விட்டுப்போச்சுது

  [கலாநிதி செவாலியர் அடைக்கலமுத்து ஐயா அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் ரொறொன்ரோ வந்திருந்தபோது அவரைச் சென்று சந்தித்தேன். அந்தச் சந்திப்பு எனக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ஐயா எழுதிய 'இந்த வேலிக்கு கதியால் போட்டவர்கள்' நூலினை படித்து அனுபவித்தேன். சென்ற மாதம் அவர் இறந்துபோனது தமிழுக்கு பெரும் இழப்பு. அவர் ஞாபகமாக இந்தப் பதிவு.]
 
 அடைக்கலமுத்து ஐயாவை சந்தித்தபோது அவர் முந்தைய யாழ்ப்பாணத்தை அப்படியே என் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தினார். அவர் படித்த பள்ளிக்கூடத்தில் அவரைப் படிப்பித்த ஆசிரியர்களில் சிலர் மோசமானவர்கள். எடுத்தவுடன் அடித்துவிட்டுத்தான் விசாரிப்பார்கள். யார் முதலில் முறைப்பாடு கொடுக்கிறாரோ அவர் பக்கமே தீர்ப்பு இருக்கும். அடைக்கலமுத்து கெட்டிக்காரன் என்றபடியால் அவருக்கு படிப்பு விசயத்தில் அடி கிடைத்ததில்லை, ஆனால் அவருடன் படிக்கும் மாணவர்களின் சதியில் சிலசமயம் மாட்டுப்பட்டு அடி வாங்குவார். முதல் முறை அடி விழுந்தபோது தாங்கிக்கொண்டார்; இரண்டாவது முறை பள்ளிக்கூடத்தை விட்டே ஓடவேண்டி நேர்ந்தது.

 

 சண்முகம் இவருடன் படித்த மாணவன். தினமும் வண்டிலில் மணல் ஏற்றிப் பறித்துவிட்டு வருவதால் நேரம் பிந்தியே வருவான். ஆனால் புத்திசாலி, ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது சாட்டு தயாரித்து ஆசிரியரை சமாளிப்பான். அவனுடைய பட்டப் பெயர் 'சாலக்கார சண்முகம்.' அவனுக்கு புகையிலை போடும் பழக்கம் இருந்தது. ஆசிரியர் அவனுடைய மடியை அடிக்கடி சோதித்துப் பார்ப்பதால் அடைக்கலமுத்துவிடம் புகையிலையைக் கொடுத்து பத்திரமாக வைத்திருப்பது அவன் வழக்கம்.

 ஒரு நாள் சாலக்கார சண்முகம் வீட்டுக் கணக்கு போடவில்லை. ஆசிரியர் அவனை அடிக்கப்போகிற சமயம் அவரை திசை திருப்புவதற்காக அடைக்கலமுத்து மடியில் புகையிலை ஒளித்து வைத்திருக்கும் விசயத்தை சொல்லிவிடுகிறான். ஆசிரியர் அடைக்கலமுத்துவின் மடியை சோதித்துப் பார்த்து நல்ல அடி கொடுக்கிறார். அந்தச் சம்பவத்துக்கு பிறகு அடைக்கலமுத்து எச்சரிக்கையாக இருக்க பழகிக்கொண்டார். அப்படியும் விதி வசத்தால் இரண்டாவது தடவையும் ஒரு சதியில் மாட்டினார். அது அவருடைய வாழ்க்கையையே மாற்றியது.

 அடைக்கலமுத்து கணிதத்தில் வலு கெட்டிக்காரர். விஞ்ஞானியாகவேண்டும் என்று நினைத்தார். இவரோடு படித்த சிவராசனுக்கு கணக்கு ஓடாது. ஒவ்வொரு நாளும் இவர் கொண்டுவரும் வீட்டுக் கணக்கை கொப்பியடித்து சிவராசனும் தப்பிக்கொண்டு வந்தான். ஒரு நாள் ஆசிரியர் வகுப்பில் முதல் கெட்டிக்காரன் அடைக்கலமுத்து என்றும் இரண்டாவது கெட்டிக்காரன் சிவராசன் என்றும் சொல்லிவிட்டார்.
அன்றிலிருந்து அடைக்கலமுத்து சிவராசானுக்கு கொப்பி காட்ட மறுத்தார். சிவராசானுக்கு கறுவம், எப்படியும் அடைக்கலமுத்துவை பழி வாங்க நினைத்தான். ஒரு நாள் அடைக்கலமுத்துவை ஆசிரியர் அழைத்து ஒரு சதம் காசு கொடுத்து அதற்கு இரண்டு சூப்புத்தடி வாங்கிவரும்படி பணித்தார். அடைக்கலமுத்து திரும்பி வரும் வழியில் ஒரு சூப்புத்தடியை நக்கிப் பார்த்து, துடைத்துவிட்டு ஆசிரியரிடம் கொடுத்தார். சிவராசன் அடைக்கலமுத்து நக்கியதைக் கண்டுபிடித்து அதை ஆசிரியரிடம் சொல்லிவிட்டான். அன்று அடைக்கலமுத்துவுக்கு கிடைத்த அடியில் சதை உரிந்து பள்ளிக்கூடம் போவதையே நிறுத்திவிட்டார். தகப்பன் எவ்வளவு வற்புறுத்தியும் அசையவில்லை. கடைசியில் அடைக்கலமுத்துவின் விருப்பப்படி அவரை ஒரு தமிழ் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார். உலகம் ஒரு தமிழறிஞரைப் பெற்றது; விஞ்ஞானியை இழந்தது.

 கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதை விளக்க அடைக்கலமுத்து ஒரு கதை கூறினார். ஓர் அரசனைப் பார்க்க ஒரு புலவர் நெடுந்தூரம் நடந்து, களைத்து, புழுதி படிய வந்து சேர்ந்தார். அரசன் புலவருக்கு ஸ்னானம் செய்வித்து, புத்தாடை புனைந்து, வாசனைத் திரவியங்கள் பூசி அவரை தன்னிடம் அழைத்துவரும்படி சேவகனுக்கு கட்டளையிட்டார். அப்படியே அவன் செய்தான்.

 புலவருக்கு எண்ணெய் தேய்க்கும்போது அவர் சேவகனை நிறுத்தச் சொல்லி 'ஒருகையில் வைத்து எண்ணெய் தேய்க்கவேண்டாம்', இதை இப்படியே போய் அரசனிடம் சொல்லு என்று அவனை அனுப்பினார். சேவகனும் அப்படியே செய்தான். அரசனின் மதியூகத்தை சோதிக்கவே புலவர் அப்படிச் சொன்னார். அரசன் சேவகனிடம் 'புலவரை எங்கே இருத்தி எண்ணெய் தேய்த்தாய்?' என்று விசாரித்தார். அவன் 'கல்லுக்கும்பி'  என்றான். அரசனுக்கு புலவரின் அடிப்பாகம் நொந்திருக்கிறது என்பது விளங்கிவிட்டது. 'ஒரு கை' என்பதற்கு எதிர்ப்பதம் 'பலகை'. ஒரு கையில் வைத்து எண்ணெய் தேய்க்காமல் புலவரை 'பலகையில்' வைத்து எண்ணேய் தேய்க்கும்படி அரசன் கட்டளையிட்டான். புலவரும் அரசனின் மதிநுட்பத்தை வியந்து அவன் மேல் கவி பாடினார் என்பது கதை. கற்றவர் சொல்வது கற்றவருக்கே புரியும்.

 ஈழத்திலே வாழ்ந்த தமிழறிஞர் பண்டிதமணி கணபதிப்பிள்ளையைப் பற்றி அடைக்கலமுத்து தன் நூலிலே சொல்கிறார். அவரிடம்தான் அடைக்கலமுத்து தமிழ் படித்தவர். அன்று அவருக்கு முதல் நாள், முதல் வகுப்பு. பண்டிதமணியிடம் கலிங்கத்துப் பரணி பாடலை விளக்கம் கேட்டது தன் வாழ்நாளில் முக்கியமான நிகழ்வு என்று கூறுகிறார், அடைக்கலமுத்து. பணம் இல்லாதவனுக்கு திடீரென்று பெரும் திரவியம் கிடைத்தால் என்ன செய்வான். ஆருமில்லாத நேரம், அங்குமிங்கும் பார்த்துவிட்டு பணத்தை எண்ணிப் பார்த்து திரும்பவும் பூட்டிவைப்பான்.

 கணவன் அவளுடைய முலையிலே பதித்த கைவிரல் நக அடையாளம் நாணயக் குத்திபோல பதிந்து கிடக்கிறது. ஒருதரும் காணாத இடத்திலே போய் மெல்லத் தாவணியைக் கழற்றி நெஞ்சிலே பதிந்திருக்கும் அ¨யாளத்தை பார்ப்பாள். அது முந்திப் பிந்தி பணத்தைக் காணாதவர் கண்டதுபோல சந்தோசமாயிருக்கும். அது அழியக்கூடாது என்று நினைத்து அவசர அவசரமாக சீலையினாலே மூடிவைப்பாள்.

  முலைமீது கொழுநர் கைநகம் மேவு குறியை
  முன் செல்வம் இல்லாதவர் பெற்ற நிதிபோல்
  கலைமீது எடா(து) யாரும் இல்லாத இடத்தே
  கண்ணுற்று நெஞ்சகம் களிப்பீர்கள் – திறமின்

 எப்பொழுது கலிங்கத்துப் பரணியை கையிலே எடுத்தாலும் தனக்கு பண்டிதமணியின் ஞாபகம் வராமல் போகாது என்று கூறுகிறார் அடைக்கலமுத்து.

 பாலசுப்பிரமணியம் என்ற பெயரை இளமுருகன் என்று மாற்றிய புலவர்மணி ஈழத்திலே வாழ்ந்தார். தனித்தமிழ் ஆர்வத்தினால் தன்னுடைய பெயரை மாத்திரமில்லாமல் 'நாராயணன்' என்ற தன்னுடைய வேலைக்காரனுடைய பெயரையும் 'நடுவிலான்' என்று மாற்றியவர். இவர் அடைக்கலமுத்துவின் குரு. ஒருநாள் நடுவானத்தை நோக்கி சூரியன் ஏறிக்கொண்டிருந்தான். இவருடைய குரு களைப்போடு வீதியிலே பேருந்துக்காக காத்து நின்றார். அடைக்கலமுத்து அவசர அவசரமாக அவருக்கு தன்னுடைய மகன் மூலம் பால், பழம், கசுக்கொட்டை, முந்திரியவத்தல் போன்றவற்றை அனுப்பிவைத்தார். குரு நெகிழ்ந்துபோனார். உடனேயே பக்கத்திலே சுருட்டி வைத்திருந்த வீரகேசரிப் பேப்பரின் விளிம்பிலே ஒரு வெண்பா எழுதி அனுப்பினார். அதன் பொருள் இதுதான்.

 முன்னொரு காலத்திலே அவ்வை விநாயகரிடம் நாலு தந்து மூன்றைக் கேட்டாள். அதாவது பால், தேன், பாகு, பருப்பு இவற்றைக் கொடுத்து அதற்கு பிரதியுபகாரமாக சங்கத் தமிழ் மூன்றையும் கேட்டாள். முருகனிடம் கேட்கவில்லை, கேட்டால் அது கிடைக்காதென்று அவளுக்கு தெரியும். அப்படியிருக்க, நீரோ இளமுருகனான எனக்கு நாலு தந்து என்ன பயன்? ஒன்றும் பிரயோசனமில்லை, என்றாலும் நல்லாயிரும்.

  நாலு கொடுத்தவ்வை மூன்று வரங்கேட்டாள்
  வேலவற் கீந்திட்டால் வீணென்றே – மேலும்
  இளமுருகற் கீந்தால் என்ன பயன், என்னமுதே
  வளம் பெருகி நீடூழி வாழ்.


 புத்தகத்தில் ஓர் இடத்தில் அடைக்கலமுத்து யாழ்ப்பாணத்துக்கு கல்கி ஆசிரியர் வந்து போனதை பற்றியும் குறிப்பிடுகிறார். கூட்டத்தில் ஒருவர் கல்கியிடம் ஒரு கேள்வி கேட்கிறார். 'வடக்கே இந்தியும், தெற்கே சிங்களமும் நசிக்கும்போது தமிழின் எதிர்காலம் என்ன?' கல்கியின் பதில் இப்படி இருந்தது.
 'எனக்கு நன்கு அறிமுகமான ஒரு நண்பர் இருக்கிறார். அவர் ஒரு சிவபக்தர். தனது அருமை மகனுக்கு மிக நீளமான ஒரு பெயரை வைத்திருந்தார். சிவநாராயண பழனிவேல். இவ்வளவு நீண்ட பெயரை ஏன் வைத்தீர்கள் எனக் கேட்டேன். நாராயணனை இந்தப் பக்கம் சிவனும் அந்தப் பக்கம் பழனிவேலனும் நசுக்கவேண்டும். அதற்காகத்தான் இந்தப் பெயரைத் தெரிந்துகொண்டேன் என்றார். எப்படி நசுக்கினும் நாராயணன் நசுங்கிவிடப் போவதில்லை. தமிழ் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக எத்தனையோ இடர்ப்பாடுகளிலே தழைத்திருக்கிறது. அதற்கு ஆபத்து வந்துவிடாது.'  ஐம்பது வருடங்களுக்கு முன்னர் கல்கி கூறிய பதில் இன்றைக்கும் பொருத்தமானதாகத்தான் இருக்கிறது என்றார் அடைக்கலமுத்து.

 பேராசிரியர் செல்வநாயகத்திடம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அடைக்கலமுத்து இலக்கிய நலனாய்தல் படித்தார். அந்தக் காலத்தில் ரா.பி.சேதுப்பிள்ளைபோல எழுதுவது ஃபாஷனாக இருந்தது. 'நாடு நீங்கிக் காடு புகச் சென்ற கோதையாகிய சீதை' என்று யாராவது எழுதினால் அது என்ன 'கோதையாகிய சீதை' என்று பேராசிரியர் கிண்டல் செய்வார். 'ஓசை செவியில் கேட்டு' என்று எழுதினால் போச்சு, குறுக்காக வெட்டிவிட்டு 'ஓசை வேறு எங்கே கேட்கும், கண்ணிலா?' என்று புன்னகைப்பார். ஒரு நாள் வகுப்பில் பாரதியாருடைய 'திக்குத் தெரியாத காட்டில்' பாடல் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  அப்போது அடைக்கலமுத்து எழுந்து நின்று பாரதியார் நினைத்த கருத்துக்கு பாடல் வரிகள் ஒத்துப்போகவில்லை என்றார். வகுப்பில் ஒரே அமைதி. 'எப்படிச் சொல்கிறீர்கள்?' என்றார் பேராசிரியர்.

 'திக்குத் தெரியாத காட்டில் கண்ணனைக் காணத் தவிக்கிறாள் காதலி. அவனைத் தேடித் தேடி அலைகிறாள். ஆனால் அவளுக்கு என்ன தெரிகிறது? மிக்க நலமுடைய மரங்கள், விந்தைச் சுவையுள்ள கனிகள், மலைகள், நதிகள், நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள், நீளக் கிடக்கும் இலைக் கடல்கள், சுனைகள், முட்கள், புதர்கள். இவற்றிலே அவள் மனதைப் பறிகொடுக்கிறாள், ஒரு சுற்றுலாப் பயணிபோல. கண்ணன் தோன்றுவானா? இதுதான் கண்ணனைக் கண்டடையும் முறையா?' பேராசிரியர் மடிப்புச் சால்வையை இழுத்துப் போட்டபடி அடைக்கலமுத்துவை அன்று பாராட்டினார்.

 புலவர்களையும், பேராசிரியர்ளையும் மட்டுமல்லாமல் தன் இளவயது நண்பர்களைப் பற்றிய குறிப்புகளையும் அடைக்கலமுத்து தருகிறார். இவரோடு படித்த  கேசவன் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன். அவனுக்கு படிப்பு ஏறாதபடியால் ஒரு சாப்பாட்டுக் கடையில் வேலை பார்த்தான். இவர் தன் நண்பனை பார்க்கப் போனபோது அவன் அளவில்லா மகிழ்ச்சியில் குதித்தான். அதுவே கேடாகவும் அமைந்துவிட்டது.

 அன்று அவனுக்கு வேலை முடிந்ததும் இருவரும் திரைப்படம் பார்க்கப் போவதென்று தீர்மானித்தார்கள். அவன் அவசர அவசரமாக தோசை மாவை அரைத்து அண்டாவில் கலக்கி வைத்துவிட்டு இரண்டாவது ஆட்டத்துக்கு புறப்பட்டான். அவசரத்தில் வந்தவன் அண்டாவை மூட மறந்துவிட்டான். அடுத்த நாள் காலை தோசை சாப்பிடுவதற்கு ஒருவர் கடை திறந்ததும் வந்து சேர்ந்தார். அவர் தோசையை பிய்த்து வாயில் வைத்தால் மயிர் மயிராக வருகிறது. 'என்ன முதலாளி தோசைக்கு மசிர் இருக்கா?' என்றார். பார்த்தால் தோசைப் பானைக்குள் இரவு ஒரு பூனை விழுந்துபோய் கிடந்தது. கேசவனுக்கு வேலை போய்விட்டது. இருந்த ஒரு வேலையையும் தொலைத்த கேசவன் ஆடிப்போகவில்லை, 'மசிர் வேலை' என்றான்.

 ஒரு காலத்தில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் யாழ்ப்பாணத்துக்கு குட்டி ராசா போல இருந்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவர். அடைக்கலமுத்து காங்கிரஸ் கட்சி கூட்டங்களில் எல்லாம் பேசுவார். இருவரும் ஒருவர்மேல் ஒருவர் பெருமதிப்பு வைத்திருந்தார்கள். ஜீ.ஜீ ஒரு புகழ்பெற்ற நியாயதுரந்தர். (பயப்படவேண்டாம், இந்தக் காலத்து தமிழில் 'வழக்கறிஞர்'.) இவர் வாதாடி வென்ற வழக்குகள் பற்றி ஒரு புத்தகம் எழுதலாம். அதிலே இலங்கை முழுக்க பேசிய வழக்கு என்று ஒன்று இருந்தால் அது 'யானை மார்க் தீப்பெட்டி' வழக்குத்தான். ஒரு கடைக்காரரை, தீப்பெட்டி அரைச் சதம் கூட்டி விற்றார் என்று பொலீஸ் பிடித்துவிட்டது. அரசாங்க தரப்பு வழக்கறிஞர், கடைக்காரர் 'ஒரு யானைப்பெட்டியை' அரசாங்கம் நிர்ணயித்த விலையிலும் பார்க்க அதிக விலையில் விற்றுவிட்டதாக குற்றம் சாட்டினார். ஜீ£.ஜீ£. பொன்னம்பலம் நீதவானுக்கு தீப்பெட்டியை தூக்கி காட்டி அதில் இரண்டு யானைகள் படம் போட்டிருப்பதாகவும், அது 'ஒரு யானைப்பெட்டி' அல்ல என்றும் வாதாடி வழக்கை வென்றுவிட்டார்.

 இப்படி பல ருசிகரமான தகவல்கள் கிடைத்தாலும் இது வெறும் சம்பவங்களின் தொகுப்பு அல்ல; அதைச் சொன்னவிதம் இலக்கியத் தரமாக அமைந்திருந்தது. வர்ணனைகளும், உவமைகளும் வாசிப்பு இன்பத்தைக் கூட்டின. உதாரணத்துக்கு சில.

 'சூரிய உதயத்தை எதிர்பார்க்கும் இரா காவல்காரனைப்போல…'
 'இனிப்பு போத்தல்களின் மேலால் முதலாளியின் முகம் தெரிந்தது.'
 'என் இருதயத்தின் எல்லா அறைகளிலும் விளக்குகள் எரிந்தன.'
 'கமக்கட்டுக்கு மேலே தொங்கிய சட்டையோடு வந்த மகளை…'
 'எழுதி இலேசாக அழிந்த கரும்பலகைபோல தலைமயிர் நரையும், கருமையும் கலந்திருக்கிறது.'

 நான் புத்தகத்தை வாசித்து முடித்ததும் லண்டனில் இருக்கும் அடைக்கலமுத்து ஐயாவை தொலைபேசியில் அழைத்து என் பாராட்டைத் தெரிவித்துவிட்டு 'என்ன ஐயா, இப்படிச் செய்துவிட்டீர்கள்?' என்றேன். அவர் 'ஏன்?, ஏன்?' என்றார். 'நீங்கள் என்னிடம் சொன்ன சுவையான சம்பவங்கள் சில விட்டுப் போச்சுதே?' அவர் 'அப்படியா, என்ன?' என்றார். நான் ஒன்றுக்கு மேல் ஒன்றாகச் சொன்னேன். 'இவை உங்கள் வாழ்க்கையையே மாற்றிய சம்பவங்கள், மிக முக்கியமானவை' என்றேன். சிறிது நேர மௌனத்திற்கு பிறகு சன்னமான குரலில்  'விட்டுப்போச்சுது'  என்றார் துயரத்தோடு.

 மார்க்கோ போலா என்பவர் தான் சீனாவுக்கு போய் வந்த வரலாற்றை பெரிய புத்தகமாக எழுதினார். இறக்கும்போது தான் பார்த்ததில் பாதியைத்தான் எழுதியதாகக் கூறினார். மீதி விட்டுப்போச்சுது. ஜெயமோகன் சமீபத்தில் சு.ராவைப் பற்றி ஒரு புத்தகம் எழுதினார். அது எழுதி வெளிவந்த சில நாட்களில் பேசும்போது பல சம்பவங்கள் விடுபட்டுவிட்டதாக அவரே என்னிடம் சொன்னார்.

 நான் அடைக்கலமுத்து ஐயாவை சமாதானப் படுத்தினேன். 'இது எழுத்தாளர் எல்லோருக்கும் நடப்பதுதான். ஐயா, யோசிக்காதையுங்கோ. விடுபட்ட எல்லா சம்பவங்களையும் தொகுத்து இன்னொரு புத்தகமாகப் போடலாம்' என்றேன்.

 அவர் சிரித்தார். அந்த 85 வயது சிரிப்பு அட்லாண்டிக் சமுத்திரத்தை கடந்து என்னிடம் வந்தது.


  

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta