அன்பான முத்துலிங்கம்
கொக்குவில் இந்துக்கல்லூரியின் நூற்றாண்டு விழாவை இங்கு லண்டனில் கொண்டாடுகிறார்கள்.
அதற்கு பஞ்சலிங்கம் மாஸ்டர் வந்திருந்நதார் நான் எனது தொலைக்காட்சி இன்டவியுவிற்காக அவரை கூப்பிட்டிருந்தேன். அவர் வரும்பொழுது 381 பக்க நூற்றாண்டு விழா மலரை கொண்டுவந்தார் அப்பிடியே தட்டிக்கொண்டிரந்தபோது உங்களின் மறக்க முடியாத ஆசிரியர்கள் கட்டுரையை கண்டு விட்டு இந்த புத்தகத்தை எனக்கு தருவீர்களா எனது நண்பரின் கட்டுரை ஒன்று இருக்கிறது என்று
கேட்டேன். அவரும் தந்து விட்டு போனார் இப்பொழுதுதான் வாசித்தேன் அருமை உங்கள் நினைவுகள். வாசகனை கவரும் எழுத்தாளர் நீங்கள். http://mnmanas.wordpress.com/
மேலே சொன்ன கடிதத்தை லண்டனில் இருந்து பெரிய எழுத்தாளர் இளைய அப்துல்லாஹ் எழுதியிருக்கிறார். அவர் மலரை பார்த்துவிட்டார் ஆனால் எனக்கு இன்னமும் கிடைக்கவில்லை. கட்டுரை வேண்டும் என்று அடிக்கடி கடிதம் எழுதியவர்கள் மலரை அனுப்புவார்களோ தெரியாது. நான் எழுதிய கட்டுரை எனக்கு தெரியும்தானே, அதை என்ன படிப்பது. மலரின் மீதி 375 பக்கங்களில் என்ன எழுதியிருப்பார்கள். அதை படிக்கும் ஆசை இருக்கும்தானே.
இந்த நூற்றாண்டு முடிவதற்கிடையில் கிடைக்கும் என்றுதான் நம்புகிறேன். கீழே நான் எழுதிய கட்டுரை.
மறக்கமுடியாத ஆசிரியர்கள்
அ.முத்துலிங்கம்
மனித வாழ்க்கை என்பது மறதியை நோக்கிய பயணம்தான். வயதுகூடக்கூட மறதியும் கூடுகிறது. உலகப் பிரசித்தமான விஞ்ஞானி கலீலியோ தன் முதிய வயதில் தான் எழுதிய விஞ்ஞான சித்தாந்தங்களை தனக்கு முன்னால் பரப்பிவைத்து புரியாமல் பார்த்துக்கொண்டே இருப்பாராம். எல்லாமே அவருக்கு மறந்துவிட்டது. என்னைப் படிப்பித்த ஆசிரியர்களில் பலரை நான் மறந்துவிட்டாலும் சிலருடைய நினைவுகள் இடைக்கிடை எழும். அமிர்தலிங்கம் மாஸ்டருடைய நினைவும் அப்படித்தான். முறம்போல செருப்பும், மூக்குப்பொடி பட்டையும் இவருடைய அடையாளங்கள். காலையில் வெள்ளையாக இவர் கையில் காட்சியளிக்கும் கைக்குட்டை மாலையில் பழுப்பு நிறமாகிவிடும். ஆங்கிலக் கவிதைகளைப் பாடமாக்கி இவரிடம் ஒப்பிக்கவேண்டும். இவருக்கு பிடித்த பாடல் Under a spreading chestnut tree. எங்கேயோ தூரதேசத்திலிருந்து ஒரு வெள்ளைக்காரன் பாடி வைத்தது. எப்படித்தான் இரவிரவாக கண்விழித்து பாடமாக்கினாலும் மாஸ்டருக்குமுன் போய் நின்றவுடன் ரத்தமெல்லாம் தண்ணியாகிவிடும்; வாயை திறந்தால் காற்றுத்தான் வரும். 'அது என்ன சேர் chestnut tree? மாமரம்போல இருக்குமா?' என்று கேட்டால் பிடிக்காது. பிரம்பு மரம்போல இருக்கும் என்று பிரம்பை எடுத்துக் காட்டுவார்.
அந்தக் காலத்தில் எல்லா ஆசிரியர்களும் மாணவர்கள் மனப்பாடம் செய்யவேண்டும் என்றே எதிர்பார்த்தார்கள். சரித்திரம், விஞ்ஞானம், கணிதம், பூமிசாஸ்திரம் என ஒன்றுக்குமே விதிவிலக்கில்லை. 'புல்லர்' என்று ஓர் ஆசிரியர், அவருடைய உண்மையான பெயர் மறந்துவிட்டது. பள்ளிக்கூடத்திலேயே ஆக நீளமான கம்பு அவரிடம்தான் உண்டு. மேசையில் துள்ளி ஏறி அக்கிராசினர்போல அமர்ந்தவாறே கடைசி வாங்கு மாணவனை அவரால் எட்டி அடிக்கமுடியும். அவருடைய திட்டம் படிப்படியான சித்திரவதை. நாளுக்கு மூன்று திருக்குறள் பாடமாக்கச் சொல்வார்.
செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கால் என்.
எங்கே கோபம் செல்லுமோ அங்கே அதைக் காக்கவேண்டும் என்பது பொருள். இதை மனனம் செய்யவில்லை என்பதற்காகத்தான் என்னைப் போட்டு அடித்தார். அடிப்பாரே ஒழிய அந்தக் குறள் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்பதில்லை. சனி, ஞாயிறு ஓய்வாக இருக்கலாம் என்றால் இரண்டு நாளுக்கும் சேர்த்து ஆறு திருக்குறள் சொல்லவேண்டும். 'கொக்கொக்க' என்று தொடங்கும் ஒரு திருக்குறள். நான் அதை இப்படி ஒப்பித்தேன்.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
கொத்தொக்க சீர்த்த இடத்து.
இதற்கும் அடி விழுந்தது. 'குத்தொக்க சீர்த்த இடத்து' என்பதுதான் சரி. 'குருவி கொத்தும், கொக்கு கொத்தாது, குத்தும். மீனை அது செங்குத்தாகக் குத்திப் பிடிக்கும்' என்று அந்த ஆசிரியர் விளக்கம் சொல்லித் தரவில்லை; முப்பது வருடங்களுக்குப் பிறகு நானாகக் கண்டுபிடித்ததுதான்.
தில்லைநாதர் என்ற ஆசிரியர் என்னுடைய ஆகச்சின்ன வயதில் படிப்பித்தார். வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை அங்கவஸ்திரம் அணிந்திருப்பார். ஆற்றிலே இறங்கப் போவதுபோல வேட்டியை சற்று தூக்கிப்பிடித்துக்கொண்டு பிள்ளைத்தாய்ச்சிபோல அசைந்து அசைந்து நடப்பார். வகுப்பு மணி அடித்து ஐந்து நிமிடம் கழித்துத்தான் வருவார். இவர் அடிப்பது கிடையாது, ஆனால் புதுவிதமான தண்டனைகளை உண்டாக்குவார். எங்கள் பாடப் புத்தகத்தில் இரட்டைப் புலவர் பாடல்கள் இருந்தன. இவர்கள் சோடியாகவே பயணம் செய்வார்கள். ஒருவர் முதல் இரண்டு அடிகளைப் பாட மற்றவர் கடைசி இரண்டு அடிகளையும் பாடி முடிப்பார். அப்படி அவர்களுக்கிடையில் ஓர் ஏற்பாடு. எங்கள் வேலை அவற்றை மனனம் செய்வது. ஒருநாள் இரட்டையரில் ஒருவர் ஆற்றிலே தன் கந்தல் ஆடையை தப்பியபோது அது ஆற்றோடு போய்விட்டது.
ஆற்றிலே தோய்த்து அடித்தடித்து நாளுமதை
தப்பினால் நம்மை அது தப்பாதோ.
என்று அவர் பாட மற்றவர் இப்படி முடித்தார்.
இப்புவியில் – ஆனாலும் கந்தை அதிலும் ஓராயிரம் கண்
போனாலும் போச்சென்ன போ.
இந்தப் பாடலை அன்று வகுப்பில் பாடமாக்காதது இரண்டே இரண்டு பேர்தான். ஒன்று நான்; மற்றது ஜெகராஜசிங்கம். மனனம் செய்யும் வேலையில் நாங்களும் கிட்டத்தட்ட இரட்டைப்புலவர் போலத்தான். முதல் இரண்டு வரியை அவன் மறந்துவிடுவான்; கடைசி இரண்டு வரியை நான் மறந்துவிடுவேன். வகுப்பில் வேப்ப மரத்தில் செய்த புது அலமாரி வந்து இறங்கியிருந்தது. வகுப்பு முடியுமட்டும் ஆசிரியர் எங்களை அலமாரியில் வைத்து பூட்டி விட்டார். இப்பொழுது நினைத்துப் பார்த்தால் பெரிய தண்டனையாகத்தான் தோன்றுகிறது. ஆனால் அது மிகச் சாதாரணம். என் வீட்டிலேகூட ஒன்றும் சொல்லவில்லை. இன்னும் கூடிய தண்டனையாக கொடுத்திருக்கலாம் என்று ஐயா அபிப்பிராயப்பட்டார். படிப்பென்றால் மனனம் செய்வது என்ற எண்ணம் தீவிரமாகப் பரவியிருந்த காலம் அது. யார் வகுப்பில் அதிகமாக மனனம் செய்யும் திறமை பெற்றிருக்கிறாரோ அவரே கெட்டிக்காரர்.
எங்களுக்கு ஒரு சங்கீத ரீச்சர்கூட இருந்தார். அவர் இரண்டாம் உலகப்போர் முடிந்தபிறகு சிங்கப்பூரிலிருந்து வந்தவர்; எஸ்.என்.சரஸ்வதி என்று பெயர். எங்கள் கிராமத்தாரை ஆச்சரியப்படவைக்கும் சதுரமான கண்ணாடி அணிந்து, சிங்கப்பூர் ஸ்டைலில் சேலை கட்டி, அழகான தோற்றமுடன் இருப்பார். இனிமையான குரலில் பாடுவார். காலை மாலை எப்பொழுது பார்த்தாலும் அப்பொழுதுதான் புகைப்படத்துக்கு தயாரானதுபோல மெல்லிய ஒப்பனையில் காணப்படுவார். முதல் நாள் முதல் வகுப்பில் தியாகராஜருடைய கீர்த்தனை ஒன்றை எடுத்த எடுப்பில் சொல்லித் தந்தார். 'ஸரஸ சாமதான பேத தண்ட சதுர' என்று அது தொடங்கும். ஆங்கிலத்தில் கவிதை பாடமாக்கி களைத்து, தமிழ் பாடல்களை பாடமாக்கி களைத்திருந்த எனக்கு தெலுங்கிலும் மனப்பாடம் செய்யவேண்டிய கட்டாயம். ஒரு தவணை முழுக்க அவர் என்னைப் படிப்பித்தார். அப்படியும் பழக்கப்படாத என் மூளைக்குள் தெலுங்கு ஏறச் சம்மதிக்கவில்லை.
சமீபத்தில் கனடாவில் ஒரு திருமண விருந்தில் இங்கிலாந்திலிருந்து வந்து கலந்துகொண்ட என்னுடைய சங்கீத குருவைச் சந்தித்தேன். அதே சதுரமான கண்ணாடி, அதே இனிமையான குரல். 'என்னை ஞாபகமிருக்கிறதா?' என்று கேட்டேன். ஒருநிமிடம்கூட யோசிக்காமல் இல்லை என்றார். 'ஸரஸ சாம' என்று தொடங்கும் தியாகராஜருடைய கீர்த்தனையின் பல்லவியை காபிநாராயணி ராகத்தில் அத்தனை சனங்களின் முன்பும் பொய்க்குரலில் பாடிக் காண்பித்தேன். எனக்கு பின்னாலிருந்த நாற்காலி திடீரென்று பாடத் தொடங்கியதுபோல ஸ்தம்பித்துப்போய் நின்றார். என் முகத்தை ஞாபகத்துக்கு கொண்டுவர முயன்று முயன்று தோற்றார். திருமண விருந்து முடிவுக்கு வரும்வரை நான் யார் என்பதை அவருக்கு சொல்லவில்லை. ஒரு வஞ்சம் தீர்ப்பதில் உள்ள இன்பம் ஈடு இணையற்றது.
எங்கள் பள்ளிக்கூடத்தில் படித்த சகல மாணவரையும் கலங்க வைத்த ஓர் ஆசிரியர் இருந்தார். அவருடைய பெயர் எம்.எஸ். நேரசூசிகையை விளம்பரப் பலகையில் ஒட்டியதும் மாணவர்கள் ஓடிப்போய் முதலில் பார்ப்பது எம்.எஸ் ஏதாவது பாடம் எடுக்கிறாரா என்பதுதான். அவர் பாடம் எடுக்கும் வகுப்பர்களைப் பார்த்து ஏனைய மாணவர்கள் ஆறுதல் சொல்வார்கள். குதிரை மேலிருந்து பார்ப்பது போலத்தான் அவர் மாணவரைப் பார்ப்பார். அவர் எங்களுக்கு பூமிசாஸ்திரம் பாடம் எடுத்தார். பிழைகள் பொறுக்க மாட்டாதவர். அவர் வகுப்பை தொடங்கமுன்னர் பட்டினத்தாருடைய 'கல்லாப் பிழையும், கருதாப் பிழையும்' பாடலை முழுதாக மனதுக்குள் ஒருமுறை சொல்லிக்கொள்வேன்.
ஆங்கிலக் கவிதை, தமிழ் கவிதை, தெலுங்குக் கீர்த்தனை என்று பாடமாக்கச் சொன்னால் கொஞ்சம் முயன்று பார்க்கலாம். ஆனால் எம்.எஸ் வரைபடத்தை மனனம் செய்யச் சொல்லுவார். வெண்கட்டியை எடுத்து உலக வரைபடத்தை கரும்பலகையில் கையெடுக்காமல் வரைவார். இலங்கையின் ஆகத் தெற்குப் புள்ளி தேவேந்திரமுனை. அதிலேயிருந்து ஒருவர் தெற்குப்பக்கமாக நேராக போனால் சரியாக தென்துருவத்துக்கு போய்விடலாமாம். அதைக் கீறியும் காட்டுவார். உலகத்தில் எத்தனை நாடுகள் இருக்கின்றன, அத்தனையையும் நினைவில் வைக்கவேண்டும். அட்சரேகை, தீர்க்கரேகை, கண்டங்கள், சமுத்திரங்கள், நாடுகள், கடல்கள், மலைகள், ஆறுகள், நகரங்கள் என்று முடிகின்ற காரியமா? எங்களை ஒவ்வொருவராக அழைப்பார். பால்குத்த வந்தவனிடம் போவதுபோல நாங்கள் அரக்கி அரக்கி போவோம். அவருடைய வரைபடத்தில் அவர் சொல்லும் இடங்களை நாங்கள் தொட்டுக் காட்டவேண்டும். 'அந்தமான் நிக்கோபார்' என்பார். திரும்பி மானைத் தேடும்போது தண்டனை ஆரம்பித்துவிடும்.
வந்தியத்தேவன் பனை இலச்சினை மோதிரத்தை எடுப்பதுபோல அன்பொழுக கதைத்தபடி தன் விரலில் இருந்த மோதிரத்தை கழற்றி அடுத்த கைவிரலுக்கு மாற்றுவார். குட்டு விழப்போகிறது. இவர் குட்டினால் பள்ளத்தில் ஒரு பட்டை தண்ணீர் நிற்கும் என்பது ஐதீகம். இடிபோல குட்டு இடப்பக்கம் இறங்கும். அன்றுவரை இடப்பக்க மூளையில் சேகரமாயிருந்த தகவல் எல்லாம் வலப் பக்க மூளைக்கு மாறிவிடும்.
இவரை நான் மன்னித்துவிட்டேன். கடைசி வரைக்கும் மன்னிக்க முடியாத ஓர் ஆசிரியர் இருந்தார். அவர் பெயர் ஹென்ஸ்மன். இவர் எங்களுக்கு வேதியியல் பாடம் எடுத்தார். வேதியியல் முழுக்க சமாந்திரங்கள் நிறைந்திருக்கும் ஆனால் இவர் அவற்றை நாங்கள் பாடமாக்கவேண்டும் என்று சித்திரவதை செய்வதில்லை. நாங்கள் வணக்கம் சொல்லிவிட்டு உட்கார்ந்ததும் மனிதர் நடந்துகொண்டே வாயை திறந்து பேசத்தொடங்குவார். வார்த்தைகள் சங்கிலிக் கோர்வையாக விழும். வகுப்பின் கடைசியில் போய் நின்று பேசும்போது வார்த்தைகள் பின்னாலிருந்து முன்னுக்கு வரும். ஒன்றுமே புரியாது. அது நல்ல வசதியாக இருந்ததால் நாங்கள் எங்கள் பாட்டுக்கு ஏதாவது செய்து நேரத்தை உபயோகமாகக் கழிப்போம்.
ஒரு தடவை என் கையில் கல்கி தீபாவளி மலர் கிடைத்தது. அது ஒரு பொக்கிஷம்போல. ஒன்றேகால் அடி நீளம், ஓரடி அகலத்தில் தொக்கையாக இருக்கும். மத்தியானம் நல்லாகச் சாப்பிட்டிருந்தால் ஒழிய அதை தூக்க முடியாது. 20 பேர் படித்து முடித்த பிறகு அது என்னிடம் வந்திருந்தது. எனக்கு பிறகு இன்னும் 20 பேர் காத்துக்கொண்டிருந்தார்கள். இரவல் வாங்கிய தீபாவளி மலரை நான் வீட்டாருக்கு தெரியாமல் எடுத்து வந்திருந்தேன். பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் எழுதியிருந்தார்கள். வழுவழுப்பான காகிதம்; அற்புதமான படங்கள். அந்தக் காலத்தில் கல்கி தீபாவளி மலரில் ஓர் ஆக்கம் வந்திருந்தால் அதுவே உச்சமான அங்கீகாரம். அன்று ஹென்ஸ்மன் மாஸ்டர் பிராண வாயு பற்றி பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். நான் மேசைக்கு கீழே தீபாவளி மலரை விரித்து வைத்து அடுத்த நிமிடம் பிராணன் போய்விடக்கூடும் என்பதுபோல ரகஸ்யமாகப் படித்துக்கொண்டிருந்தேன். அதை ஹென்ஸ்மன் மாஸ்டர் எப்படியோ தன் சஞ்சாரத்தில் கண்டுபிடித்து மலரை பறித்துக்கொண்டு போய்விட்டார். எவ்வளவு கெஞ்சியும் திருப்பி தரவில்லை. அடுத்த தீபாவளி வந்தபோதுகூட அது திரும்ப என் கையில் கிடைக்கவில்லை.
சில வருடங்களுக்கு முன்னர் கல்கி தீபாவளி மலரில் என்னுடைய சிறுகதை ஒன்று பிரசுரமாகியிருந்தது. நல்ல தாளில், நல்ல வண்ணச் சித்திரத்துடன் வெளியாகியிருந்த கதையை படித்தபோது எங்கேயாவது ஓய்விலிருக்கும் ஹென்ஸ்மன் மாஸ்டர் அதைப் படிக்கக்கூடும் என்று ஒரு சின்ன நம்பிக்கை. அப்பொழுதாவது என்னிடமிருந்து என்றென்றைக்குமாக பறித்துக்கொண்ட தீபாவளி மலர் ஞாபகம் அவருக்கு வந்திருக்குமோ என்னவோ?
இரட்டைப்புலவர் இருந்ததுபோலவே எங்கள் பள்ளிக்கூடத்தில் இரட்டை ஆசிரியைகளும் இருந்தார்கள். இருவருக்கும் வயது 19, 20 இருக்கும். ஒரே மாதிரி மடிப்பு வைத்து, ஒரே கலரில் சேலை உடுத்தி வருவார்கள். சுகிர்தம் ரீச்சரின் முகம் முட்டை வடிவில் இருக்கும்; ஞானாம்பிகை ரீச்சரின் முகம் கோணங்களால் உருவானது. இருவரும் மான்குட்டிகள்போல துள்ளித்துள்ளி படியேறுவார்கள்; எப்ப பார்த்தாலும் ஒன்றாகவே திரியும் அவர்கள் ஒன்றே ஒன்றில் மட்டும் வித்தியாசப் படுவார்கள். சுகிர்தம் ரீச்சர் வாயை கையினால் மறைத்து களுக் என்று ஒரு ஸ்வரத்தில் சிரிப்பார். ஞானாம்பிகை ரீச்சர் விழுந்து விழுந்து நீளமாக சிரிப்பார்.
சுகிர்தம் ரீச்சர் எங்களுக்கு சரித்திரம் படிப்பித்தார். ஒரு நாட்டின் சரித்திரம் அதை ஆண்ட அரசர்களின் சரித்திரம்தான் என்று நினைத்த யாரோ எழுதிய புத்தகம். இந்தப் புத்தகத்தில் நிறைய அரசர்கள் வந்துவந்து போவார்கள். போர் புரிந்து அடுத்தவர் ராச்சியத்தை கைப்பற்றுவார்கள். தோற்றால் ஓடிப்போய் குகைகளில் ஒளிந்துகொள்வார்கள். மலையை பிடித்து கோட்டை கட்டுவார்கள். அதற்குமுன் தகப்பனை கொன்று சுவருக்குள் புதைத்து வைக்க மறக்கமாட்டார்கள். ராணியும் சும்மா இருப்பதில்லை. நிறையப் புருசர்களை அடுக்கடுக்காக நஞ்சு வைத்து கொல்லுவாள். பொலநறுவையை பிடித்து தமிழர்களை துரத்துவார்கள்; பின்னர் தலைநகரத்தை மாற்றுவார்கள். போர் எல்லாம் முடிந்து ஒன்றும் செய்ய இல்லாவிட்டால் குளங்கள் வெட்டுவார்கள். முடிகிற காரியமா? இவர்கள் வென்ற தேதிகள், தோற்று குகையை பிடித்த தேதிகள், நஞ்சுவைத்துக் கொன்ற புருசர்களின் எண்ணிக்கை, கட்டிய குளங்களின் பெயர்கள், வெட்டாத கால்வாய்களின் பெயர்கள் எல்லாத்தையும் நினைவில் வைக்க வேண்டும்.
எந்தவொரு புதுவகுப்புக்கு போனாலும் நான் வழக்கப்படி என் பெயரை மேசையின் மூலையில் கூரிய ஆயுதத்தால் எழுதிவைத்துவிடுவேன். சம்பந்தர் தன்னுடைய தேவாரங்களில் 'சிவஞானசம்பந்தன் சொன்ன இம்மாலையீரைந்தும்' என்று ஞாபகமாக தன் பெயரை பாடி வைப்பதுபோல நானும் வருங்கால சந்ததியினருக்காக என் பெயரை செதுக்கியிருப்பேன். உலகத்திலே மேசை இருக்கும்வரை என் பெயரும் நிலைக்கும். அத்துடன் நிற்காமல் சரித்திர பாடத்தில் முக்கியமாக படித்த தேதிகளையும் செதுக்கி வைத்திருப்பேன். ஆனால் சோதனை அன்று மேசைகளை மாற்றி வைத்துவிட்டபடியால் சரித்திரத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் என் முயற்சி தோற்றது. அதை தெரிந்தே சுகிர்தம் ரீச்சர் செய்தார் என்று நினைக்கிறேன். நான் இல்லாத சமயமாகப் பார்த்து கையினால் வாயை மூடி களுக் என்று சிரித்தாலும் சிரித்திருப்பார்.
ஞானாம்பிகை ரீச்சர் படிப்பித்தது கேத்திர கணிதம். கோணங்களாலான முகம் கொண்ட அவர் கேத்திர கணிதம் படிப்பித்தது மிகப் பொருத்தமானதுதான். இரண்டு சம அளவான பக்கங்களைக் கொண்ட முக்கோணத்தை சரி பாதியாகப் பிளந்து உண்டாக்கும் இரண்டு முக்கோணங்களும் சமம் என்று நிரூபிக்கச் சொல்வார். அதை ஏன் நிரூபிக்க வேண்டும்? பார்த்தவுடனேயே தெரிகிறது. நிரூபணத்தை கடுமையாக யோசித்து எழுதிக்கொண்டு போனால் பென்சிலைக் கடித்துக்கொண்டு நான் எழுதியதை படித்துப் பார்த்துவிட்டு 'உன்னுடைய மூளை நான் சொல்லித் தாறதை உடனுக்குடன் மறந்துவிடுகிறது' என்று சொல்லி என் தலையில் என்னுடைய கொப்பியாலேயே செல்லமாக ஒரு தட்டு தட்டி அனுப்பிவிடுவார்.
எங்கள் வகுப்பில் இரண்டே இரண்டு பெண்கள்தான். அதில் ஒருத்தியின் பெயர் வாகேஸ்வரியோ பாகேஸ்வரியோ என்னவோ. மறந்துவிட்டது. பல்லிபோல ஒல்லி உடம்பு. கணுக்காலைத் தொடாமல் கட்டையாகிவிட்ட ஒரே பாவாடையை தினம் அணிந்து வருவாள். சுபாஷ் கஃபேயில் ஒன்றுக்குமேல் ஒன்றாக உயரமாக அடுக்கிவைத்திருக்கும் கழுவாத கோப்பைகள்போல எந்த நேரமும் விழுந்துவிடலாம் என்பதுபோல அசைந்தபடி நிற்பாள். இவள் கேத்திர கணிதத்தில் கெட்டிக்காரி. கொப்பியில் மூக்கு தொடுகிறமாதிரி குனிந்து கணக்கை எழுதிவிட்டு கொப்பியை தூக்கிக்கொண்டு ரீச்சரிடம் முதலில் ஓடுவது இவள்தான். வாயில் குறுக்காக ஒருசதக் குத்தியை வைத்து விசில் அடிப்பதுபோன்ற கீச்சுக்குரலில் இவள் கதைக்க, ரீச்சர் இவளை மகிமைப் படுத்துவார். எங்களால் பொறுக்கமுடியாமல் போகும்.
ஒருநாள் எப்படியும் இவளை தோற்கடிக்கவேண்டும் என்று வேகமாகக் கணக்கை போட்டேன். எங்கள் வகுப்பறை தரையில் மணல்தான் இருக்கும். என்னுடைய பென்சில் தேய்ந்து தேய்ந்து ஆட்டுப் புழுக்கை சைசுக்கு வந்துவிட்டது. இரண்டு விரல்களால் தந்திரமாகப் பிடித்தால்தான் எழுதமுடியும். அவசரத்தில் எழுதும்போது பென்சில் மணலில் விழுந்து, விழுந்த கணமே மறைந்துவிட்டது. எவ்வளவு தேடியும் கிடைக்காததால் தொடங்கிய கணக்கை நான் முடிக்கவில்லை. அன்று ஞானாம்பிகை ரீச்சர் கோபம் வந்து என்னுடைய வெறும் கொப்பியில் இரண்டு கோடுகள் குறுக்காக கீறியது இன்றைக்கும் நினைவில் நிற்கிறது.
அவருடைய ஞாபகம் சில வருடங்களுக்கு முன்னர் எனக்கு மீட்கப்பட்டது. நான் பாகிஸ்தானில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் விருந்திலே இளம்பெண் ஒருவரைச் சந்தித்தேன். அவர் உலக வங்கியில் அதிகாரியாக பணியாற்றினார்; பெயர் ஜீவா என்று சொன்னார். அவருடைய வாழ்க்கையை பின்னோக்கி தள்ளிக்கொண்டு போனதில் அவர் ஞானாம்பிகை ரீச்சரின் மகள் என்பது தெரிய வந்தது. 'உங்களுடையை அம்மா கண்டிப்பான ஆசிரியை' என்று சொன்ன நான் மணலில் பென்சிலை தொலைத்த கதையை கூறிவிட்டு 'இன்றைக்கும் என்னுடைய பென்சில் அந்த மணலில் கிடக்கும்' என்றேன். மகள் நான் வேறு ஏதோ மொழியை பேசியதுபோல என்னையே பார்த்தார். பிறகு திடீரென்று விழுந்து விழுந்து பல ஸ்வரங்களில் சிரித்தார்.
Under a spreading chestnut tree பாடலை பாடமாக்கச் சொன்ன அமிர்தலிங்கம் மாஸ்டரை நினைவுக்கு கொண்டுவரும் சம்பவம் சமீபத்தில் நான் பொஸ்டனுக்கு போனபோது நடந்தது. அங்கே ஒரு பாலத்தை லோங்ஃபெல்லோ பாலம் என்று அழைத்தார்கள். லோங்ஃபெல்லோ இளைஞனாக இருந்த காலத்தில் தன் காதலியைப் பார்க்க அந்தப் பாலம் வழியாக போய் வருவாராம். அந்த ஞாபகமாக பாலத்துக்கு அவர் பெயரை சூட்டியிருந்தார்கள். லோங்ஃபெல்லோ வாழ்ந்த மாளிகையை இப்பொழுது மியூசியமாக மாற்றியிருக்கிறார்கள். இவருடைய பாடலைத்தான் நான் 60 வருடங்களுக்கு முன்னர் மணிக்கணக்காக உட்கார்ந்து மனப்பாடம் செய்திருக்கிறேன்.
Under a spreading chestnut-tree
The village smithy stands;
The smith, a mighty man is he,
With large and sinewy hands;
And the muscles of his brawny arms
Are strong as iron bands.
அவர் பாடிய செஸ்நட் மரத்தை வெட்டியபோது அந்த ஊர் குழந்தைகள் ஒரு சாய்வு நாற்காலியை அதே மரத்தில் செய்து லோங்ஃபெல்லோவுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார்கள். கவியும் தன் முதுமைக் காலத்தை கணப்பு அடுப்புக்கு முன் செஸ்நட் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தபடியே கழித்தாராம்.
'இதுவா அந்த செஸ்நட் மரம்? பிரம்பு மரம்போல இல்லையே! அந்த மரத்தினால் செய்யப்பட்ட நாற்காலியா இது?' வழிகாட்டிப் பெண் இல்லாத சமயம் பார்த்து அந்த நாற்காலியில் நான் ஒரு நிமிடம் அமைதியாக சாய்ந்து கண்மூடி அமர்ந்துகொண்டேன். கைவிளக்கு ஒளியில் தனிமையில் உட்கார்ந்து மொழி புரியாத பாடலை மனனம் செய்யும் ஒரு சிறுவனின் உருவம் தெரிந்தது. இரண்டு மொழிகளைக் கற்று, இரண்டு நாடுகளில் வசித்து, இரண்டு நூற்றாண்டுகளைப் பார்த்துவிட்ட எனக்கு அந்தக் கணம் மறக்கமுடியாததாகத் தோன்றியது. அந்த பாடலைப் பாடிய கவியையோ, மரத்தின்கீழ் நின்று நாள் முழுக்க வேலை செய்த கொல்லரையோ, அந்தக் நாற்காலியை செய்துகொடுத்த குழந்தைகளையோ அப்பொழுது நான் நினைக்கவில்லை. நான் நினைத்ததெல்லாம் அமிர்தலிங்கம் மாஸ்டரைத்தான்.
END