ஐயா புறப்படுவோம் என்று சொன்னார். எனக்கு நடுக்கம் பிடித்தது. கடந்த இரண்டு மணி நேரமாக அம்மா எங்களை வெளிக்கிடுத்தி வெளிக் குந்தில் வரிசையாக உட்கார்த்தி வைத்திருந்தார். நாங்கள் ஏழுபேர். புறப்படும் சமயத்தில் என்னுடைய இரண்டு வயது தங்கச்சி ஈரம் செய்துவிட்டாள். அம்மா மறுபடியும் அவள் உடுப்பை மாற்றி வெளிக்கிடுத்த வேண்டியிருந்தது. நாங்கள் வரிசை தவறாமல் நடக்கவேண்டும். பெரியண்ணர் முதலில் நின்றார். ஐந்தாவதாக நான், ஆறாவதாக தம்பி, கடைசி தங்கச்சி.
எங்களுடைய வாசல் கதவு பழைய கனமான மரத்தில் கடைந்து செய்யப்பட்டது. இரண்டு பாதிகளாகப் பிளந்து, நிலையில் பொருத்தப்பட்ட இரும்பு நாதாங்கிகளில் நின்று சுழரும். கதவுகளைச் சாத்தமுன்னர் ஐயா உள் தாழ்பாள்களை போட்டார். கதவைச் சாத்தி சாவித்துவாரத்துக்குள் திறவுகோலை நுழைத்து அதனாலேயே கதவை இழுத்தார். திறவுகோல் என்றால் உருக்கிய இரும்பினால் செய்தது. ஓர் ஐந்து வயதுப் பிள்ளை தூக்குவதற்கு இரண்டு கைகளையும் பயன்படுத்த வேண்டும். எங்கள் வீட்டு கதவுக்கு கைப்பிடியோ குமிழோ கிடையாது. ஐயா தன் பலத்தில் பாதியை பிரயோகித்து கதவை இழுத்து அதேசமயம் திறப்பையும் திருப்பினார். பூட்டு நாக்கு விழுந்து டங்கென்று சத்தம் கேட்டது. அம்மா இரண்டாவது பூட்டையும் பூட்டச் சொன்னார். ஐயா வலது கையை மறுபடியும் ஒரு வட்டம் திருப்பியதும் மறுபடியும் ஒரு சத்தம். கதவு பூட்டியாகிவிட்டது, நாங்கள் புறப்பட்டோம்.
சிறிது தூரம் நடந்ததும் ஐயாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது. கொஞ்சம் பொறுக்கச் சொல்லிவிட்டு திரும்பினார். நாங்கள் வரிசை கலையாமல் நின்றபடி கழுத்தை மாத்திரம் திருப்பி வாசல் கதவை பார்த்தோம். ஐயா மறுபடியும் போய் கதவில் தொங்கிப் பார்த்தார். இரண்டாவது பூட்டும் சரியாக விழுந்திருக்கிறதா என்பதை சோதித்தார். கதவை காலால் உதைத்தார். எல்லாம் சேமமாக இருந்தது. ஐயா திரும்பி வந்ததும் நாங்கள் ஆற்றைக் கடப்பதுபோல ஒருவர் பின்னால் ஒருவராக நடந்தோம். அவர் திறப்பை செங்கோல்போல கையிலேயே பிடித்திருந்தார். பாதி வழியில் கை உளைந்திருக்கும் என்று நினைக்கிறேன் அதை அம்மாவிடம் கொடுத்தார். அம்மா அதை முந்தானை நுனியில் முடிந்து இடுப்பில் செருகி, இடுப்பு ஒரு பக்கத்துக்கு சாய நடந்தார். சிறிது நேரத்தில் அக்காவிடம் இருந்து தங்கச்சியை வாங்கி மற்ற இடுப்பில் இருத்தி பாரத்தை சமன் செய்தார்.
அம்மாவின் நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு இருக்கும். தலைமயிரை வழித்து இழுத்துக் கட்டியிருப்பதால் கண்கள் கூராகத் தெரியும். கழுத்து நீளமாக நிமிர்ந்து நிற்கும். தலைமயிர் ஒவ்வொன்றும் வயலின் கம்பிபோல இறுகி தலையை குனிந்தால் பட்டு பட்டென்று தெறித்து விடும்போல இருக்கும். அம்மா இடுப்பில் இருக்கும் தங்கச்சியை கொஞ்சத் தொடங்குவார். பற்களை சொண்டுகளால் மூடிக்கொண்டு அவளைக் கடிப்பார். அவர் முத்தமிடுவது அப்படித்தான். அடிக்கடி இடுப்பு சாவியை தொட்டுப் பார்ப்பார். நாங்கள் திரும்பிவந்து கதவை திறக்கும் வரைக்கும் அந்த திறப்பு ஐயாவின் கையிலோ அம்மாவின் இடுப்பிலோதான் சவாரி செய்யும்.
அவிழ்க்கமுடியாத சின்ன வயதுப் புதிர்களில் இதுவும் ஒன்று. எதற்காக கதவை இந்தப் பூட்டு பூட்டுகிறார்கள். ஓர் இரும்பு பெட்டகத்தை திறக்கக்கூடிய வல்லமை உள்ள ஒரு திருடனால்தான் எங்கள் கதவை உடைக்கமுடியும். அவன் எதற்காக எங்கள் கதவை உடைக்கவேண்டும், இரும்பு பெட்டகத்தை உடைப்பதற்கு போய்விடுவானே. திறப்பு என்று சொன்னாலும் அது வீட்டிலே திறப்பு வேலையை மட்டும் செய்வதில்லை. ஐயா சுவரிலே ஆணி அடிக்கவேண்டும் என்றால் அதுதான் சுத்தியல். ஆணியை எடுத்து சுவற்றிலே வைத்து திறப்பின் வட்டப் பகுதியால் அடிப்பார். எங்கள் ஆச்சி மாதத்திற்கு ஒரு முறை எங்களைப் பார்க்க வருவார். பாக்கை உரலில் வைத்து திறப்பினால் குத்தி தூளாக்கிவிடுவார். பக்கத்துவீட்டு பையனுக்கு அfடிக்கடி வலிப்பு வரும். அப்பொழுதெல்லாம் அவன் கையில் கொடுப்பதற்கு ஐயாவோ அம்மாவோ அஞ்சல் ஓட்டம் ஓடுவதுபோல இந்த திறப்பை தூக்கிக்கொண்டுதான் ஓடுவார்கள்.
ஆனால் இரவு வேளைகளில் நாங்கள் படுக்கப் போகுமுன்னர் திறப்பின் உபயோகம் உச்சம் அடையும். எல்லா வீட்டு பாய்களையும்போல எங்கள் வீட்டு பாய்களும் விரித்தவுடன் சுருண்டு போகும். இரண்டாவது அண்ணர் மாத்திரம் ஒரு பக்க பாயை காலால் நின்று மிதித்துக்கொண்டு அப்படியே விழுந்து படுத்துக்கொள்வார். நாங்கள் ஒவ்வொருவரும் தலை மாட்டுக்கு திறப்பை பாரமாக வைத்துவிட்டு மறுபக்கத்தில் மெள்ள உட்கார்ந்து பின்னர் படுத்துக்கொள்வோம். எங்கள் வீட்டில் அதிகம் பாவிக்கப்பட்டதும், மதிக்கப்பட்டதும், தொலைக்கப்பட்டதும், தேடப்பட்டதும் அந்த திறப்புத்தான். அதுவெல்லாம் நான் கொழும்புக்கு பயணம் செய்ய முன்னர்.
நான் முதன்முதலாக எங்கள் கிராமத்தை விட்டு கொழும்புக்கு பயணமானது என்னுடைய 12வது வயதில்தான். அங்கே பலவிதமான வீடுகளையும், கதவுகளையும், திறப்புகளையும் கண்டேன். அதிசயத்திலும் அதிசயமானது தானாகவே பூட்டும் கதவு. ஒரு மூன்று வயத்துக் குழந்தை திறப்பை எறிந்து விளையாடியது. பெரிய பெரிய கதவுகளுக்கெல்லாம் சின்ன திறப்புத்தான். அந்த கதவுகளை பிடித்து இழுப்பதற்கு குமிழ்களோ, கைப்பிடிகளோ இருந்தன. அதன் பின்னர்தான் எனக்கு உலகத்தில் பொருள்களை பாதுகாக்கவும், கதவை மூடவும், அதை பூட்டவும் வேறு பல வழிவகைகள் இருப்பது தெரிந்தது. எனக்கு தெரியாத ஒன்று என்னவென்றால் எதற்காக வீட்டை காபந்து பண்ண ஐயாவும் அம்மாவும் அந்தப் பாடுபட்டார்கள். வீட்டை இரண்டுதரம் பூட்டி, அதில் இரண்டுதரம் தொங்கி, இரண்டுதரம் திரும்பிவந்து கதவை உதைத்தது எதற்கு?. யோசித்துப் பார்த்தால் அப்படி விலை உயர்ந்த பொருள் ஒன்றும் எங்கள் வீட்டில் இருந்ததில்லை. ஆகக்கூடிய விலைமதிப்பான சாமான் என்றால் அது அந்த திறப்புத்தான்.