நாலு வருடங்களுக்கு முன்னர் 'தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில்' என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். கம்புயூட்டரைப் பற்றி அப்பொழுது எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இப்பொழுதும் தெரியாது. ஆனால் தமிழ் வளர்ச்சிக்கு கம்புயூட்டர் முக்கியம் என்பது தெரிந்திருந்தது. என்னுடைய கட்டுரை இப்படி ஆரம்பமாகியிருந்தது.
'கம்புயூட்டர் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று காலச்சுவடு கேட்டதும் நான் உடனேயே சம்மதித்தேன். காரணம் கம்புயூட்டர் பற்றி என்னுடைய அறிவு ஓர் ஆமையினுடையதற்கு சமம். அல்லது அதற்கும் கொஞ்சம் கீழே. இதனிலும் பார்க்க சிறந்த தகுதி வேறென்ன வேண்டும். கணினி நிபுணர்களையும், ஆர்வலர்களையும் கேட்டால் அவர்கள் சொல்லித்தருவார்கள். அப்படி நினைத்தேன். உண்மையில் அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஒரு கணினி பயனாளர் என்ற முறையில் நான் படும் இன்னல்களையும், கணித்தமிழ் படும் இன்னல்களையும், கணினி ஆர்வலர்கள் படும் இன்னல்களையும் தொகுத்தாலே போதும் என்று பட்டது.'
அந்தக் கட்டுரையில் என்ன எழுதினேன் என்பதை இங்கே திரும்பவும் சொல்லத்தேவை இல்லை. தமிழின் எதிர்கால வளர்ச்சிக்கு கம்புயூட்டரில் தமிழ் எழுத்துரு யுனிக்கோட்டுக்கு மாறவேண்டும் என்று எழுதி கட்டுரையை இப்படி முடித்திருந்தேன்.
'தமிழின் எதிர்காலம் தன்னலம் பாராமல் தம் சொந்த நேரத்தை செலவு செய்து தமிழை கணினியில் ஏற்ற பாடுபடும் நிபுணர்களின் கையில்தான் இன்றுள்ளது. ஆனால் எவ்வளவுதான் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் பாடுபட்டாலும் ஏழு கோடி மக்களைக் கொண்ட தமிழ் மாநில அரசு ஆதரவு இல்லாமல் தமிழை கணினித்துறையில் முன்னெடுத்துச் செல்லமுடியாது. பேராசிரியர் கா.சிவத்தம்பியின் வார்த்தைகளை கடன் வாங்கி 'தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில்' என்று சொல்லும்போதுதான் அந்த உண்மை தெரிய வருகிறது. எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் யூனிக்கோட் என்னும் கம்புயூட்டர் ரயிலில் தமிழ் ஏறி உட்கார்ந்துவிடவேண்டும். அல்லாவிடில் ஸ்டேசனில் தவறவிட்ட குழந்தைபோல தமிழ் நிற்கும்; ரயில் போய்க்கொண்டே இருக்கும்.'
2010 யூன் 27ல் முடிந்த செம்மொழி மாநாட்டில் ஓர் அறிவித்தல் செய்ததாக அறிந்தேன். யூனிக்கோடு எழுத்துருதான் இனிமேல் தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற ஒரே பயன்பாட்டுக் குறியீடு. தமிழக அரசு யூனிக்கோடை ஏற்றுக்கொண்டுவிட்டது. நாலு வருடங்களும், 400 கோடிகளும் செலவழிந்த பிறகு தமிழ் நாடு அரசு கடைசி ரயிலை பிடித்துவிட்டது. பயணம் சேமமாக அமைய என் வாழ்த்துக்கள்.