நிலநடுக்க நிபுணர்

 பாக்கியராஜின் ஒரு திரைப்படத்தில் வாத்தியார் கேட்பார். 'ஏண்டா லேட்டு?'
'அதான் லேட்டாயிடுத்து சார்.'
'அதைத்தான் கேட்கிறேன், ஏன் லேட்டு?'
'லேட்டாயிடுத்து சார்.'
'சரி, போய் உட்காரு.'

 

மருத்துவர் என்னைப்பார்த்து ரத்தப் பரிசோதனை செய்யவேண்டும் என்று சொன்னார்.
'ஏன் ரத்தப் பரிசோதனை?'
'பரிசோதனை செய்யத்தான்.'
'அதான் ஏன்?'
'செய்தால்தானே சொல்லமுடியும்.'

நான் பின்னர் ஒன்றும் கேட்கவில்லை. மூன்றுதரம் ஒரே கேள்வியை கேட்கக்கூடாதென்று அம்மா சொல்லியிருக்கிறார்.

ரத்தப் பரிசோதனைக் கூடத்தில் எனக்கு முன் பல பேர் உட்கார்ந்திருந்தார்கள். நான் ஒரு நம்பரை எடுத்துக்கொண்டு என் முறைக்காக காத்திருந்தேன். மூன்று தாதிகள் வேகவேகமாக வேலை செய்தனர். எனக்கு வந்தது ஒரு கறுப்பு நிற நடுத்தர வயதுப் பெண்மணி. பச்சை அங்கியை மேலே மாட்டியிருந்தார். அகலமான கைப்பிடி வைத்த கதிரையில் என்னை உட்காரச் சொல்லி, ரப்பர் துண்டினால் முழங்கையுக்கு கீழே கட்டிவிட்டு, ஸ்பிரிட் பஞ்சினால் ஊசிகுத்தப்போகும் இடத்தை துடைத்தார். நான் கைவிரல்களை பந்துபோலச் செய்தேன். மருத்துவர் துண்டில் என்ன எழுதித்தந்தார் என்பது அங்கேதான் தெரிந்தது. ஐந்து விதமான சோதனைகள், ஆகவே ஐந்துவிதமான ட்யூபுகள். ஒவ்வொரு குழாய் மூடியும் ஒவ்வொரு நிறம். பச்சை, நீலம், மஞ்சள், நீலம், மென்சிவப்பு. மூடிக்குத் தக்கமாதிரி எடுக்கவேண்டிய ரத்த அளவுகளும் மாறுபடும். ரத்த அளவுகள் குழாய்களில் குறிக்கப்பட்டிருந்தன. இந்த பெண் குத்தியதும், ரத்தம் எடுத்ததும் குழாய்களை அந்தந்த அளவுகளுக்கு நிரப்பியதும் துரிதமாக நடந்தது. ஓர் அசைவுகூட வீணாகவில்லை. அவருடைய வலதுகை ஊசியை குத்தி பிடித்திருந்தது, இடது கை விரல்கள் குழாய்களை ஒவ்வொன்றாக மாற்றி குறிக்கப்பட்ட உயரத்துக்கு நிரப்பியது. அவருடைய செயல் திறன் உச்சமாக இருந்தது. அதிசயிக்கவைத்தது. தேர்ந்த கலைஞர் பியானோ இசைத்ததுபோல கைவிரல்கள் இசைவோடு வேலை செய்தன. ஊசியை வெளியே இழுத்து பஞ்சை வைத்து பிளாஸ்டரை ஒட்டினார். இவ்வளவும் செய்துமுடிக்க ஒரு நிமிடம்கூட ஆகவில்லை. ஒருநாளைக்கு 200 பேருக்கு ரத்தம் எடுப்பதாகச் சொன்னார். பெயர் எழுதி ஒட்டியிருக்கும் ட்யூபுகள் பரிசோதனைக் கூடத்துக்கு நேராகப் போகும். அங்கே கணினி மூலம் பரிசோதனை நடக்கும். தாதி அடுத்த நோயாளிக்கு தயாரானார். இன்னும் கொஞ்ச நேரம் அங்கே நிற்க அனுமதி கிடைத்தால் நான் நின்றிருப்பேன். அப்படி ஓர் அமைதியும், வேகமும், அழகும் கூடியிருந்தன.

நான் கீழே நிலவறையில் இருந்து கணினியில் தட்டச்சு செய்தால் அது மேல் அறையில் இருக்கும் மனைவிக்கு கேட்கும். அந்தக் காலத்து உருக்கு இரும்பில் செய்த ரெமிங்டன் தட்டச்சு மெசினில் ஓங்கி ஓங்கி குத்தி பழகியதால் இருக்கலாம். ஒரு பதின்பருவத்து பெண் கணினியில் டைப் செய்யும்போது சத்தமே கேட்காது. இறகு தடவுவதுபோல விசைப்பலகைகளில் அவள் மெல்லிய விரல்கள் தொட்டு தொட்டு பாயும். பார்க்கும்போதே ஒரு நல்ல கவிதையை கேட்பதுபோன்ற உணர்வு ஏற்படும்.

எந்த ஒரு தொழிலையும் நேர்த்தியாகச் செய்தால் அதிலே அழகு மிளிரும்.  நல்ல தோட்டக்காரர் செடி வெட்டும்போதுகூட அழகிருக்கும். பார்த்துக்கொண்டிருக்கலாம். ஒரு புதிய தொழிலை யாராவது ஈடுபாட்டோடு செய்தால் அதை பார்க்கப் பிடிக்கும். புதிய தொழில் நிபுணர்களைச் சந்தித்தால் இன்னும் பிடிக்கும்; அவர்களுடன் பேசுவதும் மனதை நிறைக்கும் அனுபவம்.  பத்து புத்தகங்களில் படித்து கிடைக்கும் ஞானம் ஒருவருடன் பேசும்போது பத்து நிமிடத்தில் கிடைத்துவிடும்.

ஒருமுறை விருந்து ஒன்றில் எனக்கு பக்கத்தில் இருந்தவரை அறிமுகப் படுத்தினார்கள். அவர் ஒரு நிலநடுக்க நிபுணர். நான் என் வாழ்நாளில் ஒரு நிலநடுக்க நிபுணரையும் அதற்கு முன்னர் பார்த்ததில்லை; பேசியதுமில்லை. என் மனம் பரபரத்தது. 'நீங்கள் நிலநடுக்கம் இல்லாதபோது என்ன செய்வீர்கள்?' என்று கேட்டேன். இது ஒரு மிகவும் innocent ஆன கேள்வி. அவர் சட்டென்று எழும்பி தூரமாய் இருந்த ஒரு கதிரையில் போய் உட்கார்ந்துகொண்டார். ஏன் அப்படிச் செய்தார் என்று தெரியவில்லை. என் பக்கம் வந்தால் நிலநடுக்கம் உண்டாகிவிடும் என்பதுபோல விருந்து முடிவுக்கு வரும்வரை அந்தக் கதிரையிலேயே தங்கிவிட்டார்.

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta