நாயுடன் கதைப்பவர்

 

கலிஃபோர்னியாவிலிருந்து ஒரு நண்பர் வந்து என் வீட்டிலே சில தினங்கள் தங்கியிருந்தார். அவர் வீட்டிலே இரண்டு நாய்கள் வளர்த்தார். அதில் ஒன்று ஜேர்மன் ஷெப்பர்ட். அடுத்தது பிட்புல் கலப்பு வகை. நண்பர் நீண்டகாலமாக நாய்கள் வளர்த்து வருகிறார். திறமான பயிற்சியாளர்.  அவருடைய ஜேர்மன் ஷெப்பர்ட் நாய் கட்டளைகளுக்கு தவறாமல் கீழ் படியும். ஆனால் பிட்புல் அப்படியல்ல. எவ்வளவு பயிற்சி கொடுத்தாலும் அது கேட்பதாயில்லை. அவருக்கு நிறைய பிரச்சினைகளைக் கொடுத்தது. அப்பொழுதுதான் நண்பர் நாயுடன் கதைக்கும் பெண்மணியை கண்டுபிடித்தார்.

அவர் பார்ப்பதற்கு ஒரு சீனப்பெண்ணைப்போல இருந்தார். வயது 50 இருக்கும், உயரம் 5 அடி, இரண்டு அங்குலம். சாதாரணமான தோற்றம், சாதாரணமான முகம். ஆனால் முகத்தின் இடது கண்ணுக்கு கீழ் இருந்த மருவில் முடி முளைத்திருந்தது. அது பார்ப்பதற்கு அசிங்கமாக இருந்தாலும்  அதை அதிர்ஷ்டம் என்று அவர் நம்பினார். அவருடைய பெயர் வயலெட்டா லிங்.

வயலெட்டா உங்களுக்காக உங்கள் நாய்களுடன் கதைப்பார். நீங்கள் நாய்க்கு என்ன சொல்லவேண்டுமோ அதைச் சொல்வார். நாய் சொல்வதை திரும்பவும் உங்களுக்கு சொல்வார். ஒருநாள் வயலெட்டாவை நண்பர் தன் வீட்டுக்கு அழைத்தார். வயலெட்டா வந்ததும் நாய்கள் இரண்டும் ஓடிவந்து அவரை முகர்ந்து பார்த்துவிட்டு அருகிலேயே படுத்துக்கொண்டன. வயலெட்டா ஆரம்பத்திலேயே நண்பரிடம் இப்படிச் சொன்னார். 'நான் சொல்வதை நீங்கள் நம்பவேண்டும் என்பதில்லை. நம்பாமல் இருக்கவேண்டும் என்றும் கட்டாயமில்லை. ஆனால் உங்கள் மனதை திறந்து வைத்திருங்கள்.'

நண்பர் ஒரு கேள்வியை கேட்பார். வயலெட்டா உடனே கண்களை மூடி மனதைக் குவித்துக்கொள்வார். அந்தக் கேள்வியை நாயை நோக்கி திருப்பிவிடுவார். வாயினால் பேசமாட்டார், மனதினால்தான். சும்மா படுத்திருக்கும் நாயின் உடலில் ஒரு சிலிர்ப்பு தெரியும். வயலெட்டா கண்ணை மூடியபடியே இருப்பார். நாயிடமிருந்து பதில் வரும். வயலெட்டா கண்ணைத் திறந்து நாய் சொன்ன பதிலை வாயினால் நண்பருக்கு சொல்வார். வயலெட்டாவின் வேலை ஒரு மொழிபெயர்ப்பாளருடையது போலத்தான். நாய் சொன்னதை நண்பருக்கு சொல்வார், நண்பர் சொல்வதை நாய்க்கு சொல்வார்.

நண்பருடைய கேள்விகள் எல்லாம் பிட்புல் பற்றித்தான். அதுதான் அவருக்கு பிரச்சினை கொடுத்த நாய். இதுதான் கேள்வி பதில்கள்.

நண்பர்: நீ எதற்காக இந்த உலகத்தில் பிறந்திருக்கிறாய்?
நாய்: மகிழ்ச்சியாக இருப்பதற்கு.

நண்பர்: உனக்கு பிடிக்காதது என்ன?
நாய்: என்னை யாராவது கழுத்தில் தொட்டால் எனக்கு அது பிடிக்காது. (நண்பரின் குறிப்பு – இந்த நாய் தெருவில் அலைந்து திரிந்த காலத்தில் நாய் பிடிகாரர்கள் கழுத்திலே சுருக்குப்போட்டு இழுத்து அதை நாய் வண்டியில் ஏற்றிச் சென்றார்கள். அந்த வேதனை காரணமாக இருக்கலாம். பொதுவாக எல்லா நாய்களுக்கும் கழுத்தில் சொறிந்து கொடுப்பது பிடிக்கும்.)

நண்பர்: உன்னுடைய ஆகப் பழைய ஞாபகம் என்ன?
நாய்: நான் குப்பைத் தொட்டி ஒன்றில் கிடந்தேன். ஒரு சிறுமி என்னை வீட்டுக்கு தூக்கிப் போனாள். கதகதப்பாக அவளுடைய நெஞ்சில் என்னை அணைத்திருந்தாள். வீட்டிலே எனக்கு சூடான பால் கிடைத்தது.

நண்பர்: உனக்கு உன் எசமானரின் வீட்டில் ஏதாவது குறை இருக்கிறதா?
நாய்: இருக்கிறது. ஒருவிதமான பிஸ்கட் எனக்கு இடைக்கிடை சாப்பிடக் கிடைக்கும். அது எனக்கு ஒவ்வொரு நாளும் வேண்டும்.

நண்பர்: காரில் போவதற்கு ஏன் மறுக்கிறாய்?
நாய்: எனக்கு போக ஆசைதான். காரில் ஏற அவசரம் காட்டுவேன். ஆனால் காருக்குள் ஏறியதும் எனக்கு பயம் பிடித்துவிடும். அது போடும் சத்தம் பிடிப்பதில்லை. உடனே வீட்டுக்கு திரும்பும் விருப்பம் வந்துவிடுகிறது.

நண்பர்: பக்கத்து வீட்டு நாய் உன்னுடன் நட்பாக இருக்க விரும்புகிறது. நீ எப்போது பார்த்தாலும் சண்டை போடுகிறாயே. அது ஏன்?
நாய்: அது மோசமான நாய். அதை நம்பக்கூடாது. அது கிட்ட வந்தாலே என் நெஞ்சம் பதறுகிறது.

நண்பர்: இந்த வீட்டில் உனக்கு வேறு என்ன தேவை?
நாய்: எசமானர் என்னுடன் விளையாடும் நேரம் குறைவு. அவர் நிறைய என்னுடன் விளையாடவேண்டும்.

இந்தக் கேள்விகளுக்கும் பதில்களுக்கும் வயலெட்டா தன்னிடம் எண்பது டொலர்கள் பெற்றதாக நண்பர் கூறினார். 'வயலெட்டா உங்களை ஏமாற்றியிருக்கலாம் அல்லவா?' என்று கேட்டேன்.
'இருக்கலாம். ஆனால் என்னுடைய நாயில் பெரிய மாற்றம் தெரிகிறது. முன்புபோல் எனக்கு பிரச்சினை தருவதில்லை' என்றார்.

சில வருடங்களுக்கு முன்னர் வெளியான Horse Whisperer படத்தில்கூட ஒரு குதிரையுடன் கதாநாயகன் பேசி அதன் பிரச்சினைகளை தீர்ப்பதாக காட்டியிருப்பார்கள். நாய்களுடன்கூட பேசலாம். மனிதர்களுடன் பேசுவதுதான் கஷ்டம்போல இருக்கிறது.
 

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta