’வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை ஏதாவது இருக்கிறதா?’ என்றார் நண்பர். இருக்கிறதே என்று பதில் கூறினேன். சொல்லுங்கள் என்றார். ’உங்களிடம் இரண்டு மணிநேரம் அவகாசம் இருக்கிறதா?’ என்றேன். ’இரண்டு மணிநேரம் எதற்கு?’ ’என்னுடைய நிறைவேறாத ஆசைகளை நான் பட்டியலிடுவதானால் அதற்கு இரண்டுமணிநேரம் எடுக்கும்’ என்றேன். நண்பர் திகைத்துவிட்டார். ‘அத்தனை ஆசைகளா, சரி ஒன்றைச் சொல்லுங்கள்’ என்றார். ’பாரசூட்டிலிருந்து குதிப்பது என்னுடைய ஆசை’ என்றேன். அவர் என்னை ஆச்சரியமாகப் பார்க்கவில்லை. ’அது இலகுவானது. தெரியுமா, நான் குதித்திருக்கிறேன். ஒரு பயிற்சிக்காரர் உங்களுடன் குதிப்பார். உங்களையும் அவரையும் ஒரு கயிறு இணைத்திருக்கும். அவர் இழு என்றதும் நீங்கள் பாரசூட்டை விரிக்கும் பிரத்தியேகமான கயிற்றை இழுத்தால் அது விரியும். அப்படியே சேமமாக நிலத்தை வந்து அடையலாம்’ என்றார்.
நண்பருடைய அறை ஒரு பழைய கட்டிடத்தின் 16வது மாடியில் இருந்தது. ஒரு ரயில்பெட்டி எப்படி காட்சியளிக்குமோ அப்படி ஒடுக்கமாக நீண்டிருந்தது. நடுவிலே ஒரு தூண் தொலைக்காட்சி பெட்டிக்கு முன் நின்றது. கழுத்தை இப்படியும் அப்படியும் நீட்டித்தான் டிவியை பார்க்கமுடியும். அவர் முனைவர் பட்டத்துக்கு படித்துக்கொண்டிருந்தார். நாலுபேர் அமர்ந்து சாப்பிடும் மேசை. நடுவிலே ஒரு பலகையை செருகினால் அது ஆறுபேர் அமர்ந்து சாப்பிடும் மேசையாக மாறிவிடும். அதன் முன்னால்தான் அவர் அமர்ந்திருந்தார். நீளவாக்கில் அடுக்கி வைத்திருந்த நூற்றுக்கணக்கான நூல்களிலிருந்து ஒருவிதமான புத்தக நெடி வீசியது. நான் ‘அது என்ன, சாள்ஸ் நதியா?’என்று கீழே சுட்டிக்காட்டி கேட்டேன். ஓமோம் என்று சொன்னபடி எழுந்து வந்து யன்னலைத் திறக்க முயன்றார். முடியவில்லை. கடந்த 30 வருங்களாக அதை யாரும் திறந்ததாகத் தெரியவில்லை.
என்னுடைய நிறைவேறாத ஆசை பிரகடனம் நண்பரை என்ன செய்ததோ அடுத்தநாள் அவர் எனக்கு டெஸ்மண்டை அறிமுகம் செய்துவைத்தார். டெஸ்மண்ட் அமெரிக்க ராணுவத்தில் ஐந்தரை வருடங்கள் சேவைசெய்துவிட்டு சமீபத்தில்தான் விலகியிருந்தார்; பாரசூட் பிரிவின் காப்டனாக இருந்தவர். நண்பர் எனக்கு இரண்டு நிபந்தனைகள் விதித்தார். 'நீங்கள் டெஸ்மண்டிடம் என்னவும் கேட்கலாம், ஆனால் போர்பற்றி ஒன்றும் பேசக்கூடாது. அவர் என்னுடைய நண்பர், எங்கள் நட்புக்கு உங்களால் ஏதும் சேதம் ஏற்படக்கூடாது. எப்படியும் டெஸ்மண்ட் பற்றி நீங்கள் எழுதுவீர்கள் என்பது எனக்குத் தெரியும், அதை நான் நிறுத்த முடியாது, அவருடைய உண்மையான பெயரைமட்டும் நீங்கள் வெளியிடக்கூடாது' என்றார். நானும் ஐந்தாம் வகுப்பு மாணவன்போல தலையை குனிந்துகொண்டு சரி என்றேன்.
டெஸ்மண்ட் ஆறடி உயரமாக இருந்தார். புஜங்கள் அகன்று இருந்தன. ஒரு சிங்கம் எழும்பி நின்றால் அதன் வயிறு எப்படி இருக்குமோ அப்படி அவருடைய இடுப்பு சிறுத்து இறுகிப்போய் இருந்தது. மெல்லிய கறுத்த பெல்ட் அணிந்திருந்தார். சிரித்துக்கொண்டே கைகளைப் பிடித்து குலுக்கினார். ஆரம்பத்திலேயே அவரிடம் இரண்டு பிரச்சினைகள் இருப்பதை நான் கண்டுகொண்டேன். மிக அடக்கமானவராக இருந்தார். வாய் திறந்து பேசமாட்டார். நான் அது செய்தேன் இது செய்தேன் என்று சொல்லும் பேர்வழியுமல்ல. ஆகவே அவரிடமிருந்து விசயத்தை பிடுங்குவது மகா கடினமாக இருக்கும். இரண்டாவது, ராணுவச் சொற்களை தாராளமாக உபயோகித்தார். அதிலே பாதி எனக்கு என்னவென்றே புரியவில்லை.
உயர்நிலை பள்ளித்தேர்வில் டெஸ்மண்டுக்கு ஆகக்கூடிய மதிப்பெண்கள் கிடைத்திருந்ததால் அவரால் அமெரிக்காவின் புகழ்பெற்ற West Point ராணுவ பயிற்சி நிலையத்துக்குள் இலவசமாக நுழைய முடிந்தது. நாலுவருட படிப்புக்கு அவருக்கு கிடைத்த புலமைப் பரிசு 250,000 டொலர்கள். இந்த நாலு வருடங்களில் பல்கலைக்கழக படிப்புடன் ராணுவ பயிற்சியும் அவருக்கு அளிக்கப்பட்டது. பயிற்சித் திட்டத்தின் நிபந்தனை என்னவென்றால் படிப்பு முடிந்த பிறகு ராணுவத்தில் குறைந்தது ஐந்து வருடங்கள் அவர் வேலை பார்க்கவேண்டும். அதற்கு பின்னர் வேண்டுமானால் ராணுவ சேவையில் தொடரலாம் அல்லது விலகலாம். டெஸ்மண்ட் ஐந்தரை வருட சேவைக்கு பின்னர் ராணுவத்திலிருந்து தானாக வெளியேறினார்.
வெஸ்ட் பொயின்ற் ராணுவ பயிற்சி கடுமையானதா என்று கேட்டேன். ’உலகத்திலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த பயிற்சிக்கூடம் இது. நான் சேர்ந்த அன்று எனக்கு வயது 18. அங்கே சேர்ப்பதற்கு அம்மா என்னை காரிலே அழைத்து வந்திருந்தார். பிரியும்போது அவர் அழுஅழுவென்று அழுதார். நான் அதுவரைக்கும் அம்மாவை விட்டு பிரிந்ததே இல்லை. எனவே என்னை கட்டுப்படுத்திக்கொண்டேன். ராணுவத்தின் கட்டளைப்படி நான் எடுத்து வந்தது ஒரு கறுப்பு சப்பாத்து, கறுப்பு காலுறை, ஒரேயொரு புகைப்படம். மீதியெல்லாம் ராணுவம் தந்தது. என்னுடன் சேர்ந்தவர்கள் பலர் பாதியிலேயே பயிற்சியின் கடுமை தாங்காமல் விட்டுவிட்டு போய்விட்டார்கள். எப்படியும் நாலுபேரில் ஒருவர் பயிற்சியை விட்டுவிடுவார்.’
அப்படி என்ன கடுமையான பயிற்சி? ஏதாவது உதாரணம்?
’60 றாத்தல் பொதியை முதுகில் கட்டிக்கொண்டு 12 மைல்தூரம் நடக்கவேண்டும். கனமான துப்பாக்கியை கையில் ஏந்திக்கொண்டு பல தடவை மைதானத்தை சுற்றி ஓடவேண்டும். செங்குத்தான பாறைகளில் வேகமாக ஏறவேண்டும். இப்படிப் பல தேகப்பயிற்சிகள் உண்டு. முணுமுணுக்க முடியாது, முணுமுணுத்தால் இன்னும் பெரிய தண்டனை உங்களுக்கு காத்திருக்கும். உங்களுக்காக அதிகாரிகளிடம் வாதாட ஓர் ஆன்மா இல்லை. நீங்கள்தான் உங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.’
எதற்காக பாரசூட் பயிற்சியை தேர்வு செய்தீர்கள்?
’எங்களுக்கு எல்லாவகையான ஆயுதங்களிலும் பயிற்சி கிடைத்தது. சகல தற்காப்பு கலைகளும் படிப்பித்தார்கள் எனக்கு ஏனோ ஆகாயத்தில் இருந்து குதிக்கும் அந்த சாகசமும், சுதந்திரமும் பிடித்திருந்தது.’
நீங்கள் காப்டன் ஆனபின்னர் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லுங்கள்?
’எங்கே குதிக்கவேண்டும் என்பதை தீர்மானித்த பிறகு விமானம் உங்களைக் காவிச் செல்லும். குதிக்கும் இடம் அணுகியதும் இரண்டு கதவுகள் வழியாலும் 30, 30 பேர், மொத்தமாக 60 பேர், குதிக்கவேண்டும். ஒருவருக்கும் அடுத்தவருக்கும் இடையில் உள்ள வித்தியாசம் ஒரு செக்கண்ட் மட்டுமே. கொடுக்கப்பட்ட 30 செக்கண்டில் அறுபது பேரும் குதித்துவிடவேண்டும். தாமதித்தால் குதிக்கவேண்டிய இடம் தாண்டிவிடும். ஒருவர் தாமதம் செய்தாலும் அது முழுக் குழுவுக்கும் ஆபத்தாக முடிந்துவிடும்.’
அப்படி உங்கள் அனுபவத்தில் ஏதேனும் நடந்ததா?
’என்னுடைய வீரர் ஒருவர் குதிக்கும் முறை வந்ததும் தயங்கி நின்று மறுத்துவிட்டார். குதிக்கும்போது ஒருவர் பின்பக்கமாக சாய்ந்து அப்படியே விழவேண்டும். அவரை நான் முழுப்பலத்தையும் பிரயோகித்து தள்ளவேண்டி நேர்ந்தது. அவர் சரியாக விழுந்து கீழே சேமமாக நிலத்தை அடைந்தார். அவரைத் தள்ளியதில் நான் நிலைதடுமாறி முன்பக்கமாக விழுந்தேன். என்னை சரிசெய்துகொள்ள முடியாமல் விழுந்து நிலத்திலே அடிபட்டு மயங்கிய நிலையில் பலநாட்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று தப்பினேன்.’
வேறு ஏதாவது அனுபவங்கள்?
’பாரசூட் குதிப்பதில் stealing the air காற்றைத் திருடுவது என்பது மிகப் பாரதூரமான குற்றம். ஒருவருக்கு மேல் இன்னொருவர் பாரசூட் இறங்கும்போது ஒருவர் காற்றை இன்னொருவர் திருடிவிடுவார். அப்படி காற்று இல்லாமல் ஒரு வீரர் நிலத்திலே விழுந்து இரண்டு காலும் உடைந்து நீண்டகாலம் மருத்துவ மனையில் இருந்தார்.’
நீங்கள் ராணுவத்தை விட்டு விலகியதையிட்டு எப்பொழுதாவது வருந்தியிருக்கிறீர்களா?
’ராணுவம் என்பது ஒரு தனி நபரின் வீரதீரச் செயல் அல்ல. நீங்கள் திரைப்படத்தில் பார்ப்பது உண்மையில் நடப்பதில்லை. அது ஒரு கூட்டு முயற்சி. ஒரு குழுவின் பாதுகாப்பு ஒவ்வொருவர் கையிலும் தங்கியிருக்கிறது. ஒருவர் செய்யும் தவறு முழுக்குழுவுக்கும் பாதகமாக முடியலாம். ஆகவே நாங்கள் மிக நெருக்கமாக இருந்தோம். ஒருவருக்கு ஆபத்து என்றால் இன்னொருவர் உயிரைக் கொடுக்க தயங்க மாட்டார். என்னுடன் பயிற்சி பெற்ற சில நண்பர்கள் இறந்துபோனார்கள். சின்ன வயதில் இருந்து என்னோடு படித்து என்னோடு பயிற்சியில் சேர்ந்த என் ஆருயிர் நண்பன் போரில் இறந்துபோனான்.’
அவருடைய பெயர் என்ன?
'பெயர் Jared C.Monti. அமெரிக்க ராணுவத்தில் வீரத்துக்கு கிடைக்கும் அதி உயர் விருதான Medal of Honor விருது அவருக்கு கிடைத்தது. வீரசாகச விருதுகள் அநேகமாக அதைச் செய்தவரின் கையில் கிடைப்பதில்லை. அவர் இறந்துவிடுவார். என்னுடைய நண்பரின் விருதை அவரின் பெற்றோர்கள் 2009ம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்கள். என் நண்பரை நான் விட்டு பிரிந்தது இன்றும் பெரிய குற்ற உணர்வாக எனக்குள் இருக்கிறது.'
நீங்கள் ராணுவத்தில் கற்றது உங்கள் வாழ்க்கைக்கு உதவுகிறதா?
’அங்கே கற்றது வாழ்நாள் முழுக்க உங்கள்கூட வரும். வெற்றியின் அடிப்படை பலம் குழு முயற்சி. ஒரு தலைவன் தன் கீழ் வேலைசெய்யும் வீரர்களின் நம்பிக்கையையும் மதிப்பையும் சம்பாதிக்கவேண்டும். கடைசியாக விடாமுயற்சி. எடுத்த காரியத்தை பாதியில் விடக்கூடாது.’
பொறுமையாக என்னுடைய கேள்விகள் எல்லாவற்றுக்கும் டெஸ்மண்ட் பதில் அளித்தார். நான் இதற்குமுன்னர் ஒரு அமெரிக்க ராணுவவீரரை சந்தித்தது கிடையாது. அவரிடம் கேட்பதற்கு என்னிடம் நிறையக் கேள்விகள் இருந்தன. ஆனால் அறிமுகப் படுத்திய நண்பர் எனக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதனால் தயக்கம் ஏற்பட்டது.
’அதெல்லாம் இருக்கட்டும், உங்களுக்கு பாரசூட்டில் குதிக்க விருப்பம் என்று உங்கள் நண்பர் சொன்னாரே’ டெஸ்மண்ட் என்னிடம் கேட்டார்.
’என் வாழ்நாள் ஆசை அது’ என்றேன்.
’இதைவிட சுலபமான ஒரு சாகசம் கிடையாது. குதிப்பதற்கு முன் பயிற்சி இருபது நிமிடம் மட்டுமே தருவார்கள். அதன் பின்னர் 14 நிமிடம் விமானப் பயணம், விமானத்திலிருந்து குதித்து நிலத்தை அடைய 6 நிமிடம். 12,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும்போது நீங்கள் குதிக்கவேண்டும். முதல் ஒரு நிமிடம் பூமியை நோக்கி சுதந்திரமாக விழுந்துகொண்டிருப்பீர்கள். உங்கள் வேகம் அப்போது மணிக்கு 120 மைல். அதன் பிறகு கயிற்றை இழுத்து 5 நிமிடம் காற்றில் மிதந்துகொண்டு கீழே இறங்குவீர்கள். பயிற்சி 20 நிமிடம், பரீட்சையும் 20 நிமிடம்.’
கால்கள் முறிந்துபோகும் என்று சொன்னீர்களே?
’நீங்கள் யோசிக்கத் தேவையில்லை. tandem jumping அபாயமில்லாதது. நான் ராணுவத்தில் ஆயிரம் பேருக்கு மேல் பாரசூட் குதிப்பதில் பயிற்சியளித்திருக்கிறேன். உங்கள் பாதுக்காப்புக்கு நான் உத்திரவாதம். இறகு மிதப்பதுபோல பத்திரமாகக் கொண்டுவந்து நிலத்திலே இறக்கிவிடுவது என் பொறுப்பு. எப்பொழுது வசதிப்படும்?’ என்றார்.
உடனேயே பதில் சொல்ல வேண்டுமா?
‘இல்லை, இரண்டு நிமிடத்தில் சொன்னாலும் சரி’ என்றார்.
நான் யன்னல் கண்ணாடி வழியாக வெளியே பார்த்தேன். தூரத்தே சாள்ஸ் நதி புகழ்பெற்ற நாலு அமெரிக்க பல்கலைக்கழகங்களை தொட்டுக்கொண்டு ஒரு கல்விமான்போல அசைந்து போனது. பாலும் முட்டையும் வாங்கப் போன நண்பர் புள்ளிபோல தெரிந்தார். ஒரு கையில் பையை பிடித்துக்கொண்டு, நாயை இழுப்பதுபோல மறுகையை முன்னால் நீட்டிக்கொண்டு வேகவேகமாக நடந்தார். இன்னும் சில நிமிடங்களில் மேலே வந்துவிடுவார்.
சரி, இனி இங்கே நிற்க ஏலாது என்பது எனக்கு தெரிந்தது. என்னுடைய கடைசிக் கேள்வியை வெளியே எடுத்தேன்.
‘நீங்கள் எத்தனை பேரைக் கொன்றீர்கள்?’ ஆனால் அந்தக் கேள்வி பலதடவை வாயின் நுனியில் வந்தாலும் நான் அதைக் கேட்கவில்லை. ஆப்பிரிக்காவில் ஓர் ஆணைப்பார்த்து உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்று கேட்கக்கூடாது. ஐரோப்பாவில் வேலைக்கு விண்ணப்பித்த பெண்ணிடம் நீங்கள் பிள்ளைத்தாய்ச்சியா அல்லது அப்படி ஆகும் முயற்சியில் இருக்கிறீர்களா என்று கேட்கக்கூடாது. கனடாவில் ஒரு மேலதிகாரி தனக்கு கீழ் வேலைபார்க்கும் ஒருவரிடம் நீங்கள் என்ன மிருகமாக பிறக்க விரும்பவில்லை என்று கேட்கக்கூடாது. அவர் 'உங்களாக' என்று சொல்லும் வாய்ப்பு உண்டு.
அமெரிக்காவில் ஒருத்தரின் சம்பளத்தையும் வயதையும் கேட்கக்கூடாது. அவர் எத்தனை பேரைக் கொன்றார் போன்ற சின்ன தகவலைக்கூட கேட்பது தவறு என்று சொல்கிறார்கள்.