வெ.சா – வித்தியாசமான மனிதர்

 

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களை நினைக்கும்போது பல்வேறு சித்திரங்கள் தோன்றும். அசோகமித்திரனை நினைத்தால் என்ன காரணமோ சமிக்ஞை விளக்குகள் ஞாபகத்துக்கு வருகின்றன. புதுமைப்பித்தன் என்றால் மாம்பழம். பிரமிள் என்றால் இறகு, லா.ச.ரா என்றால் ஊஞ்சல், எஸ்.ராமகிருஷ்ணன் – மகாபாரதம், நாஞ்சில்நாடன் – பாம்பு, ஜெயமோகன் – மேப்பிள் இலை. வெங்கட் சாமிநாதன் என்றால் எனக்கு Crimson Gold திரைப்படம்தான் நினைவுக்கு வருகிறது.

எந்தப் புத்தகக் கடையை எங்கே கண்டாலும் உள்ளே நுழைந்து புத்தகங்களை தட்டிப் பார்ப்பது என் வழக்கம். புத்தகத்தை வாங்குகிறேனோ இல்லையோ பின்னட்டைகளை தவறாமல் படித்துவிடுவேன். அவை புதுமையாக இருக்கும். சிலவேளைகளில் புத்தகத்தைவிட சுவாரஸ்யமாக அமைவதும் உண்டு. அந்தப் புத்தகத்தை பற்றியும் அதை எழுதிய எழுத்தாளரை பற்றியும் அங்கே விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். முக்கியமாக பின்னட்டைகளில் அந்தப் புத்தகத்தைப் பற்றி வேறு பிரபலமான எழுத்தாளர்களும் பத்திரிகைகளும் விமர்சனமாகச் சொன்னது பதிவாகியிருக்கும்.
'ஒவ்வொரு வீட்டு புத்தக அலமாரியிலும் கட்டாயமாக இருக்கவேண்டிய புத்தகம்.'
'இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த ஆகச் சிறந்த 100 புத்தகங்களில் இதுவும் ஒன்று.'
'புத்தகத்தை கையிலெடுத்தால் மறுபடியும் முடித்துவிட்டுத்தான் கீழே வைக்கமுடியும்.'
இப்படியான புகழுரைகள் பின்னட்டைகளை அலங்கரிப்பதில் அதிசயம் இல்லை. எந்தவொரு நேர்மையான எழுத்தாளர்கூட புத்தகத்துக்கு கிடைத்த பாதகமான ஒரு வரியை  பின்னட்டையில் போடுவது கிடையாது. பின்னட்டைகள் புகழ்ந்து பேசுவதுதான் வழக்கம்.
இது இப்படியிருக்க பல வருடங்களுக்கு முன்னர் வெசா எழுதிய 'அக்கிரகாரத்தில் கழுதை' என்ற நூலை படித்தபோது எனக்கு முதல் அதிர்ச்சி கிடைத்தது. அந்த நூலிலே வெங்கட் சாமிநாதன் அந்த நூலைப்பற்றி சில எழுத்தாளர்கள் எழுதிய விமர்சனக் கடிதங்களை வெளியிட்டிருந்தார். அதிலே சில கடிதங்கள் புத்தகத்தில் உள்ள குறைகளை பெரிதாக்கி விமர்சித்திருந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது யார் இந்த வெசா, வித்தியாசமானவராக இருக்கிறாரே என்று என்னை யோசிக்க வைத்தது. பாதகமாக வந்த கடித்தத்தை அவர் வெளியிடவேண்டிய அவசியமே இல்லை; ஆனாலும் துணிச்சலுடன் இணைத்திருந்தார். அது எனக்கு பிடித்தது. 

பல வருடங்கள் கழித்து வெளிவந்த அவருடைய 'இச்சூழலில்' நூலை   படித்தபோது மேலும் அதிர்ச்சி கிடைத்தது. இந்த மனிதர் வித்தியாசமானவர்தான் என்ற என்னுடைய எண்ணம் உறுதிப்பட்டது.  அந்தப் புத்தகம் வெளிவர முன்னர் அவருடன் சுமுக உறவு இல்லாத, பகைமைக் காய்ச்சல் கொண்ட, கருத்து மோதல்களை பெரிதாக்கும் எழுத்தாள நண்பர்களைத் தேடிச் சென்று அவர்களிடம் நூலின் கையெழுத்துப் பிரதியை கொடுத்து அவர்கள் அபிப்பிராயத்தை எழுதி நேரே பதிப்பாளருக்கு அனுப்பச் சொல்லி வெசா கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர்கள் அந்த முன்னுரையில் என்ன எழுதியிருப்பார்கள் என்பது வெசாவுக்கு தெரியாது. புத்தகம் வெளிவந்த பின்னரே அவரும் வாசகர்கள்போல அதைப் படித்துப் பார்ப்பார். இதை அவரே அந்த நூலில் கூறுகிறார். இப்படி வேறு யாராவது எங்கேனும் உள்ளனரா? இந்த உலகத்திலேயே அப்படி ஒருவர் இருந்தால் அது வெசாவாகத்தான் இருக்கும்.

வெசா கனடா வந்தபோது நானும் ஒரு நண்பரும் அவரை ஓர் ஈரானியப் படத்துக்கு அழைத்துச் சென்றோம். பீட்ஸா விநியோகிக்கும் ஒரு சாதாரண மனிதனைப் பற்றிய படம். அவனுடைய தொழில் நிமித்தம் அவன்  செல்வந்தர்களுடைய வீடுகளுக்கும் வறியவர்களின்  வீடுகளுக்கும் செல்கிறான். படம் விறுப்பாக முடிவை நோக்கிப்போய் இன்னும் சில நிமிடங்களில் முடிந்துவிடும் என்ற நிலை. அப்பொழுது நாங்கள் எதிர்பாராமல், முடிவதற்கு சரியாக ஒரு நிமிடம்   இருந்தபோது படம் அறுந்து திரையிலே ஓர் அறிவிப்பு வந்தது. 'தயவுசெய்து மன்னியுங்கள். இன்னும் பதினைந்து நிமிடங்களில் சரியாக்கிவிடுகிறோம்.' நாங்கள் காத்திருந்த நேரத்தில் படம் எப்படி முடியும் என்று கற்பனையில் பூர்த்திசெய்யப் பார்த்தோம்,  இயலவில்லை. திரும்ப படம் ஓடத்தொடங்கியதும் ஒரேயொரு காட்சியுடன்  முடிச்சு அவிழ்ந்து, படம் முற்றிலும் புரிந்தது. அந்தக் கதையை எழுதியவர் புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் அபாஸ் கிரொஸ்தாமி.  காரிலே திரும்பும்போது வழியெல்லாம் அந்த திரைப்படத்தை பற்றியே வெசாவிடம் பேசினோம். அது எப்படி 95 நிமிட படத்தில் நாங்கள் 94 நிமிடங்கள் பார்த்தபிறகும் படத்தின் முடிவை ஊகிக்கமுடியவில்லை. வெசா திரைப்படக் கதை எழுதி அனுபவம் பெற்றவர். ஒரு திரைக்கதையை எப்படி அமைக்கவேண்டும் என்பது அவருக்கு தெரியும். ஒரு கதையை சொல்வது அல்ல திரைப்படம். எதை முதலில், எதை இடையில், எதை கடைசியில் சொல்வது என்ற கட்டமைப்புத்தான் திரைக்கதை. அன்று அந்தப் படத்தை தொடர்ந்து நடந்த விவாதங்கள் அந்த நாளை என் மனதில் என்றும் அழியாமல் நிறுத்திவிட்டது. 

வெசாவை எனக்கு தெரியாது. அவர் எழுதிய நூல்களையும் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளையும் தொடர்ந்து படித்து வந்ததுண்டு. அவற்றை படிக்க படிக்க அவருடைய பிம்பம் வளர்ந்தது. வழக்கமான தமிழ் எழுத்தாளரின் பிம்பத்துக்குள் அவர் அடங்காதவராகவே இருந்தார். கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டமும் தென்னாசிய கல்வி மையமும்  இணைந்து 2003ம் ஆண்டு இயல் விருது அளிப்பதற்காக அவரை ரொறொன்ரோவுக்கு அழைத்திருந்தார்கள். விமான நிலையத்தில் அவரை வரவேற்க நானும், பேராசிரியர் செல்வா கனநாயகமும், காலம் ஆசிரியர் செல்வமும், கவிஞர் செழியனும் சென்றிருந்தோம். அவரை படத்தில் பார்த்ததேயன்றி நேரில் நாங்கள் ஒருவரும் பார்த்ததில்லை. ஆகவே நல்ல அழகான பூங்கொத்து ஒன்றை வாங்கி கையிலே பிடித்துக்கொண்டு பயணப்பெட்டியுடன் வெளியே வரும் ஒவ்வொரையும் உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றோம்.
அன்றைக்கு பயணித்த எல்லோரும் வெசாவின் முகத்தோற்றம் கொண்டவர்களாகவே காணப்பட்டார்கள். ஒருமுறை ஒருவரிடம் நெருங்கி கிட்டத்தட்ட பூங்கொத்தை நீட்டிவிட்டோம்; அவரோ மிரண்டுபோய் ஓர் அடி பின்னுக்குப் போய் எங்களிடமிருந்து தப்பித்துக்கொண்டார். சற்று நேரங்கழித்து  வெசா பெரிய தள்ளுவண்டி ஒன்றில் சிறிய பயணப்பெட்டியை வைத்து தள்ளிக்கொண்டு வெளியே வந்ததைப் பார்த்தபோது எங்களுக்கு ஒருவித சந்தேகமும் எழவில்லை. குடிவரவில் ஏதாவது பிரச்சினை இருந்ததா என்று வினவினோம். 'பல்கலைக்கழகம் அனுப்பிய கடிதத்தை நீட்டினேன். அவர்கள் திறந்துகூட பார்க்கவில்லை. நல்வரவு என்று சொல்லி என்னை அனுமதித்தார்கள்' என்று சொன்னார்.

வெசா கனடா வரும் முன்னரே நண்பர்கள் எங்களை எச்சரித்திருந்தார்கள். இவருடன் கவனமாகப் பழகவேண்டும். நிறைய எதிரிகள் இவருக்கு. கறாராக இருப்பார். எப்பவும் முறைப்பாடுகள் செய்வார். இவரிடம் நல்ல பெயர் எடுக்க முடியாது என்று பலவிதமாக சொல்லிவைத்திருந்தார்கள். ஆனால் முதல் சந்திப்பிலேயே பத்து வருடம் பழகியதுபோல வெசா நட்புடன் நடந்துகொண்டார். ஒரு குழந்தைப் பிள்ளைபோல நிறையக் கேள்விகள் கேட்டார். அடிக்கடி தன்னை விருதுக்கு தேர்வு செய்தவர்களை குறை கூறினார். 'என்னிலும் பார்க்க தகுதியானவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். என்னை போய் தேர்வுசெய்தார்களே' என்று அங்கலாய்த்தார். நட்பானவராக, அன்பாகப் பழகுபவராக, மனிதநேயம் மிக்கவராக எங்களுக்கு அவர் தெரிந்தார்.

வெசா மூன்று நாட்கள் ரொறொன்ரோ பல்கலைக் கழகம் ஏற்பாடுசெய்த விடுதியில் தங்கி, மீதி நாட்களை நண்பர் மகாலிங்கம் வீட்டில் கழித்தார். மகாலிங்கம் வேலைக்கு போனபின்னர் வெசா தனியே இருக்கும் சமயங்களில் அவரை என் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து வருவேன். இதிலே எனக்கு பெரும் பிரச்சினை இருந்தது. என் மனைவி முறையாக சமையல் செய்யக் கற்றுக்கொண்டது கனடா வந்த பிறகுதான். இன்றுகூட சமைக்கும்போது அவருக்கு அடிக்கடி ஐயம் எழுந்தபடியே இருக்கும். கடுகு தாளிப்பது எப்போது? கடைசியிலா முதலிலா போன்ற அடிப்படை சந்தேகங்கள். இலங்கை சமையலுக்கே இந்தப் பாடு என்றால் எப்படி இந்திய சமையல் செய்து வெசா போன்ற பெரிய எழுத்தாளரை திருப்திப்படுத்துவது. எங்கள் வீட்டில் தோசை, இட்லி, சாம்பார் எல்லாம் கற்பனை பொருள்கள். வீட்டிலே தோசைக் கல்லோ இட்லிப்பானையோ கிடையாது. இடியப்பம், புட்டு வெளியே இருந்து வருவிக்கப்படும். பெரும் நடுக்கத்துடன் தனக்கு தெரிந்த முறையில் மனைவி சமைத்து பரிமாறினார். அந்த உணவை வெசா சாப்பிட்டுவிட்டு மகிழ்ந்து பாராட்டினார். வெசாவை உற்று நோக்கினேன். அவர் உண்மை பேசுவதுபோலத்தான் இருந்தது. என் மனைவி வேதியியல் பாடத்தில் முதல்தரமாக பாஸ் செய்ததுபோல பெரும் சந்தோசம் அடைந்தார். அதற்கு பின்னர் அவராக 'உங்கள் நண்பரை இன்றைக்கு உணவுக்கு அழைத்துவாருங்கள்' என்று அடிக்கடி சொல்லத் தொடங்கினார். அப்படி வந்து சாப்பிடும் ஒவ்வொரு தடவையும் வெசா புகழ்ந்தார். என் மனைவிக்கு இலக்கியத்தைப் பற்றிய மதிப்பீடுகள் பல மடங்கு கூடியது அந்தக் காலத்தில்தான்.

வெசா இந்தியா திரும்பிய பிறகு ஒவ்வொரு தடவையும் கடிதம் எழுதும்போது  மனைவியின் சமையலை ஞாபகமூட்டி நன்றி சொல்வார். என் மனைவி என்னிடம் 'உங்கள் எழுத்தாள நண்பர்களில் வெசா வெளிப்படையானவர். உண்மையானவர்' என்று பலதடவை கூறியிருக்கிறார். வெசாவின் 'சில இலக்கிய ஆளுமைகள்' நூலைப் படித்தபோது அதிலே வெசாவை சந்திக்க வந்த இருளாண்டி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. 'நாங்கள் வந்தது உங்களோடு சண்டைபோட. அன்று நீங்கள் எவ்வித தற்காப்பு உணர்வுமின்றி மனம் திறந்து பேசியது எங்கள் மனதை மாற்றிவிட்டது. ஒளிக்க உங்களிடம் ஏதுமில்லை. பயப்படவும் ஏதுமில்லை.' என் மனைவியின் உள்ளுணர்வு பொய்ப்பதில்லை.

மௌனியின் எழுத்து முறைபற்றி வெசா வர்ணித்திருக்கிறார். மௌனி கடுமையாக உழைப்பார். பலமுறை திருத்தி திருத்தி எழுதுவார். பேனாவை கையில் எடுத்ததும் தீவிரமான சிரத்தை அவருக்கு வந்துவிடும். ஏதோ ஒன்றை ஒருமுறை எழுதி அத்துடன் அவர் திருப்தியடைந்தார் என்பது கிடையாது. கடைசித் தேதி நெருங்கும்வரை பிரசுரகர்த்தரின் பொறுமை எல்லை கடக்கும்வரை திருத்தம் செய்துகொண்டே இருப்பார். இதற்கு நேர்மாறானது வெசாவின் முறை. அவரிடம் நான் கட்டுரை கேட்டு பலதடவை வாங்கியிருக்கிறேன். ஒருமுறைகூட அவர் சொன்ன நேரத்திற்கு கட்டுரை தராமல் கடத்தியது கிடையாது.

நியூட்டன் என்ற பெரிய விஞ்ஞானி காலையில் படுக்கையிலிருந்து எழும்பி ஒரு காலை தரையிலே ஊன்றிவிட்டு அடுத்த காலை எடுத்து வைக்காமல் பல மணி நேரம் அசையாமல் உட்கார்ந்திருப்பார். அவர் மூளையில் விஞ்ஞான சித்தாந்தங்கள் பிரவாகமாக ஓடிக்கொண்டிருக்கும். அந்தப் பிரவாகம் நின்றுவிடக்கூடும் என்ற பயத்தில் அசையாமல் இருப்பாராம். வெசாவின் அனுபவமும் இப்படித்தான். கட்டுரைக்கான கருத்துக்கள் மூளையில் திரண்டு கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கும். நாட்கள் தள்ளிப்போகும். கடைசி தினம் நெருங்கியதும் உட்கார்ந்து, கருத்துக்கள் உருண்டு ஒவ்வொன்றாக வர எழுதி முடிப்பார். அவரே சொல்கிறார். 'மனம் சஞ்சரித்ததெல்லாம் எழுதவேண்டுமே என்று உட்காருவேன். எழுத ஆரம்பித்தால் அதுவரை மனம் சஞ்சரித்ததெல்லாம் பாதி போய்விடும். புதிதாக அதன் இடத்தில் வேறு ஏதோ பாதி வந்து நிரப்பும். புதிய சஞ்சாரங்கள் ஆச்சரியமாக இருக்கும். பின்னால், விட்டுப்போனதெல்லாம் எது என்று யோசித்து மனதில் தோன்றத் தோன்ற இடைச்செருகுவேன். அப்படியும் அநேகம் விட்டுப்போகும்.'  அவர் எழுதுவது ஒருமுறைதான். சில சமயம் திரும்ப படிப்பதும் கிடையாது. அப்படியே அனுப்பிவிடுவார். 

அவருடைய கட்டுரைகளை படிக்கும்போது கிடைக்கும் அனுபவமே புதிதுதான். எண்ணங்கள் பாய்ந்து பாய்ந்து போகும் அதிசயத்தை காணலாம். ஒன்றைச் சொல்லிவிட்டு இன்னொன்றுக்கு தாவிவிடுவார். ஆற அமர இருந்து யோசித்து பார்க்கும்போதுதான் கட்டுரை புரியும். அவர் விட்டுச் செல்லும் இடைவெளிகளை நிரப்பிக்கொண்டே படிக்கவேண்டும். அது நல்ல அனுபவமாக அமையும்.

இப்படிச் சிந்திக்கும் திறனால்தான் பிறிதொரு கலைஞரின் மனதை  அவரால் ஆழமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. உலகப் புகழ் பெற்ற சித்திரங்களையும் திரைப்படங்களையும் இலக்கியங்களையும் கலை உள்ளத்துடன் ரசிக்கும் ஒரு மன நிலையை அவரால் உருவாக்க முடிகிறது. எனக்கு தெரிந்த ஒரு புகைப்பட நிபுணர் இருக்கிறார், உலகப் புகழ் பெற்றவர். பல பரிசுகள் வென்றவர். அவரிடம் இருக்கும் 10,000 டொலர் காமிராவை அவர் மத்தியான நேரத்தில் வெளியே எடுக்கமாட்டார். காலை அல்லது மாலைதான் புகைப்படத்துக்கு உகந்த நேரம் என்பது அவர் கருத்து. புகைப்படம் என்றால் என்ன? அது ஒளியின் விளையாட்டுத்தான் என்று அடிக்கடி கூறுவார்.

உலகப் புகழ் சைத்ரீகர்களும் இதையே சொன்னார்கள். ரென்வார் என்ற சித்திரக்காரர் சூரிய ஒளியில் ஒரு வைக்கோற்போர் அடையும் நிறமாற்றங்களை தொடர்ந்து 16 – 17 சித்திரங்களாக இடைவிடாது வரைந்து தீர்த்தாராம். ஒளி இருப்பதும் இல்லாததும் ஓர் உயர்ந்த சித்திரத்தை தருவதுபோல, வார்த்தை இருப்பதும் இல்லாததும் ஓர் உயர்ந்த இலக்கியத்தை சாத்தியமாக்குகிறது.  உதாரணத்துக்கு தி.ஜானகிராமனின் நாவலை எடுத்து வெசா விளக்குகிறார். பாலி என்னும் பெண் சிறுவயதிலிருந்தே தங்கராஜுவுக்கு நிச்சயிக்கப்பட்டவள். ஆனால் அவளுக்கு அவனிடம் ஈடுபாடு கிடையாது. தனக்கு என்று ஒரு மனம், இச்சை, வாழ்க்கை இருக்கிறது என்று நினைக்கிறாள். தன்னை தாறுமாறாகப் பேசினான் என்பதற்காக வையன்னாவை கொலைசெய்துவிட்டு வந்து நிற்கிறான் தங்கராஜு. அவனை பாலி ஏமாற்றவேண்டுமா? அண்ணாந்து பார்த்த பாலியின் கண்களில் தஞ்சை கோபுரத்தின் உச்சியில் இரண்டு காக்கைகள் உட்கார்ந்திருப்பது தெரிகிறது. அவள் நினைக்கிறாள், 'இரண்டு காக்கைகள் உட்காரத்தானா இவ்வளவு பெரிய வானளாவிய கோபுரத்தை ஒருவர் நிர்மாணித்தார்.' அதன் பின்னர் வார்த்தைகள் இல்லை, பெரிய பாய்ச்சல் கதையில் நிகழ்கிறது.
'அப்பா, நீங்கள் சொல்றது சரின்னு தோன்றுதப்பா' என்கிறாள்.
ஒளியின்மையும், ஒளியும், வார்த்தையின்மையும், வார்த்தையும். இவைதான் நேர்த்தியான கலைப் படைப்பாக உருமாறுகின்றன. இப்படி நுட்பமாக கலைஞனின் படைப்பு மனதுக்குள் சென்று, அவன் உணர்ந்ததை உணர்ந்தபடி வெளிக்கொணர்வதுதான்  வெசாவின் பேனா.

விமர்சகராக இருந்தாலே பகைவர்கள் உண்டாகிவிடுவார்கள். அதிலும் நேர்மையாக ஒருவர் இருந்தால் சொல்லவே வேண்டாம். தன்மானம், நேர்மை இவரது உதார குணங்கள். இவர் எழுதிய பல நூல்களை நான் படித்திருந்தாலும் அமெரிக்க தகவல் மையத்துக்கு இவர் எழுதிய கடிதம் ஒரு classic என்று  சொல்வேன். அவரிடமே அதை சொல்லியுமிருக்கிறேன். 1997ல் எழுதிய அந்தக் கடிதம் இன்றுவரை பேசப்படுகிறது. அமெரிக்க காங்கிரஸ் நூலகத்துக்கு நூல்கள் தேர்வு செய்யும் பணிக்கு வெசாவை அழைத்திருந்தார்கள். இவர் கேட்டுக்கொண்டதால் அல்ல, அமெரிக்க தகவல் மையம் தானாகவே இவரை அணுகியிருந்தது. இவர் அங்கே அவர்களைச் சந்திக்க போனதும் அவர்கள் ஒரு விண்ணப்ப படிவத்தை கொடுத்து அதை நிரப்பிவரச் சொன்னார்கள். ஏதோ வெசா அவர்களிடம் வேலைகேட்டு வந்ததுபோல அவரை அவமதித்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் எழுதிய கடிதம்தான் அது. '40 வருட பொதுவாழ்வில் என் சுதந்திரத்தையும், என் நேர்மையையும் என் வழியில் மிகுந்த ஆக்ரோஷத்துடனேயே பாதுகாத்து வந்தேன்.
'உன் நேர்மையையும் சுதந்திரத்தையும் காப்பாற்ற வேண்டினால் உன் எழுத்தோடு சம்பந்தப்படாத ஒரு வேலையை, இரவு நடன விடுதியில் பியானோ வாசிப்பதுபோன்ற வேலையை செய்.' இது ஓர் அமெரிக்கர், வில்லியம் ஃபாக்னர் சொன்னது. என் தகுதியை அளக்கும்படி நான் உங்களிடம் கேட்கவே இல்லையே.' வெசா எழுதிய அந்த நீண்ட கடிதத்தில் நேர்மையையும் சுதந்திரத்தையும்  வலுயுறுத்தி இப்படி முடித்திருக்கிறார்.

வெசா ரொறொன்ரோ பல்கலைக் கழக அரங்கில் இயல் விருது ஏற்புரையில் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஒரு  ஞானியிடமிருந்து மட்டுமே அப்படியான வார்த்தைகள் வெளிவரும். நாற்பது வருடங்களுக்கு முன்னர் அவருடைய அலுவலகம் அவருக்கு நாடு நாடாக சுற்றி பணியாற்றும் ஒரு வாய்ப்பை கொடுத்தது. ஆனால் அந்த வாய்ப்பின் பெறுமதி தெரியாத ஒருவர் கொடுத்த நிர்ப்பந்தத்தால் அந்த வேலையை அவர் இழக்க நேரிட்டது. ஆகவே அவருக்கு ஏமாற்றங்களும் இழப்புகளும் பழகிப்போனவை. அவற்றை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தது. அவர் வாழ்க்கையில் ஒன்றையும் பெரிதாக எதிர்பார்க்காமலிருக்கப் பழகிக்கொண்டவர். 'மகாராஜா ஆடையில்லாமல் வருகிறார்' என்று கத்திய சிறுமிபோல அவர் உண்மையை எழுதினார். அது அவருக்கு இயல் விருதை பெற்றுத் தந்திருக்கிறது. அந்த விருதுக்கு தகுதி பெற்றவராக அவர் தன்னைக் கருதவில்லை. இது பொய்யான அடக்கம் அல்ல என்கிறார். பலர் அவரிடம் 'நீ விமர்சனம் எழுதுகிறாய், ஆகவே உனக்கு ஒரு விருதும் கிடைக்கப்போவதில்லை' என்று சொல்லியிருக்கிறார்கள். அது பொய்த்துப் போனதில் அவருக்கு சிறு மகிழ்ச்சி. அன்று பேச்சைக் கேட்டவர்களில் ஒருவருக்குகூட அவருடைய வார்த்தைகள் இருதயத்தில் இருந்து வந்தவை என்பதில் ஐயம் இருக்க முடியாது.

சில மாதங்களுக்கு முன்  வெசா வழுக்கி விழுந்து  மருத்துவமனையில் அனுமதியாகியிருக்கிறார் என்ற தகவலை நண்பர் சேதுபதி எனக்கு அனுப்பியிருந்தார். நான் உடனே ஒரு மின்னஞ்சல் அனுப்பி அவர் நலத்தை விசாரித்தேன். வெசா ஏற்கனவே முன்பும் ஒருமுறை காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர். அவர் கனடா வந்திருந்தபோது  அறுவைச் சிகிச்சை செய்து சிலமாதங்களே ஆகியிருந்தன. காலிலே உலோகம் வைத்து பொருத்தியிருந்தார்கள். எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் கனடாவில் கல் பதித்த மேடு பள்ளமான பாதைகளில் தடுக்கி விழுந்துவிடுவார். உடனேயே எழுந்து நின்று உடையை சரிசெய்துகொண்டு 'ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை' என்று கைகளை அகலமாக விரிப்பார். 'அடுத்தமுறை விருது கொடுக்கும்போது உலோகக்கால் பொருத்தாத ஒருவரை தேடிக் கண்டுபிடித்து கொடுங்கள்' என்று சொல்லி சிரிப்பார்.' இப்படி எதையும் வெசா சுலபமாக நகைச்சுவையாக்கிவிடுவார்.

அவர் தங்கியிருந்த நாட்களில் சில திகில் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அடிக்கடி நண்பர்கள் வந்து அவரை விருந்துக்கோ, கூட்டத்துக்கோ அல்லது சந்திப்புக்கோ அழைத்துச் செல்வார்கள். நாங்கள் அவரிடம் இன்ன நேரம் திரும்பி வந்துவிடுங்கள் என்று சொல்லி அனுப்புவோம். ஒரு நாள் எழுத்தாள நண்பர் ஒருவர் அவரை மதிய உணவு சாப்பிட உணவகம் ஒன்றுக்கு அழைத்துப் போனார். பல மணி நேரமாகியும் அவர் திரும்பவில்லை. நாங்கள் காத்துக்கொண்டேயிருந்தோம். கடைசியில் அவர் வந்ததும் என்ன நடந்தது என்று விசாரித்தோம். அவர்கள் சாப்பிட்டபின் நண்பர் பணம் செலுத்த கடன் அட்டையை  நீட்டியிருக்கிறார். உணவகம் அந்தக் கடன் அட்டையை ஏற்கவில்லை. வெசாவை அங்கே இருத்திவிட்டு நண்பர் பணம் மாற்றிவர வங்கிக்கு போயிருக்கிறர். போனவர் வர நேரமாயிற்று. வெசாவின் மனம் பயம் கொள்ள ஆரம்பித்தது. அவர் என்னை இங்கே அடகு வைத்துவிட்டு போய்விட்டார். திரும்பி வருவாரா, எப்படி நான் தங்கியிருக்கும் வீட்டுக்கு வழி கேட்டுப் போவது. கனடாவில் பணம் தராவிட்டால் என்ன தண்டனை, மாவாட்டச் சொல்வார்களா? அல்லது சிறையில் அடைப்பார்களா? அல்லது திருப்பி அனுப்புவார்களா? இப்படி எல்லாம் வெசாவின் மனம் கற்பனை செய்தது. சிறிது நேரத்திலேயே நண்பர் வந்து தன்னை மீட்டதை சொல்லி தலையை பின்னுக்கு எறிந்து சிரித்தார் வெசா.

சில பத்திரிகைகள் எழுத்தாளர்களை நேர்காணல்செய்து எழுதும். ஆனால் ஒரு பத்திரிகையும் எழுத்தாளருக்கு உறுதுணையாக இருந்து அவருக்கு உற்சாகமூட்டி அவள் எழுத்துவேலைக்கு ஊக்கமளிக்கும் மனைவியர்பற்றி எழுதுவதில்லை. ஆனால் இந்த வழக்கத்துக்கு மாறாக சமீபத்தில்;  அமெரிக்க மாத இதழான தென்றல் வெசாவின் நேர்காணலை வெளியிட்டபோது அவருடைய அருமை மனைவியாரின் புகைப்படத்தையும் பிரசுரித்திருந்தது. இது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்தது. உடனேயே வெசாவுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி என் வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தேன். அந்த நேர்காணல் வந்து சில வாரங்களிலேயே அவருடைய மனைவி காலமானார். இது வெசாவுக்கு மிகப்பெரிய இழப்பு. அவர் அதிலிருந்து இன்றுவரை மீளவே இல்லையென்றுதான் நினைக்கிறேன். 

அவர் குணங்களில் உயர்ந்து நிற்பது நேர்மையும், மனிதநேயமும். ஐம்பது வருடங்களுக்கு மேலாக எழுதிக்கொண்டிருக்கும் வெசாவை இன்றைக்கும் பலர் பூரணமாக அறிந்திருக்கவில்லை. நான் முன்பு சொன்னமாதிரி எனக்கு வெசா என்றால் Crimson Gold தான் நினைவுக்கு வருகிறது. கடைசி ஒரு நிமிடத்தை தவறவிட்டபோது முழுத் திரைப்படத்தையும் விளங்கமுடியாமல் அன்று நாங்கள் திகைத்து நின்றோம். வெசா போன்ற பெரிய ஆளுமையை அறிய அவரிடமுள்ள  நேர்மை, மனிதநேயம் பற்றியும் தெரியவேண்டும். அது இல்லாமல் அவரை முற்றிலும் புரிந்துகொள்ளவே இயலாது.

முற்றும்

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta