பரா சுந்தரலிங்கம், அவுஸ்திரேலியாவில் இருந்து கடிதம் போட்டிருக்கிறார். 'வணங்குவதற்கு ஒரு மண்' கட்டுரையை படித்துவிட்டு ஆர்லிங்டன் மயானத்தைப் பற்றிய சில தகவல்கள் அனுப்பியிருக்கிறார்.
1) ஆர்லிங்கடனில் பெயர் தெரியாத போர்வீரனின் சமாதியை இரண்டு போர்வீரர்கள் காவல் காப்பார்கள். 21 அடிகள் வைத்து அணிவகுத்து ஒருவரை ஒருவர் எதிரெதிராகக் கடந்து பின்னர் திரும்பவும் அதே பாதையில் நடப்பார்கள். திரும்ப முன்னர் 21 செக்கண்டுகள் அமைதியாக நிற்பார்கள்.
2) 21 பீரங்கி மரியாதை உச்சமான மரியாதை. அதுதான் 21 அடிகள் அணிவகுப்பு.
3) அவர்கள் காவும் துப்பாக்கி எப்பொழுதும் தோளில் சமாதிக்கு எதிர்ப்பக்கத்தில் இருக்கும்.
4) துப்பாக்கி வழுக்காமல் இருக்க அவர்கள் கையுறைகளை நனைத்து வைத்திருப்பார்கள்.
5) காவல் வீரர்கள் ஒவ்வொரு 30 நிமிடமும் மாறுவார்கள். இந்தக் காவல் தொடர்ந்து 24 மணி நேரமும், வருடத்தில் 365 நாட்களும் நடைபெறும். எந்தப் புயலும், மழையும், பனியும், வெயிலும் இதை நிற்பாட்டுவதில்லை.
5) காவல் வீரர்களின் உயரம் 5அடி 10 அங்குலம் – 6 அடி 2 அங்குலம் இருக்கவேண்டும். இடை அளவு 30 அங்குலத்தை தாண்டக்கூடாது.
7) இரண்டு வருடம் தொடர்ந்து காவல் காப்பவர்களுக்கு மலர் வளைய பதக்கம் ஒன்று தரப்படும்.
8) மிக முக்கியமானது. காவல் வீரர்கள் மது அருந்தக்கூடாது. காவல் காக்கும் இரு வருடங்கள் மட்டுமல்ல. வாழ்நாள் முழுக்க, என்றென்றைக்குமாக.
இறந்த வீரர்களுக்கு இப்படி மரியாதையா? நம்புவதற்கே கஷ்டமாக உள்ளது.