கனடாவுக்கு வரமுன்னர் நான் என் வாழ்க்கையில் மூன்று நிலநடுக்கங்களைச் சந்தித்திருக்கிறேன். பாகிஸ்தானில் இருந்தபோது பெசாவார் என்ற இடத்தில் வேலை செய்தேன். ஆனாலும் ஆப்கானிஸ்தானுக்கு அடிக்கடி போய்வரவேண்டும். சிலவேளைகளில் சின்ன தனியார் விமானத்தில் பறந்து போவோம், சிலவேளைகளில் வாகனத்தில் பயணிப்போம். ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் வரும். அதன் அதிர்வுகள் பாகிஸ்தானின் பெசாவார் பகுதிகளையும் தொட்டுச் செல்லும். என்னுடைய முதல் நிலநடுக்க அனுபவம் பெசாவாரில் கிடைத்தது. இரவு நடுநிசியிருக்கும் நான் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தேன். திடீரென்று நாய்கள் ஊளையிடும் சத்தம் கேட்டது. நாய்களுக்கு நிலநடுக்கம் வரப்போவது முன்கூட்டியே தெரியும் என்று சொல்வார்கள். நிலம் உறுமுவதுபோல பெரிய சத்தம் தொடர்ந்தது. நான் படுத்திருந்த கட்டில் தூக்கிப்போட்டது. எழும்பியதும் தலையை சுத்தியது. படுக்கையறை கதவை திறந்து, இருக்கும் அறைக்கு வந்தபோது ஒரு காட்சி என்னை நிலைகுலையவைத்தது. நான் ஓய்வாக உட்காரும் ஆடுகதிரை முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டிருந்தது. நான் பார்த்த ஆங்கில திகில் படம் ஒன்றில் அப்படியான காட்சி வந்திருந்தது. சிறிது நேரத்தில் விளக்குகள் அணைந்தன. நிலம் அமைதிபெற்றது. இதுதான் என் முதல் அனுபவம். இரண்டாவது நில நடுக்கம் நான் ஆப்கானிஸ்தானில் விருந்துக்கு போனபோது நடந்தது. ஒரு கிராமத்தில் ஆப்கான் நீள ரொட்டியை பிய்த்து பிய்த்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்பொழுது நிலம் தனது இருப்பை எங்களுக்கு உணர்த்துவது போல சிறு நடுக்கம் போட்டது. நாய்களுக்கு குளிக்கவார்த்தால் அவை உதறி தண்ணீரை தெளிக்குமே அதுபோல பூமி ஒருமுறை தன்னைத்தானே உதறிக்கொண்டது. சிலர் வெளியே ஓடினார்கள். வெளியே இருந்தவர்கள் உள்ளே ஓடிவந்தார்கள். அப்பொழுது ஒரு கிழவர், 'நிலநடுக்கம் வரும்போது ஒரு வீட்டிலே ஆகச் சேமமான இடம் வாசல்படிதான். வெளியேயும் அல்ல உள்ளேயும் அல்ல, கதவு நிலைக்கு கீழே நிற்கவேண்டும்' என்று சொன்னார். இருந்தபடி பேச ஆரம்பித்த கிழவர் நின்றபடி பேச்சை முடித்தார். கிரேதாயுகத்து இரணியன் கடவுளிடம் வரம் கேட்டான். 'நான் இரவிலும் சாகக்கூடாது, பகலிலும் சாகக்கூடாது. மனிதனாலும் சாகக்கூடாது, மிருகத்தினாலும் சாகக்கூடாது. வீட்டுக்கு உள்ளேயும் சாகக்கூடாது, வெளியேயும் சாகக்கூடாது.' மாலைநேரத்தில், நரசிம்மம் இரணியனை வாசல்படியில் வைத்து கொன்றதாகக் கதை. இரணியனுக்கு வாசல்படி சேமமில்லாத இடம் ஆனால் பூகம்பத்துக்கு அதுவே சேமமானது. நான் வாசல்படிக்கு போகமுன்னர் பூமி தன் மனதை மாற்றி அமைதியாகிவிட்டது. ஆனால் அன்று நான் பார்த்த காட்சி ஒன்று மனதில் இன்னமும் நிற்கிறது. ஒருவர் விருந்துக்காக நாலு ஆடுகளை ஆட்டோரிக்சாவில் ஏற்றிக்கொண்டு போயிருக்கிறார். பாதி வழியில் அவர் போன ரோட்டு குறுக்காக வெடித்துவிட்டது. கொஞ்சம் வேகமாகப் போயிருந்தால் ராமாயணத்தில் பூமி வெடித்து சீதையை விழுங்கியதுபோல அவரும் பூமிக்குள்ளே போயிருப்பார். எப்படியோ உயிர் தப்பிவிட்டார். அவருடைய ஆடுகளும் உயிர் தப்பிவிட்டன. ஆனால் தள்ளிப்போடாமல் நடந்த விருந்தில் அந்த ஆடுகள் அவர்களுடைய வயிற்றுக்குள் போவதிலிருந்து தப்பமுடியவில்லை. மூன்றாவது நில நடுக்கம் பயங்கரமானது. பின்னேரம் மூன்று மணியிருக்கும். நான் நாலாவது மாடியில் என்னுடைய அலுவலக அறையில் வேலை செய்துகொண்டிருந்தேன். என்ன கோப்பில் ஆழ்ந்திருந்தேன் என்பதுகூட இப்போது ஞாபகத்தில் இருக்கிறது. ஒரு ஆப்கான் தாயும் மகனும் அனுப்பிய விண்ணப்பம். கணவன் போரில் இறந்துவிட்டார். அவர்களுடைய விவசாயத்துக்கு கரீஸ் (kareze) எனப்படும் ஆழ்கிணற்று கால்வாயில் வரும் தண்ணீர் அடைத்துவிட்டது. அந்த அடைப்பை சுத்தம் செய்வதற்கு பண உதவி கேட்டு எழுதியிருந்தார்கள். கோப்பை முழுவதும் படித்து முடிக்கவில்லை, நிலம் உறுமும் சத்தம் கேட்டது. அப்பொழுதெல்லாம் எனக்கு பழகிவிட்டது. நிலம் உறுமினால் அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியும். நெஞ்சிலிருந்து பயம் நாலு பக்கமும் அம்புகள்போல பாய்ந்தது. எங்கே நிலைப்படி இருக்கிறது என்று கண்கள் தேடின. ஆனால் நடந்தது முற்றிலும் எதிர்பாராதது. அந்த மாடி ஒரு பெண்டுலம் போல ஒரு பக்கம் ஓர் அடி சாய்ந்து நிமிர்ந்து மறுப்பக்கம் ஓர் அடி சாய்ந்தது. நான் உட்கார்ந்திருந்த சுழல் கதிரை அப்படியே சாய்ந்து ஒரு பக்கத்துக்கு தானாகவே நகர்ந்தது. என்னுடன் வேலை செய்தவர்கள் பாகிஸ்தானியர்கள் அல்லது ஆப்கானியர்கள். அத்தனை பேரும் நாலு படிக்கட்டுகளையும் தாவிக்கடந்து இறங்கி ஓடிவிட்டார்கள். மிச்சமிருந்தது நான் மட்டும்தான். என்னை பெரும் துணிச்சல்காரன் என்று எல்லோரும் நினைத்தார்கள். உண்மையில் எனக்கு என்ன செய்யவேண்டும் என்பது தெரியவில்லை. திகைத்துப்போய் தானாக ஓடும் கதிரையின்மேல் உட்கார்ந்திருந்தேன். ரொறொன்ரோவில் பூகம்பங்கள் வருவதில்லை. எனவே அந்தப் பயம் இங்கே கிடையாது. யூன் 23ம் தேதி ஒரு புதன்கிழமை மதிய உணவுக்காக எங்கள் வீட்டுக்கு கிட்ட இருக்கும் ஆப்கான் உணவகத்துக்கு நாங்கள் நாலு பேர் சென்றோம். ஆப்கான் ரொட்டியை சுடச்சுட சாப்பிட்டால் ருசியாக இருக்கும் ஒருமுறை பழகியவர்கள் திரும்பவும் உண்ணப் பிரியப்படுவார்கள். மல்லிகைப்பூ இட்லி என்று சொல்வதுபோல இந்த ரொட்டியை மல்லிகைப்பூ ரொட்டி என்று சொல்லலாம். உணவகத்துக்கு பக்கத்தில் மேல்பாலத்தில் ரயில் ஓடும் பாதை இருக்கிறது. ரொட்டியை பிய்த்து பிய்த்து சாப்பிட்டபோது ஒரு சின்ன அதிர்வு. மேலே ஒடும் ரயில் என்று நினைத்தோம். வெளியே வந்தபோது அது ஒரு குட்டிப் பூகம்பம் என அறிந்தோம். தொலைக்காட்சிகளும் ரேடியோக்களும் அது பற்றி சொல்லின. ஆக இரண்டு தடவை ஆப்கான் ரொட்டியை நான் கடித்து சாப்பிட்டபோது பூகம்பம் வந்தது. இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கோ தெரியவில்லை. எங்கள் வீட்டு தோட்டத்துக் கதிரை குப்புறக் கவிழ்ந்து கிடந்தது. அதுதான் ரொறொன்ரோவில் ஏற்பட்ட ஆகக்கூடிய சேதம். அடுத்தநாள் காலை ஒரு மின்னஞ்சல் கொழும்பிலிருந்து வந்தது. எனக்கு முன்பின் தெரியாத அன்பர் ஒருவர் எழுதியிருந்தார். ' ஐயா அங்கே நிலநடுக்கம் என்று கேள்விப்பட்டேன். நலமாக இருக்கிறீர்களா? உங்களுக்கு நீண்ட ஆரோக்கியத்தை இறைவன் அளிக்க வேண்டும் என்று சுயநலத்துடன் வேண்டிக்கொள்ளுகிறேன். நான் மட்டுமல்ல. இங்கு நிறையப்பேர் உங்கள் இணையத்தளத்திலேயே கதியென்று விழுந்து கிடக்கிறார்கள். உங்கள் எழுத்தின் தன்மை அன்றன்றைய நாளின் சுமைகளை அகற்றி மனதுக்கு சுகமளிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள், ஐயா.' எனக்கு இருக்கும் அத்தனை நண்பர்களிலும், உறவினர்களிலும், அறிமுகமானவர்களிலும், அறிமுகமில்லாதவர்களிலும் முன்பின் பழக்கமில்லாத இவர் ஒருவரே என்னை விசாரித்து எழுதியிருந்தார். அவர் பெயர் விமலாதித்தன். என் மனம் நெகிழ்ந்துவிட்டது.
இப்படியான ஒரு நல்ல வார்த்தைக்கு நான் இன்னொரு நிலநடுக்கத்தை சந்திக்க தயாராக இருக்கிறேன். |
|