சிலவேளை அதிர்ஷ்டம் ஓர் இஞ்ச் கிட்டவந்து தவறிப்போய் விடுகிறது.
சரியாக இன்று காலை ஆறுமணிக்கு தொலைபேசி வந்தது. அதன் மணிச்சத்தம் சிறிய இடைவெளிவிட்டு அவசர அவசரமாக அழைத்தது. உள்நாட்டு டெலிபோன் என்றால் நீண்ட இடைவெளி இருக்கும். இது வெளிநாட்டு அழைப்பு.
ஹலோ என்றேன்.
மறுபக்கம் ஹலோ சொல்லவில்லை. முன்கூட்டியே தயாரித்த ஒரு பேச்சை வெள்ளைக்காரப் பெண்குரல் ஒன்று வேகமாகப் பேசியது.
'தயவுசெய்து நிறுத்துங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?'
'நான் ஸ்டோன்புரூக் பல்கலைக் கழகத்தில் இருந்து பேசுகிறேன். புள்ளிவிவரம் சேகரிப்பதற்காக உங்களிடம் பேச விருப்பம் கொண்டுள்ளேன். உங்களிடம் பத்து நிமிடம் அவகாசம் இருக்கிறதா?'
'நிறைய இருக்கிறது.'
'நல்லது. உங்கள் சுகாதாரம், உணவுப் பழக்கவழக்கங்கள், தேகப்பயிற்சி போன்றவற்றில் கேள்விகள் கேட்கப்படும். சில இடங்களில் உங்கள் அபிப்பிராயத்தையும் கேட்டு எழுதிக்கொள்வோம்.'
'பிரச்சினை இல்லை. ஆனால் இதனால் எனக்கு என்ன பிரயோசனம்?'
'மன்னியுங்கள், அதைத்தான் சொல்ல வருகிறேன். 2000 பேரிடம் இந்த புள்ளிவிவரங்களை சேகரிக்கிறோம். அவர்கள் கருத்துக்களையும் கேட்போம். புள்ளிவிவர சேகரிப்பு முற்றுப்பெற்றபின் இதில் பங்குபற்றியவர்களுக்கு குலுக்கல் முறையில் ஒரு பரிசு உண்டு.'
'அப்படியா? நல்லது, என்ன பரிசு?'
'ஸ்பெயின் நாட்டுக்கு போய்வர இலவச விமானப் பயணம். ரொறொன்ரோ – மாட்ரிட் – ரொறொன்ரோ டிக்கட் உங்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படும்.'
'எனக்கு மாட்ரிட்டில் ஒரு சொந்தக்காரரும் இல்லை. இதை ஜேர்மனிக்கு மாற்ற முடியாதா?'
'தெரியவில்லை. குலுக்கல் முறையில் வென்றபிறகுதான் டிக்கட் அனுப்பிவைக்கமுடியும்.' 'உங்களுக்கு சம்மதம் என்றால் ஆரம்பிக்கலாமா?'
'ஆரம்பிக்கலாம்.'
உங்கள் பெயர். சொன்னேன்.
என்னுடைய முகவரி, தொலைபேசி எண் எல்லாவற்றையும் எழுதிக்கொண்டார்.
அடுத்து ஆணா, பெண்ணா என்ற கேள்வி. அதற்கும் பதில் சொன்னேன்.
'நீங்கள் 18 வயதுக்கு கூடியவரா?' ஆம் என்று சொன்னேன்.
'உங்கள் வயது என்ன?' சொன்னேன். மறுபக்கத்தில் ஒரு சத்தமும் கிடையாது.
'ஐயா, தொந்திரவுக்கு மன்னிக்கவும். உங்கள் வயது நாங்கள் விதித்திருக்கும் எல்லைக்கு அப்பால் பட்டதாக இருக்கிறது. நீங்கள் கொடுக்கும் புள்ளிவிவரங்களை நாங்கள் சேர்க்க முடியாது.'
'எனக்கு வயது கூடியதாலா?'
'அப்படித்தான் எங்களுக்கு கட்டளை.'
'என் அபிப்பிராயத்தையாவது சேர்க்கமுடியுமா?'
'பிரோயசனமான அபிப்பிராயம் சொல்லும் வயதை நீங்கள் கடந்துவிட்டீர்கள்.'
உணவுக்கான கடவுள் ஒரு சமயத்திலும் இல்லை; ஒரு புனிதர் இல்லை. ஐ.நா தூதுவர்கூட இல்லை. இது பற்றிய அபிப்பிராயத்தை நான் சொல்வதாக தீர்மானித்திருந்தேன். அந்த வாய்ப்பே எனக்கு மறுக்கப்பட்டுவிட்டது.
'இலவச விமான டிக்கட் இல்லையா?'
மறுபக்கம் டெலிபோன் வைக்கும் சத்தம் கேட்டது.
ஸ்டோன்புரூக் பல்கலைக்கழகமே சொல்லிவிட்டது என்னுடைய அபிப்பிராயம் உதவாது என்று. இன்றுவரை என்னிடம் சேகரமாயிருக்கும் அபிப்பிராயங்களை வைத்து இனிமேல் நான் என்ன செய்வது என்பதுதான் இப்போதைய யோசனை.
END