ஒரு தமிழ் பெண் எழுத்தாளரைச் சந்தித்தேன். அவர் எடுத்த வீச்சில் தனக்கு ஜெயமோகனை பிடிக்காது என்றார். ஏன், அவர் என்ன பாவம் செய்தார் என்று கேட்டேன். 'நீங்கள் பின் தொடரும் நிழலின் குரல் புத்தகத்தை படிக்கவில்லையா, அதிலே 51வது பக்கத்தில் நாகம்மைக்கும் அருணாசலத்துக்கும் இடையில் நடக்கும் சல்லாபமும் கொஞ்சலும் படிக்கவே கூசுகிறது. அதிர்ச்சியாக இருக்கிறது. எச்சிலும் வியர்வையும் அந்தப் பெண்ணின் சருமத்திலிருந்து எழும் மணமும் அவருக்கு காமத்தை கிளப்புகிறதாம்' என்றார். 'இதிலே என்ன பிழை. காமத்தில் பெரிய பங்கு உடல் மணம்தானே' என்றேன். அவர் ஏதோ அந்தப் புத்தகத்தை நான்தான் எழுதியதுபோல என்னிடம் கோபித்துக்கொண்டு போனார்.
எனக்கு நைரோபியில் வேலை செய்த நாட்கள் ஞாபகத்துக்கு வந்தன. நான் அங்கே கொஞ்சக் காலம் ஒரு ஜேர்மன் அதிகாரியின் கீழ் வேலை பார்த்தேன். ஜேர்மன் அதிகாரி என்றால் அவர் கெடுபிடியானவர் என்பதை சொல்லத் தேவையில்லை. அவரை யார் சந்திக்கப் போனாலும் அவருடைய அலுவலக கதவை சாத்திவிட்டுத்தான் சந்திப்பார். ஆனால் அங்கே வேலை செய்த ஒரேயொரு ஊழியரை சந்திக்கும்போது மட்டும் கதவை விரித்து வைப்பதோடு யன்னலையும் திறந்து விடுவார். காலப்போக்கில் அலுவலகத்தில் வேலைசெய்த மற்றவர்களும் காரணத்தை ஊகித்துக்கொண்டார்கள்.
சில நாட்களில் அங்கே நடந்த அலுவலக விருந்து ஒன்றுக்கு அந்த ஊழியர் தன் மனைவி பிள்ளைகளை அழைத்து வந்திருந்தார். அழகான மனைவி அவர் இடுப்பை பிடித்தபடி, தோள்மூட்டில் தலை சாய்த்து அசைந்தவாறு நடந்து வந்தாள். பின்னால் எறும்பு நிரைபோல வரிசையாக ஆறு பிள்ளைகள். அந்தப் பெண்ணுக்கு அவருடன் தாம்பத்திய உறவு வைப்பதில் எந்தக் குறையும் இருந்ததாகத் தெரியவில்லை.
மாமன்னன் நெப்போலியன் காதலித்து மணமுடித்தது ஜோசபின் என்ற பெண்ணை. அந்தப் பெயர்கூட காதலிக்கு அவன் சூட்டியதுதான். அவளுக்கு வேலை நிறையப் பேர்களுக்கு காதலியாக இருப்பது. ஏற்கனவே விதவை, இரண்டு பிள்ளைகளுக்கு தாய் அவள். நெப்போலியனிலும் பார்க்க ஆறுவயது கூடியவள். அவளைத்தான் நெப்போலியன் துரத்தி துரத்தி காதலித்தான். அவளை முதலில் பார்த்த கணத்திலிருந்து அவள் மேல் மோகம் கொண்டான். போர்க்களத்திலிருந்து நூற்றுக்கணக்கான கடிதங்களை ஜோசபினுக்கு வரைந்துகொண்டே இருப்பான். அவள் கிரமமாக பதில்கூட போடுவதில்லை. தன் காதலர்களுடன் பாரிஸ் வீதிகளில் சுற்றிக்கொண்டிருந்தாள்.
நெப்போலியனுக்கு உலகத்தில் எந்தப் பெரிய அழகியும் கிடைப்பாள். அப்படியான ஒரு புகழின் உச்சியில் அவன் இருந்தான். ஆனாலும் அவனால் ஜோசபினை மோகிப்பத்தை நிறுத்த முடியவில்லை. இதில் ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. அவன் அவளுக்கு எழுதிய கடிதம் ஒன்றை படித்தால் போதும்.
'நான் நாளை மாலை பாரிசுக்கு வருகிறேன். அன்பே, குளிக்க வேண்டாம்.'
என்னுடன் கோபித்துக்கொண்டு போன பெண் எழுத்தாளர் தன்னுடைய மின்னஞ்சல் முகவரியை மாற்றிவிட்டார். அது தெரிய வரும்போது நெப்போலியன் அனுப்பிய கடிதத்தின் நகலை அவருக்கு அனுப்பி வைக்கலாம் என்று இருக்கிறேன்.