எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒரு ஜேர்மன்காரி வசிக்கிறார். 80க்கு மேலே வயதாகியிருக்கும் இவருக்கு லொற்றே என்று பெயர். ஹிட்லர் ஆட்சியின்போது இவர் யுவதியாக ஜேர்மனியில் இருந்தவர். இரண்டாவது உலகப் போர் முடிந்ததும் மணமுடித்து கணவருடன் கனடாவுக்கு குடிபெயர்ந்துவிட்டார். போர்க்கால சம்பவங்களையும், இவருடைய அம்மா காலத்து சம்பவங்களையும் இவர் வர்ணிக்கக் கேட்டு நான் ஆச்சரியப்படுவதுண்டு.
ஒரு காலத்தில் தோல் பதனிடுவதற்கு சிறுநீரைப் பயன்படுத்தினார்கள். சில ஏழைக் குடும்பங்கள் தங்கள் சிறுநீரையே நம்பி வாழ்ந்தனர். ஒரு பானையில் சிறுநீரைச் சேகரித்து எடுத்துப்போய் தொழிற்கூடத்தில் விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்தவர்களும் இருந்தார்கள். நாங்கள் நினைப்போம் இவர்கள்தான் ஆகக் கடைசிப் படியில் இருக்கும் ஏழைகள் என்று. இல்லை, அவர்களிலும் கீழ்நிலை ஏழைகளும் இருந்தார்கள். அவர்களிடம் சிறுநீரைச் சேகரிப்பதற்கு தேவைப்படும் பானைகூட இல்லை. 'சிறுநீர்ப் பானைகூட இல்லாத ஏழை' என்று அவர்களை கேவலமாகப்பேசி திட்டுவார்கள்.
குளிர் தேசங்களில் குளிப்பது மே மாதத்தில்தான். ஏனென்றால் அப்போதுதான் பனியெல்லாம் உருகிப்போய் வசந்தம் பிறந்திருக்கும். குளிப்பதற்கும் ஒரு முறை உண்டு. வீட்டிலே மூத்தவர், அநேகமாகக் கணவர், முதலில் குளியல் தொட்டிக்குள் இறங்கிக் குளிப்பார். பின்னர் அவருடைய மனைவி அதே தொட்டியில் குளிப்பார். அதற்குப் பின்னர் பிள்ளைகள் ஒவ்வொருவராக இறங்கி குளிப்பார்கள். கடைசி கடைசியாக கைக்குழந்தை. கைக்குழந்தையின் முறை வரும்போது தண்ணீர் கறுப்பாகிவிடும். குழந்தை அதற்குள் இருந்தால் வெளியே தெரியாது. அதுதான் ஒரு சொற்றொடர் உண்டு. தொட்டி தண்ணீரை எறியும்போது குழந்தயையும் எறியாதே என்று.
போர்க்காலத்து ஜேர்மனியில் ஒருவருக்கு உண்பதற்கு இறைச்சி கிடைப்பது அபூர்வம். பணக்கார குடும்பமாக இருந்தால் அவர்கள் புகைபோட்ட பன்றி இறைச்சியை புகைக்கூட்டுக்கு கீழே கட்டி தொங்க விட்டிருப்பார்கள். அவ்வப்போது ஒரு துண்டு இறைச்சியை வெட்டி உணவில் சேர்ப்பார்கள். அந்த வீட்டுக்கு யாராவது வந்தால் அவர்கள் கண்களில் படுகிறமாதிரி அந்த இறைச்சி தொங்கும். சமூகத்தில் பெரிய மதிப்பு வேண்டுமென்றால் அப்படி ஓர் இறைச்சிக் காலாவது புகைக்கூட்டின் கீழே தொங்கவேண்டும். லொற்றே சிறுமியாக இருந்தபோது அவர் எண்ணமெல்லாம் ஒரு மருத்துவராகவோ ஒரு பொறியாளராகவோ ஒரு வழக்கறிஞராகவோ வரவேண்டும் என்பதல்ல. புகைக்கூட்டின் கீழ் எந்நேரமும் இறைச்சி தொங்கும் வாழ்க்கை ஒன்று கிடைக்கவேண்டும் என்பதுதான் அவரது கனவு.
இன்னொரு விசயமும் லொற்றே சொன்னார். அந்தக் காலத்தில் எப்போவாவது ஓர் இறைச்சித்துண்டு கிடைத்தால் அதைச் சேர்த்து நிறையத் தண்ணீர் ஊற்றி சூப் செய்வார்கள். அதன் பின்னர் அந்தப் பாத்திரத்தை கழுவுவதே இல்லை. அதே பாத்திரத்தில் புதிய சூப்பை செய்வார்கள். அது முடிந்ததும் மீண்டும். எப்போவோ காய்ச்சிய இறைச்சியின் ஒரு சொட்டு மணம் அந்த சூப்பில் தொடரும்.
புறநானூறில் ஒரு பாடல் உண்டு. கருவூர் கந்தப்பிள்ளைச் சாத்தனார் பாடியது. 'உழாமல் விதைத்து விளைந்த தினைச்சோற்றை காட்டெருமைப் பாலில் கலந்து, மானிறைச்சி கொழுப்பு வெள்ளையாக விளிம்பில் ஒட்டியிருக்கும் பானையை கழுவாமல் அதிலே சமைத்து, வாழையிலையில் பரிமாறி பலரோடு உண்ணும் குதிரை மலைத் தலைவனே' என்று அந்தப் பாடலில் சொல்லியிருப்பது ஞாபகத்துக்கு வந்தது.
அந்தக் காலத்தில் பாத்திரம் கழுவிக்கு வேலையில்லை. 2000 வருடத்துக்கு முந்தி மேலை நாட்டிலும் சரி, கீழை நாட்டிலும் சரி பாத்திரம் கழுவும் மினக்கெட்ட வேலையை ஒருவரும் செய்யவில்லை என்றுதான் தோன்றுகிறது. பாத்திரத்தை கழுவாமல் அதில் ஒட்டியிருக்கக்கூடிய ஓவ்வொரு துணுக்கு இறைச்சியையும் கடைசிவரை அனுபவித்தார்கள். 1920களில் நவீன பாத்திரம் கழுவி கண்டுபிடிக்கப்பட்டது. இப்பொழுதெல்லாம் அரைவாசி சுவை நமக்கு, அரைவாசி பாத்திரம் கழுவிக்கு என்றாகிவிட்டது.