நோட்டுப் புத்தகம்

இந்த மாதம் நல்ல மாதம். பரிசுகள் கிடைக்கும் மாதம். மூன்று பரிசுகள் கிடைத்தன. என் மகள் ஒரு நோட்டுப் புத்தகம் பரிசு தந்தார். எழுத்தாளருக்கு இதை விடச் சிறந்த பரிசு என்ன? சிலவேளைகளில் புத்தகங்களும் பரிசாக எனக்கு கிடைத்திருக்கின்றன. ஆனால் ஒரு பிரச்சினை உண்டு. அவை வார்த்தைகளால் நிரம்பியிருக்கும். அவற்றை எல்லாம் படிக்கவேண்டும். நோட்டுப் புத்தகம் என்றால் ஒற்றைகள் வெறுமையாக இருக்கும். ஒன்றுமே படிக்கத்தேவை இல்லை. உங்களுக்கு தோன்றினால் நீங்களே ஏதாவது எழுதலாம். எவ்வளவு அருமையான கண்டுபிடிப்பு.

பார்சலைப் பிரித்துப் பார்த்த நான் ஆச்சரியப்பட்டேன். அது சாதாரண நோட்டுப் புத்தகம் அல்ல. மோல்ஸ்கீன் (moleskine) என்ற பிரசித்தமான நோட்டு வகை. இதிலே விசேஷம் என்னவென்றால் இதன் அட்டை தொட்டவுடன் வழுக்கும் தன்மையுடன், மூலைகள் கூராக இல்லாமல் மழுங்கடிக்கப்பட்டு  இருக்கும். தாள்கள் வெண்ணெய் நிறத்தில் வழுவழுப்பாக கோடு அடித்து காணப்படும். முக்கியமான சிறப்பு ஒன்றும் உண்டு.  மேசையில் நீங்கள் நோட்டில் எழுதிக்கொண்டு இருக்கும்போது யாராவது கதவு மணியை அடித்தால் நோட்டை அப்படியே விட்டு விட்டு எழுந்து போகலாம். அது விட்டதுமாதிரி தட்டையாக உங்களுக்காக காத்திருக்கும். ஒற்றைகள் மற்ற நோட்டுப் புத்தகங்கள்போல தானாக மூடிக்கொள்ளாது. ஒன்றோடு ஒன்று ஒட்டாது. மற்றொரு விசேஷம் அதன் ரப்பர் நாடா. நீங்கள் கடைசியாக எழுதிய பக்கத்தை நாடாவை இழுத்து அடையாளமாக மாட்டலாம். விலையை கேட்டால் வீணாக எழுதி அதை பழுதாக்கமாட்டீர்கள்.

ஒரு காலத்தில் எழுத்தாளர்களும் பிரபலர்களும் இதை உபயோகித்தார்கள். ஒஸ்கார் வைல்டு, வின்செண்ட் வான்கோ, ஓவியர் பிக்காசோ, எழுத்தாளர் ஹெமிங்வே போன்றவர்கள் இதையே பயன்படுத்தினார்கள். இந்த நோட்டுப் புத்தகத்தை  ஒரு பிரெஞ்சுக் கம்பனி யந்திரம் பாவிக்காமல்  கைத்தொழில்போல தயாரித்தது. இடையில் சிறிது காலம் இதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் ஓர் இத்தாலிய கம்பனி மறுபடியும் வெளியீட்டை ஆரம்பித்து அதுவும் கைமாறி தற்போது பிரெஞ்சுக் கம்பனி இதை செய்கிறது. இப்பொழுது அதன் மதிப்பு கூடி விற்பனையும் ஏறிக்கொண்டே போகிறது. 53 நாடுகளில் 14,000 கடைகளில் விற்பனையாகிறது என்று படித்தேன்.

எழுத்தாளருக்கு நோட்டுப் புத்தகம் என்பது மிகமிக அவசியம். ஹெமிங்வே போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர் தன்னுடைய இரட்டைக்குழல் துப்பாக்கியை விட்டுவிட்டு போனாலும் போவாரே ஒழிய மோல்ஸ்கீன் நோட்டுப்புத்தகம் இல்லாமல் வெளியே புறப்பட மாட்டார். எனக்கு இதே நோட்டுப் புத்தகம் பரிசாகக் கிடைத்துவிட்டது. விரித்து அதை தடவிப் பார்த்தேன். குழந்தையின் முழங்கைபோல மிருதுவாக இருந்தது. நான் சிறுவனாக இருந்தால் வீட்டுக்கு எடுத்துச் சென்று அம்மாவிடம் காட்டுவேன். அத்தனை அழகு. இனி தேவை ஒரு பேனா. மூடி கழற்றி பூட்டக்கூடிய நல்ல மதிப்பான பேனா. நிறுத்தாமல் வேகமாக, நன்றாக எழுதும் பேனா. தானாகவே சிந்தித்து தானாகவே எழுதினால் இன்னும் நல்லது.
 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta