ஆறாத் துயரம்

நான் பல சமயங்களில் பலர் ஆறாத் துயரம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்; எழுதியிருப்பதை  படித்துமிருக்கிறேன். நான் நேரில் கண்ட சம்பவம் ஒன்று இரண்டு நாட்கள் முன்புதான் நடந்தது.
என் நண்பர் ஒருவர் உடல் நலமில்லாமல் இருந்தார். மூன்று மாதங்களாக பல மருத்துவர்களைப் பார்த்தும் நிறைய மருந்துகள் எடுத்தும் ஒரு பிரயோசனமில்லை. எக்ஸ்ரே, ஸ்கான், ரத்தப் பரிசோதனை என்று நிறையச் செய்து பார்த்துவிட்டார்கள் ஆனால் ஒருவருக்கும் நோய் என்னவென்று பிடிபடவில்லை. வருகின்ற திங்கட்கிழமை அவர் ஆஸ்பத்திரியில் அனுமதியாகிறார். மேலும் பல மருத்துவர்கள் புதிய பரிசோதனைகளை மேற்கொள்ளுவார்கள். வியாதி என்னவென்று கண்டுபிடித்து அதற்கு சிகிச்சை ஆரம்பிப்பதுதான் நோக்கம். சிலவேளைகளில் சத்திர சிகிச்சைகூட தேவைப்படும். அவர் ஆஸ்பத்திரியில் ஒரு மாதம் இருக்கலாம், இரண்டு மாதம் இருக்கலாம். வேறு என்ன என்னவோ எல்லாம் நடக்கலாம்.
அவர் போலந்துக்காரார், வயது எண்பதுக்கு மேலே. பல மாதங்களுக்கு பிறகு ஆளை நேரில் பார்த்த நான் திடுக்கிட்டேன். எடை சரி பாதியாகக் குறைந்துவிட்டதென அவரே சொன்னார். உடைகள் ஆணியில் கொழுவிவிட்டதுபோல உடம்பில் தொங்கின. நீளமான கழுத்து சட்டென்று நடுவிலே வளைந்துபோய் கிடந்தது. மிகக் களைப்பாகக் காணப்பட்டார். இரண்டு வாக்கியத்துக்கு ஒருமுறை வாயை திறந்து காற்றை விழுங்கிவிட்டு பேசினார்.
நண்பர் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் கனடாவுக்கு வந்தவர். 60 வருடங்களை கனடாவில் கழித்துவிட்டார். தன்னுடைய இளவயதுச் சம்பவங்களை தொட்டு பேசிக்கொண்டு வந்தவர் தன் தகப்பனார் புறா வளர்த்த கதையை சொன்னார். நிறைய புறாக்களை வளர்த்து விற்பதை ஒரு பொழுதுபோக்காக அவர் செய்தார். தூது ஓலை கொண்டுபோகும் புறாக்களுக்கு பயிற்சி கொடுப்பதில் வல்லவர். புறாக்களுக்கு தங்குவதற்கு நல்ல வசதியும் உணவும் இருப்பது அவசியம். அவை கூட்டிலே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கும் விதத்தில் பார்த்துக் கொள்ளவேண்டும். கிரமமாக காலை வேளையில் உணவளித்தால் எங்கே கொண்டுபோய் விட்டாலும் அவை திரும்பிவிடும்.
ஓய்வு நாட்களில் என் நண்பரும் அவர் தகப்பனும் புறாக்களுக்கு பயிற்சி கொடுப்பார்கள். புறாவை எடுத்துக்கொண்டு ஒரு மைல் தூரம் சென்று அதை ஆகாயத்தில் எறிந்துவிடுவார்கள். இவர்கள் திரும்பமுன்னர் அது பறந்து கூட்டுக்கு வந்துவிடும். சிறிது சிறிதாக தூரத்தைக் கூட்டிக்கொண்டே போவார்கள். அவைகளுடைய உணவு நேரம் காலையில் என்பதால் அதிகாலையிலேயே புறப்பட்டு நெடுந்தூரம் சென்று புறாவை விடுதலை செய்வார்கள். உணவு நேரமானபடியால் புறா பறந்து எப்படியும் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடும். ஒன்றிரண்டு புறாக்கள் தொலைவதுமுண்டு. ஆனால் அநேகமாக எல்லா புறாக்களும் திரும்பிவிடும்.
’அப்பாவிடம் ஒரு அழகான புறா இருந்தது. வெள்ளை நிறம், வாலில் மாத்திரம் மண் தூவியது போல கொஞ்சம் மஞ்சள் படர்ந்திருக்கும். அதற்கு நான் அல்பிங்கா என்று பெயர் சூட்டினேன். போலிஷ் மொழியில் அல்பிங்கா என்றால் வெள்ளை என்று பொருள். நாங்கள் வளர்த்த புறாக்களில் அதைப்போல அழகான ஒரு புறாவையோ மூளைத்திறன் கொண்ட பறவையையோ நான் கண்டதில்லை. அந்தக் காலத்து அரசர்கள் கடிதங்களில் செய்திகள் அனுப்புவது இப்படியான புறாக்களில்தான். என்னுடைய காலத்தில்கூட ஒரு புகழ்பெற்ற டொக்ரர் அவசரமான மருந்துகளை புறாவின் காலில் கட்டி தருவித்திருக்கிறார். அப்பாவுக்கும் எனக்கும் இந்தப் புறாவில் தனி ஈடுபாடு இருந்தது. சிறிது சிறிதாக தூரத்தை கூட்டி 50 மைல் தூரம் பறப்பதற்கு அல்பிங்கா பழகிவிட்டது. எந்த திசையில் கொண்டு சென்று விட்டாலும் அது வீட்டுக்கு வந்துவிடும்.
அப்பாவுக்கு அடுத்த ஊரில் ஒரு நண்பர் இருந்தார். அவர் பெயர் ப்ரனிஸ்லோ.  எப்பொழுது அப்பாவைச் சந்திக்க வந்தாலும் அப்பாவிடம் அல்பிங்காவை பற்றி பேசுவார்; அதை தனக்கு விற்கச் சொல்லி அப்பாவை வற்புறுத்துவார். அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர் தயாராக இருந்தார். நான் அந்தப் புறாவில் எவ்வளவு அன்பு வைத்திருந்தேன் என்பதை அப்பா அறிவார். பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் என்னுடைய முதல் வேலை அல்பிங்காவை எடுத்து கையிலே வைத்து கொஞ்சுவதுதான். ஆகவே அப்பா நண்பரின் வேண்டுகோளைத் தட்டிக்கொண்டே வந்தார்.
1939ம் ஆண்டு செப்டம்பரில் ஜேர்மனி போலந்தின்மேல் படையெடுத்தது. இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தது அப்படித்தான். போலந்து ஒரு மாதத்தில் முற்றாக வீழ்ந்தது. நாங்கள் இ.ப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஒரு வருடத்திற்குள் நிலைமை மிக மோசமானது. எங்கள் குடும்பம் பெரியது. அப்பாவினால் செலவுகளை சமாளிக்க முடியவில்லை. நான் பள்ளிக்கூடத்தில் இருந்தபோது ஒரு நாள் அப்பா ப்ரனிஸ்லோவுக்கு புறாவை நல்ல விலைக்கு விற்றுவிட்டார். அதில் வந்த பணம் எங்கள் வீட்டுக்கு இரண்டு மாதத்திற்கு சாப்பாடு போட்டது என்று அப்பா பின்னாளில் சொன்னார். பள்ளியிலிருந்து வந்த நான்  அப்பா புறாவை விற்றதைக் கேள்விப்பட்டு அப்படியே மனமுடைந்து போனேன். ஒரு முழு நாள் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன். ஒரு துண்டு ரொட்டிக்கு சிரமப்பட்ட அந்தக் காலத்தில் பட்டினி கிடப்பதில் எந்தவித பொருளும் இல்லை.
ப்ரனிஸ்லோவுக்கு புறாவை விற்றபோது அப்பா ஒரு விசயத்தை அவருக்கு தெளிவாகச் சொல்லியிருந்தார். இந்தப் புறா பயிற்சி கொடுக்கப்பட்டது. அதி புத்திசாலி. இது திரும்பவும் எங்கள் வீட்டுக்கு வந்தால் அதை நான் இன்னொருமுறை உங்களுக்கு தரமாட்டேன். அவரும் சம்மதித்தே அதை வாங்கிப்போனார்.
இரண்டு வாரம் ஓடிவிட்டது. ஒருநாள் காலை நான் பாடசாலைக்கு புறப்பட்டேன். வீட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்ததும் அப்படியே திடுக்கிட்டு நின்றேன். நான் வளர்த்த அல்பிங்கா திரும்பி வந்துவிட்டது. வாசலிலே நடுங்கிக்கொண்டு நின்றது. கழுத்தை சரித்து நிமிர்ந்து பார்த்தபோது விழுந்துவிட்டது. இரண்டு கைகளிலும் அதை தூக்கியபோது இருதயம் துடிப்பதுபோல துடித்தது. அதனுடைய இரண்டு இறக்கைகளும் வெட்டப்பட்டிருந்தன. அப்படியும் 17 மைல் தூரத்தை அது இரண்டு வார காலமாக நடந்தே கடந்திருந்தது. புறா கிளையில் உட்காரும் பறவை என்பதால் அதற்கு காலின் முன்பகுதியில் மூன்று விரல்களும் பின்பகுதியில் ஒரு விரலும் இருக்கும். கிளையில் பிடித்து உட்கார வசதியாக. அல்பிங்கா நடந்து வந்ததில் பின் விரல் முற்றாக தேய்ந்துவிட்டது. முன்விரல்கள் பாதியாக மழுங்கிப்போய் ரத்தம் கசியக் கிடந்தன. நிற்க வைத்தபோது அல்பிங்கா நிற்கமுடியாமல் சரிந்து சரிந்து விழுந்தது. அன்றிரவே இறந்துவிட்டது.’
இந்தக் கதையை சொன்னபோது நண்பர் விம்மி விம்மி அழத் தொடங்கினார். அவர் தன்னுடைய அப்பாவை நினைத்தாரோ, அந்தப் புறாவை நினைத்தாரோ அல்லது தன்னை நினைத்தாரோ தெரியாது. அடக்க அடக்க அவரை மீறி ஏதோ ஒன்று நடந்தது. மெலிந்துபோன அவர் உடம்பு துடிக்க எக்கி எக்கி அழுதார். 80 வயதுக் கண்களில் இருந்து நீர் கொட்டியது. நான் என் ஆயுளிலே இவ்வளவு வயதான ஒருவர்  அழுததை பார்த்தது இதுவே முதல் தடவை. 60 வருடங்களுக்கு முன் இறந்துபோன ஒரு புறா. அதை நினைத்து அழுதார். ஆறாத் துயரம் என்பது இதுதான் என்று நினைக்கிறேன்.
END

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta