சன்மானம் எவ்வளவு?

இப்பொழுதுதான் பனிக்காலம் முடிவுக்கு வந்தது. அதற்கிடையில் கோடைகாலம் வந்துவிட்டதுபோல வீடு சூடு பிடிக்கத் தொடங்கியது. வெப்பம் ஒருநாள் 29 டிகிரி செண்டிகிரேட் காட்டியது. சரி, ஏசியை போடவேண்டியதுதான் என்று நினைத்து சுவிட்சை போட்டேன். ஏசி வேலை செய்யவில்லை. திரும்பவும் சுவிட்சை போட்டேன். நான் சுவிட்ச் போட்ட விசயத்தையே அது கண்டுகொள்ளவில்லை. ஐந்து மாதமாக ஓய்வெடுத்ததோ என்னவோ அது மீண்டும் உயிர்கொள்ள மறுத்தது.

 

வேறு என்ன செய்வது? இப்படியான குளிரூட்டும் யந்திரங்களை பராமரிக்கும் கம்பனிக்கு தொலைபேசினேன். வழக்கமான பராமரிப்புக்காரர்கள் கிடைக்கவில்லை ஆகவே புதுக்கம்பனியுடன் தொடர்பு கொண்டேன். அவர்கள் அடுத்தநாள் காலை ஒரு நேரத்தைக் குறித்துத்தந்து பழுதுபார்ப்பவர்கள் வருவார்கள் என்று கூறினார்கள். மனது நிம்மதியானது.

குறித்த நேரத்துக்கு ஒரு பெரிய வாகனம் ஒன்று வந்து வீட்டு வாசலில் நின்றது. அதன் உள்ளே ஒரு சின்ன தொழிற்சாலைபோல பழுதுபார்க்க தேவையான சகல ஆயுதங்களும் இருந்தன. இரண்டு வெள்ளைக்காரர்கள் நீலநிற சீருடையில் இறங்கினார்கள். கீழ்கால்சட்டையையும் மேல்சட்டையையும் சேர்த்து தைத்த ஒரு நீண்ட உடுப்பில் பலவித ஆயுதங்களை சொருகியபடி எந்தவிதமான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு தயாரானவர்கள்போல காணப்பட்டார்கள். ஒருவர் வீட்டுக்கு வெளியே இருந்த குளிரூட்டும் யந்திரத்தின் மேல்மூடியை கழற்றத் தொடங்கினார். மற்றவர் வீட்டுக்குள் மின் இணைப்பு சரியாக இருக்கிறதா என்பதை சோதிப்பதற்காக உள்ளே வந்தார்.

ஃபியூஸ் பெட்டி எங்கே இருக்கிறது என்று கேட்டார். நான் காட்டினேன். ஃபியூஸ் சுவிட்சை தன் வலது கை ஆள்காட்டி விரலால் தட்டினார். அவ்வளவுதான் ஏசி முழுப்பலத்தோடு வேலை செய்யத் தொடங்கியது. வெளியே வேலை செய்தவர் மூடியைக் கழற்றக்கூட இல்லை. நாலு திருகு ஆணியில் ஒன்றை மட்டும் கழற்றியிருந்தார். அதை திரும்பவும் பூட்டிவிட்டு ஆயுதங்களை சேகரித்துக்கொண்டு புறப்பட்டார்கள்.

எவ்வளவு என்று கேட்டேன். வேலையாட்களில் மூத்தவர் வாய்கூசாமல் 125 டொலர் என்று சொன்னார். நான் 'நீங்கள் ஒன்றும் செய்யவில்லையே' என்றேன். அவருக்கு பிடிக்கவில்லை. ஏதோ புளிமாங்காயை கடிச்சதுபோல கண்ணைக் கூசிக்கொண்டு 'இப்பொழுது குளிர்சாதனம் வேலை செய்கிறது அல்லவா?' என்றார். இரண்டாம் பேச்சுப் பேசாமல் 125 டொலருக்கு காசோலை எழுதிக் கொடுத்தேன். 'இரண்டு பேரை ஏற்றிக்கொண்டு  வாகனம் ஒரு வீட்டை நோக்கி பழுதுபார்க்க புறப்பட்டால் ஆகக்குறைந்த கட்டணமாக 125 டொலர் அறவிடப்படும். அதுதான் கம்பனி விதி' என்றார். நானும் ஒரு விதியை பற்றித்தான் அப்பொழுது சிந்தித்துக்கொண்டு இருந்தேன். 

போனமாதம் தண்ணீர் குழாய் உடைந்தபோது ஒருவர் வந்து திருத்தி தந்தார். அவருக்கு 60 டொலர் கொடுத்தேன். தலைமயிர் வெட்டப் போகும்போது முடி திருத்துபவருக்கு 20 டொலர் கொடுப்பேன். பக்கத்து வீட்டுப் பையன் உயர்நிலைப்பள்ளியில் படிப்பவன். கம்புயூட்டர் அவ்வப்போது என் கட்டளைகளுக்கு கீழ்ப்படிய மறுத்துவிடும். இந்தப் பையன் வந்து சரிசெய்து தருவான். நான் 25 டொலர் கொடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பான்.

ஒரு பத்திரிகை ஆசிரியர் என்னைக் கடந்த ஆறு மாதகாலமாக தொந்திரவு செய்கிறார். அவருக்கு ஒரு கதையோ கட்டுரையோ வேண்டுமாம். அதற்கென்ன, எழுதிக் கொடுத்தால் போச்சுது.

'எவ்வளவு சன்மானம் தருவீர்கள்?' என்று கேட்டேன்.
இன்னும் பதில் வரவில்லை.

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta