விமானத்திலே கிடைத்த சஞ்சிகை ஒன்றில் சமீபத்தில் ஓர் அனுபவக் கட்டுரை படித்தேன். இதை எழுதியவர் ஒரு வெற்றிபெற்ற வழக்கறிஞர். சீராகப்போன அவருடைய வாழ்க்கை திடீரென்று சரியத்தொடங்கியது. தொழிலில் நட்டம் ஏற்பட்டது. மனைவி விவாகரத்து கோரினார். அவருடைய மகன் வீட்டை விட்டு விலகினான். நண்பர்கள் எதிரிகளானார்கள். அவர் நம்பி கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பிதராமல் ஏமாற்றினார்கள். எல்லாம் இழந்து இனி இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலையில் அவர் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். அப்பொழுது அவர் காதில் ஒரு குரல் கேட்டது. ’நீ உன்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரையும் எதிரிகளாகவே நினைக்கிறாய். உலகம் முழுக்க உன்னை கவிழ்க்க சதிசெய்வதாக எண்ணுகிறாய். உனக்கு நன்மை செய்தவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். ஒரு மாற்றத்துக்கு அவர்களைத் தேடிப்பிடி.த்து நன்றி கூறு. ஒன்றையும் எதிர்பார்க்காமல் செய்.’ இப்படி அந்தக் குரல் சொன்னது.
அவருக்கு ஒன்றுமே தோன்றவில்லை. கெடுதி செய்தவர்களின் பெயர்களே அவர் நினைவுக்கு வந்தது. யோசிக்க யோசிக்க ஒன்றிரண்டு நன்மை செய்தவர்களின் பெயர்கள் ஞாபகத்தில் வந்தன. அவருடன் முன்னெப்போதோ வேலை செய்த ஒருவர் அவருக்கு உதவி செய்திருந்தார். பழைய ஆசிரியர் ஒருவர் அடுத்ததாக நினைவுக்கு வந்தார். இவர் அவர்களை அழைத்து நன்றி சொன்னபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சியில் சரி பாதி இவருக்கும் கிடைத்தது. ஒன்றுமே எதிர்பார்க்காமல் ஒவ்வொருவராகத் தேடி நன்றி சொன்னார். அப்படியே செய்துகொண்டு வந்தபோது இவர் எதிர்பாராத ஒன்று நடந்தது. கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பி தந்தார்கள். மகன் திரும்பி வந்தான். மனைவி மன்னித்தார். அவருடைய தொழில் முன்னேற்றம் அடைந்து லாபம் ஈட்டத்தொடங்கியது.
இதைப் படித்தபோது நானும் இப்படிச் செய்து பார்த்தால் என்னவென்ற எண்ணம் எனக்கு தோன்றியது. சிலபேரை, எனக்கு எதோ ஒரு விதத்தில் எப்போவோ உதவி செய்தவர்களை, ஒவ்வொருவராகத் தேடி நன்றி கூறினால் நல்லாயிருக்குமே என்று நினைத்தேன். யோசித்தபோது மனதில் ஒரு பெயரும் வரவில்லை. நெடுநேரம் யோசித்தபின்னர் என்னோடு சிறுவயதில் படித்த ஒரு நண்பர் லண்டனில் இருப்பது நினைவுக்கு வந்தது. அந்தச் சின்ன வயதிலேயே எனக்கு உதவி செய்தவர், ஆனால் நான் அவருடன் பேசி 50 வருடங்களுக்கு மேலாக இருக்கும். இப்பொழுதுதான் கூகிள் , முகப்புத்தகம் என எத்தனையோ வழிவகைகள் இருக்கின்றனவே. எப்படியோ தேடிக் கண்டுபிடித்து அவரை தொலைபேசியில் அழைத்தேன். அவரால் நம்ப முடியவில்லை. ’எப்படி இருக்கிறீர்கள்?’ என்று விசாரித்தேன். அழைத்தது நான்தானா? என்பதை திரும்ப திரும்ப கேட்டு உறுதி செய்தார். தன்னுடைய உடம்பில் உள்ள ஒவ்வொரு அங்கத்தையும் சொல்லி அது தனக்கு கொடுக்கும் பிரச்சினைகளை வர்ணித்தார். வருடங்கள் இத்தனை கழிந்தாலும் ஒருவருடைய குணம் பெரிதும் மாறிவிடுவதில்லை.
சிறுவயதில் படித்தபோது இவர் எப்போதும் வகுப்பில் முதல் மாணவர். நான் மூன்றாவதோ, நாலாவதோ, ஐந்தாவதாகவோ வருவேன். ஒருமுறையாவது அவரைத் தள்ளி விழுத்தி முதலாவதாக வரவேண்டும் என்ற விருப்பம் எனக்கிருந்தது. அது நடக்கவே இல்லை. ஏதாவது பாடத்தில் சந்தேகம் வந்தால் அவரிடம்தான் கேட்பேன். பொறுமையாக நிதானமாக சொல்லிக்கொடுப்பார். தனக்கு போட்டியாக நான் வரக்கூடும் என்று அவர் நினைத்ததே இல்லை. முதலாவதாக வரும் மாணவரை வகுப்பில் ஒருவருக்கும் பிடிப்பதில்லை. அவரும் ஒதுங்கியே இருக்க பழகிக்கொண்டார். ஆனால் என்னிடம் ஏற்பட்ட நட்பு எப்படியோ மாணவப் பருவம் முழுக்க நீடித்தது.
அவருடைய முறைப்பாடுகளை தினம் பொறுமையாகக் கேட்பது நான்தான். அவருக்கு என்னைப் பிடித்த காரணம் அதுவாக இருக்கலாம். நாங்கள் எல்லோரும் தலைக்கு நல்லெண்ணெய் வைப்பதுதான் வழக்கம். அவர்கள் வீட்டில் தேங்காயெண்ணெய்தான் வைப்பார்கள். அவருடைய தாயார் இந்த விசயத்தில் கண்டிப்பானவர். தேங்காயெண்ணெயை தலையிலே தினமும் தப்பி வைப்பதால் அது அவர் தலையில் காதுப்பக்கமாக ஊறி ஒரு கோடாக கீழே இறங்கும். ஒன்றிரண்டு இலையான்கள் அவருடைய தலையை சுற்றி பறப்பதை காணலாம். பண்டைக் காலத்து பெண்டிர் சூடிய மலரை வண்டுகள் மொய்க்கும் என்று படித்திருந்தேன். ‘வண்டார் குழலி உமை நங்கை, பங்கா நங்கை மணவாளா’ என்று சிலர் கேலி செய்யும்போது நண்பர் தாயாரை மனதுக்குள் திட்டுவார்.
நான் அவர் வீட்டுக்கு சில நாட்களில் போனதுண்டு. பெரிய மதிலில் உள்ள சின்ன கேட் எப்பவும் பூட்டியிருக்கும். வெளியே நின்று கத்தினால் உள்ளே கேட்காது. சிலவேளை திறப்பார்கள், அநேகமாக திறக்கமாட்டார்கள். வீடு நிறைய கட்டில்களும், கதிரைகளும், வாங்குகளுமாக அடுக்கியிருக்கும். அவர் தாயார் தரையில் அமர்ந்து கண்ணாடியைப் பார்த்து தலைவாரிக் கொண்டிருப்பார். இரண்டு முழங்கால்களையும் நிமித்தி வைத்து சுவரில் சாய்ந்து இருப்பார். முகம் பார்க்கும் கண்ணாடி தொடைகளுக்கு நடுவில் சொருகியிருக்கும். கையிலே பேன் சீப்பு. அவருக்கு என்னில் நல்ல விருப்பம். தன்னுடைய மகன் மூடன், மூளையில்லாதவன் என்று என்னிடம் பலமுறை சொல்லி புலம்பியிருக்கிறார். ‘அவன் சுட்டுப்போன பல்ப். இனி ஒன்றுமே செய்ய ஏலாது’ என்பார். வகுப்பில் எப்பவும் முதலாவதாக வரும் மகனை அப்படித்தான் ஏசுவார். மகனிடம் வேறு என்ன எதிர்பார்த்தாரோ தெரியவில்லை. ’ஆடு செத்துப்போச்சுது என்று சொன்னால், தலையும் செத்துப்போச்சுதோ என்று கேட்பான். இவன் எப்படித்தான் படிச்சு முன்னுக்கு வரப்போறானோ தெரியாது’ என்று திட்டுவார். வகுப்பில் எத்தனாம் பிள்ளை என்று என்னை கேட்டுவிடுவாரோ என்ற நடுக்கத்தில் நான் இருப்பேன்.
நான் நண்பருடன் தொலைபேசியில் 20 நிமிடம் பேசியிருப்பேன். அதற்குள் நாலு தடவை ’என்ன விசயம்?’ என்று கேட்டுவிட்டார். ’உங்கள் குரலைக் கேட்கவேண்டும் என்று விருப்பமாயிருந்தது’ என்று சொன்னேன். அவரால் நம்பமுடியவில்லை. ஆனால் அவர் குரலிலே மட்டற்ற மகிழ்ச்சியை உணரக்கூடியதாக இருந்தது. ’ஒரு முறை உங்கள் அம்மா உங்களை அடித்தாரே. ஒரு கையில் விளக்கும் ஒரு கையில் தண்ணீரும் எடுத்துப் போனதற்கு. ஞாபகமிருக்கிறதா?’ என்றேன். அவர் சிரி சிரியென்று சிரித்தார். ’உண்மைதான். இன்றுகூட ஏன் அடித்தார் என்பது எனக்கு தெரியாது. அப்படிச் செய்தால் ஒரு சா அந்த வீட்டில் விழும் என்று நம்பிக்கை. அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை. வீணாக அடி வாங்கினேன். உங்களுக்கு எல்லாமே நினைவில் இருக்கிறது’ என்றார். ’சுட்ட பல்ப் என்று திட்டுவாரே. அது ஏன்?’ என்று கேட்டேன். ’அம்மாவை திருப்திப்படுத்தவே முடியாது. அவர் சாகும்வரைக்கும் வாழ்க்கையில் நான் தோல்வி என்றே நினைத்தார்’ என்றார். ’இப்ப எப்படியிருக்கிறீர்கள்?’
’இப்பொழுதுதான் நான் சுட்ட பல்ப். என்னால் ஒருவருக்கும் ஒரு பிரயோசனமும் கிடையாது’ என்றார். உடனேயே நான் கதையை மாற்றி ‘அடிக்கடி இனிமேல் பேசலாம்’ என்றேன். ’கட்டாயம் அழையுங்கள். காத்திருப்பேன். நீண்ட காலத்துக்கு பிறகு இன்றுதான் நான் நிறையச் சிரித்தேன்’ என்றார்.
நண்பரை அழைத்தது பெரிய அதிர்ஷ்டம் எனக்கு அடிக்கவேண்டும் என்று நினைத்து அல்ல. சிறுவயது நண்பர் ஒருவருடன் பேசும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு கிடையாது. கனடாவில் இருந்து லண்டனுக்கு தொலைபேசியில் அழைக்கும்போது 15 தானங்களை அழுத்தவேண்டும். அதற்கு ஐந்து செக்கண்டுகள்கூட ஆகவில்லை. அந்த தொலைபேசிக்கு செலவழித்த காசும் சொற்பமானது. என்னுடைய நண்பர் எப்படி கலகலவென்று சிரித்தார். அவருக்கு வேறு யாரும் அப்படி ஒரு மகிழ்ச்சியை கொடுத்திருக்க முடியாது. பழைய நட்பு அப்படிப்பட்டது. ஏன் இதை நான் முன்னரே செய்யவில்லை என்று யோசித்தேன். காரணம் புரியவில்லை.
அடுத்த நாள் எனக்கு வருமான வரித்துறையில் இருந்து பழுப்பு நிற உறையில் ஒரு கடிதம் வந்தது. வருமானவரித் துறை கடிதம் என்றால் அதை நான் உடனே உடைப்பதில்லை. கைநடுக்கம் நின்றபிறகுதான் உடைப்பேன். கடிதத்தை படித்த எனக்கு ஆச்சரியம். கடிதத்துடன் 335 டொலருக்கு ஒரு காசோலை இணைத்திருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்னர் நான் கட்டிய வருமான வரிக் கணக்கில் அவர்கள் ஒரு தவறு செய்துவிட்டார்கள். 335 டொலர் மேலதிகமாக என்னிடம் அறவிட்டிருந்தார்கள். வருமான வரித்துறைக்கு கொடுக்கும் பணம் தீக்கோழியின் வாயில் கிடைத்த தீனிபோல, திரும்பவும் கிடைக்காது. வருமான வரித்துறை அந்தப் பணத்தைத்தான் எனக்கு திருப்பி அனுப்பியிருந்தார்கள்.
எனக்கு கிடைத்த காசோலைக்கும், நண்பரை அழைத்த தொலைபேசிக்கும் ஒருவித தொடர்பும் இல்லையென்று எனக்குத் தெரியும். அந்தளவுக்கு மூளை எனக்கு இன்னும் பழுதாகவில்லை. ஏதாவது தொடர்பிருந்தால் நல்லாயிருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.