என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் ஒரு போலந்துக்காரர். அவர் மணமுடித்தது ஒரு ஜேர்மன் பெண்ணை. இவர்கள் இரண்டாம் உலகப்போர் முடிந்த கையோடு தம்பதிகளாக கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள். இப்பொழுது அவர்கள் வயதை ஓர் அளவுக்கு கணக்கிட்டுக்கொள்ளலாம். ஒருவர் சொல்வது மற்றவருக்கு கேட்காது என்றபடியால் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.
பனிக்காலம் முடியும்வரை வீட்டுக்குள்ளே பதுங்கியிருப்பவர்கள் வசந்தம் வந்ததும் சுறுசுறுப்பாகிவிடுவார்கள். பனி முற்றிலும் அகல முன்னரே தோட்டத்தைக் கிண்டி ஆயத்தப்படுத்த தொடங்குவார்கள். சூரியனின் கிரணங்கள் முழுவதும் அவர்கள் தோல்கள்மேல்தான். ஒரு நாளைக்கு 12 மணிநேரம்கூட தோட்டத்தில் பாடுபடுவார்கள். கத்தரி, தக்காளி, மிளகாய், வெள்ளரிக்காய் என்று பயிரிட்டு வளர்ப்பார்கள். அவர்களைப் பார்க்க எனக்கு பாவமாக இருக்கும். இப்படி முறிந்து பாடுபடுகிறார்களே, இதனால் பயனுண்டா என்று யோசிப்பேன். தக்காளி சுப்பர்மார்க்கட்டில் ஒரு றாத்தல் ஆக 1.49 டொலர்தான். ஆனால் அதை அவர்களிடம் சொல்வதற்கு எனக்கு துணிவு வராது.
ஒருநாள் எங்களுக்கும் கொஞ்சம் தக்காளி கிடைத்தது. பளிங்குத் தோலுடன் இறுக்கமாக சிவப்பாக மினுங்கும் தக்காளி. பச்சையாக கடித்துச் சாப்பிட தூண்டும். ருசி முன்பு எப்பொழுதும் அனுபவித்திராத புதுவிதமான ருசி. நான் அதைச் சொன்னேன். தம்பதிகள் என்னை அழைத்துப்போய் தங்கள் தோட்டத்தை காட்டினர். தக்காளிக்கு பக்கத்தில் பஸில் செடியை வளர்த்தார்கள். பீன் கொடிக்கு பக்கத்தில் சேஜ் செடியை வளர்த்தார்கள். பஸில் செடி தக்காளியை ருசியுள்ளதாக மாற்றுமாம். சேஜ் செடியும் அப்படித்தான் பீன் நல்ல ஆரோக்கியமாகவும் ருசியாகவும் காய்க்கும். டில் செடியை மாத்திரம் சற்று தூரத்தில் தனியாக நட்டிருந்தார்கள். ஏன் என்று கேட்டதற்கு அது சுயநலம் பிடித்தது, மற்ற செடிகளுடன் நட்பாக இராது, அவற்றை கொன்றுவிடும் என்றார். 'செடிகளிலும் நல்லது, கெட்டது என இருக்கிறதா?' என்று கேட்டேன். அந்த ஜேர்மன் பெண்மணி ஒரு பெங்குவின் பறவைபோல சற்று குனிந்து யோசித்தார். 'செடிகளும் மனிதர்கள்போலத்தான். இரண்டு நல்லவர்கள் சேரும்போது இன்னும் கூடிய நல்லவர்களாகிறார்கள். சிலர் எவரையும் காரணமின்றி எதிரியாகவே பார்ப்பார்கள். இயற்கை தாவரங்களையும் பறவைகளையும் விலங்குகளையும்கூட சில நல்லவை, சில கெட்டவை என்று பிரித்து வைத்திருக்கிறது. மனிதர்களிலும் அப்படித்தான்.'
அன்று டிவியில் சமையல் நிபுணர் ஒரு கூட்டு செய்வதை விளக்கிக் கொண்டிருந்தார். என் மனைவி கண்களை எடுக்காமல் நிபுணர் சொல்லும் குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்தார். முருங்கைக்காயும் கத்தரிக்காயும் போட்டுச் செய்த கூட்டு. வாசனை சரக்குகளை ஒவ்வொன்றாக இட்டு கூட்டை கொதிக்க வைத்துக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் சொன்ன ஒரு தகவல் பக்கத்து வீட்டுக்காரர் சொன்னதோடு ஒத்துப்போனது. தானியாவையும் மிளகாயையும் கலந்துபோட்டால் அதன் சுவை ஒன்று. தனித்தனியாகப் போட்டால் சுவையில் பெரிய வித்தியாசம் தெரியுமாம். அவர் உப்பு போட்ட விதமும் என்புத்திக்கு அப்பால் பட்டதாக இருந்தது. முதலில் ஒரு கையால் அள்ளிப்போட்டார். அரை கொதியில் நாலு விரல்களாலும் கிள்ளிப் போட்டார். கூட்டு இறுகி அதை அடுப்பிலிருந்து இறக்கும் சமயத்தில் பொடிபோடுவதுபோல ஒரு சின்ன சிட்டிகை எடுத்து தூவினார். இது என்ன கணக்கோ, எப்படி அவருக்கு ஒரு சிட்டிகை குறைகிறது என்பது தெரிந்தது. அப்படி ருசியில் வித்தியாசம் தெரியுமா?
வெந்த கூட்டை இறக்கிவைத்துவிட்டு ஒரு கரண்டியால் அள்ளி ருசி பார்த்து 'ஆஹா, நல்ல ருசி' என்றார். வேறு எப்படிச் சொல்லுவார். புத்தக பின்னட்டைகள் எப்பொழுதும் புத்தகத்தை புகழ்ந்துதான் சொல்லும். இவரும் தன்னுடைய சமையலை புளுகத்தானே வேண்டும். ஒருமுறைகூட சமையல் வகுப்பில் இவர் 'கொஞ்சம் பிழைச்சுப் போச்சுது, ருசி அவ்வளவு நல்லாயில்லை' என்று சொன்னது கிடையாது.
கத்தரிக்காய் கூட்டு எனக்கு பிடிக்கும்; முருங்கைக்காய் கூட்டு எனக்கு இன்னும் பிடிக்கும். இரண்டையும் சேர்த்து சமைத்தால் ருசி ஒன்றையொன்று மேம்படுத்துமா? அப்படித்தான் சொன்னார், இது நம்பக்கூடியதாக இல்லை. நாளைக்கு எங்கள் வீட்டு சமையலில் என்ன கூட்டு இருக்கும் என்பது எனக்கு இன்றைக்கே தெரியும். குளிர் பெட்டியில் கத்தரிக்காயும் இருந்தது; முருங்கைக்காயும் இருந்தது. இன்றிரவே கத்தரிக்காயை ஒளித்துவைக்கவேண்டும் அல்லது முருங்கைக்காயை ஒளித்து வைக்கவேண்டும். இது இரண்டும் சாத்தியப்படாவிட்டால் நாளைக்கு என்னை ஒளித்து வைக்கவேண்டும்.