபகமறதி' என்று எழுதிவிட்டேன். அவருக்கு பிடிக்கவில்லை. ஞாபகம் என்றால் நினைவில் வைப்பது. அதற்கு எதிர்ப்பதம் மறதி. அப்படியிருக்க அது என்ன ஞாபகமறதி என்று என்னிடமே கேட்டு தலையில் ஒரு குட்டு வைத்தார். இவரிடம் கற்றதைவிட வாங்கிய குட்டுகளே அதிகம். அந்தக் குட்டின் ஆழமோ என்னவோ இன்றைக்கும் அந்த நினைவு ஆழமாகப் பதிந்துவிட்டது. இவர் ஓய்வு பெற்ற பிறகு ஒருநாள் இவரை வழியில் சந்தித்தேன். வற்றிவிட்ட ஆறுபோல உலர்ந்துபோய் இருந்தார். என்னுடைய பெயரைக் கேட்டார். இரண்டு தடவை சொன்னேன். அவரிடம் படித்ததையும் நினைவூட்டினேன். அவருக்கு எல்லாமே மறந்துவிட்டது. நான் விடைபெறும்போது மறுபடியும் என்னுடைய பெயரைக் கேட்டார். அவருக்கு மறதி வியாதி என்று பின்னர் கேள்விப்பட்டேன்.
எங்கள் புராணங்களிலும் மறதிக்காரர்கள் இல்லாமலில்லை. வேட்டையாடவந்த துஷ்யந்தன், காட்டிலே விளையாடிக்கொண்டிருந்த சகுந்தலையைக் கண்டு மோகித்து அவளை அங்கேயே கந்தர்வ மணம் செய்துகொள்கிறான். அடையாளமாக ஒரு மோதிரமும் தருகிறான். அவ்வளவு அவசரமாக மணம் செய்தவன் அவளை அரண்மனைக்கு அழைத்துப்போகவில்லை. தகுந்த மரியாதைகள் செய்து பரிவாரங்களுடன் வந்து அழைத்துப்போவதாகச் சொல்கிறான். ஆனால் ராஜ்ஜியத்துக்கு திரும்பியதும் அவளை மறந்துவிடுகிறான். சகுந்தலை அரண்மனைக்கு வந்து முறையிட்டபோதுகூட அவனுக்கு ஞாபகம் மீளவில்லை. பின்னர் எப்படியோ சகுந்தலையை ஏற்றுக்கொண்டான் என்று முடிகிறது கதை.
மறதி வியாதியிலிருந்து விஞ்ஞானிகளும் தப்பவில்லை. கலீலியோ என்ற தலை சிறந்த விஞ்ஞானி 17ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர்தான் பூமி சூரியனைச் சுற்றுகிறது என்பதை விஞ்ஞானபூர்வமாக முதன்முதலில் நிறுவியவர். இந்தக்கூற்றுக்காக அவருடைய முதுமையான காலத்தில் அவர்மேல் கடவுள் நிந்தனைக் குற்றம் சுமத்தி அவரை வீட்டுக் காவலில் வைத்தார்கள். இந்தச் சமயங்களில் கலீலியோ தான் இளவயதில் எழுதிய கணித சித்தாந்தங்களை எல்லாம் பரப்பிவைத்து கூர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பார். அப்பொழுது 'நான் கண்டுபிடித்து எழுதிவைத்த சித்தாந்தங்கள்கூட எனக்கு ஒன்றும் புரியவில்லையே' என்று கூறி கண் கலங்குவாராம்.
சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் மனனம் செய்வதில் எவ்வளவுதான் பயிற்சி பெற்றிருந்தாலும் முதுமையில் மறதி மெல்ல மெல்ல அணுகுவதை தடுக்க முடியாது. சமீபத்தில் கனடா செய்தித்தாள் ஒன்றில் வந்த தகவலை படித்தபோது நான் முன்னெப்பொழுதும் அடையாதவிதமாக அதிர்ச்சியடைந்தேன். தன்னுடைய செயற்கைக் காலை ஒருவர் பொது இடத்தில் மறந்து வைத்துவிட்டு போய்விட்டார். அவரைத் தேடுகிறது கனடா பொலீஸ். இந்தக் கால் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட இடது கால். அடிடாஸ் ஆண் சப்பாத்து சைஸ் எட்டு. காலின் தேய்வை வைத்து சோதித்துப் பார்த்தபோது குறைந்தது இரண்டு வருடங்களாவது இந்தக் கால் நடந்து உதவி செய்தது தெரியவந்திருக்கிறது. ஆனால் காலின் சொந்தக்காரரைக் காணவில்லை.
மறதிக்கு பரிசு கொடுப்பதென்றால் இந்த ஒற்றைக்கால்காரரை மறக்கமுடியுமா?
எனக்கு வாய்த்த ஆசிரியர்களில் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு புத்தகத்தில் இருப்பதை மனனம் செய்து அப்படியே வரிக்கு வரி சொல்லவேண்டும். பாடம் நடத்தும்போது வாத்தியார் நிற்காமல் கடகடவென்று சொல்லிக்கொண்டு வருவார். மணி அடித்ததும், தண்ணீர் கொதித்ததும் நிற்கும் கேத்தல்போல, பாடத்தை பட்டென்று நிறுத்திவிட்டு புறப்படுவார். இவருடைய பரீட்சைக்கு கண்விழித்து மனப்பாடம் செய்துவிட்டு காலையில் பரீட்சை மண்டபத்துக்கு செல்லும்போது எங்களில் சிலர் வாயையே திறக்கமாட்டோம். படித்து சேகரித்தவை வெளியே விழுந்துவிடுமோ என்ற பயம். பரீட்சையில் பாடல் வரிகள் மறந்துபோய்விடும்; கணித சூத்திரங்கள் நாக்கு நுனியில் நிற்கும், வெளியே வராது. தேதிகள் எல்லாம் முன்னுக்கு பின்னாக மாறிவிடும். அந்தக் காலங்களில் ஞாபகசக்தி சூரர்களைப் பார்த்து நான் பொறாமைப் படுவதுண்டு. அதிலே ஒருத்தன் சந்திரலேகா படத்தின் வசனங்களை சீன் சீனாக ஒப்பிக்கும் திறமை படைத்தவன்.
எங்களுடன் அன்னலட்சுமி என்ற பெண்ணும் படித்தாள். கர்வமானவள். மெல்லிய மீசையுண்டு. முழங்கை வரைக்கும் தங்க காப்புகள் குலுங்கும். அரைத்தாவணி உடுத்தி நீண்ட பின்னல் செய்து தவறாமல் ஒரேயொரு மல்லிகைப்பூவை அதில் செருகிவைத்திருப்பாள். வீட்டிலே சங்கீதம் கற்றதால் பள்ளிக்கூடத்தில் அவளுக்கு நல்ல மதிப்பு. நடு மேடையில் உட்கார்ந்து காப்புகளால் பாரம்கூடிய கையால் வலது துடையை பெரிதாக சத்தம்வரத் தட்டி பாடுவதை நான் பார்த்திருக்கிறேன். பள்ளிக்கூடத்தில் நடக்கும் விழாக்களில் எந்த நாள், எந்த நேரம், எந்த காற்று வேகம், எந்த வெப்பம், எந்த ஈரப்பதன் என்றாலும் கடவுள் வாழ்த்து பாடுவது அவள்தான். அவள் வாயினால் பாடுவதுபோல இருக்காது. முழுமுகமும் அசைந்து தசைகள் சுருங்கி அவள் வாயில் முடிந்து அதற்குள்ளிருந்து சொற்கள் வெளிவரும். ஒருமுறை 'வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்' என்று தொடங்கியவள் 'பூக்கொண்டு, பூக்கொண்டு' என்று அதே இடத்தில் நின்றுவிட்டாள். தலைமையாசிரியர் ஒவ்வொரு சொல்லாகச் சொல்லிக்கொடுத்து ஒருவாறு அன்று பாடலை முடித்தாள்.
சில வருடங்களுக்கு முன்னர் அப்படியான ஓர் ஆபத்து என்னையும் நோக்கி வந்தது.
நான் படித்த பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு நாளும் காலையில் தேகப்பியாச வகுப்பு நடக்கும். முதல் வேலையாக நேர்க்கோட்டில் நின்று நாங்கள் எண்ணிக்கொண்டே வருவோம். அதாவது one, two, three என்ற ஒழுங்கில். இந்த நம்பர்கள் சொல்வதற்கும், தேகப்பியாசத்திற்கும் என்ன தொடர்பு என்று நாங்கள் ஒருவரும் கேட்கத் துணியவில்லை. அந்த மர்மம் அன்றைக்கும் துலங்கவில்லை; இன்றைக்கும் விடுபடவில்லை. அருமைநாயகம் என்ற மாணவனுக்கு sixteen சொல்லவராது; 'சிக்கிட்டீன்' என்றே சொல்வான். அந்த வகுப்பு முடியும்வரை எங்களையெல்லாம் சிரிப்புமூட்ட இது ஒன்றே போதும். வரிசையில் நிற்கும்போது எப்படியோ அவனுக்கு அந்த நம்பர்தான் கிடைக்கும்; அவனும் சிக்கிட்டீன் என்றே சொல்வான். போகப்போக அவன் வரிசையில் நிற்கும் முன்பு தனக்கு முன் எத்தனை பேர் நிற்கிறார்கள் என்று எண்ணி 13வது இடத்திலோ 18வது இடத்திலோ போய் தந்திரமாக நின்றுகொள்வான். அந்த யுக்தியும் பலிக்கவில்லை. வாத்தியார் பார்த்துவிட்டு உயரப்படிதான் நிற்கவேண்டும் என்று ஆட்களை இடம் மாற்றுவார். உயரமான பத்மநாபன் முதலிலும், படிப்படியாகக் குறைந்து கடைசியில் ஜெகராசசிங்கமும் நிற்கவேண்டும் என்று சொல்வார். கலைந்து மறுபடியும் வரிசையில் நிற்போம். அருமைநாயகம் மீண்டும் சிக்கிட்டீன் ஆகிவிடுவான்.
இந்தச் சம்பவத்துக்கு பிறகு அவன் பெயரே எல்லோருக்கும் மறந்துவிட்டது. சிக்கிட்டீன் என்றால்தான் தெரியும். அவனும் சிக்கிட்டீன் என்று கூப்பிட்டால் பதில் சொல்லப் பழகியிருந்தான். வீட்டிலும் அவனை அப்படி அழைப்பதாக செய்திகள் வந்தன. ஒருநாள் வகுப்பில் ஆசிரியர்கூட சிக்கிட்டீன் என்று அவனைக் கூப்பிட்டது எங்களுக்கு முழு வெற்றி.
பலவருடங்கள் கழித்து கொழும்பில் அவனை ஒருநாள் சந்தித்தேன். மனைவியுடன் மிருகக்காட்சிசாலை பார்க்க வந்திருந்தான். அவள் வட்டமான தாலியும், சருகை வைத்து மொடமொடக்கும் சேலையும் அணிந்திருந்தாள். ஒரு திருமணவீட்டுக்கு போவதற்கு வெளிக்கிட்டு பாதியில் மனதை மாற்றி மிருகங்களைப் பார்க்க வந்ததுபோல பட்டது. பதினாறு சொல்லத் தெரியாவிட்டால் என்ன பெரிய நட்டம். அவன் மனைவி பேரழகி.
அவள் ஆவலுடன் மிருகங்களைப் பார்த்தாள். சற்றும் குறையாத அதே ஆவலுடன் மிருகங்களும் அவளைப் பார்த்தன. மனைவிக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தான். நானும் அப்படியே அவனை என் மனைவிக்கு அறிமுகம் செய்யலாம் என்று நினைத்தேன். எவ்வளவு யோசித்தும் சிக்கிட்டீன் என்ற பெயர்தான் எனக்கு ஞாபகம் வந்தது. மனைவியிடம் எப்படி சிக்கிட்டீன் என்று அறிமுகப்படுத்துவது. ஆனால் அவனுக்கு எப்படியோ என் சங்கடம் விளங்கிவிட்டது. முந்திக்கொண்டு 'அருமைநாயகம்' என்றான்.
ஓர் அருமையான பாதாளத்திலிருந்து அன்று நான் காப்பாற்றப்பட்டேன்.
END