றிக் பாஸ் என்பவர் அமெரிக்க எழுத்தாளர். இவரை நான் மூன்று தடவை சந்தித்திருக்கிறேன். பழகுவதற்கு அருமையானவர். இவருடைய சிறுகதைகள் அமெரிக்க சிறந்த கதைகளில் தெரிவாகியிருக்கின்றன. இவர் எழுதும் சிறுகதைகள் இயற்கையோடு சம்பந்தப்பட்டவை. மிகவும் நுட்பமாக எழுதப்பட்ட இந்தச் சிறுகதைகளை நான் திரும்ப திரும்ப படிப்பதுண்டு. இயற்கையோடு ஒட்டி இவர் வாழ்வதால் இவருடைய வாழ்க்கை சாகசம் நிறைந்ததாகவும், கேளிக்கை தன்மையுடையதாகவும் இருக்கும். கலேனா ஜிம் பற்றி இவர் எழுதிய சிறுகதை என்.கே மகாலிங்கம் மொழிபெயர்ப்பில் வெளிவந்த 'இரவில் நான் உன் குதிரை' சிறுகதை தொகுப்பில் உள்ளது. இவருடைய ஆகச் சிறந்த படைப்புகளில் இது ஒன்று.
கலேனா ஜிம்முக்கு ஐம்பது வயதிருக்கும். கேளிக்கைப்பிரியர். ஒரே நேரத்தில் பல பெண்களை வைத்திருப்பார். அமெரிக்காவின் ஐடஹோ மாகாணத்திலிருந்து கனடா காட்டுக்குள் களவாகச் சென்று வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டவர். கதை சொல்லி இளவயதுப் பையன். அவனுக்கு கலேனா ஜிம் குருமாதிரி. இருவரும் கனடா காட்டுக்குள் களவாக நுழைந்துவிட்டார்கள். ஜிம் ஒடுக்கமான பாதையில் வேகமாக ஜீப்பை ஓட்டுகிறார். திடீரென்று பெரிய மூஸ் மான் ஒன்று பாதையில் புகுந்து ஜீப்புக்கு முன் நேராக ஓடுகிறது. ஜிம்முக்கு என்ன பிடித்ததோ வாகனத்தை பையனிடம் கொடுத்துவிட்டு அடுத்த கணம் ஜீப்பின் கூரையில் ஏறிக்கொள்கிறார். பையனும் மிருகத்தின் பின் வேகமாக ஓட்டுகிறான். என்ன நடந்ததென்று ஊகிப்பதற்கு முன்பாக படீரென்று ஆகாயத்திலிருந்து பாய்ந்து மூஸ் மான் மீது சவாரி செய்கிறார் ஜிம். பையன் திகைத்துப் போகிறான். மூஸ் மான் அவரை உதறி விழுத்தப் பார்க்கிறது. அவர் தொங்கிக்கொண்டிருக்கிறார். கடைசியில் ஓர் இடத்தில் அவரை மூர்க்கமாக கீழே தள்ளிவிட்டு மான் மறைந்துபோகிறது.
விலா எலும்பு முறிந்துபோய் வேதனையில் முனகிக்கொண்டு ஜிம் விழுந்து கிடக்கிறார். அவரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வீடு திரும்புகிறான் கதைசொல்லிப் பையன். ஜிம்முக்கு ஒரு மகன் இருக்கிறான், வயது 19. அவன் ஒருவனைக் கொலை செய்துவிட்டு சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கிறான். ஜிம் மகனைப் பற்றி கதைப்பதில்லை. ஒரேயொரு முறை 'இப்பொழுது என் மகன் என்ன செய்துகொண்டிருப்பான்' என்று சொல்லியிருக்கிறார்.
தனது வயதுக்கு மீறிய சாகச வேலைகளை ஜிம் செய்தார். தன் மகனைப்பற்றியே எந்த நேரமும் நினைத்துக்கொள்ளும் ஜிம் உண்மையில் தன்னுடைய 19 வயது மகனின் வாழ்க்கையை அவனுக்காக வாழ்ந்துகொண்டிருந்தார். கதையில் பெரிசாக அதுபற்றி சொல்லவில்லை, வாசகர்கள்தான் யூகிக்கவேண்டும்.
சமீபத்தில் இந்தக் கதையை ஞாபகமூட்டும் சம்பவம் நடந்தது. ஓர் அமெரிக்கப்பெண் ஆப்கானிஸ்தானில் தொண்டு வேலை செய்துவிட்டு திரும்பியிருந்தார். ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு ஏதாவது உதவுவதுதான் அவர் நோக்கம். பெண்கள் வெளியே போகமுடியாது. வீட்டிலிருந்தபடியே வருமானம் வரக்கூடிய தொழிலை அவர்களுக்கு கற்றுத் தரவேண்டும். அதற்கு பொருத்தமானது தேனீ வளர்ப்புத்தான். மரத்தினால் செய்த நாலு தேன்கூட்டு பெட்டிகள்தான் மூலதனம். பல பெண்கள் இதை வைத்து பிழைத்தார்கள். அதில் ஒரு பெண் சொன்னது சுவாரஸ்யமானது.
'நான் இந்த நாலு சுவருக்குள்ளும் வாழ்கிறேன். என்னைச் சுற்றி உயரமான மதில்கள், அதில் ஒரேயொரு ஓட்டை. அதன் வழியாகத் தேனீக்கள் காலையில் வெளியே போகும், மாலையில் திரும்பும். அவை மரங்களையும், மலைகளையும், ஆறுகளையும் பார்க்கும். விதவிதமான நிறங்களுள்ள பூக்களின் மேல் உட்கார்ந்து தேன் சேகரிக்கும். அந்த தேனை பிழிந்து சொட்டு எடுக்கும்போது எனக்கு தேன் தெரிவதில்லை, முழு உலகமும் தெரியும். தேனீக்கள் எனக்காக உலகத்தை பார்த்து வருகின்றன.'
கலேனா ஜிம் தன் மகனுடைய வாழ்க்கையை வாழ்ந்தான். இந்தப் பெண்ணின் வாழ்க்கையை தேனீக்கள் வாழுகின்றன.