சமயோசிதம் என்றால் உடனுக்குடன் ஒன்றை யோசித்து செய்வது; அல்லது சொல்வது. வின்ஸ்டன் சேர்ச்சில் அதில் கெட்டிக்காரர் என்று சொல்வார்கள். அவருடைய புகழ் உச்சத்தில் இருந்த சமயம் ஒரு பெண் அவரிடம் வந்து 'வின்ஸ்டன், உங்களிடம் எனக்கு பிடிக்காதது இரண்டு விசயம்தான். உங்களுடைய மீசை; மற்றது உங்கள் அரசியல்' என்றார். அதற்கு சேர்ச்சில் 'அம்மணி, விசனம் வேண்டாம். இரண்டுக்கும் அருகாமையில் வரும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கப்போவதில்லை' என்றார்.
சமயோசிதமாக ஒன்றை சொல்வதில் ஆங்கில எழுத்தாளரான ஒஸ்கார் வைல்டும் பெயர் பெற்றவர். அவரிடம் ஒருமுறை கேட்டார்கள். 'பத்திரிகைக்காரருக்கும் எழுத்தாளருக்கும் இடையில் என்ன வித்தியாசம்?' அவர் இப்படி பதில் சொன்னார். 'பத்திரிகைக்காரர் எழுதுவதை ஒருவரும் படிக்க முடியாது. எழுத்தாளர் எழுதுவதை ஒருவரும் படிப்பதில்லை.'
இடி அமின் உகண்டாவின் அதிபராக இருந்த காலத்தில் அவருடைய அமைச்சர்கள் எல்லாம் நடுங்கிக்கொண்டே இருப்பார்கள். தினமும் ஏதாவது ஒன்றை புதிதாக யோசித்து அமைச்சர்களுக்கு தொல்லை கொடுப்பதுதான் அவர் வேலை. அமைச்சர்கள் அவர் கட்டளைகளை நிறைவேற்றாவிட்டால் அவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கிவிடுவார், அல்லது நாட்டிலிருந்து நீக்கிவிடுவார். சிலவேளை உலகத்திலிருந்தே நீக்கிவிடுவார்.
அதிலும் வெளிவிவகார அமைச்சர்பாடு திண்டாட்டம்தான். தினமும் ஏதாவது புதிதாக யோசித்து அவருக்கு இம்சை கொடுப்பார். ஒருநாள் அதிகாலை அமைச்சரை அழைத்து 'உகண்டா என்ற பெயர் நல்லாயில்லை. அதை 'இடி' என்று மாற்றவேண்டும். என்னுடைய பெயர் 'இடி அமின்' என இருப்பதால் அதுதான் பொருத்தமானது. உடனே அதற்கான ஆயத்தங்களை செய்யுங்கள்' என்று ஆணை பிறப்பித்தார். அமைச்சர் நடுங்கிவிட்டார். சரி என்று சொன்னவர் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருந்தார். இரண்டு வாரம் போனது. இடி அமின் கோபத்தில் இருந்தார். அமைச்சரை அழைத்து 'என்ன செய்கிறீர்? நாட்டின் பெயரை மாற்றிவிட்டீரா?' என்று கேட்டார். அமைச்சர் அமைதியாகச் சொன்னார். 'நான் பலநாட்டு பிரதிநிதிகளையும் தொடர்புகொண்டு அவர்கள் அபிப்பிராயத்தை கேட்டேன். அவர்கள் எல்லோருமே அருமையான யோசனை, இதைவிடப் பொருத்தமான வேறு பெயர் கிடைக்காது என்று சொன்னார்கள். ஆனால் ஒரேயொரு சின்னப் பிரச்சினை' என்றார்.
இடி அமின் 'என்ன என்ன, என்ன சின்னப் பிரச்சினை?' என்று அவசரப்பட்டார். அமைச்சர் சொன்னார், 'சைப்பிரஸ், சைப்பிரஸ் என்று ஒரு நாடு இருக்கிறது. அந்த நாட்டு மக்களை 'சைப்பிரியட்' என்று அழைப்பார்கள். எங்கள் நாட்டு பெயரை இடி என்று மாற்றினால் நாட்டு மக்களை 'இடியட்' என்று அழைக்கவேண்டி வரும். பரவாயில்லையா?' யோசனை கைவிடப்பட்டது.
ஆனால் சமயோசிதத்தில் அமெரிக்காவில் ஒரு 16 வயதுப் பையன் இவர்கள் எல்லோரையும் வென்றவனாக இருக்கிறான். அவன் ஒரு சுப்பர்மார்க்கட்டில் தற்காலிக வேலைக்கு சேர்ந்தான். ஒருநாள் ஒரு கிழவர் வந்து தனக்கு அரை றாத்தல் வெண்ணெய்கட்டி வேண்டும் என்றார். பையன் 'அரை றாத்தல் கிடையாது. ஒரு றாத்தல் கட்டிகள்தான் இருக்கின்றன' என்றான். கிழவர் சண்டை பிடிக்கத் தொடங்கினார். 'எனக்கு வேண்டியது அரை றாத்தல்தான். நான் ஏன் ஒரு றாத்தல் வாங்கவேண்டும். மீதியை நான் என்ன செய்வது? இது பெரிய அநியாயமாக இருக்கிறது' என்று கத்தினார். பையன் சரி 'மனேஜரிடம் கேட்டு வருகிறேன்' என்று உள்ளே போய் மனேஜரிடம் 'சேர், ஒரு முட்டாள் தனக்கு அரை றாத்தல் வெண்ணெய்கட்டி வேண்டும் என்று அடம் பிடிக்கிறான்' என்று கூறிவிட்டு திரும்பி பார்த்தால் கிழவர் அங்கே நிற்கிறார். உடனே பேச்சை மாற்றி 'ஆனால் இந்த அருமையான மனிதர் மற்ற பாதியை தான் வாங்குவதாகச் சொல்கிறார்' என்றான். மனேஜர் கிழவருக்கு முழு வெண்ணெய்கட்டியை பாதி விலைக்கு கொடுத்து அனுப்பிவிட்டு பையனிடம் 'உன்னை எனக்கு பிடித்துக்கொண்டது. நீ புத்திசாலியாக இருக்கிறாய். நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன்?' என்று கேட்டார்.
பையன் 'சேர், நான் மெக்ஸிக்கோவைச் சேர்ந்தவன். அது ஒரு மோசமான நாடு. அங்கே நிறைய கால் பந்தாட்டக்காரர்களும், விலைமாதுக்களும்தான்' என்றான்.
மனேஜர் 'அப்படியா? என் மனைவிகூட மெக்ஸிக்கோகாரிதான்' என்றார்.
பையன் 'பாருங்கள், என்ன அதிர்ஷ்டம்? உங்கள் மனைவி எந்த உதைபந்தாட்ட அணியில் விளையாடுகிறார்?' என்றான்.
பையனுக்கு உடனேயே உதவி மனேஜர் பதவி கிடைத்தது.