1) நீங்கள் உங்கள் படத்தைப் போட்டு அதற்கு கீழே உங்களுடைய பாடல் ஒன்றைப் போட்டிருக்கிறீர்கள்.
'நாடா கொன்றோ காடா கொன்றோ'
எதற்காக அவ்வையாருடைய பெயர் அங்கே இருக்கிறது?
2) கம்பர் பாடலின் பொருள் என்ன?
3) geometry – இதற்கு தமிழ் என்ன?
4) நாற்பது வருடங்களுக்கு முன்னர் நீங்கள் எழுதிய சிறுகதைகளைப் படித்து வியந்திருக்கிறேன். நீங்கள் இப்பொழுதும் அப்படியே எழுதுகிறீர்கள்.
5) ஐயா, நீங்கள் என்ன என்னவோ பற்றியெல்லாம் எழுதுகிறீர்கள். இலங்கை பிரச்சினை பற்றி ஏன் எழுதக்கூடாது?
என்னுடைய பதில்.
நான் ஒரு தண்ணீர் பந்தல் வைத்திருக்கிறேன். இது இலவசம். எல்லோருக்கும் ஒரு பேணிதான். என்னவும் வந்து வாங்கி குடிக்கலாம். என்னிடம் மோர்த்தண்ணி, ஊறுகாய்த்தண்ணி, சர்க்கரைத்தண்ணி உண்டு. எவ்வளவும் குடிக்கலாம். காசு தரத்தேவையில்லை. ஆனால் என்னிடம் கோக்கும், ஃபன்ராவும் கிடையாது. பக்கத்து பந்தலில் இருக்கு. என்னிடம் கேட்டால் நான் என்ன செய்வது?
6) நீங்கள் ஒரு நாவல் எழுதியிருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். சிறுகதைக்கும் நாவலுக்கும் என்ன வித்தியாசம்?
7) ஒருவர் மினக்கெட்டு எங்கேயோ இணையத்தில் தேடிப்பிடித்து இருபது வித்தியாசமான தவளைகளின் படங்களை அனுப்பியிருக்கிறார். என்னுடைய கதை ஒன்றில் தவளை வருகிறதாம். அந்தப் படங்களை கணினியிலிருந்து இறக்க எனக்கு 20 நிமிடம் பிடித்தது.
8) புவியீர்ப்பு கட்டணம் கதை படித்தேன். ஒரு றாத்தலில் எத்தனை கிலோ?
9) அவுஸ்திரேலியாவில் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. அவர் கேட்ட கேள்வி.
'மகாராஜாவின் ரயில் வண்டியில் ரோஸலின் என்று ஒரு பெண் வருகிறாள். அவளுடைய …..' தொடர்பு அறுந்துவிட்டது. கேள்வி என்னவாயிருக்கும்? அவளுடைய வயது என்ன? உயரம் என்ன? ஏன் கன்ன உச்சி பிரித்திருக்கிறாள்?
என்ன கேள்வி கேட்டிருப்பார்.
அதற்கு பிறகு அந்த தொலைபேசி வரவேயில்லை.
10) எதற்காக தோமஸ் ஜெஃபர்ஸன் 187 அடிமைகளை வைத்திருந்தார்?
11) தவிசு என்றால் என்ன தமிழ்?
12) வேட்டைநாய் சிறுகதையை எப்போது முடிப்பீர்கள்?