நான் எங்கு போவதானாலும் குறித்த நேரத்துக்குப் போய்விடுவேன். எனக்கு ஒருவரையும் காக்க வைத்துப் பழக்கமில்லை. ஆனபடியால் கனடா விமான நிலையத்துக்கு நான் ஐந்து நிமிடம் முன்பாகவே சென்றுவிட்டேன். அன்று பார்த்து விமானம் 25 நிமிடங்கள் முன்னதாக வந்து என்னை லேட்டாக்கிவிட்டது. பார்த்தால் அங்கே ஏற்கனவே பெரும்கூட்டம் திரண்டிருந்தது.
நான் நடிகை பத்மினியை நேரே கண்டவன் அல்ல. சினிமாவில் பார்த்ததுதான். ஆகையால் அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா என்று ஐயம் இருந்தது. மிகச் சாதாரண உடையில் மேக்கப் கூட இல்லாமல் இருந்தார். வரவேற்க வந்தவர்களும், இன்னும் ஏர்போட்டில் கண்டவர்களுமாக அவரைச் சூழ்ந்துவிட்டார்கள். அவருக்கு எழுபது பிராயம் என்று நம்பமுடிகிறதா, ஆனாலும் அவரைச் சுற்றி ஓர் ஒளி வீசியது. அவருக்கு கிடைத்த ‘உலக நாட்டியப் பேரொளி’ பட்டம் சரியானதுதான் என்று அந்தக் கணத்தில் எனக்கு உறுதியானது.
என் நண்பர் ஒருவர் பத்மினிக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அவருடைய தயவில் கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க பத்மினி வருகிறார். இந்தச் சமயம் மூன்று நாட்கள் பத்மினி என் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு.
பத்மினி வந்து கனடா மண்ணில் இறங்கி சரியாக அரை மணி நேரத்துக்குள் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. உலகத்திலேயே அகலமான 401 அதிவேக சாலையில், ஏர்போர்ட்டில் இருந்து இருபது மைல் தூரத்திலும், என் வீட்டில் இருந்து ஐம்பது மைல் தூரத்திலும் கார் பயணிக்கும்போது அந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. வெளியே பனிகொட்டுகிறது. அந்தப் பனிப் புதையலில் கார் சறுக்கியபடி அப்பவும் வேகம் குறையாமல் நகர்கிறது.
பத்மினியைச் சந்திக்க வந்த பெண்மணியின் மனதில் இந்தக் கேள்வி முப்பத்தைந்து வருடங்களாக இருந்ததாம். இப்பொழுது வட்டியும் குட்டியும் போட்டு மிகவும் கனத்தோடு அது வெளியே வருகிறது. ‘நீங்கள் ஏன் சிவாஜியை கல்யாணம் செய்து கொள்ளவில்லை?’
இதுதான் கேள்வி. மூடத்தனத்துக்கு சமமான பிடிவாதத்துடனும், பிடிவாதத்துக்கு சற்று கூடிய வெகுளித்தனத்துடனும் ஓர் ஐம்பது வயது அம்மையார் இந்தக் கேள்வியைக் கேட்டார். பத்மினி என்னைப் பார்க்கிறார் பிறகு கேள்வி கேட்டவரைப் பார்க்கிறார் பதில் பேசவில்லை. அந்தக் கேள்வியும் நாலு பக்கமும் கண்ணாடி ஏற்றிய காருக்குள் ஒரு வட்டம் சுற்றிவிட்டு கீழே விழுந்துவிடுகிறது. பத்மினி தங்கியிருந்த மூன்று தினங்களிலும் இதே கேள்வியை அவரிடம் வெவ்வேறு நபர்கள் இருபது தடவைகளாவது கேட்கிறார்கள்.
இவர்களுக்கு வேறு கேள்விகளே இல்லையா? ஆனால் நான் அதிசயப்பட்ட அளவுக்கு பத்மினி ஆச்சரியம் காட்டவில்லை. இந்தக் கேள்விக்கு மிகவும் பழகிப் போனவர் போல காணப்பட்டார்.
சிவாஜியை பற்றி பேச்சு வரும்போதெல்லாம் அவர் கண்களில் ஒரு சிறு மின்னல் புகுந்துவிடுவதை நான் கவனித்திருந்தேன். நீங்கள் சிவாஜியை முதன்முதல் சந்தித்தது ஞாபகத்தில் இருக்கிறதா என்றார் ஒருவர்.
சிவாஜி இன்னும் சினிமாவுக்கு வரவில்லை. நான் ஏற்கனவே சினிமாவில் நடித்து புகழ் பெற்றிருந்தேன். அப்போது ரத்தக்கண்ணீர் நாடகம் பார்க்கப் போயிருந்தேன், எம்.ஆர். ராதாவின் நாடகம். அதில் சிவாஜிக்கு பரர்ட்டே இல்லை. ஆனால் மேடையில் பின்னால் நின்று உதவி செய்து கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது என்னுடன் நடிக்கவேண்டும் என்ற தன் ஆசையை ஒப்பனாக சொன்னார். அப்பொழுது எனக்கு தெரியாது, அவருக்கும் தெரியாது, நாங்கள் 60 படங்கள் தொடர்ந்து செய்யப்போகிறோம் என்பது.
அவருடன் நடித்த நாட்கள் மறக்க முடியாதவை. எட்டு மணிக்கு சூட்டிங் என்றால் 7.55க்கே வந்து உட்கார்ந்துவிடுவார். நாங்கள் வழக்கம்போல மேக்கப் எல்லாம் போட்டு வரும்போது நேரம் எப்படியும் ஒன்பது ஆகிவிடும். பொறுமையாக ‘என்ன பாப்ஸ், லன்ச் எல்லாம் ஆச்சா?’ என்பார்.
ஏதாவது பேசி சிரிப்பு மூட்டுவதுதான் அவர் வேலை. சேலைத் தலைப்பை தூக்கிப் பிடித்துக்கொண்டு அந்தக் காலத்து கதாநாயகி லட்சணமாக நான் ஒயிலாக அசைந்துவரும் போது ‘என்னம்மா துணி காயவைக்கிறாயா?’ என்று கிண்டலடித்து, அந்த காட்சியை திருப்பி திருப்பி எடுக்க வைத்துவிடுவார். காதல் பாடல் வேளையின் போது இரண்டு பக்கமும் குரூப் நடனக்காரர்களை திரும்பித் திரும்பிக்தேடுவார். ‘என்ன பாப்ஸ், ஆரவாரப் பேய்களைக் காணவில்லை’ என்பார். இன்னும் போரடிக்கும் நேரங்களில் ‘யாரப்பா ரொம்ப நாழியாச்சு இருமி, ஒரு சிகரட் இருந்தாக் குடு’ என்பார். இப்படி சிரிக்க வைத்தபடியே இருப்பார். அடுத்ததாக அழுகை சீன் இருந்தால் வெகு கஷ்டம்தான்.
பத்மினியுடைய முதல் படம் மணமகள், என்.எஸ்.கிருஷ்ணன் எடுத்தது. அதில் மூன்று சகோதரிகளும் நடித்திருந்தார்கள். நான் அப்பொழுது போர்டிங்கில் இருந்து படித்துக் கொண்டிருந்தேன். என்னுடன் படித்தவர்கள் எல்லாம் இந்தப் படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளினார்கள். எப்படியும் பத்மினியை பார்த்துவிட வேண்டும் என்ற வெறி என்னிடம் பிறந்தது. என்னுடன் படித்த ‘சண்’ என்ற சண்முகரத்தினம் இந்த சதிக்கு உடன் படுவதாகக் கூறினான்.
சண் மெலிந்து போய், முதுகு தோள் எலும்புகள் பின்னுக்குத் தள்ள, நெடுப்பாக இருப்பான். திங்கள் காலை போட்ட உடுப்பை வெள்ளி இரவுதான் கழற்றுவான். ஒருநாள் இரவு களவாக செக்கண்ட் ஷோ பார்க்கும் ஆர்வத்தில் கேட் ஏறிப் பாய்ந்து அவனுடன் புறப்பட்டேன். அந்தப் படத்தில் பத்மினியின் அழகும், ஆட்டமும் நெருக்கமானது. ஓர் இடத்தில் கூந்தல் வழியாக என்னை மாத்திரம் பார்த்துச் சிரிப்பார். அதற்குப் பின்னர் எங்களுக்கு தமிழ் படிப்பித்த ஆசிரியர் ‘செறி எயிற்று அரிவை’ என்று சொல்லும் போதெல்லாம் பத்மினியின் நெருங்கிய பற்கள் என் கண் முன்னே தோன்றி இடர் செய்யும்.
திரும்பும்போது பஸ் தவறிவிட்டது. 12 மைல் தூரத்தையும் நடந்தே கடந்தோம். மரவள்ளிக் கிழங்கு தோட்டங்களை குறுக்கறுத்து, நட்சத்திரங்கள் வழிகாட்ட, சண் முன்னே நடந்தான். அங்குசக்காரன் போல நான் பின்னே தொடர்ந்தேன். வானத்திலே நட்சத்திரங்கள் இவ்வளவு கூட்டமாக இருக்கும்போது உற்சாகத்துக்கு குறைவேது. 'தெருவில் வாரானோ, என்னைச் சற்றே திரும்பிப் பாரானோ' என்று சண் பெருங்குரல் எடுத்துப் பாடினான். சில தெரு நாய்கள் எங்களைத் திரும்பிப் பார்த்ததுமல்லாமல் எங்கள் பயணத்தை இன்னும் துரிதப்படுத்தின.
திரும்பி வந்த போதும் கேட் பூட்டியபடியே கிடந்தது. அதை வார்டனோ காவல்காரனோ, வேறு யாரோ ஞாபக மறதியாக எங்களுக்காகத் திறந்து வைத்திருக்கவில்லை. கேரளாவில் இருந்து வந்து எங்களுக்கு பௌதிகம் படிப்பித்த ஜோஸப் மாஸ்டர்தான் வார்டன். பெருவிரல்கள் மாத்திரம் தெரியும் பாதி சப்பாத்து அணிந்திருப்பார். மிகவும் கண்டிப்பானவர். கேட்ஏறி இருவரும் ‘தொம் தொம்’ என்று குதித்தோம். அன்று வார்டனிடம் பிடிபட்டிருந்தால் இன்று இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்திக்கமாட்டேன். சண்ணும் ஆழ்நீர் பாதைகள் பற்றி விரிவுரைகள் செய்துகொண்டிருக்கமாட்டான்.
இந்தக் கதையைக் கேட்டுவிட்டு பத்மினி கலகலவென்று சிரித்தார். இதுபோல இன்னும் எத்தனை கதைகளை அவர் கேட்டிருப்பாரோ!
முன்னூறு வருடங்களுக்கு முன் மாரிமுத்தாப்பிள்ளை யாழ்ப்பாணத்தில் ‘காலைத் தூக்கியவர்’ அதற்கு பிறகு அதை கீழே இறக்கவே இல்லை. அங்கே பரதநாட்டியம் படித்த பெண்களின் எல்லை ‘காலைத் தூக்கி” ஆடும் நடனம்தான். அது 1959ம் ஆண்டு. பத்மினி ‘ராணி எலிஸபெத்’ கப்பலில் சிலோனுக்கு வந்து ஒரு நாட்டியக் கச்சேரி செய்தபோது மாறியது என்று சொல்லலாம். பரதநாட்டியம் கற்பதில் ஒர் ஆசையும், புது உத்வேகமும் அப்போது எங்கள் பெண்களிடம் பிறந்தது. மற்றவர்கள் விஷயம் எப்படியோ என்னுடைய தங்கை நடனம் கற்பதற்கு காரணமான குற்றவாளி அவர்தான் என்று சொன்னேன். நாற்பது வருடம் லேட்டாக அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
பத்மினியின் காலத்துக்கு முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கதாநாயகன் காதலியைக் கட்டிப்பிடிக்கும் போது காதலி தன் இரண்டு கைகளையும் முன்னே மடித்து கேடயமாக்கி தன் மார்புகளை ஒரு கோட்டையைப் போல காப்பாற்றி விடுவாள். பத்மினி நடிக்க வந்த சமயம் இந்த சம்பிரதாயம் உடைந்து போனது. வஞ்சிக்கோட்டை வாலிபனில் ‘கோட்டை கொத்தளத்தோடு’ பத்மினியைக் கட்டிப்பிடித்து ஜெமினி தன் ஆசையையும், ரசிகர்களின் ஆவலையும் தீர்த்து வைப்பார்.
பத்மினியை அழவைத்த சம்பவம் ஒன்றும் இந்தப் படப்பிடிப்பில் தான் நேர்ந்தது. இத்தனை வருடமாகியும் அதைச் சொல்லும்போது பத்மினியின் கண்கள் கலங்குகின்றன. வழக்கம்போல வாசன் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக எடுக்க தீர்மானித்தார். அப்போது பத்மினி தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரம். அதே சமயம் இந்தி சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் வைஜயந்திமாலா.
தேவதாஸ் படத்தில் ஐஸ்வர்யராயுக்கு மாதுரி தீட்சித்துக்கும் இடையில் ஒரு போட்டி நடனம் இருக்கிறது அல்லவா? அதுபோல வஞ்சிக்கோட்டை வாலிபனிலும் மிகவும் பிரபலமான ஒரு போட்டி நடனம் வரும். ஹீராலால் என்ற டான்ஸ் மாஸ்டர் இரு நாட்டிய தாரகைகளுக்கும் நடன அசைவுகள் சொல்லித்தந்தார். வாசனிடம் ஒரு கொள்கை இருந்தது. அவரிடம் வேலை செய்தவர்கள் எல்லாம் எழுபது வயதைத் தாண்டி இருக்கவேண்டும். மேக்கப், லைட்போய், காமிராக்காரர், வசனகர்த்தா இப்படி எல்லாரும் வாசனுடைய வயதுக்காரர்களாக இருந்தார்கள். ஒரு லைட்டை தள்ளி வைப்பது என்றால்கூட அரைமணி நேரம் எடுக்கும், அதனால் படப்பிடிப்பு ஆமை வேகத்தில் நகர்ந்தது. பத்மினிக்கு மற்றப் படப்பிடிப்புகள் இருந்தன. வைஜயந்தி மாலா வடக்கில் இருந்து இதற்காகவே வந்திருந்தார். பத்மினி இல்லாத சமயங்களில் வைஜயந்தி மாலா ஹீராலாலிடம் ரகஸ்யமாக சில நடனஅசைவுகளை ஒத்திகை பார்த்து வைத்துக்கொள்வார்.
படப்பிடிப்பு சமயம் பத்மினியின் நடனம் அமோகமாக அமைந்தது. வைஜயந்தி மாலா புளகாங்கிதம் அடையவில்லை. அவர் ‘சாதுர்யம் பேசாதேடி, என் சலங்கைக்கு பதில் சொல்லடி’ என்று தோளிலே சடைதுவழ, காலிலே தீப்பொறி பறக்க, புயல்போல சுழன்றபடி மேடையிலே தோன்றுவார். ஒருமுறை இருவரும் ஆடும்போது பத்மினியின் நிழல் வைஜயந்தி மாலாவின்மேல் விழுந்தது. பத்மினி மன்னிப்பாக நடனத்தை நிறுத்தி ‘என்னுடைய நிழல் உங்கள் மேலே விழுகிறது’ என்றார். உடனேயே வைஜயந்தி மாலா ஆங்கிலத்தில் இரண்டு அர்த்தம் தொனிக்க 'It's only a passing shadow' என்றார். தமிழ் நாட்டின் முதல் நடிகையை பார்த்து ‘நகரும் நிழல்’ என்று சொன்னது பத்மினியைப் புண்படுத்தி விட்டது. அந்த இரண்டு வார்த்தைகளுக்காக தான் இரண்டு இரவுகள் தொடர்ந்து அழுததாக பத்மினி கூறினார். படம் வெளிவந்த போது நாட்டிய தாரகை யார் என்பதில் ஒருவருக்கும் சந்தேகம் இருக்கவில்லை.
‘எதிர்பாராதது’ படத்தில் சிவாஜி வழக்கம்போல பத்மினியின் காதலனாக வருகிறார். சந்தர்ப்பவசத்தால் சிவாஜியின் தகப்பன் நாகய்யாவுக்கு பத்மினி மனைவியாகி விடுகிறார். காதலன் இப்போது மகன் முறை. சிவாஜி ஒரு சமயம் பத்மினியை பழைய நினைவில் அணுகியபோது பத்மினி கன்னத்தில் ஒரு அறை கொடுக்கிறார். படம் எடுத்தபோது அந்த நேர உணர்ச்சி வேகத்தில் பத்மினி நிஜமாகவே அறைந்துவிடுகிறார். சிவாஜியுடைய கன்னம் வீங்கிப்போய் மூன்று நாட்களாக அவர் படப்பிடிப்புக்கு வரவில்லை. மூன்றூவது நாள் சிவாஜியைப் பார்க்க அவர் வீட்டுக்கு பத்மினி வருகிறார். அப்பொழுது ஒரு பியட் கார் வாங்கி சிவாஜிக்கு பரிசு கொடுத்தார். அதுதான் சிவாஜியுடைய முதலாவது கார்.
பத்மினியன் ஞாபசக்தி அசரவைக்கிறது. எந்த ஒரு சம்பவத்தையும் கூறமுன்பு அது நடந்த வருடத்தை கூறியபடிதான் பேச்சை ஆரம்பிக்கிறார். '1944ல் உதயசங்கருடைய கல்பனா படத்தில் டான்ஸ் ஆடினேனா' என்று தொடங்கி அந்த விவரங்கள் எல்லாவற்றையும் தருவார். சினிமா என்றால் தயாரிப்பாளர் பெயர், டைரக்டர் பெயர், நடிகர்கள் பட்டியல் எல்லாமே நினைவில் வைத்திருக்கிறார். அவர் மூளையில் பெரிய தரவுத்தளம் (database) ஒருவித வைரஸ் பாதிப்பும் இல்லாமல் இயங்குகிறது.
விழாவுக்கு பத்மினியின் அலங்காரம் பிரமாதமாக இருந்தது. இருட்டில் போத்தல் தேனை கவிழ்த்துக் குடித்ததுபோல இதழ்களில் உருகி வழியும் லிப்ஸ்டிக். அவருடைய எடைக்கு சரிசமமான எடையோடு இருக்கும் சரிகை நிறைந்த சேலை. இரண்டு கைகளிலும் எண்ணிக்கை சரி பார்த்து திருப்பி திருப்பி எண்ணி அணிந்த வளையல்கள். முகத்திலே விழுந்த சிறு சுருக்கத்தை தவிர, ஒரு சிறகு மட்டுமே உதிர்த்த தேவதை போல, அந்தக் காலத்து எ.பி நாகராஜனுடைய ‘விளையாட்டுப்பிள்ளை’ சினிமாவில் வந்த பத்மினியாக காட்சியளித்தார்.
நீண்ட வசனங்களை எல்லாம் பத்மினி மேக்கப் போடும்போதே பாடமாக்கி விடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த நாட்கள் போல இல்லாமல் அந்தக் காலத்தில் நடிகைகள்தான் (கொடுமை) தங்கள் வசனங்களையும் பேசவேண்டும். ஆனால் விழாவில் மேடை ஏறியதும் அவர் புதிய பத்மினியாகிவிட்டார். கைதேர்ந்த பேச்சுக்காரி மாதிரி விழா சம்பந்தப்பட்டவர்கள் பெயர்கள் எல்லாவற்றையும் ஞாபத்தில் வைத்து சுருக்கமாகப் பேசிமுடித்தார். அந்தச் சில நிமிடங்கள் சபையோர்கள் அவருடைய பிரசன்னத்தில் மயங்கி ‘நலம்தானா? நலம்தானா?’ என்று கூக்குரலிட்டபடியே இருந்தார்கள்.
சிவாஜியை எப்போது கடைசியாக சந்தித்தீர்கள்?
அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார். தண்ணீர் கூட அவர் விருப்பத்திற்கு குடிக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் தண்ணீர்தான். கொஞ்சம் கூடக் குடித்தாலும் உடம்பில் தண்ணீர் கட்டி உப்பிவிடும், ஆகவே மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
சிவாஜி மாடியிலேயே தங்கியிருந்தார். கீழே வருவதில்லை. அவரைப் பார்ப்பவர்கள் மேலே போய் பார்த்துவிட்டு அப்படியே போய் வீடுவார்கள். சிவாஜி சாப்பாட்டு பிரியர், என்னைப் போலவே. அவருக்கு விருப்பமான அத்தனை அயிட்டமும் எனக்கும் பிடிக்கும். அன்று மேசை நிறைய சாப்பாட்டு வகைகள். காடை, கௌதாரி, கோழி, ஆடு, மீன், இறால் என்று எனக்குப் பிடித்தமான அத்தனை கறி வகைளும் சமைத்திருந்தார்கள்.
அதில் ஒன்றைக்கூட சிவாஜி உண்ண முடியாது. அப்படியும் என் ஒருத்திக்காக அவ்வளவு சமைத்திருந்தார்கள். சிவாஜியை ஒரு நாற்காலியில் உட்காரவைத்து நாலு பேர் அவரை மாடியில் இருந்து து}க்கி வந்தார்கள். அவர் எனக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டு 'சாப்பிடம்மா, சாப்பிடு. நல்லா சாப்பிடு' என்றார். உணவின் சுவை அறிந்தவர் அதை ருசிக்க முடியாத கொடுமை. அவருக்குப் பிடித்தமான அத்தனை உணவையும், வெறுமனே பார்த்தபடி இருந்தார்.
அதுதான் கடைசி நினைவு. வேறு ஏதாவது நினைவாக இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.
சாதி பற்றி பற்றி நான் படிக்காத கட்டுரைகள் இல்லை. டானியலின் ‘பஞ்சமர்’ நாவலில் தொடங்கி மாதவய்யாவின் ‘கண்ணன் பெரும் தூது’ சிறுகதையில் இருந்து சமீபத்தில் ஜெயமோகனின் ‘கடைசி வரை’ சிறுகதை வரை படித்தவன்தான். ஆனாலும் சில விஷயங்கள் கேட்கும்போது மனதை திடுக்கிட வைத்துவிடுகின்றன.
மாலை ஆறுமணி இருக்கும். பத்மினி மஞ்சள் கரை வைத்த வெள்ளை சுரிதார் அணிந்து, காலுக்கு மேல் கால் போட்டு, சோபாவில் சாய்த்து அமைதியாக உட்காந்திருக்கிறார். அவர் தேநீர், கோப்பி போன்ற பானம் ஒன்றும் அருந்துவதில்லை. ஒரு கிளாஸில் பழரசத்தை மெல்லிய மிடறுகளில் சுவைத்தபடி இருந்தார். உடம்பும் மனமும் ஒருமித்து மிதக்கும் ஒரு தருணம் அது. அவருடைய சம்பாஷணை எங்கோ தொடங்கி எங்கோ தொட்டுத் தொட்டுச் செல்கிறது. திடீரென்று சொன்னார், 'நான் நாயர் பொண்ணு, அவர் கள்ளர் ஜாதி, நடக்கிற காரியமா?'
நான் திடுக்கிட்டுவிட்டேன். முதலில் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. கடந்த இரண்டு தினங்களாக இருபது தடவைகளுக்கு மேலாக கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதில் கூறுகிறார். அவர் கண்கள் பளபளவென்று மின்னிக் காட்டிக் கொடுத்தன.
பத்மினி திரும்பிப் போன அன்று டெலிபோன் மணி ஒசை நின்றது. கதவு மணி ஒய்ந்தது. பத்திரிகை நிருபர்களின் தொல்லை விட்டது. சொல்லியும் சொல்லாமலும் வந்த விருந்தாளிகளின் ஆரவாரம் முடிந்தது. மாடிப்படிகளில் குடுகுடுவென்று ஒடிவரும் ஒலியும், கலகலவென்ற பத்மினியின் ஒயாத பேச்சும் மறைந்துபோனது. திடீரென்று வீட்டில் மறுபடியும் இருள் சூழ்ந்தது போன்ற ஓர் உணர்வு.
ஆனாலும் ஒரு லாபம் இருந்தது. நாட்டியப் பேரொளி போனபோது ஒரு சிறு ஒளியை எனக்காக விட்டுப் போய்விட்டார். ரோட்டிலே நடை செல்லும் போதும், உணவகத்தில் சாப்பிடப் போகும்போதும், வீடியோ நிலையத்திலும், சாமான் வாங்கும் கடைகளிலும் என்னைப் பார்த்து இப்போது ‘ஹாய்’ என்று சொல்கிறார்கள்.