பேனாவும் துப்பாக்கியும்

அவருக்கு இரண்டு தேர்வுகள் இருந்தன. அவர் பேனாவைத் தேர்ந்தெடுத்தார். அந்தக் காரணத்தினால் வாழ்நாள் முழுக்க ஓடிக்கொண்டிருந்தார். அவர் கால்களும் ஓயவில்லை. அவர் பேனாவும் ஓயவில்லை.

எஸ். சிவநாயகத்தை நினைக்கும்போது பவளமல்லிகை ஞாபகத்துக்கு வருகிறது. சிவநாயம் வீடு கொக்குவிலில் எங்கள் வீட்டுக்கு சில வீடுகள் தள்ளி இருந்தது. சிறுவயதில் அந்த வீட்டுக்கு அதிகாலையில் போவேன் நிலத்திலே விழுந்துகிடக்கும் பவள மல்லிகை பூக்களை பொறுக்குவதற்காக. ஒருநாள் சிறிது நேரம் கழித்து சென்றபடியால் வேறு யாரோ என்னை முந்திவந்து பொறுக்கிக்கொண்டு போய்விட்டார்கள். அப்பொழுது ஒரு கண்ணாடி போட்ட அண்ணா வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தார். பவளமல்லி மரத்தை எனக்காக உலுக்கிவிட்டார். நிறையப் பூக்கள் கிடைத்தன. அதுதான் எங்களுடைய முதல் சந்திப்பு.

அடுத்தது, கல்கி பத்திரிகையை என்னுடைய அக்காவுக்காக இரவல் வாங்கப் போனபோது. எங்கள் கிராமத்தில் அவர்கள் வீட்டுக்கு மாத்திரம் கல்கி பத்திரிகை வாராவாரம் இந்தியாவிலிருந்து நேராக வரும். அவர்கள் படித்து முடித்தவுடன் முதல் ஆளாக நான் போய் நிற்பேன். வேறு ஒருவருக்கும் கொடுக்காமல் பத்திரிகையை எனக்காகப் பாதுகாத்துவைத்து சிவநாயம் தருவார். நாங்கள் படித்து முடித்தபிறகு அந்தப் பத்திரிகை கிராமம் முழுக்க சுற்றும். அப்போதிலிருந்து அவரிடம் எனக்கு மரியாதை கலந்த பயம். பிற்காலத்தில் என்னுடைய நண்பர்கள் எல்லாம் அவரை சிவா என்று அழைத்தபோது என்னால் அப்படி அழைக்கமுடியவில்லை. பழைய பள்ளிக்கூட வாத்தியாரை சந்திப்பதுபோல எட்டத்திலேயே அவருடன் என்னுடைய பழக்கம் தொடர்ந்தது. ஆனால் நான் அவருடைய வளர்ச்சியையும் செயல்பாடுகளையும் கவனித்துக்கொண்டே வந்தேன்.

முப்பது வருடங்களுக்கு மேல் கொழும்பில் பத்திரிகைத்துறையில் பணியாற்றினார். Ceylon Daily News இலும் Ceylon Daily Mirror இலும் வேலைபார்த்த பின்னர் Saturday Review பத்திரிகையை தொடங்கி அதன் ஆசிரியராக பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் அவர் எழுதிய தலையங்கங்கள் பிரசித்தி பெற்றவை. அரசாங்கத்தை கதிகலங்க அடித்தவை. 1983ல் இலங்கை அரசாங்கம் பத்திரிகைக்கு தடை விதித்தது. உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் இந்தியாவுக்கு கள்ளமாகத் தப்பி ஓடினார். அன்று ஆரம்பித்த ஓட்டம் கடைசிவரைக்கும் நிற்கவே இல்லை.

இலங்கையில் சிறைவைக்கப்பட்டு சித்திரவதை அனுபவித்தார். இந்தியாவிலும் சிறையில் சொல்லமுடியாத கொடுமைகளுக்கும் நெருக்குதல்களுக்கும் ஆளானார். நாடு நாடாக அலைந்தார். சிங்கப்பூர், ஹொங்கொங், ஆப்பிரிக்க நாடுகள், பிரான்ஸ், இங்கிலாந்து என்று சுற்றினார். கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றொரு முதுமொழி உண்டு. இவர் ஒரு இடத்தை நாடமுன்னரே இவருடைய புகழ் அந்த நாட்டை எட்டியிருந்தது. ஒருநாடுகூட இவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தனைக்கும் அவர் செய்த குற்றம் எழுத்து தொழிலை எந்த நிலையிலும் கைவிடாதது. பத்திரிகை சுதந்திரத்துக்காக போராடியது. எந்தக் கடைசி நிலையிலும் கொள்கையின் உறுதிப்பாட்டில் குலைந்துபோகாமல் நின்றது. ஒரு நாட்டு மக்களின் விடுதலைக்காக நியாயம் கேட்டு எழுதினார். வேறு ஒரு பாவமும் அவர் அறியார். ஒரு வாழ்நாள் முழுக்க இதுவே தவமானது.

2002ம் ஆண்டு தொடக்கத்தில் The Pen and the Gun என்ற புத்தகத்தை எழுதி அது வெளிவந்திருந்தது. அது கனடாவில் கிடைக்கவில்லை ஆகவே இங்கிலாந்துக்கு எழுதி அதை தருவித்து படித்தேன். ஆங்கில மொழியை இவ்வளவு லாவகமாகவும் துல்லியமாகவும் கையாண்டவர்கள் குறைவு. உடனேயே அவரை பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன். அவர் என்னுடன் தொலைபேசியில் பேசினார். அப்பொழுது அவருடைய புத்தகம் அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் ஆராய்ச்சிக்கு உதவுவதாகவும், அந்த மாணவர் என்னிடமிருந்த புத்தகத்தை கடன் வாங்கிய விவரத்தையும் கூறினேன். அவர் குரலில் கட்டு மீறிப்போன மகிழ்ச்சி தெரிந்தது. அதுதான் கடைசி. அதன் பிறகு தொடர்பே இல்லாமல் போனது.

குருசேத்திரம் நிலத்துக்காக மூண்ட போர். நீண்டநாள் பகையை தீர்ப்பதற்காக நடந்த நீதியான போர். 'குருசேத்திரன்' என்ற பெயரில் ஒரு வாழ்நாள் முழுக்க நிலத்துக்காக போராடிய மக்களுக்காக எழுதினார். நீதி கேட்டு எழுதுபவர்களுக்கு வாழ்க்கையில் நிம்மதி கிடைக்காது. அவர்கள் ஓடவேண்டும். பூமியில் இருந்து மறையும்வரை ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.

அவருடைய அன்பு மனைவிக்கு என் அனுதாபங்கள். என்னை அவருக்கு ஞாபகம் இருக்குமோ தெரியாது. ஒரு நாள் மாலை ஆறுமணியளவில் கொழும்பில் ஒரு பாலத்தின் நடுவில் அவரைச் சந்தித்திருக்கிறேன். அது நடந்து இப்போது 50 வருடங்கள்.

http://karikaalan.blogspot.com/2005/09/srilanka-witness-to-history.html
 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta