இணையம் வந்தபிறகு ஒரு வசதி உண்டு. ஒருவருக்கு வந்த மின்னஞ்சலை அவர் அப்படியே இன்னொருவருக்கு அனுப்பலாம். அவர் அதை இன்னொருவருக்கு அனுப்பலாம். இப்படி அது சங்கிலித் தொடர்போல முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகும். சில சமயம் நீங்கள் அனுப்பியது ஒரு சுற்றுமுடிந்து உங்களிடம் திரும்பி வருவதும் உண்டு. சமீபத்தில் அப்படி வந்த சுவாரஸ்யமான ஒன்று கீழே:
பொஸ்டன் வழக்கு மன்றத்தில் கணவனும் மனைவியும் விவாக விலக்கு கோரி வந்திருந்தார்கள். அவர்களுடைய பிரதானமான பிரச்சினை குழந்தை யாருக்கு சொந்தம் என்பதுதான். நீதிபதி ஒரு விசித்திரமான மனிதர். ஒருநாள்போல இன்னொருநாள் இருக்கமாட்டார். ஒரு நீதிபதி எப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ அப்படியெல்லாம் இருப்பார். கறுப்பு அங்கியை தாறுமாறாக அணிந்து, விருப்பமில்லாத இடத்துக்கு யாரோ இழுத்துவந்ததுபோல முகத்தை வைத்துக்கொண்டு வழக்கை கையிலெடுப்பார். வினோதமான விசாரிப்புக்கும், விசித்திரமான தீர்ப்புக்கும் இவர் பேர்போனவர். அவர் கணவனையும் மனைவியையும் தீர்க்கமாகப் பார்த்துவிட்டு இப்படி கூறினார்:
நூறு விதமான விவாகரத்து வழக்குகள் எனக்கு முன்னே வந்திருக்கின்றன. அவை எல்லாம் ஒன்றுதான், வெவ்வேறு உடைகளில் வரும். ஆகவே கோர்ட்டின் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. யார் மிகச் சுருக்கமாக தன் தரப்பு வாதத்தை எனக்கு முன் வைக்கிறாரோ அவருக்கு சாதகமாகவே நான் தீர்ப்பு வழங்குவேன்.
நீதிபதியின் வாசகத்தைக் கேட்டு மனைவி திடுக்கிட்டாள். அவள் தன் தரப்பு வாதத்தை நீண்ட பிரசங்கமாக தயாரித்து வந்திருந்தாள். ஆனாலும் மனம் தளராமல் சமயோசிதமாக தன்னுடைய வாதத்தை அந்தக் கணமே சுருக்கி இப்படி பேசினாள்:
கனம் நீதிபதியவர்களே,
நான் குழந்தையின் தாயார். என் வயிற்றில்தான் குழந்தை உயிர் கொண்டது. என் ரத்தத்தை அதற்கு உணவாகத் தந்தேன். என் உடம்பிலிருந்து குழந்தை வெளியே வந்தது. குழந்தை எனக்குத்தான் சொந்தம், இதிலென்ன சந்தேகம்.
இதைக் கேட்டு கணவன் திடுக்கிட்டான். ரத்தினச்சுருக்கமாக இருக்கிறதே, இதற்கு பதிலாக எதிர்தரப்பில் என்ன சொல்வது? ஆகவே வழக்கைப் பற்றி ஒன்றுமே வாதிடாமல் தன் கட்சியை இப்படி சொன்னான்.
கனம் நீதிபதி அவர்களே,
கோர்ட் வாசலில் இயங்கும் பெப்சி மெசினில் நான் ஒரு டொலர் போட்டேன். ஒரு பெப்சி வெளியே வந்தது. இப்போது பெப்சி யாருக்கு சொந்தம். எனக்கா? மெசினுக்கா?
நீதிபதி திடுக்கிட்டார். தீர்ப்பு நாளை சொல்கிறேன் என்றார். அதன் பின்னர் அவர் கோர்ட்டுக்கு வரவே இல்லை என்று சொல்கிறார்கள்.