எதற்காக வந்தீர்கள்?

என்னுடைய கணக்குப்படி அமெரிக்காவுக்கு நான் கடந்த பல வருடங்களில் குறைந்த 40 – 50 தடவைகள் பயணம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் குடிவரவில் கேள்விகள் காத்திருக்கும். அமெரிக்காவை பாதுகாப்பாக வைப்பதுதான் அவர்கள் நோக்கம். அதுவும் 911க்கு பிறகு கெடுபிடி அதிகமானது. பாம்பு வசிக்கும் புற்றுப்போல பத்திரமான ஊர் என்று புறநானூறு சொல்லும். அப்படி நாட்டை பத்திரமாக பாதுகாப்பதுதான் அவர்கள் வேலை. எதற்காக அமெரிக்கா வருகிறீர்கள்? பதில் சொல்வேன். எவ்வளவு காலம் தங்குவீர்கள்? அதற்கும் சரியாகக் கணக்கு வைத்து சொல்வேன். இதற்கு முன்னர் வந்திருக்கிறீர்களா? கடைசியாக எப்போது வந்தீர்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் குடிவரவு அதிகாரிக்கு பதில் தெரியும், என்றாலும் கேட்பார், நானும் கீழ்ப்படிவுடன் பதில் கூறுவேன். நல்ல ஒரு பதிலைச் சொல்வதிலும் பார்க்க வேறு என்ன பெரிய வேலை எனக்கு இருக்கிறது.

 

ஒருமுறை பெண்ணதிகாரி ஒருவருக்கு முன் நிற்கவேண்டி நேர்ந்தது. அளவான, கச்சிதமாகத் தைத்த மொரமொரப்பான சீருடையில் சிலைபோல தோற்றமளித்தார். கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே ஒப்பனை செய்த பெண். அன்று வேலைமுடித்த பிறகு தன்னுடைய காதலனை சந்திப்பதற்கு அவர் போகக்கூடும். இந்தப் பெண்ணும் அதே கேள்வியை கேட்டார். 'கடைசியாக எப்போது வந்தீர்கள்?' அவர் கையில் பறவை செட்டையை விரிப்பதுபோல விரித்து வைத்திருந்த என்னுடைய கடவுச் சீட்டில் அந்த விவரம் இருந்தது. 'போனதடவை வந்தபோது' என்று சொன்னேன். அந்தப் பெண்ணுக்கு அது பிடிக்கவில்லை. கொலைவேல் நெடுங்கண்ணை என்மீது பாய்ச்சினார். அநாவசியமாக மேலும் ஓர் ஐந்து நிமிடம் அவர் முன் நிற்கவேண்டி வந்தது.

பிரான்ஸ் தேசத்துக்கு போனால் அவர்கள் அங்கேயும் இதே கேள்விகளை கேட்டார்கள், ஆனால் உதடுகளில் தடவி மிருதுவாக்கப்பட்ட ஆங்கிலத்தில். எதற்காக வந்தீர்கள் என்று கேட்டபோது நான் லூவர் மியூசியம் என்றோ ஈஃபல் கோபுரம் என்றோ பதில் கூறவில்லை. நோத்ரேடேம் மாதா கோயில் என்று பதில் சொன்னேன். உண்மையில் ஈஃபல் கோபுரத்திலும் பார்க்க மாதா கோயிலுக்கே அதிகம் சுற்றுலா பயணிகள் வருவதாக புள்ளி விவரம் சொன்னது. அந்தனி குவினும் ஜீனா லொலொபிரிஜிடாவும் நடித்த Hunchback of Notre Dame படத்தை பார்த்த பின்னர் எனக்கு அந்த மாதா கோவிலை பார்க்கவேண்டும் என்ற ஆசை வருடா வருடம் கூடிவந்தது. இந்த நாவலை எழுதிய விக்டர் ஹுயூகோ ஒரு புது மைப்போத்தலை வாங்கி, ஒரு சின்ன அறைக்குள் போய் தன்னை பூட்டி வைத்துக்கொண்டு நீண்ட நாட்களாக அதை எழுதி முடித்த பின்னர்தான் வெளியே வந்தார் என்று படித்திருந்தேன்.

750 வருட பழமையான அந்த பிரம்மாண்டமான மாதா கோயிலில் நான் பார்த்து ரசித்தது நிமிர்ந்து பார்க்கவைக்கும் அதன்  இரட்டைக் கோபுரங்கள். கண்ணாடிகளில் வரைந்து வைத்த ஆயிரக் கணக்கான ஓவியங்கள்.  கூனனான அந்தனி குவினுக்கும் அழகி லொலொபிரிஜிடாவுக்கும் இடையில் அரும்பும் காதல் தேன் வடிவதுபோல கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதை படத்தில் காட்டியிருப்பார்கள். மாதா கோயிலில் வெவ்வேறு உயரங்களில் தொங்கும் பிரம்மாண்டமான கண்டாமணிகளின்மீது குரங்குபோலத் தாவித் தாவி கூனனும் செவிடனுமானா அந்தனி குவின் மணியடிக்கும் காட்சி மறக்க முடியாதது.

சமீபத்தில் பிரான்ஸில் இருந்து வந்த நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் பிரான்ஸ் குடிவரவில் அமெரிக்கர்களிடம் 'எப்போது கடைசியாக வந்தீர்கள்?' என்று கேட்பதில்லை என்று சொன்னார். நான் நம்பவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் நடந்த கதையை அவர் சொன்னபோது நம்புவதா விடுவதா என்று தெரியவில்லை.

பிரெஞ்சு குடிவரவு அதிகாரியை நோக்கி ஓர் அமெரிக்க கிழவர் மெல்ல மெல்ல அடியெடுத்து ஊர்வதுபோல வந்தார். கிழவருக்கு வயது எண்பதுக்கு மேல் இருக்கலாம். அவருக்கு பின்னால் நீண்ட வரிசை நின்றது. மெலிந்து உயர்ந்த அந்த உருவம் சற்று முன்பக்கம் கூனியபடி கால்களை தரையில் இருந்து உயர்த்தாமல் நகர்ந்தது. அவர் கையிலே பிடித்திருந்த பை உடம்பில் இருந்து ஓர் அடி முன்னுக்கு கையிலே தொங்கியது. இளம் அதிகாரி 'பாஸ்போர்ட்' என்றார். கிழவர் திடுக்கிட்டு ஞாபகம் வந்தவர்போல மெல்லிய நடுங்கும் கைகளால் தன் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் தடவி பொக்கட்டை கண்டுபிடித்து பாஸ்போர்ட்டை தேடினார். இங்கும் அங்கும் தேடி ஒருவழியாக பாஸ்போர்ட்டை கண்டடைந்து அதை எடுத்து அதிகாரியிடம் நீட்டினார். அதிகாரி எரிச்சலை அடக்கிக்கொண்டு வழக்கமான கேள்விகளைக் கேட்டார். எதற்காக வந்தீர்கள்? எத்தனை நாள் தங்குவீர்கள்? இதற்குமுன் வந்திருக்கிறீர்களா? கடைசியாக எப்போது வந்தீர்கள்?கிழவர் சிலகேள்விகளுக்கு பதில் அளித்தார். சிலவற்றுக்கு அதிகாரி வேறு ஏதோ மொழி பேசியதுபோல புரியாமல் ஒன்றுமே பேசாமல் முன்னால் நின்றார். அதிகாரி சினத்துடன் எருது மாடு வாலை அடிப்பதுபோல கடவுச்சீட்டில் தேவைக்கு அதிகமான சத்தத்துடன் முத்திரை குத்தி அதை நீட்டியபடி முதியவரிடம் 'அடுத்த தடவை வரும்போது கடவுச்சீட்டை தயாராக வைத்திருங்கள்' என்றார். கிழவர் பாஸ்போர்ட்டை திரும்ப பெற்றுக்கொண்டார், ஆனால் நகரவில்லை.

'1944ம் ஆண்டு' என்றார் கிழவர். அதிகாரி ஒன்றும் புரியாமல் அவரையே பார்த்தார்.
'ஜூன் 6ம் தேதி. அப்பொழுது நீ பிறந்திருக்கமாட்டாய்.'
'நகருங்கள், நகருங்கள்'   என்று விரட்டினார் அதிகாரி.
'D Day என்று அழைக்கப்படும் அந்த நாளில் நானும் இன்னும் பல ஆயிரம் அமெரிக்க படைவீரர்களும் பிரான்ஸ் தேசத்தின் ஒமஹா கடற்கரையில் வந்து இறங்கினோம், உன்னுடைய தேசத்துக்கு விடுதலை வாங்கித்தர.'
அதிகாரிக்கு சற்று புரிய ஆரம்பித்தது. திகைத்துப்போய் கிழவரைப் பார்த்தார்.
'நான் கடைசியாக வந்தது அப்போதுதான். என் கடவுச் சீட்டை காட்டுவதற்கு ஒரு பிரெஞ்சுக்காரரையும் அந்தக் கடற்கரையில் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.'

இதுதான் நண்பர் சொன்ன கதை. இந்தச் சம்பவத்துக்கு பிறகு பிரெஞ்சு குடிவரவு அதிகாரிகள் அமெரிக்கர்களிடம் 'நீங்கள் எப்போது கடைசியாக வந்தீர்கள்' என்று கேட்பதில்லையாம். யாராவது அமெரிக்கர்களிடம் இது பற்றி நான் கேட்கவேண்டும் என்று இருக்கிறேன்.

END
 

About the author

1 comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta