ஆங்கில அகராதியை தனியாக முதன்முதலில் செய்தவர் சாமுவல் ஜோன்ஸன் என்பவர். அவர் சேக்ஸ்பியரால் ஆறு வசனங்களை ஒழுங்காக எழுத முடியாது. அதிலே ஏதாவது ஒரு பிழை இருக்கும் என்று சொல்வார்.
டி.எச். லோரன்ஸ் என்பவர் Lady Chatterley's Lover என்ற நாவலை எழுதினார். அதில் நிறைய கெட்ட வார்த்தைகள் இருந்ததால் அதை இங்கிலாந்தில் பதிப்பிக்க முடியவில்லை. ஆகவே அந்த நாவலை இத்தாலியில் வெளியிட்டார். 1960 களில் இங்கிலாந்து அந்தப் புத்தகத்தை போட அனுமதித்தது. நான் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் அது வெளிவந்தது. பாடப் புத்தகங்களை படிப்பதை நிறுத்திவிட்டு எல்லா மணவர்களும் அந்தப் புத்தகத்தையே ரகஸ்யமாகப் படித்தார்கள்.
ஒரு சீமாட்டிக்கும் அவரின் கீழ் வேலைசெய்யும் தோட்டக்காரனுக்கும் இடையில் ஏற்படும் காதலைச் சொல்வது இந்த நாவல். இந்த நாவலையும் இதை எழுதிய ஆசிரியரையும் பிடிக்காத ஒரு விமர்சகர் இப்படி எழுதினார். 'தோட்டக்கலை பற்றி அருமையாகச் சொல்லும் புத்தகம் இது. எப்படி தோட்டத்தை பராமரிப்பது, என்ன என்ன மரங்கள் நடவேண்டும், அவற்றை மாறும் காலநிலைக்கு ஏற்ப எப்படி பேணவேண்டும் போன்ற விவரங்கள் எல்லாம் கிடைக்கின்றன. வேண்டாத சில விசயங்களை நூலில் புகுத்திவிட்டதால் இந்த நாவலை முழுதாக அனுபவிக்க முடியாமல் போகிறது.'
படைப்பாளிகள் ஒருத்தரை ஒருத்த தாக்கி எழுதுவது ஒன்றும் புதியதல்ல. இந்தக் கலையில் தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் தேர்ந்தவர்கள். பழைய காலத்து புலவர்கள் இன்னும் கொடுமைக்காரர்களாக இருந்தார்கள். அவர்கள் எழுத்துடன் மட்டும் நிற்கவில்லை, தேவையில்லாத விசயங்களுக்கு எல்லாம் சண்டை போட்டார்கள். அற்ப சங்கதிகளுக்காக உயிரை எடுத்தார்கள். வேறு எந்த மொழி இலக்கிய உலகிலும் இப்படி கொடூமாக ஒருத்தரை ஒருத்தர் அடித்துக்கொண்டதாக தகவல் இல்லை.
பிள்ளைப்பாண்டியன் என்று ஓர் அரசன். அவன் புலவர்கள் பிழைவிடும்போது அவர்கள் தலையில் குட்டுவான். மகாபாரதத்தை தமிழில் பாடிய வில்லிபுத்தூராழ்வார் வாதத்தில் தோற்ற புலவர்களின் காதுகளை குறட்டினால் பிடுங்கிவிடுவார். ஒட்டக்கூத்தர் என்ற புலவர் குற்றம் செய்த புலவர்களின் குடுமிகளை முடிந்து சிரச்சேதம் செய்வாராம்.
இவருக்கும் புகழேந்தி என்ற புலவருக்கும் எப்பவும் போட்டிதான். புகழேந்தி நளவெண்பா பாடி அரங்கேற்றியபோது ஒட்டக்கூத்தருக்கு பொறுக்கவில்லை. சின்னச்சின்ன பிழைகளை தேடிக் கண்டுபிடித்துக்கொண்டிருந்தார். அந்தி மாலையை புகழேந்தி வர்ணிக்கிறார்.
மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
வில்லி கணையெறிந்து மெய்காப்ப முல்லைமலர்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது.
பாடலோ அளவுக்கதிகமான கற்பனை கொண்டது; சிறுபிள்ளைத்தனமானது. ஒட்டக்கூத்தர் எழும்பி சபையிலே தன் எதிர்ப்பை தெரிவிக்கிறார். 'சங்கை பின்பக்கத்தில்தான் ஊதுவார்கள். வண்டு பூவின் முன்பக்கத்தில் ஊதுகிறது. உவமை சரியில்லை' என்கிறார். புகழேந்தி பதிலாக போதையில் இருக்கும் வண்டுக்கு முன்பக்கம் எது பின்பக்கம் எதுவென்று தெரியுமா என பதில் சொல்கிறார். அந்தப் பதிலை கேட்டு சபையோரும் 'ஆஹா' என்று வியக்க பாடல் ஏற்கப்படுகிறது.
இந்த லட்சணத்தில்தான் விவாதங்கள் நடந்தேறின. பெண்ணின் கூந்தல் மணம் இயற்கையானதா செயற்கையானதா என்று ஒரு விவாதம். புலவர்களும் வேலை இல்லாமல் பாடல்கள் பாடிக்கொண்டு வருகிறார்கள். அந்த விவகாரம் கடவுள்வரை போய்விட்டது. யாழ்ப்பாணத்தில் நாவலர் வாழ்ந்த காலத்தில் இன்னொரு விவாதம் சூடுபிடித்து நீண்டநாள் ஓடியது. 'ஒளி கண்ணிலிருந்து பொருளுக்கு போகிறதா அல்லது பொருளிலிருந்து கண்ணுக்கு வருகிறதா?'
இதையெல்லாம் படிக்கும்போது திடீரென்று ஒரு புறநானூறு பாடல் கண்ணில் படுகிறது. புலவர் 'பசிக்கு சோறுபோடும் கனவான் வீடு எங்கே இருக்கிறது, கிட்டவா தூரவா?' என்று விசாரிக்கிறார். பசிப்பிணி மருத்துவன் என்று கூறுகிறார். பசியை ஒரு நோய் என்றும் அதற்கு சோறு போடுபவன் மருத்துவன் என்றும் சொல்கிறார். புதுவிதமான சிந்தனை. இப்படிப்பட்ட புலவர்கள் வீண் விவாதங்களில் இறங்கவில்லை. காதை வெட்டவில்லை. கழுத்தை திருகவில்லை. குடுமியை முடியவில்லை. தமிழ் தப்பியது இப்படித்தான்.