தள்ளி நின்றால் போதும்

சமீபத்தில் இக்வடோர் நாட்டுக்கு சென்று திரும்பிய நண்பர் ஒரு கதை கூறினார். அந்த நாட்டு அரச கரும மொழி ஸ்பானிஷ். அவர்களுடைய மக்கள் மொழியான குவெச்சா அழிந்து வருகிறது. அதை பேசுவோரும் குறைந்து விட்டார்கள். தென் அமெரிக்காவின் ஆதிவாசிகளான இன்கா இனத்தவர் பேசிய மொழி அது. அதை அழிவிலிருந்து காப்பாற பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. இப்பொழுது மைக்ரோசொஃப்ட் நிறுவனம் குவெச்சா மொழி கம்புயூட்டரில் இடம் பெறும் தகுதி பெற்றுவிட்டது என அறிவித்திருக்கிறது.

ஒரு மொழியை பாவிக்காவிட்டால் அது அழிந்து போகும்.  தமிழ் நாட்டின் பிரபல கவி ஒருவர் தமிழை ஒன்றுமே செய்யத்தேவை இல்லை, அது தானாகவே வளரும் என்று சொல்லியிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் ஆங்கிலம், ஹவாய் மொழியை நசுக்கி வருவதால் ஹவாய் மொழி பேசுபவர்கள் அருகிவிட்டார்கள். 1984ல் இருந்து அரசாங்கம்  தலையிட்டு ஹவாய் மொழியை மறுபடியும் உயிர்ப்பித்து வருகிறது. வேல்ஸ் நாட்டில் ஆங்கிலத்துக்கும் வேல்ஸ் மொழிக்கும் சம அந்தஸ்து. அப்படியிருந்தும் வேல்ஸ் மொழி பேசுபவர்கள் 20 வீதமாக குறைந்துவிட்டார்கள். இங்கேயும் அரசாங்கம் விழித்துக்கொண்டு மேலும் மொழி அழிவதை தடுத்து வருகிறது. அவர்கள் ஒன்றுமே செய்யாமல் விட்டால் அந்த மொழிகள் கிட்டத்தட்ட ஒழிந்தே போயிருக்கும். நூறு வருடங்களுக்கு முன்னர் ஹீப்ரு மொழி, எழுத்தில் மட்டுமே வாழ்ந்தது. இன்று ஏழு மில்லியன் மக்கள் அதை பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். 1948ல் அவர்களுக்கு ஒரு நாடு கிடைத்து ஹீப்ரு மொழி புதுப்பிக்கப்பட்டது. அந்த நாடு கிடைத்திருக்காவிட்டால் அவர்கள் மொழி அழிந்துபோயிருக்கும்.

சமீபத்தில் ஒரு தமிழ் நாட்டுக்காரரை சந்தித்தேன். அவர் ஆரம்பத்திலிருந்து தமிழ்நாட்டிலேயே படித்து பல்கலைக் கழக படிப்பை முடித்து மேல்படிப்புக்காக அமெரிக்கா வந்தவர். தமிழ் தடக்கி தடக்கித்தான் பேசுகிறார். அவருக்கு தமிழ் எழுதவும் வாசிக்கவும் தெரியாது. அவர் சொன்னார் தமிழ்நாட்டில் தமிழ் தெரியாமலே முழுப்படிப்பையும் படித்து முடிக்கலாம் என்று. இது எப்படி சாத்தியமாகும்? ஸ்பெயின் நாட்டில் ஸ்பானிஷ் மொழி தெரியாமல் படிப்பை முடிக்க முடியுமா? பிரான்ஸ் நாட்டில் பிரெஞ்சு தெரியாமல் படிப்பை முடிக்கமுடியுமா? ஆனால் தமிழ்நாட்டில் இது சாத்தியம் என்று சொல்கிறார்கள். கனடாவில்கூட மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு தமிழ் பாடத்தில் கிடைத்த மதிப்பெண்களை அவர்களுடைய தகைமையை தீர்மானிப்பதற்கு கணக்கில் காட்டலாம். இது நம்புவதற்கு கடினமானதாகத்தான் இருக்கிறது. 

கனடா போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்தவர்களின் மொழிகளை வளர்த்து ஊக்குவிப்பதற்கு கனடிய அரசு உதவி செய்கிறது.  இம்முறை விஜயதசமியின் போது நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமியர் ஏடு துவக்கி தமிழ் கற்றுக்கொண்டார்கள். வரிசையாக நின்று சுட்டுவிரலால் அரிசியிலே எழுதினார்கள். ஆனால் ஒருவர் தன் மகளுக்கு கணினியில் தமிழ் எழுதக் கற்றுக்கொடுத்தார். அந்தச் சிறுமி வெகுவிரைவிலேயே கணினியில் பல வார்த்தைகளை தமிழில் எழுதினாள். கம்புயூட்டரில் தமிழ் படிப்பது மிகச் சுலபம். மூன்று மாதத்தில் 2000 வார்த்தைகளை எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொள்ளலாம். வீரகேசரி, தினகரன் பத்திரிகைகள் படிக்குமளவுக்கு தமிழ் அறிவு பெறலாம், மீதியை அவர்களாகவே கற்றுக்கொள்ளலாம். இப்படியான வசதிகள் இன்று வந்துவிட்டன.

முப்பது வருடங்களாக ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்கிறார்கள். புலம் பெயர்ந்த நாடுகளில் அடுத்த தலைமுறையில் தமிழ் வாழுமா? இவர்களுக்கு ஒரே கதையைத்தான் நான் பதிலாகச் சொல்கிறேன். ஒரு காலத்தில் மிருகண்டு முனிவர் வாழ்ந்தார். மணமுடித்து பல வருடம் ஆகியும் அவருக்கு பிள்ளை இல்லை. கடவுளை நோக்கி தவம் செய்யவும் அவர் தோன்றி ஒரு கேள்வி கேட்டார். ' உமக்கு 100 வயது வாழும் சாதாரண புதல்வன் வேண்டுமா அல்லது உலகுள்ளவரை பெருமை சேர்க்கக்கூடிய, 16 வயது மட்டுமே உயிர் வாழும் பிள்ளை வேண்டுமா?' மிருகண்டு முனிவர் யோசிக்காமல் 16 வயது என்று சொன்னார். பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயர் என்று பெயர்
சூட்டினார். மீதி கதை எல்லோருக்கும் தெரியும். புலம் பெயர்ந்த ஈழத்து தமிழர்கள் இன்று பத்து லட்சத்துக்கும் மேல் உலகமெங்கும் வாழ்கின்றனர். கனடாவில் மாத்திரம் மூன்று லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். நூறு வார்த்தைகள் தெரிந்தால் அன்றாட தேவைக்கு தமிழ் பேசி இவர்கள் வாழ்க்கையை சமாளிக்கலாம். அதனால் என்ன பெருமை? நூறு வார்த்தைகள் கற்கும் தமிழர் வேண்டுமா அல்லது தமிழில் மேல்கல்வி கற்கும் புலமைபெற்றவர் வேண்டுமா?

வருடாவருடம் ரொறொன்ரோவில் தமிழியல் மாநாடு நடக்கிறது. இந்த வருடம் நடந்த ஐந்தாவது மாநாட்டில் பல நாடுகளிலிருந்து படைப்பாளிகளும், கல்வியாளர்களும், 50 – 60 மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.
நுழைவு இலவசம் அல்ல; முன்கூட்டியே பதிவுசெய்து கட்டணம் கட்டியாகவேண்டும். அப்படியிருந்தும்
பல மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. தானாக விரும்பி தமிழ் படிக்க முனையும் மாணவர்களின்
எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புலம் பெயர்ந்த தமிழர்களில் எதிர்காலத்தில் குறைந்தது ஆயிரத்துக்கு ஒருவர் தமிழை உயர் பாடமாக எடுத்து முனைவர் பட்டம் வரை படிக்கும் வாய்ப்பு உள்ளது. இவர்கள் தமிழ் ஆராய்ச்சியில்
இறங்குவார்கள், உயர்ந்த இலக்கியங்கள் படைப்பார்கள். தமிழை உலக அரங்கில் முன்னிறுத்துவார்கள்.

பல வருடங்களுக்கு முன்னர் ஃபிரான்ஸிலே சிறுவர் சிறுமியருக்கான தமிழ் கல்வித்திட்டம் ஒன்றை உருவாக்கப்பட்டது. அதை இன்று உலகத்து பல நாட்டு தமிழர்களும் பயன்படுத்துகிறார்கள். மதுரைத் திட்டம், நூலகத் திட்டம் மூலமாக ஆயிரக்கணக்கான நூல்கள் கணினி வழியாக இலவசமாக உலக முழுவதும் படிக்கக்  கிடைக்கின்றன. தமிழ் விக்கிபீடியாவில் இன்றைய தேதியில் 22,645 கட்டுரைகள் ஏறிவிட்டன. தமிழ் விக்சனரியில் 115,000 வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றிற்காக எத்தனையோ புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவுசெய்து மௌனமாக உழைக்கிறார்கள். அவர்களைப்பற்றி வெளியுலகம் அறிவதே இல்லை.

ஈழத்து பூராடனார் என்ற பெரும் தமிழ் அறிஞர் கனடாவில் வாழ்கிறார். இதுவரை 250 தமிழ் நூல்கள் எழுதியிருக்கிறார். தமிழில் கணினியில் 1986ல் அச்சடித்து முதல் வெளியான புத்தகம் அவருடையதுதான். அதன் பெயர் 'பெத்தலேகம் கலம்பகம்'. அந்த நூலை அச்சடித்த தமிழ் எழுத்துருவை கணினியில் உருவாக்கியதும் அவர்தான். ஹோமரின் ஒடிசி, இலியட் ஆகிய காவியங்களை தமிழில் மொழியாகம் செய்திருக்கிறார். 48 ஆதிக்கிரேக்க நாடகங்களை மொழியாக்கம் செய்து 14 புத்தகங்களாக பதிப்பித்திருக்கிறார்.  ஒரு பல்கலைக் கழகம் செய்யவேண்டிய வேலையை தனியொருவராக செய்தவரை பலருக்கு தெரியாது. இவருக்கு செவ்வியல் மாநாட்டுக்கு  அழைப்பு இல்லை.

கனடாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கியத்தோட்டம் பத்து வருடங்களைப் பூர்த்தி செய்துவிட்டது. கனடிய அரசு இதை charitable organization ஆக அங்கீகரித்திருக்கிறது. ரொறொன்ரோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து சிறப்பு இலக்கிய உரைகளை தொடர்ந்து ஏற்பாடு செய்கிறது. வருடா வருடம் இலக்கியத் தோட்டத்தின் சர்வதேச நடுவர்கள் உலகத்து சிறந்த தமிழ் படைப்பாளிகளை அடையாளம் கண்டு பரிசு கொடுத்து கௌரவிக்கிறார்கள்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பெரும் பாய்ச்சல்களை சத்தமில்லாமல் நிகழ்த்துகிறார்கள். தமிழ் கணிமைத்துறையில் புதிய ஆராய்ச்சிகளுக்கு பெரும் தொகை முதலீடு செய்யப்படுகிறது. ஒலியில் இருந்து தமிழ் எழுத்துருவுக்கு மாற்றும் திட்டத்தில் தன்னார்வத் தொண்டர்கள் இரவு பகலாக உழைக்கிறார்கள்.  தமிழ்நாட்டு கவி சொன்னதில் பாதி உண்மை இருக்கத்தான் செய்கிறது. கிராமத்திலே ஒரு பழமொழி உண்டு. 'தானும் செய்யமாட்டான், தள்ளியும் நிற்கமாட்டான்.' தமிழ்நாடு ஒன்றுமே செய்யவேண்டாம். தள்ளி நின்றால் போதும், தமிழ் வளர்ந்துவிடும்.
  

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta