பாதிக் கிணறு

 

சமீபத்தில் ஒரு கட்டுரை படித்தேன். கனடாவின் பிரபல எழுத்தாளர் மார்கிரட் அட்வூட் எழுதியது. மார்கிரட்டின் தாயார் 94 வயதில் இறந்துபோனபோது அவரைப் பற்றிய தன் நினைவுக் குறிப்புகளை எழுதினார்.      அவருடைய ஆக முந்திய நினைவு அவர் சிறுமியாக இருந்தபோது காட்டோரத்தில் இருந்த வீட்டிலே நிகழ்ந்தது. அவருடைய தாயார் தும்புக்கட்டையை எடுத்துக்கொண்டு வெளியே போய் வீட்டுக்கு வரும் கரடிகளை விரட்டுவார். பனிப்புயல் அடிக்கும் சமயங்களில் தலையை முன்னுக்கு தள்ளிக்கொண்டு புயலுக்குள் நுழைவார். ஒருநாள் மகளிடம் முறைப்பாடு செய்தார், 'என்னால் முந்தியப்போல கூரையில் ஏறி பீலியில் சேர்ந்திருக்கும் இலைகளை அகற்றமுடியவில்லை.' 'என்ன, கூரையில்   ஏறினீர்களா? எப்போது?'  என்றார் மார்கிரட். நேற்றுத்தான் என்றார் தாயார். அவருக்கு அப்போது வயது 84.

 

 இதைப் படித்தபோது என்னுடைய அம்மாவின் ஞாபகம் வந்தது. அம்மா 84 வயதை எட்டவில்லை; அதில் பாதி வயதுகூட அவர் உயிர் வாழவில்லை. ஆனால் மார்கிரட்டின் தாயார்போல அம்மாவிடம் நிறைய துணிச்சல் இருந்தது. பயம் என்பதே அவர் அறியாத ஒன்று. மணமுடித்து வரும்போது அவருக்கு சின்ன வயதுதான். ஐயாவுக்கும் அவருக்குமிடையில் நிறைய வயது வித்தியாசம். அம்மா அதைப் பொருட்படுத்தியது கிடையாது என்றே நினைக்கிறேன். சேலையை இழுத்துப் பின்னால் கொய்யகமாகச் செருகிவிட்டு நாடியை நிமிர்த்தி அவர் நின்றால் நேரே பார்ப்பவர்களுக்கு சிறிது அச்ச உணர்வு ஏற்படும்.

 எங்கள் வீட்டைச் சுற்றியுள்ள வீடுகளில் எல்லாம் பொயிலைக் குடில் இருக்கும். பொயிலையை உணத்தும் மாதங்களில் எங்கள் ஊரை பொயிலை மணமும் புகை மணமும் சூழ்ந்திருக்கும். குடில்களில் இரவிரவாக வேலை செய்துவிட்டு நடுச்சாமத்திற்கு பிறகே ஊரில் படுக்கப் போவார்கள். அப்படியான ஒரு நாள் திருடன் எங்கள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டான். சத்தம் கேட்டு நாங்கள் எழும்பியதும் திருடன் பொயிலைக் குடிலுக்குள் போய் ஒளிந்துகொண்டான். அம்மா கொடுவா கத்தியை எடுத்துக்கொண்டு தனிய அவனைச் சந்திக்க குடிலுக்குள் நுழைந்தார். திருடன் எப்படியோ அம்மாவைத் தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டான். பின்னர் நான் அம்மாவிடம் பயமில்லையா என்று கேட்ட கேள்விக்கு அம்மா சொன்ன பதில் இன்றுவரைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது. 'குற்றம் செய்தவன் எவ்வளவு பெரிய ஆம்பிளையாய் இருந்தாலும் உள்ளுக்குள் பயந்தபடியே இருப்பான். அவனை வெல்லுறது ஒன்றும் பெரிய காரியமில்லை.'

 மணமான நாளிலிருந்து அம்மாவுக்கு ஒரேயொரு பிரச்சினை இருந்தது. கிணறு. அவர் கொஞ்சம் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர்கள் வீட்டில் சொந்தக் கிணறு இருந்தது; ஆனால் எங்கள் வீட்டில் இருந்தது பங்குக் கிணறு. எங்களுக்கும் பக்கத்து வீட்டுக்கும் இடையில் இருந்த வேலிக்கு நடுவில் பொதுவாக ஒரு கிணறு. அதில் சரி பாதி அவர்களுக்கு, மீதிப் பாதி எங்களுக்கு. இந்த ஏற்பாடு அம்மாவுக்கு பிடிக்காத ஒன்று. எங்கள் வீட்டைச் சுற்றி பெரிய வளவு இருந்தது. மணமாகி வந்த முதல் நாளே 'எங்களுக்கு என்று தனியாக ஒரு கிணறு வெட்ட முடியாதா? இவ்வளவு பெரிய வளவு இருக்குதே' என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஐயா 'ஒரு வீட்டுக்கு எதற்கு இரண்டு கிணறு' என்று சுருக்கமாக பதில் சொல்லிவிட்டார்.

 நான் சிறுவனாய் இருந்தபோது படித்த புத்தகங்களில் எல்லாம் ஆற்று வருணனை வரும். யாழ்ப்பாணத்தில் ஆறே கிடையாது;     எல்லா வீடுகளிலும் கிணறுதான். யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த பலர் தங்கள் சீவிய காலத்தில் ஆறே பார்க்காமல் இறந்திருக்கிறார்கள். நான் முதன்முதல் ஓர் ஆற்றைப் பார்த்தது என்னுடைய 17வது வயதில்தான்.

 பழைய காவியங்களில் எல்லாம் ஆற்று வர்ணனை நிறைய இடம் பெறும். ஒரு கவி ஆற்றைக் கண்டால் நகரமாட்டார்; வர்ணித்து தீர்த்துவிட்டுத்தான் அந்தப் பக்கம் போவார். சிலப்பதிகாரத்தில் 'வாழி காவேரி, வாழி காவேரி' என்று எத்தனை இடத்தில் வருகிறது. கம்பராமாயணத்தில் முதல் படலமே ஆற்றுப் படலம். கம்பர் சரயு நதியை ஆசை தீருமட்டும் வர்ணிக்கிறார். அதற்குப் பிறகு கோசல நாட்டைப் பாடி, அயோத்தியை பாடி அதற்கு பின்னர்தான் தசரதனிடம் வருகிறார்.

 ஓர் ஆற்றைப் பார்ப்பதற்கு முன்னரே நான் க.நா.சுப்ரமணியம் எழுதிய 'பொய்த்தேவு' நாவலைப் படித்திருக்கிறேன். நாவலின் ஓர் அத்தியாயம் முழுக்க காவேரி ஆற்றையும், அதன் கரையையும் ஆசிரியர் வர்ணித்துக் கொண்டே போவார். பின்னர்தான் எனக்கு இவை எல்லாம் விளங்க ஆரம்பித்தன. ஓர் ஊருக்கு உயிர் கொடுப்பது ஆறு. ஊரிலே இருக்கும் வீடுகளுக்கு ஆறு பொதுவானது, ஆகவே முக்கியமானது. எங்கள் ஊரிலே ஒவ்வொரு வீட்டிலும் கிணறு இருந்தது. ஆகவே அது இன்னும் கூடிய முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் ஒரு யாழ்ப்பாணத்து புலவரும் ஆற்றுப் படலம் போல கிணற்றுப் படலம் பாடியபின் நாவலை தொடங்கவில்லை.

 என்னுடைய தங்கை ஒரு கதை சொல்லுவாள். இந்திய ராணுவம் யாழ்ப்பாணத்தை, 1987ம் ஆண்டிலிருந்து மூன்று வருடம் பிடித்து வைத்திருந்தபோது அவள் அங்கே இருந்தாள். அடிக்கடி வீட்டை சோதனைபோட ராணுவம் வரும். அவள் புது வீடு கட்டி அதில் வசித்து வந்தாள். யாழ்ப்பாணத்தில் வீடு கட்டும்போது, ஒரு கூரை வைப்பது போல, யன்னல் வைப்பதுபோல, மதில் கட்டுவதுபோல வீட்டுக்காக கிணறு ஒன்றும் வெட்டுவார்கள். கிணறு     இல்லாத வீட்டில் தண்ணீர் இல்லை; தண்ணீர் இல்லாத வீட்டில் ஒருவரும் வாழமுடியாது. சோதனைக்கு வரும் பட்டாளத்துக்காரர்களுக்கு இது தீர்க்கமுடியாத ஆச்சரியம். அவர்கள் எங்கேயிருந்து வருகிறார்களோ அங்கே செல்வந்தர்கள் வீட்டிலேதான் கிணறு இருக்கும். 'ஒவ்வொரு வீட்டிலும் கிணறு இருக்கிறது. நீங்கள் பணக்காரர்கள். உங்களுக்கு என்ன பிரச்சினை' என்று சொல்லிவிட்டு போகும்போது தாங்கள் சொன்னதை நினைவில் வைத்திருக்கும் வகையில் ஓர் இந்திய அடியும் போட்டுவிட்டு போவார்கள்.
 
 கிணற்றுப் படலம் நாவலுக்கு எவ்வளவு முக்கியமானதோ அவ்வளவு அம்மாவுக்கு கிணறும் முக்கியம். மரமேறுவது, மாவிடிப்பது, தலை முழுகுவது இவற்றையெல்லாம் அம்மா அனுபவித்துச் செய்வார். அவருக்கு நிறைய நேரம் குளிக்கவேண்டும். தண்ணீரை அள்ளி அள்ளி தலையிலே ஊற்றிக்கொண்டே நிற்பார். நான் ஒரு விரலைப் பிடித்து நடக்கும் வயதிலே அம்மா எப்போது குளித்துவிட்டு வருவார் என்று காத்தபடி வெகுநேரம் துணி தோய்க்கும் கல்லில் குந்தியிருப்பேன்.

 பக்கத்து வீட்டில் நிறைய ஆம்பிளைகள் இருந்தார்கள். அவர்கள் கிணற்றடியில் நிற்கும் நேரங்களில் அம்மா குளிக்க முடியாது. ஆகவே அம்மா அதிகாலை நாலு, ஐந்து மணிக்கு போய் நின்று குளிப்பார். மறுபடியும் இரவு ஆறு, ஏழு மணிக்கு பொழுது மைமலாகும்போது குளிப்பார். மற்ற நேரங்களில் எங்களை இழுத்துப்போய் எந்த நேரம் வேண்டுமென்றாலும் தண்ணீர் அள்ளி ஊற்றி குளிக்க வார்ப்பார். ஆனால் அவர் அப்படி குளிக்க முடியாது. ஏதாவது செத்த வீட்டுக்கு போய்விட்டு அம்மா வந்தால் வீட்டுக்கு உள்ளே வரமுடியாமல் வெளியே குந்தியபடி மணிக்கணக்காக இருப்பார். சாயந்திரமாகி வெளிச்சம் மங்கியவுடன் தலை முழுகிவிட்டு உள்ளே வருவார்.

 எங்கள் வீட்டு வளவில் பலவிதமான மரங்கள் இருந்தன. நீங்கள் என்ன தேடுகிறீர்களோ அது கிடைக்கும். தென்னை, பனை, பலா, மா, புளி, முருங்கை என்று ஊரிப்பட்ட மரங்கள். வீட்டு தேவைக்கான வரும்படியை வைத்துக்கொண்டு அம்மா மீதியை விற்றுவிடுவார். ஐயா இதில் தலையிடுவதே இல்லை. அம்மா சேர்த்த காசு பெரும்பாலும் குடும்பச் செலவுக்கே பயன்படும். சில வேளைகளில் ஐயா அம்மாவிடம் கடன் கேட்பார். அது அபூர்வமான ஒரு தருணம். இரண்டு வெளிநாட்டு பறவைகள் நடனம் ஆடுவதுபோல அந்தக் காட்சி இருக்கும். 'ஒரு இருபது ரூபா கடன் தாரும்' இது ஐயா. அம்மாவின் முகம் பூரித்துவிடும். 'என்னட்டை ஏது இருபது ரூபா' இது அம்மா. ஐயா சரி என்று போய்விடுவார். சிறிது நேரம் கழித்து அம்மா முகத்தை தூக்கிக்கொண்டு ஐயாவிடம் போவார். 'எவ்வளவு கேட்டனீங்கள்?' ஒரு நிமிடத்துக்கு முன்னர் ஐயா கேட்ட தொகையை மறந்துவிட்டாராம். 'எனக்கு அவசரம் இல்லை, வேண்டாம்' என்பார் ஐயா. அம்மா சரி என்று சொல்லி தன் பின்பக்கத்தை காட்டி நடந்துபோவார். அந்த நடை வித்தியாசமாக இருக்கும். மறுபடியும் ஐயா 'நான் வெளியில போறன்' என்பார். இப்படியாக நடனம் தொடரும். அம்மா சந்தணப் பெட்டியை திறந்து இருபது ரூபா எண்ணிக் கொடுப்பார். கடன் என்பதை மூன்றுமுறை ஞாபகப் படுத்துவார். நான் அப்படி பலமுறை ஐயா கடன் கேட்பதையும் அம்மா கொடுப்பதையும் கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு தடவைகூட வாங்கிய கடனை திருப்பி ஐயா கொடுத்ததை நான் பார்க்கவில்லை.

 ஒரு நாள் அக்கா பெரியபிள்ளையானாள். அன்றிலிருந்து வீட்டு சட்டதிட்டங்களில் சில மாற்றங்கள் உண்டாகின. அக்கா பள்ளிக்கூடம் போவதை நிறுத்தினார்கள். பகல் நேரத்தில் அக்கா கிணற்றடியில் குளிப்பதும் தடைசெய்யப்பட்டது.  அக்காவும் அம்மாவுடன் சேர்ந்து குளிக்க வேண்டும் என்ற நியதி உண்டானது. அதிகாலையில் அம்மா அக்காவை உருட்டி உருட்டி எழுப்புவார். அக்காவுக்கோ நித்திரை கலக்கம். 'என்னை விடு அம்மா, கும்புடுறன்' என்று கெஞ்சுவாள். நாங்கள் மற்றப் பக்கம் திரும்பி மீதி நித்திரையை தொடருவோம்.

 இன்னொரு முறை அம்மா அப்பாவிடம் பேசினார். 'இவ்வளவு பெரிய காணி இருக்கு. தங்கச்சியும் பெரிய பிள்ளையாகிவிட்டாள். நாங்கள் ஒரு கிணறு வெட்டுவம். இந்த பங்குக் கிணறு சரிப்பட்டு வராது.' ஐயா காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. ஒரு காணிக்கு என்னத்துக்கு இரண்டு கிணறு என்பதே அவரது வாதம். அந்த தர்க்கமும் அசைக்க முடியாததாகத்தான் இருந்தது.

 ஒரு நாள் பின்னேரம் அம்மா படலையடியில் வந்து நிற்பதும், உள்ளே போவதுமாக அந்தரப்பட்டுக்கொண்டு இருந்தார். அவர் யாரையோ எதிர்பார்த்து நிற்பது தெரிந்தது. எங்கள் ஒழுங்கையில் மூன்று வீடு தள்ளி ஒரு காணியில் கிணறு தோண்டிக் கொண்டிருந்தார்கள். சீக்கிரமே பாறை கண்டுவிட்டதால் வெடி வைத்து தகர்ப்பது ஊர் முழுக்க கேட்கும். வேலை முடிந்து கிணறு வெட்டிகள் கடப்பாரை, பிக்கான், கூடை, கயிறு என்று சுமந்தபடி போய்க்கொண்டிருந்தார்கள். அவர்கள் உடம்பு முழுக்க வெள்ளைக் களிமண் பூசி பார்க்க வேடிக்கையாக இருந்தது. அம்மா அவர்களை மறித்து ஏதேதோ கேள்விகள் கேட்டார். அதிலே ஒன்று கிணறு வெட்ட எவ்வளவு செலவாகும் என்பது. 'அது ஆழத்தை பொறுத்தது. சில சீக்கிரத்தில் தண்ணி கண்டுவிடும், சில இழுத்தடிக்கும். இந்தக் கிணறு வெட்ட ஒப்பந்தம் நாலாயிரம் ரூபாய்' என்றான் ஒருவன். அம்மா சரி என்று உள்ளே போய்விட்டார்.

 இன்னொரு முக்கியச் சம்பவமும் இந்தச் சமயத்தில் நடந்தது. என்னுடைய மாமா, அம்மாவின் அண்ணர், சிங்கப்பூரில் இருந்து வந்திருந்தார். உலகப் போருக்கு முன்னர் போனவர் இருபது வருடம் கழித்து அம்மாவைப் பார்க்க வந்திருந்தார். அவர் இருக்குமிடமெல்லாம் அவரைச் சுற்றி வாசனைத் திரவிய மணம் இருக்கும். ஒரு வட்டமான டின்னிலிருந்து சிகரெட் எடுத்துக் குடிப்பார். வீட்டுக்குள்ளேயும் மெல்லிய தோல் செருப்பு அணிந்துதான் நடமாடினார். அவர் மணமுடித்து வசதியாக வாழ்ந்தார்.  புகைப்படங்களில் மாமியும், பிள்ளைகளும் ஜொலித்தார்கள். வீடு பளபளவென்று இருந்தது. ஒருநாள் நாங்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று மாமா அம்மாவைப் பார்த்து தான் என்னை கூட்டிக்கொண்டு போய் அங்கே வளர்க்கப்போவதாக கூறினார். அம்மா அதற்கு மறுமொழி சொல்லாமல் என்னிடமே கேட்கும்படி சொன்னார். மாமா என்னைப் பார்த்தார். அங்கேயிருந்த அத்தனை கண்களும் என்னைப் பார்த்தன. சிங்கப்பூர் சொர்க்கலோகம் என்பதில் என் மனதில் சந்தேகமே இல்லை. என் வாயிலிருந்து பிறக்கப்போகும் ஒரு வார்த்தையில் என் மீதி வாழ்க்கை முழுக்க தொங்கியது. ஒருவேளை நான் அன்று ஆம் என்று சொல்லியிருந்தால் இன்று என் வாழ்க்கை எப்படி எப்படி எல்லாம் ஆகியிருக்குமோ, யார் சொல்லமுடியும். நான் 'இல்லை' என்று அம்மாவின் முகத்தைப் பார்த்து தலையாட்டியபோது அம்மா ஒரு வாரத்துக்குள் இறந்துபோய்விடுவார் என்பது எனக்கு தெரியாது. 

 அம்மா போய் சில வாரங்களானதும் அக்கா அம்மாவின் சந்தணப்பெட்டியை திறந்து பார்த்தார். அக்காவுக்குத்தான் அம்மா சாவியை எங்கே ஒளித்து வைப்பார் என்பது தெரியும். அது அடுக்குப்பெட்டிகளின் அடியில் கிடந்தது. பெட்டியை திறந்ததும் சந்தண மணமும், அம்மாவின் மணமும் சேர்ந்து எழும்பியது. அம்மா மணமுடித்து வந்தபோது அணிந்த சரிகை போட்ட உத்தரீயம், கிட்டத்தட்ட எல்லா ரசமும் போய்விட்ட ஒரு கைக்கண்ணாடி, பழுப்பாகிப் போன ஓலை நறுக்கில் யாருடையதோ ஒரு சாதகக் குறிப்பு என்று பல இருந்தன. அடியிலே ஒரு கட்டுக் காசு அகப்பட்டது. எல்லாம் பத்து ரூபாய் தாளாகக் கிடந்தது. அக்கா அவ்வளவு காசை ஒருசேரக் கண்டதில்லை. பயந்துவிட்டார். நாங்களும் அக்காவைப் பார்த்து பயந்து போனோம். ஓடிப்போய் ஐயாவை கூட்டி வந்தோம். அவரும் பெட்டியை கிண்டிப் பார்த்தார். வேறு ஒரு கடிதமோ, குறிப்போ கிடைக்கவில்லை. காசை எண்ணிப் பார்த்தபோது சரியாக இரண்டாயிரம் ரூபாய் இருந்தது. ஐயாவினால் நம்பவே முடியவில்லை. அம்மா சாவதற்கு இரண்டு நாள் முன்புகூட பணம் கேட்டிருக்கிறார். அம்மா இல்லையென்று அடித்துச் சொல்லியிருக்கிறார்.
 
 சில நாட்கள் கழித்து ஐயாவைப் பார்க்க அவருடைய பழைய நண்பர் ஒருத்தர் வந்திருந்தார். அப்பொழுது இதைப் பற்றிச் சொன்னபோது ஐயாவுக்கு கண் கலங்கியது. 'என்ரை ராசம்மாவுக்கு நான் ஒரு குறையும் வைத்ததில்லை. ராணி மாதிரித்தான் இருந்தாள். யாருக்காக சேர்த்துவைத்தாள்' என்று சொல்லி தழுதழுத்தார்.

 அம்மா இறந்து 22 வருடங்களுக்கு பின்னர் ஐயாவும் போய்ச் சேர்ந்தார். அந்த இருபத்திரண்டு வருடகாலமும் ஐயாவால் அம்மா ரகஸ்யமாக காசு சேர்த்ததை மறக்க முடியவில்லை. 'நான் என்ன குறைவைத்தேன்' என்று அரற்றிக்கொண்டே இருந்தார். மணமுடித்து வந்த நாளில் இருந்து அம்மா பாதிக் கிணறையே ஆட்சி செய்தார். அவர் இறந்தபோதும் பாதிக்கிணறு வெட்டக்கூடிய அளவுக்குத்தான் பணம் சேர்த்திருந்தார்.

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta