எந்திரன் பார்த்தேன்

 

நான் என் வாழ்க்கையில் எந்த திரைப்படத்தையும் முதல் நாள், முதல் காட்சி பார்த்தது கிடையாது. நாற்பது வருடங்களுக்கு முன்னர் அது இலங்கையில் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. கேட் பாய்ந்தோ, சுவரில் தொங்கியோ, ஆட்களின்மேல் நடந்தோ போக சாத்தியப்பட்டவர்களுக்கே அது முடியும். ஆகவே படத்தை 'இன்றோ நாளையோ மாற்றிவிடப் போகிறார்கள்' என்று செய்தி வந்ததும் போய்ப் பார்ப்பேன். அநேகமாக என்னுடைய நண்பர்கள் அந்தப் படம் பார்த்ததையே அப்போது மறந்துவிட்டிருப்பார்கள்.

கனடாவில் எந்திரன் வருகிறது என்றதும் வழக்கம்போல பெரிய பரபரப்பும் ஆயத்தங்களும் தெரிந்தன. பகல் காட்சி, இரவுக்காட்சி, நடுஇரவுக்காட்சி என்று பல காட்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். தமிழ்நாட்டில் ஒக்டோபர் முதல் தேதிதான் படம் ஆரம்பம், ஆனால் கனடாவில் செப்டம்பர் 30ம் தேதியே பார்த்துவிடலாம். முன்பதிவு செய்யவேண்டும் என்று பயமுறுத்தியபோது சிறிது தயக்கம் ஏற்பட்டது. வாழ்நாள் சாதனை என்று தொடங்கியபின்னர் இதையெல்லாம் பார்க்கக்கூடாது. முதல்நாள், முதல்காட்சி சாதாரணமானதா, நான் பார்த்த பின்னர்தான் தமிழ் நாட்டில் கோடிக்கணக்கானவர்கள் பார்க்கப் போகிறார்கள். 

படத்துக்கு பெரிய கூட்டம் வரும் என்று நினைத்தேன். படம் தொடங்கியபோது 600 ஆட்கள் இருக்கக்கூடிய வசதிகள் கொண்ட அரங்கில் நூற்றைம்பது பேர் வந்திருந்தார்கள். அதிலே ஒரு பத்துப்பேர் ரஜினி திரையில் தோன்றியபோது விசில் அடித்தார்கள். உலக அழகி வந்தபோது அதுவும் இல்லை. படத்தைப் பற்றி நான் ஒன்றுமே எழுதப் போவதில்லை. அதை எழுதுவதற்காக இரண்டு வருடங்களாக தங்களை தயார் செய்துகொண்டிருந்தவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் எழுதுவார்கள். சுஜாதாவின் கதை என்பது தெரிகிறது. ஒவ்வொரு திருப்பமும், ஒவ்வொரு புத்திசாலித்தனமான காட்சியும், அவரை நினைவூட்டுகிறது. அந்த வகையில் நல்ல கதை. ஆரம்பத்திலிருந்து கடைசி வரை விறுவிறுப்பு குறையவில்லை. படம் ஓடும் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் பத்து வயதுக்கு குறைந்தவராக இருந்தால் நிறைய இடத்தில் சிரிப்பீர்கள்.

படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல் திணறியிருக்கிறார்கள். விஞ்ஞானி ரஜினி ஒரு ரோபோவை உருவாக்குகிறார். அது அடிமை போல புத்திசாலித்தனமாகவும், நட்பாகவும் வேலை செய்கிறது. பல இடங்களில் எதிரிகளை அடித்து நொறுக்கி கதாநாயகியை உற்சாகமாகக்  காப்பாற்றுகிறது. ரோபோவுக்கு விஞ்ஞானி உணர்ச்சிகளை கொடுத்தவுடன் பிரச்சினை ஆரம்பிக்கிறது. ரோபோவும் ஐஸ்வர்யா ராயைக் காதலிக்கிறது. ரஜினி சொல்வதைக் கேட்க மறுக்கிறது. ரஜினி வெறுத்துப்போய் அதைப்பிரித்து குப்பையில்போட அது எதிரிகள் கையில் சிக்கிக்கொள்கிறது. ரோபோவாக வரும் ரஜினி செய்யும் தந்திரங்களும், சாகசங்களும் ரசிகர்களுக்கு நிறையப் பிடித்துப்போகிறது. ரோபோவுக்கும் விஞ்ஞானிக்குமிடையில் நடக்கும் சண்டையில் ரசிகர்கள் ரோபோ பக்கம்தான். ஒரு கட்டத்தில் ரோபோ ஒரு ஹெலிகொப்டரையே விழுங்கிவிடுகிறது. நம்பமுடியாதது என்று ஒன்றுமே இல்லை. ரோபோதானே, அது எல்லாம் செய்யும். இழுபறிப்பட்டு கதையை ஒரு முடிவுக்கு கொண்டு வருகிறார்கள். பிரச்சினை என்னவென்றால் ரசிகர்களுக்கு இரண்டு ரஜினியுமே வேண்டும்.

ஒரு விசயத்தில் நிறைய பெருமைப்படலாம். இவ்வளவு தொழில்நுட்ப நேர்த்தியுடன் ஒரு தமிழ் படம், ஏன் இந்தியப் படம், வந்ததில்லை. ஹொலிவுட்டில் செய்யாததைக்கூட செய்திருக்கிறார்கள். பல இடங்களில் அதன் உச்சம் வியக்க வைத்திருக்கிறது. இன்னும் பத்துவருடங்களில் திரைப்படம் சம்பந்தமான கணினி தொழில் நுட்பத்தில் தமிழ்நாடு ஹொலிவுட்டுக்கு சவாலாக  வரும் என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.  பாடல், நடனம், இசை பற்றி சொல்ல ஒன்றுமே இல்லை. ஒளிப்பதிவு, ஒப்பனையும் அப்படியே. இப்படியான பெரிய பட்ஜெட் படத்தில் எப்படி இருக்கவேண்டுமோ அப்படியே அவை இருக்கின்றன. இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது, நடிப்பை பற்றி ஏதாவது சொல்லவேண்டும். ஆனால் அது படத்தில் வரவில்லை. எது ரஜினியின் நடிப்பு, எது கம்புயூட்டரின் நடிப்பு என்பதை கண்டு பிடிப்பதற்கு வாய்ப்பே கிடையாது.

படம் முடிந்து வெளியே வந்தபோது இரண்டு விசயங்கள் தோன்றின. இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படம். அது படத்துக்கு போக முன்னரே தெரிந்த விசயம்தான். ஆனால் ஓர் உயர்ந்த படத்தை பார்க்கும்போது உங்கள் உள்ளத்தில் ஏற்படும் ஒரு மாற்றம், ஒரு நெகிழ்ச்சி, ஒரு வெளிச்சம் அது தோன்றவில்லை. அதை எதிர்பார்க்கவும் முடியாது. மனித உணர்வுகளை முந்திக்கொண்டு தொழில்நுட்பம்தான் நிற்கிறது.

இரண்டாவது, எதிர்காலத்தில் புதிதாக வரும் தமிழ் கதாநாயகர்களுக்கு ஏற்படப்போகும் பரிதாபம். புகழின் உச்சியில் இருக்கும் முதிய நடிகர்கள் எல்லோரும் கணினி தொழில்நுட்ப உதவியால் இருபது வயதுக் காளைகளாகவும், பத்து வயது சிறுவனாகவும், மூன்று வயதுக் குழந்தையாகவும் நடித்துக்கொண்டே இருக்கப் போகிறார்கள். அவர்கள் வீட்டுக்கு போகப் போவதில்லை. அவர்கள் நடிப்பைக்கூட கணினியே செய்துவிடும். இது எல்லாவற்றையும் தாண்டித்தான் புது நடிகர்கள் தங்களை நிலைநாட்டவேண்டும். முடிகிற காரியமா?  ரஜினியை இவ்வளவு இளமையாகக் காட்டியவர்கள் பாவம் ஐஸை விட்டுவிட்டார்கள். அவரையும் ஒரு பத்து வயது குறைந்தவராகக் காட்டியிருக்கலாமே. 162 கோடி ரூபா பட்ஜெட்டில் அவ்வளவு செலவா ஆகியிருக்கும்.

நீங்கள் போய்ப் பாருங்கள். முடிந்தால் உங்கள் பிள்ளைகளையும் கூட்டிப் போங்கள். பேரப்பிள்ளைகள் இருந்தால் அவர்களையும் கூட்டிப் போங்கள். தவற விடக்கூடாது. இது ஒரு சாதனைப் படம். கிட்டத்தட்ட என்னுடைய வாழ்நாள் சாதனை போலத்தான்.
 

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta