விமான நிலையத்துக்கு போவதற்கு ஒரு வாடகை கார் தேவைப்பட்டது. வழக்கம்போல தொலைபேசியில் அழைத்தேன். அவர்கள் ஒரு வாடகைக் காரை அனுப்பிவைத்தார்கள். என்னுடைய வீட்டிலிருந்து ரொறொன்ரோ விமான நிலையம் போவதற்கு முக்கால் மணிநேரம் பிடிக்கும். ஆகவே அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு காரை அனுப்பும்படி சொல்லியிருந்தேன். அப்படியே அவர்கள் சொன்ன நேரத்துக்கு காரை அனுப்பியிருந்தார்கள்.
வழக்கமாக வரும் சாரதி ஒரு பஞ்சாபிக்காரராக இருப்பார். அல்லது பாகிஸ்தான்காரராக இருப்பார். சிலசமயம் ஜமாய்க்காகாரர் வருவதுமுண்டு. இந்த தடவை அதிசயமாக 30 வயது மதிக்கக்கூடிய ஓர் இலங்கைக்காரர் வந்திருந்தார். என்னைக் கண்டதும் நீங்கள் தமிழா என்றார். அப்படித்தான் சம்பாசணை ஆரம்பமானது. அரைக்கை சட்டை அணிந்திருந்தபடியால் புஜங்கள் அடக்கமுடியாமல் உருண்டு திரண்டு வெளியே தெரிந்தன. கழுத்திலே தாலிக்கொடிக்கு சமமான தடிப்பில் ஒரு சங்கிலி அணிந்திருந்தார். பாரமான என் பயணப்பெட்டியை ஒற்றைக்கையால் தூக்கி காரில் வைத்தார். அவர் இயக்கத்தில் இருந்திருக்கவேண்டும், அப்படியான உடல் வாகு. நான் காரில் ஏறி அமரமுன்னரே தன் வரலாற்றில் பாதியை என்னிடம் கூறிவிட்டார்.
அவர் கனடாவுக்கு வந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. கனடா வந்த பின்னர் மணமுடித்த அவருக்கு இரண்டு பிள்ளைகள். இதற்கு முன்னர் ஒரு தொழிற்சாலையில் சில மாதங்கள் வேலை பார்த்தார், பிடிக்கவில்லை. அதை உதறிவிட்டு வாடகைக்கார் ஓட்டுகிறார். இந்த வேலை அவருக்கு பிடித்துக்கொண்டது என்றார்.
சொந்தமான வண்டியா? என்று கேட்டேன். 'வாடகைக்கார் நம்பர் பிளேட் ஒன்றின் விலை தற்போது 200,000 டொலர். இவ்வளவு தொகை காசு முதலீட்டுக்கு கிடைக்கும் வருமானம் போதாது. நான் சம்பளத்துக்கு வேலை செய்கிறேன், சராசரி மாத வருமானம் 3000 டொலர், சில மாதங்களில் கூடிய மணித்தியாலங்கள் வேலைசெய்தால் 4000 டொலர்கூட கிடைக்கும். எனக்கு இது போதுமானது' என்றார்.
எப்படி இந்த வேலை உங்களுக்கு கிடைத்தது?
'என்னுடைய அண்ணர் வாடகைக்கார் வைத்து ஓட்டுகிறார். அவர்தான் என்னை இந்த வேலையில் சேர்த்துவிட்டவர். நான் இங்கே வருமுன்னரே அண்ணர் சொல்லி இலங்கையிலேயே கார் ஓட்டப் பழகி லைசென்சும் எடுத்துக்கொண்டுதான் வந்தேன். இங்கே வந்தபிறகு கனடா லைசென்ஸும் எடுத்தேன். கனடாவில் இரண்டு நாள் வாடகைக்கார் ஓட்டிப் பார்த்தேன், பிடிச்சுப்போட்டுது' என்றார்.
திரும்பவும் நாட்டுக்கு போனீர்களா? 'நான் ஏன் போகவேண்டும். நான் நாட்டை என்னுடன் கொண்டு வந்திருக்கிறேன்' என்றார். விமான நிலையத்தில் என்னை ஐந்து நிமிடம் முன்னதாகவே இறக்கிவிட்டு அவர் போய்விட்டார்.
அவர் கடைசியாகச் சொன்னது என்னை யோசிக்க வைத்தது. அவருடைய தம்பி ஒருவர் இன்னும் இலங்கையில் இருக்கிறார். அவர் அடுத்த மாதம் கனடாவுக்கு வருகிறார். அவரும் கார் ஓட்டப்பழகி லைசென்ஸ் எடுத்துக் கொண்டுதான் வருகிறார். அவருக்கும் ஒரு சாரதி வேலை இங்கே அவர் ரெடியாக வைத்திருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்னர் நான் படித்த நேர்காணல் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. கிழக்கு ஐரோப்பாவின் ஒரு பகுதியிலிருந்து வட அமெரிக்காவுக்கு அகதியாக வந்த ஒருவர் கொடுத்த பேட்டி. ஒருநாள் இரவு அவருக்கு படுக்க இடமில்லாமல் ஒரு நிறுவனத்தின் வாசலில் படுத்து தூங்கிவிடுகிறார். அடுத்தநாள் காலை கம்பனி முதலாலி வந்து அவரை காலினால் தட்டி எழுப்புகிறார். முதலாளி என்ன நடந்தது என்று கேட்கிறார். அகதி தனக்கு வேலையில்லை, தங்குவதற்கு இடமும் இல்லை என்று சொல்கிறார். என்னவேலை தந்தாலும் முகம் சுளிக்காமல் செய்வீரா என்று முதலாளி கேட்கிறார். அகதி ஆம் என்று பதிலளிக்கிறார். அது பிணம் அலங்கரிக்கும் கம்பனி. முதலாளி அந்தக் கலையை அகதிக்கு கற்றுத் தருகிறார். அகதி அருவருப்பில்லாமல் ஆர்வமாகக் கற்றுக்கொள்கிறார். இரவுக்கல்லுரிக்கு சென்று பிண அலங்காரம் பற்றி படிக்கிறார். நாளடைவில் தானே ஒரு கம்பனி ஆரம்பித்து பல கிளைகளையும் திறக்கிறார். வட அமெரிக்காவில் மிகவும் வெற்றிகரமான தொழில் நிபுணராக அறியப்படுகிறார். நேர்காணலின் முடிவில் அவர் சொல்லுகிறார். 'அன்று நான் ஒரு பிண அலங்காரம் செய்யும் கம்பனியின் வாசலில் தூங்கியதால் இன்று ஒரு பிண அலங்கார நிபுணனாக அறியப்படுகிறேன். அன்று நான் ஒரு தச்சுக் கம்பனியின் வாசலில் தூங்கியிருந்தால் இன்று ஒரு தச்சுத்தொழில் நிபுணனாகியிருப்பேன். உலர் சலவை கம்பனியின் வாசலில் தூங்கியிருந்தால் இன்று ஓர் உலர்சலவை நிபுணனாகியிருப்பேன்.'
உலகத்தில் பல தொழில் தேர்வுகள் இப்படி தற்செயலாகத்தான் நேர்கின்றன. அண்னன் சாரதி, தம்பி சாரதி, அடுத்த தம்பியும் சாரதி. அண்ணன் விருந்து மண்டப நிர்வாகி, தம்பியும் அதுதான், அடுத்துவரும் தங்கையும் அதுதான். முன்னே வருபவர் பாதை போட பின்னே வருபவர்கள் தொடர்வார்கள்.
நாளை காலை நான் வாசல் கதவை திறக்கும்போது ஓர் அகதி அங்கே படுத்திருந்தால் என்ன செய்வது. அவர் கதி என்னாவது. நினக்கும்போதே மனம் நடுங்குகிறது. இன்னொரு தமிழ் எழுத்தாளரை இந்த உலகம் தாங்குமா?