விஞ்ஞானியும் கவியும்

'நீங்கள் ஒரு விஞ்ஞானியா?' என்றார் ரொறொன்ரோவின் பிரபலமான கவி.
'அப்படித்தான் சொல்கிறார்கள்' என்றார் விஞ்ஞானி.
'நான் மிகப் பெரிய சோகத்தில் இருக்கிறேன்.'
'அப்படியா?'
'என் மலைப்பாம்பு சாகப் போகுது' என்று சொல்லி கவி விம்மத் தொடங்கினார்.

இந்த சம்பாசணையை கேட்டு மற்றவர்கள் திரும்பி பார்த்தார்கள். ரொறொன்ரோவின் சீலி மண்டபத்து வரவேற்பு பகுதியில் இது நடந்தது. சனிக்கிழமை, ஜூலை 17, 2010 மாலை. இன்னும் சிறிது நேரத்தில் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழா ஆரம்பமாகவிருந்தது. சுற்றியிருந்த பார்வையாளர்கள் இவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தனர். கவியின் உயரம் 5 அடி 7 அங்குலம். விஞ்ஞானியின் உயரம் 6 அடி. ஆனால் கவியும் விஞ்ஞானியும் ஒரே உயரத்தில் நின்று உரையாடியது அதிசயமாகப் பட்டது. காரணம் கவிஞர் ஐந்து கிளாஸ் வைன் குடித்திருந்தார். ஒரு கிளாசுக்கு ஒர் அங்குலம் அவர் உயருவார் என்பது கணக்கு.  அவர் கையில் நீண்ட காம்பு வைத்த வட்டமான கிளாசில் பானம் இருந்தது. விஞ்ஞானியின் கையிலும் அதே மாதிரியான கிளாசில் வெள்ளை வைன் இருந்தது. செயற்கை வெளிச்சத்தில் பொன்னை உருக்கி வார்த்திருப்பதுபோல பானம் மினுங்கியது.

'என்ன சொன்னீர்கள், மலைப்பாம்பா?'
'அதுதான் சொன்னேனே, மலைப்பாம்புதான்.'
'அதற்கு என்ன பிரச்சினை?'
'என்னுடைய வளர்ப்பு பிராணி. நாலு வருடமாக வளர்க்கிறேன், ஆனால் அது சாப்பிடுகுதில்லை.'
'கவலை வேண்டாம். அது பசியெடுக்கும்போது சாப்பிடும்.'
கவிக்கு ஏதோ சந்தேகம். காதுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதுபோல தலையை பக்கவாட்டில் கிடுகிடுவென்று  ஆட்டி விஞ்ஞானியை பார்த்தார்.
'அது சாப்பிடவில்லை என்று சொல்கிறேனே, ஒரு மாதமாக சாப்பிடவில்லை. என்னுடைய மலைப்பாம்பு சாகப்போகுது' என்று மறுபடியும் அழத்தொடங்கினார்.
'அது என்ன வகை மலைப்பாம்பு?'
'பாம்புவகைதான். நீளமாயிருக்கும். என்னாலே அதை தனிய தூக்கமுடியாது, மூன்று பேர் வேணும். சுருண்டு சுருண்டு வாலின்மேல் படுத்திருக்கும்.'
மறுபடியும் கவிக்கு சந்தேகம் வந்துவிட்டது. கிட்ட வந்து விஞ்ஞானியை உற்றுப் பார்த்துவிட்டு கேட்டார்.
'உங்களுக்கு தமிழ் தெரியுமா?'
'இலங்கைத் தமிழ் தெரியும். இந்தியத் தமிழ் தெரியும். இப்பொழுதுதான் ரொறொன்ரோ தமிழ் படித்து வருகிறேன்.'
'நல்லது, நல்லது. அப்ப சரி. எங்கை விட்டனான்?'
'வாலில் விட்டீர்கள்.'
'மிருக வைத்தியரிடம் போனேன். அவர் என்ன சொன்னார் தெரியுமா?'
'சொன்னால் தெரியும்.'
அவர் சொன்னார் என்னுடைய பாம்பு வேண்டுமென்றே பட்டினி கிடக்கிறதாம். அது ஆகப் பெரிய பசியை உண்டாக்கப் பார்க்கிறதாம். என்னை சாப்பிட்டு தன் பசியை போக்க திட்டம் போடுகிறதாம்.

விஞ்ஞானி ஓர் அடி பின்னுக்கு நகர்ந்தார்.
கவி பொருட்படுத்தவே இல்லை. வாளை உருவுவதுபோல தன் செல்பேசியை வெளியே எடுத்து தன்னைத்தானே ஒரு படம் எடுத்துக்கொண்டார்.
'உங்களைச் சந்தித்த முக்கியமான நாளை என்றைக்கும் நினைவில் வைக்க இந்தப் படம். எங்கே போகிறீர்கள்? நீங்கள் பெரிய விஞ்ஞானி. இதற்கு ஒரு தீர்ப்பு சொல்லாமல் போகக்கூடாது.'
விஞ்ஞானி தன் கிளாசில் இருந்த மீதமான வைனை கவியின் கிளாசில் ஊற்றிவிட்டு மறைந்தார். கவி தன் கிளாசைப் பார்த்தார். அது நிரம்பியிருந்தது.
'யாரோ என்னுடைய வைனை குடித்துவிட்டார்கள்' என்று புலம்பினார்.
அதைக் கேட்க ஒருவரும் இல்லை. தமிழ் இலக்கியத் தோட்டத்தின் கூட்டம் ஆரம்பமாக எல்லோரும் அங்கே போய்விட்டார்கள்.
 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta