என் பள்ளிப் பருவத்தில் பல பாடசாலைகளில். பல வகுப்புகளில், பல ஆசிரியர்களிடம் படித்திருக்கிறேன். பல மாணவர்களை பரிச்சயம் செய்துகொண்டு பல வாங்குகளைத் தேய்த்திருக்கிறேன். பலவகைப்பட்ட வண்ண மைகளில் தோய்த்து தோய்த்து தொட்டெழுதும் பேனாவினால் ஊறும் தாள் கொப்பிகளை நிரப்பியிருக்கிறேன். ஊறாமல் தேங்கி நிற்கும் எழுத்துக்களை ஒற்றுத்தாள்களில் ஒற்றி எடுத்திருக்கிறேன். ஆனால் ஒரு கிளாஸை மட்டும் என்னால் மறக்க முடியாது. அதற்குப் பல காரணங்கள். சில மகிழ்வானவை, சில துக்கமானவை. அதைப்பற்றித்தான் இப்போது சொல்லப் போகிறேன்.
நாளையிலிருந்து புது வகுப்புக்குப் போகவேண்டும் என்று அம்மா சொன்னபோதே எனக்கு வயிற்றில் நடுக்கம் பிடித்தது. புது வகுப்பு என்றால் புது டீச்சர். பக்கத்து வீட்டு ஜெயராசசிங்கம் மேசை பிடிக்கப் போய்விட்டான். இந்த மேலதிகத் தகவலையும் அம்மாவே சொன்னார். திங்கள் புது வகுப்பு தொடங்குவதால் ஞாயிறு மாலையே இந்த வேலையை நாங்கள் செய்தாகவேண்டும்.
அந்த ஞாயிறு என்னுடன் சேர்ந்து இன்னும் சில பொடியன்களும் ‘மேசை பிடிக்க’ வந்திருந்தார்கள். மேசைகள் என்ன மாடுகள் போல ஒடுகின்றனவா? நல்ல மேசையைப் பிடிப்பதுதான் நோக்கம். நான் ஒரு மேசையை தெரிவு செய்தேன். மைப்போத்தல் வைப்பதற்கு விளிம்பிலே வெட்டி வைத்த வட்டமான துவாரம் உடையாமல் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தேன். கடுதாசி மடித்து வைத்து சமன் செய்யும் அவசியம் இல்லாமல் நாலு கால்களும் ஒரே உயரத்தில் இருக்கின்றனவா என்று அளவு பார்த்தேன். ‘கமலா’ என்றோ ‘புவனேஸ்வரி’ என்றோ எழுதியிருந்ததை கை தேயும்வரை அழி அழியென்று அழித்துக் கழுவி, முதலாம் வரிசையில் நாலாவது இடத்தில் மேசையை நிறுத்தி சாட்சி வைத்து உறுதி செய்தேன்.
சுகிர்தம் டீச்சர்தான் எங்கள் வகுப்பு ஆசிரியை. எங்களுக்கு சரித்திர பாடம் எடுத்தவர். எங்கள் வகுப்பு தரையிலிருந்து உயரத்தில் இருந்தது. படிகள் இல்லை. சுகிர்தம் டீச்சர் ஒரு மான் குட்டிபோல துள்ளிக்கொண்டு பாய்ந்து ஏறுவார், இறங்குவார். அவருக்கு அரைத்தாவணிக்கு தகுதியான முகம். ஆனாலும் புள்ளிபோடாத, கோடு போடாத பிளேன் பருத்திச் சேலையை உடுத்தி வருவார். அது அவர் உடம்பைச் சுற்றி இருக்க, ஒவ்வொரு மடிப்பும் அது அதற்கு விதித்த இடத்தில் அசையாமல் பள்ளிவிடு மட்டும் காத்திருக்கும். இது எப்படி என்று எங்களுக்கு விநோதமாகப்படும். எங்களில் பலர் அவர் சாரியை உடம்பில் உடுத்திவிட்டு இஸ்திரி பண்ணுகிறார் என்பதை பலமாக நம்பினோம்.
இவர் வகுப்பில் தண்டிப்பதே இல்லை. குழப்படி மிஞ்சினால் அடி மட்டத்தை எடுத்து கூர்ப் பக்கத்தால் சிறு தட்டு தட்டுவார். அப்படி தட்டிவிட்டு அவர் முகத்தில் தோன்றும் வேதனையைப் பார்த்தால் அவர் மனதை இப்படி காயப்படுத்தி விட்டோமே என்ற வருத்தம்தான் எங்களுக்கு ஏற்படும்.
சுப்பிரமணியம் மாஸ்டர்தான் எங்களக்கு பூமிசாஸ்திரம் எடுத்தவர் எவ்வளவுதான் உண்மையை நீட்டினாலும் இவருடைய உயரம் 5 அடி 3 அங்குலத்தை தாண்டாது. 20 வயதானதும் இவர் உயரமாக வளர்வதை நிறுத்திவிட்டார். ஆனால் அகலமாக வளர்வதை நிறுத்தவில்லை. வயது கூடக்கூட அகலமும் கூடியது. நான் பள்ளிக்கூடத்தை விடும் வரைக்கும் அவர் வகுப்பு வாசல்களுக்குள்ளால் வரும்படியான சைஸில்தான் இருந்தார்.
முதல் நாள் வகுப்பில் ‘பிள்ளைகளே’ என்று ஆரம்பித்து பூமி சாஸ்திர பாடத்துக்கு நாங்கள் என்ன என்ன வாங்கவேண்டும் என்று ஒரு பட்டியல் தந்தார். ஒரு சிறு ராஜகுமாரனாக இருந்தால் ஒழிய அவர் சொன்ன அவ்வளவு சாமான்களையும் வாங்கும் வசதி பெற்றவர் அந்தக் கிராமத்தில் ஒருவர்கூட இல்லை. அவர் சொன்ன பொருள்களில் ஒன்று 160 பக்க சிவப்பு மட்டை மொனிட்டர்ஸ் கொப்பி. இதை எப்படியும் வாங்கிவிட வேண்டும் என்று நான் பிடிவாதமாக நின்றேன். என் அண்ணனும், அக்காவும் எதிரிகளாக மாறி அம்மாவின் மனதைக் குழப்பப் பார்த்தார்கள் நான் கெஞ்சிக்கூத்தாடி எப்படியோ கொப்பியை வாங்கிவிட்டேன்.
முதல் நாள் அவர் சொன்ன வசனத்தை கொப்பியின் முதல் பக்கத்தில், முதல் லைனில் எழுதினேன். ‘உலகத்திலேயே மிகப் பெரியது சைபீரியா சமவெளிப் பிரதேசம்.' அதற்கு பிறகு அடுத்த வரி நிரப்பப் படவில்லை. அடுத்த பக்கமும் நிரப்பப்படவில்லை. வருடம் முழுக்க அந்தக் கொப்பி அப்படியே புல்பூண்டு ஒன்றும் முளைக்காத சைபீரிய பெருவெளி போல ஒவென்றுபோய் கிடந்தது.
எனக்கு பக்கத்தில் இருந்து சோதனை எழுதினவன் ராஜகோபால். சுகிர்தம் டீச்சர் சரித்திரத்தில் பத்து கேள்விகளில் ஒன்று வலகம்பாகு என்று சொல்லியிருந்ததால் இவன் எல்லாக் கேள்விகளுக்கும் ‘வலகம்பாகு’ ‘வலகம்பாகு’ என்று ஒரே விடையை எழுதி பத்து மார்க் சம்பாதித்துவிட்டான். இவன் பிற்காலத்தில் படித்து பெரிய டொக்டராக வந்தான். எல்லா வியாதிகளுக்கும் ஒரே இஞ்செக்சன் போட்டிருப்பானோ தெரியாது.
ஆனால் அம்பிகைபாகன் இன்னும் நுட்பம் கூடியவன். இனி இல்லையென்ற புத்திசாலி. எந்த கட்டுரையையும் நீட்டிவிடுவான் பராக்கிரமபாகு 33 வருடம் ஆட்சி புரிந்தான் என்று நேராக எழுத மாட்டான். பராக்கிரமபாகு பாண்டியனை தோற்கடித்தான். பத்து வருடங்கள் ஆட்சி செய்தான். பொலநறுவையை ராசதானியாக்கினான். இன்னும் பத்து வருடங்கள் ஆண்டான். புத்தருடைய தந்தத்தை திருப்பி கொண்டு வந்தான். மேலும் 13 வருடம் ஆட்சி நடத்தினான். தன் மகன் விஜயபாகுவுக்கு பட்டம் சூட்டினான். இப்படி எழுதுவான். சுகிர்தம் டீச்சரின் தயாள குணத்தினால் அவனுக்கு எப்படியோ முழு மார்க் கிடைத்துவிடும்.
அப்பொழுது எங்கள் பள்ளிக்கூடத்தில் ஒரு ரூல் இருந்தது. பள்ளிக் கூடம் விட்டதும் ஒவ்வொரு வகுப்பும் அவரவர் வகுப்பில் தேவாரம் பாடிய பிறகே வீட்டுக்குப் போகவேண்டும். இது கண்டிப்பான சட்டம். இந்த தேவாரம் பாடுவதற்கு எங்கள் வகுப்பில் மூன்று தகுதியானவர்கள் இருந்தோம். சபாரத்தினம், குணவதி, நான். ஞானசம்பந்தர் பாண்டிய நாட்டுக்கு புறப்பட்ட போது எல்லோரும் அவரை எச்சரித்தார்கள். சமண நாடு ஆபத்தானது, போகவேண்டாம் என்றார்கள். சம்பந்தர் ‘எனக்கு என்ன பயம்’ என்று பாடிய பதிகம்தான் ‘வேயுறு தோளி பங்கன்.’ சம்பந்தர் பாடியது சரி, ஆனால் சபாரத்தினம் பாடத் தொடங்கியபோது மொத்த வகுப்புமே பயத்தில் நடுங்கும். அதில் ‘அ’ வரும் இடத்தில் ‘ஆ ஆ ஆ’ என்று ஆலாபனை செய்தும், ‘எ’ வரும் இடத்தில் ‘ஏ ஏ ஏ’ என்று நீட்டியும் சும்மா கிடந்த பாட்டை பத்து நிமிடத்துக்கு இழுத்துவிடுவான்.
இவன் பிற்காலத்தில் தேவாரம் பாடுவதை நிறுத்திவிட்டு உதை பந்தாட்டத்தில் பிரபல்யம் அடைந்தவன். அவனுடைய லட்சியம எல்லாம் எவ்வளவு பலம் உண்டோ அவ்வளவு பலத்தையும் பிரயோகித்து பந்தை உயரத்துக்கு அடிப்பது. அது சூரியனிடம் போகவேண்டும். குறைந்தபட்சம் அதை மறைக்கவேண்டும். பார்வையாளர்கள் எல்லாம் கழுத்தை முறித்து இரண்டு நிமிடம் மேலே பார்க்கவேண்டும். எதிர் சைட்டில் கவிழ்த்து வைத்த ‘ப’ வடிவத்தில் ஒரு கோல் போஸ்ட் இருப்பதோ, அதற்குள் பந்தை அடித்தால் ஒரு கோல் கிடைக்கும் என்பதோ, கோல்களை எண்ணியே வெற்றி நிச்சயிக்கப்படுகிறது என்பதோ அவனுக்குப் பொருட்டில்லை. பந்து காலில் பட்டால் அது உயரத்துக்கு எழும்ப வேண்டும் என்பதே முக்கியம்.
குணவதி குணமானவள். திருநீறு பூசி அதற்குமேல் சந்தனப் பொட்டு வைத்து அதற்குமேல் ஒரு துளி குங்குமம் வைத்துக்கொண்டு வருவாள். பாவாடை பின்பக்கத்தை இழுத்து இழுத்து குதிக்காலை மறைத்தபடியே இருப்பாள். ஏதோ அதில்தான் உயிர் நிலையம் இருக்கு என்ற மாதிரி, லம்போதரா வரைக்கும் சங்கீதம் கற்றிருந்தாள். இவள் தெரிவு செய்யும் பாடல் ‘ஆயகலைகள்’ என்று தொடங்கும். சரியான ராகத்தில், சரியான தாளத்தில் பாடுவேன் என்று அடம்பிடிப்பாள். இது பெரிய குற்றம் என்று சொல்லமுடியாது. ஆனால் குற்றம் என்னவென்றால் ஒவ்வொரு வரியையும் இரண்டு தரம் அல்லது மூன்று தரம் பாடுவதுதான். இப்படி அவள் லயித்து பாடி முடிக்கும்போது மற்ற வகுப்பு மாணவர்கள் எல்லாம் வீடுபோய் சேர்ந்துவிடுவார்கள்.
என்னுடையது ‘பாலும் தெளிதேனும்’ என்று தொடங்கும். எனக்காகவே அவ்வையார் பாடி வைத்ததுபோல நாலே நாலு மணியான வரிகள். கொக்குவில் ஸ்டேசனில் நிற்காமல் போகும் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டிபோல ஸ்பீட் எடுத்துப் பாடுவேன். முழுப்பாடைலையும் பத்து செக்கண்டுகளுக்குள் பாடி முடித்துவிடுவேன். கடைசி அடியில் ‘சங்கத் தமிழ் மூன்றும்’ என்ற இடம் வரும்போது வகுப்பில் மூன்று பேர்தான் மிச்சம் இருப்போம் நான், குணவதி, சுகிர்தம் டீச்சர்.
இந்த காரணத்தினால் வகுப்பில் எனக்கு நல்ல புகழ் இருந்தது. கடைசி மணி அடித்தவடன் எங்கே குணவதியோ, சபாரத்தினமோ பாடத் தொடங்கிவிடுவார்கள் என்று கிளாஸ் அஞ்சும். கடைசி மணி அடிக்க சில நிமிடங்கள் இருக்கும் போதே பெடியன்கள் பின்னுக்கு இருந்து என் உட்காரும் பகுதியில் கிள்ளத் தொடங்குவார்கள். நான் கரும்பலகையைப் பார்த்தபடி நெளிவேன். மணி அடித்து அந்த ரீங்காரம் அடங்குவதற்கிடையில் என் பாடல் முடிந்துவிடும்.
இன்று வரை பிடிபடாத ஒரு மர்மமாக இருப்பது சுகிர்தம் டீச்சர் என்னை ஒரு பாட்டுக்காரனாக எப்படித் தெரிவு செய்தார் என்பது. என்னுடைய குரல் வளம் அந்தக் காலத்து டீ.ஆர். மகாலிங்கத்தின் குரலுக்கு சவாலாக எதிர்காலத்தில் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கலாம். அல்லது கிரமமாக வகுப்பில் தேவாரம் பாடியதற்காகவும் இருக்கலாம். அல்லது எவ்வளவு ஸ்பீடில் பாடினாலும் சங்கீதத்தின் ஒரு நுனி அந்தப் பாடலில் தென்பட்டதால்கூட இருக்கலாம்.
அந்த வருடம் கொழும்பு, கண்டி, மாத்தளை என்று பிரதானமான நகரங்களில் எல்லாம் நாடகம் போடவேண்டும் என்று எங்கள் பள்ளிக்கூடம் முடிவெடுத்தது. இதில் வரும் லாபம் கட்டிட நிதிக்குப் பயன்படும். அந்த நாடகத்தில் இடம் பெற்ற பிரதானமான பாடகர்களில் நானும் ஒருவன்.
கொழும்புக்கு நாடகக் குழுவோடு போவதென்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத பெரிய விஷயம். ‘பாலும் தெளிதேனும்’ பாடிச் சேர்த்து வைத்த என் புகழ் என் வகுப்பர்களிடம் சரிந்து பொறாமையாக உருவெடுத்தது. அதை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் நாடகக் குழுவில் போவதற்கு இருந்த ஒரு நிபந்தனை என்னைத் தடுமாற வைத்தது. கறுப்பு சப்பாத்து அணியவேண்டும் என்று சொல்லி விட்டார்கள். என்னிடம் இருந்தது முன்பக்கம் கொஞ்சம் நிமிர்ந்த பிரவுன் சாப்பாத்து. புதுச் சப்பாத்து என்றால் பக்கத்து வீட்டை கொள்ளை அடிக்க வேண்டும் என்று அம்மா சொல்லிவிட்டார் பிரவுன் சப்பாத்துக்கு கறுப்பு பொலிஷ் பூசி அதை கறுப்பாக்கினேன். லேசை பெருக்கல் குறிபோல மாறி மாறி பின்னிக்கட்டினேன். ஒருவரும் கண்டுபிடிக்கவில்லை. இன்று தான் முதல் முதலாக ஒப்புக்கொள்கிறேன்.
கொழும்பிலே நாடகங்கள் எல்லாம் குறைவின்றி அரங்கேறின. ஒவ்வொரு நாடகத்துக்கும் டிக்கட்டுகள் விற்றுத் தீர்த்தன அதிலே ‘சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே’ என்று உச்சத்தில் எடுத்து பிறகு சடாரென்று கீழே போய் ‘ஆடுவோமே’ என்று பாடி அசத்திய என் சாதனை பெரும் பங்கு வகித்தது. இந்தக் கொழும்பு பயணத்தில் நாலு மறக்கமுடியாத சம்பவங்கள் நடந்தன, அதிலே ஒன்று இங்கே சொல்ல முடியாதது.
முதல் முதலாக கழிவறையைப் பார்த்தேன். காலைக்கடன் முடித்து விட்டு மேலே தொங்கும் சங்கிலியை எட்டி இழுத்தால் தண்ணீர் எங்கிருந்தோ குபுகுபுவென்று பெரும் ஒசை எழுப்பி வந்து அடித்துக்கொண்டு போனது. நான் திகைத்துப் போய் வந்த காரியத்தை மறந்து சுவரோடு நின்றேன். வெளியே வந்து ஒருவரிடம் இந்த தண்ணீர் எங்கே போகிறது என்று கேட்டால் இந்து சமுத்திரம் என்று சொன்னார். எங்களுக்கு பூமி சாஸ்திரம் படிப்பித்த சுப்பிரமணியம் மாஸ்டர் இது பற்றி ஒன்றுமே சொல்லித் தரவில்லை. அவர் சைபீரியா சமவெளியைப் பற்றியே பேசினார். அதுவும் ஒரு வரி. இந்து சமுத்திரத்தின் இந்தப் பெரிய வேலையை நான் அன்று அறிந்து கொண்டேன். இந்து சமுத்திரத்துடன் எனக்கான உறவு இப்படித்தான் ஆரம்பித்தது.
நாடக ஒத்திகையின் போது சபாபதி மாஸ்டர் என்னைப் போட்டு உருட்டி எடுத்துவிடுவார். இவருக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லை. பெரிய கிளாசுக்கு படிப்பித்தவர். இவர் தலையில் ஒரு பகுதி முடி முளைப்பதை நிறுத்திவிட்டது. சைக்கிளைப் பிடித்து பத்தடி தூரம் ஒடிய பிறகு ஏறுவார். சில நேரங்களில் அவர் ஏறுமுன்னரே அவர் போக வேண்டிய இடம் வந்துவிடும். என்னை இல்லாமல் செய்வதற்கு தீர்மானித்தவர் போல திருப்பித் திருப்பி பாடச் சொல்லுவார். மற்றவர் கண்களுக்குப் பிடிபடாத நுணுக்கமான பிழைகள் இவர் கண்களில் படும். சுதிர்தம் டீச்சர் வந்து காப்பாற்றுவார். அவருடன் பேசும் போது மட்டும் அடிக்கடி சிரிப்பார். சிரிப்பு நின்றபிறகும் தொண்டைக்குள் இருந்து களுக்களுக் என்று சத்தம் அவருக்கு வரும்.
குதியால் தரையைக் குத்திக்கொண்டு பின்பாகத்தை குலுக்கி, பலவித நெளிவுகளை உடலில் காட்டியபடி, அந்தப் பெண் தோன்றுவாள். கையிலே ஏந்திய மாலை இருக்கும். அப்படியே கொண்டுவந்து என் கழுத்தில் சூட்டுவாள். அவள் பாடிய பாட்டு மகான், காந்தி மகான். அது நான் தான். ஒத்திகையின் போது சிலையாக நான் நடிக்கவேண்டும். சிலையாவது கொஞ்சம் அசைந்திருக்கும் ஒட்டுக்குள் அடங்கிய ஆமை போல நான் அசையாமல் இருப்பேன். நாடகம் நடந்த அன்று எப்படியோ ஒரு காந்தி சிலையைக் கண்டு பிடித்து கொண்டு வந்ததால் நான் தப்பினேன்.
புதிய கட்டிடத்துக்கு போதிய பணம் சம்பாதித்துக் கொண்டு நாங்கள் திரும்பினோம் புழுதித்தரை சிமெந்தாக மாறியது. ஓலைக்கூரை ஒட்டுக் கூரை ஆகியது. பெரிய அட்டைப் பெட்டிகளில் அடைத்து வைத்த விஞ்ஞானக் கருவிகள் எல்லாம் சோதனைக் கூடத்தில் அடுக்கப்பட்டன. இந்தப் புதிய மஞ்சள் கட்டிடத்தின் ஒரு சுவரிலோ, ஒரு செங்கல்லிலோ, ஒரு தூணிலோ என் பாட்டு சாதனைக்கான அத்தாட்சி இன்றுவரை ஒளிந்திருக்கும்.
நான் கொழும்பி லிருந்து திரும்பி வந்தபோது செலவுக்கு கொண்டு போன காசில் 25 சதம் மிச்சம் இருந்தது. பதினைந்து சதத்துக்கு பழுக்க ஆரம்பித்த ஆனை வாழைப்பழம் ஒரு சீப்பு ஐயாவுக்கு வாங்கினேன். இது எங்கள் கிராமத்தில் கிடைக்காது. ஐயா விருப்பமாக வைத்து, வைத்து சாப்பிடுவார். அவருக்கு அதைச் சாப்பிட்டு ஜீரணிப்பதில் சங்கடம் இருந்தால் நான் உதவி செய்யலாம்.
மிகவும் யோசித்து ஆலோசனைகள் கேட்டு, அம்மாவுக்கு பத்து சதத்தற்கு கொழும்பு வெற்றிலை வாங்கினென். இந்த வெற்றிலை நாட்டு வெற்றிலையைப் பொல கடும்பச்சையில் முரடாக இருக்காது. சுண்ணாம்பு வெள்ளையாக, சத்தமே போடாமல் கிழியும். நரம்புகூட கிள்ளத் தேவையில்லை. அப்படி மெத்தென்று இருக்கும்.
அந்த வெற்றிலைக் கட்டை அம்மா தண்ணீர் தெளித்து, தெளித்து பாதுகாத்து ஒரு வாரகாலம் சாப்பிட்டுத் தீர்த்தார். வீட்டுக்கு வருபவர்களிடமும், வராமல் ரோட்டால் போனவர்களிடமும் ‘என்ரை பிள்ளை கொழும்பில் இருந்து கொண்டு வந்தது’ என்று கைகளால் அளவைக் காட்டியபடி சொன்னார். நாள் போகப் போக இந்த அளவு கூடிக் கொண்டே வந்தது. ஒரு நாள் பருந்து பறப்பதுபோல கைகளை அப்படி விரித்துக் காட்டினார்.
சுற்றுப் பயணம் முடிந்து திரும்பிய ஒரு மாதத்தில் வருடச் சோதனை நடந்தது. அடுத்த வகுப்புக்கு புரமோஷன் கிடைத்தபோது அம்மா இல்லை. இறந்து போனார். விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் தொடங்கும் நாள் வந்தது. எங்கள் புது வகுப்புக்கு சுகிர்தம் டீச்சர் இல்லை என்று சொன்னார்கள். ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் வழக்கம்போல மேசை பிடிக்க எல்லோரும் போனார்கள். அந்தக் கூட்டத்தில் நான் இல்லை.