பிறப்பொக்கும் எல்லா உயிரும்

 

 அமெரிக்க ஜனாதிபதிகளில் அதிகமும் போற்றப்படுபவர் தோமஸ் ஜெஃபர்ஸன். இவர் அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதி. 4 ஜூலை 1776 ல் அமெரிக்கா சுதந்திர பிரகடனம் செய்தது. அந்தப் பிரகடனத்தை யாத்தவர் என்ற பெருமை இவருக்குத்தான் உரியது. அதிலே காணப்படும் முக்கியமான ஒரு வசனம் 'பிறப்பில் எல்லா மனித உயிரும் சமம்.' இன்றைக்கும் இந்த ஒரு வசனத்துக்காக அவர் புகழ் பேசப்படுகிறது. திருவள்ளுவர் எத்தனையோ பலநூறு வருடங்களுக்கு முன்னர் சொன்னதைத்தான் ஜெஃபர்ஸனும் சொன்னார்.
 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
 செய்தொழில் வேற்றுமையான்.
பிறப்பினால் எல்லோரும் சமம். அவரவர் செய்யும் தொழில் வேறுபாட்டினால் மட்டுமே அவர்களுக்கு பெருமையுண்டு.

 

சுதந்திர பிரகடனத்தை யாத்தவர் என்பதனால் மட்டுமல்ல அவர் நினைக்கப்படுகிறார், அவர் பெரிய தீர்க்கதரிசியும்கூட. பிரான்சிடமிருந்து லூசியான பிரதேசத்தை வாங்கி ஐக்கிய அமெரிக்காவுடன் இணைத்தவர். அமெரிக்காவின் கிழக்கு கரைக்கும் மேற்கு கரைக்கும் தரைவழிப் பாதை கண்டறிந்த ஆராய்ச்சிக்குழு பயணத்துக்கு ஏற்பாடு செய்தவர்.  அரசும் மதமும் பிரிந்திருக்க வேண்டுமென விரும்பியவர்.

ஜெஃபர்ஸன் மிகப்பெரிய அறிவாளி; சுயமாகச் சிந்தித்தவர். ஒருமுறை ஜனாதிபதி கென்னடி வெள்ளை மாளிகையில் 49 நோபல் பரிசாளர்களுக்கு விருந்தளித்தார். அப்போது அவர் 'ஜெஃபர்ஸன் தனியாக வெள்ளை மாளிகையில் உணவருந்திய அந்த தருணத்தை கணக்கில் எடுக்காவிட்டால், இந்த வெள்ளை மாளிகையில் இத்தனை பெரிய அறிவுப் பெருக்கம் இதற்குமுன்னர் ஒருபோதும் கூடியதில்லை' என்றார். கென்னடி அத்தனை பெரிய மதிப்பு ஜெஃபர்ஸன் மீது வைத்திருந்தார்.

ஜெஃபர்ஸன் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின்னர் தன்னுடைய மொன்டிஸெல்லோ வீட்டில் 17 வருடங்கள் வாழ்ந்து அங்கேயே இறந்துபோனார். தன் சொத்துக் கணக்குகளையும் செலவுக் கணக்குகளையும் அவரே எழுதிவைப்பார். ஆனாலும் இறக்கும்வரை கடன் தொல்லையால் அவதிப்பட்டார். இவர் தன் வாழ்நாளில் 46 வருடங்களை மொன்டிஸெல்லோ வீட்டை நிர்மாணிப்பதிலும், திருத்துவதிலும், இடிப்பதிலும், புதிதாக கட்டுவதிலும் செலவழித்தார். அப்படியும் அவர் விரும்பிய உருவம் இறுதிவரை கிடைக்கவில்லை. சுதந்திர பிரகடனம் செய்து சரியாக 50 வருடங்கள் கழித்து 4 ஜூலை 1826 அன்று இறந்துபோனார்.

அவர் இறந்தபொழுது அவருடைய சொத்துக் கணக்கில் 187 அடிமைகள் இருந்தனர். சுதந்திர பிரகடனம் எழுதிய அதே கையினால் அந்தக் கணக்கை எழுதி வைத்திருந்தார்.

 
 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta